2/20/2010

யாழினி

”அண்ணை வாங்கோ! புட்டுஞ் சம்பலுங் கொண்டு வந்த நான்! நீங்களும் வந்து சாப்புடுங்கோவன்!! சாந்தன் இன்னும் வரக் காணலை, நீ வாங்கண்ணை!”, சகோதர ஆளுமையும் பாச வலையுமாய் யாழினி!

“இருக்கட்டும் யாழினி! சாந்தன் ஃபின்ச் இரயிலடியில வந்திட்டு இருக்கானாம், இப்பத்தான் நான் நூலகத்துல நம்ம மோகனைக் கண்டு கதைக்கையில சொன்னவன். சாந்தனும் வரட்டும்!”

“அப்பிடியே? ஆகட்டுமப்ப!”

டொரோண்டோ யார்க் பல்கலைக் கழக வளாகம். எங்கும் மரங்களடர்ந்து, அண்டவெளியுள் பச்சை ஊடுருவிப் பரவிக் கிடக்கும். வளாகத்துள் மைய மண்டபமாய் ராஸ் நூலகம். அதன் இடது புறத்தில் டிம்ஹார்ட்டன்சு குளம்பியகமும், அதையொட்டிய கூடத்தில் மாணவர்கள் இருந்து கதைக்கும்படியாகப் பரப்பு நாற்காலிகளும், இருக்கைகளும் இட்ட பெருங்கூடம்.

அப்பெருங்கூடத்தின் வலதுகோடி மூலையை, வாரத்தின் ஏழு நாட்களும், இருபத்து நான்கு மணி நேரமும், அண்டத்தில் அரவம் தவழ்கிறதோ இல்லையோ, இப்பெருக்கூடத்து மூலையை தமிழ்ப் பேச்சு ஆக்கிரமித்து இருக்கும். அங்கேதான், காலை வேளையில் யாழினியும் அவளது மணியண்ணையும், சகதமிழன் சாந்தனுக்காகக் காத்திருப்பு.

”அண்ணை, நம்ம கெளரி வாறாப் போலக்கிடக்கு! அது அவள்தானென்ன?”

“ஆமா, அட நம்ம கெளரியேதான்!”

“கெளரி! எங்க? அங்கனைக்குள்ளக் கண்டுங் காணாதபடி போற நீங்கள்?! வாங்கோ, கதை கதைச்சிட்டுப் போலாமென்ன?”, யாழினி உரத்த குரலில்.

பெருங்கூடத்தை நோக்கி வருகிறாள் கெளரி,

“மணியண்ணை, என்ன உங்களக் கண்டு கனகாலமாயிட்டுது? வேலையே? நான் டி.சி வகுப்புக்கு வரைக்கே, உங்களை காணக் கிடைக்கல என்ன?!”

“ஆமாங்க கெளரி, போன வாரம் எல்லாம், சனி ஞாயிறுன்னு எல்லா நாளும் வேலை. சம்மருக்கும் பாடங்கள் எடுக்க வேணும். கடனெடுக்காமப் படிக்க வேணுமெண்டுதான் இதெல்லாஞ் செய்ய வேண்டிக் கெடக்கு?”

“அது சரி. ஊர்ல உங்க பெட்டையோட சேம செளக்கியமெல்லாம் சுகந்தானென்ன?”

“அய்யோ கெளரி, சொன்னாக் கேளுங்க! அப்படியெல்லாம் ஒரு பெட்டையும் எனக்கு இல்லை! ஆமா, உங்காள் எப்பிடி இருக்காரு?”

“ஒன்டும் கேக்காதீங்கோ! எப்பப் பாத்தாலும் அந்தக் கடையடியில, யோகன் ஆட்களோட சேந்துட்டு தண்ணியடியும் குழப்படியும் செய்து கொண்டு?”

“இதெல்லாம் ஒரு பிரச்சினையா?”

“போங்கண்ணை, நான் ஒரு வாரமாப் பேசக் கூட இல்லையென்ன?”

“ஒ.. ஓ! கொழுவலாக்கும்? இப்படித்தான், போனதடவையும் சொல்லிட்டு இருந்தீங்க? அப்புறம் பார்த்தா, ஸ்கார்புரோ சென்ட்டர்ல ஒன்னுமொன்னுமா? ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்... எதுக்கும் முரளியை நாங்கேட்டதாச் சொல்லுங்க என்ன?”

வெட்கத்தில் கட்டுண்டு தலைகவிழ்ந்தாள் கெளரி. முரளியும் கெளரியும் இணைபிரியாத தோழர்கள், காதலர்கள், இருவருமே ஒரே ஊரைச் சார்ந்தவகள், நெல்லியடியில் பிறந்து வளர்ந்து, பின் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள்.

“கெளரி, நான் நேற்றைக்குப் பின்னேரத்துல உனக்கு கால் எடுத்தனென்ன? கால்ப் பன்னைக்க எங்க நின்ட நீங்கள்?”, இடை மறித்தாள் யாழினி.

“நேத்தைக்கே? ஓம், அது பெரிய சங்கதியென்ன? எங்க பெரியம்மா வீட்டுக்குப் போன நான். அப்படியே தர்சினி கூட இருந்து கதைச்சிட்டு நடுசாமம் ஆயிட்டது. அங்கயே நித்திரையுங் கொண்டுட்டு காலையிலதான் எக்லிண்ட்டன் வந்தன். பெரிய விசர்க் கதையென்ன அது?”

“ஏன், என்ன ஆச்சு? போன வாரம் ரிச்மண்ட் முருகங்கோயிலுக்குப் போயிருக்கக் கூட தர்சினியக் கண்டு கனநேரங் கதைச்சிட்டு இருந்தனென்ன? அவ, வாட்டர்லூ யுனிவர்சிட்டிக்குப் போறன் இந்த சம்மருக்கென்டு சொன்னவா!”

“க்கும்... அவ எந்த யுனிவர்சிட்டிக்கும் போகலை; அடுத்த மாதம் கொழும்புக்கு போறாளென்ன!”

“ஏன், எதும் பிரச்சினையே?”

“ஓம், அவளுக்கு கல்யாணஞ் செய்து வெக்க வேணுமன்டு, பெரியம்மாவும் அண்ணனும் போகச் சொல்றாங்களென்ன?”

“கெளரி, பகிடிக் கதை கதைக்காதீங்கோ!”, பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த சாந்தன் இடை மறித்தான்.

“சாந்தன், சொன்னாக் கேளுங்கோ!”

அனைவரும் சலனமற்றுப் பேசாமல் ஓரிரு நிமிடங்கள் இருந்தனர். மெளனத்தைக் கெளரியே முறித்தவளானாள்,

“ஆமாம். அங்க, அவங்க தமையன்ட கூட்டாளிக்கு இங்க வரணுமாம். மாங்குளத்துல இருந்தவன், இப்ப கொழும்பு வந்து நிக்கானாம். இவ போனதும், ரெஜிஸ்டர் செய்து, பேந்து ஸ்பொன்சருஞ்ச் செய்து இங்க கொண்டார வேணுமன்டு எல்லாரும் முடிவு செய்து இருக்காங்களென்ன?”

“சரிங்க கெளரி, இது நம்ம சுதனுக்குத் தெரியுமா? யாழினி, அவன் ஃபுட் கோர்ட்லதான் இருக்கான். வரச் சொல்லுங்க!”

“இதோ கோல் எடுக்குறன் மணியண்ணை!”

யார்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவன் சுதன். மிகவும் பொறுப்பான மாணவன். தமிழ்ச் சமுதாயத்தின் மீது தீராப்பற்றுக் கொண்டவன். கோயம்பத்தூரில் சில காலம் வாழ்ந்தவன் என்ற முறையில், தமிழ்நாட்டின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவன்.

உணவக வளாகத்தில் இருக்கும் அவனது வருகைக்காக காத்திருக்கும் வேளையில், யாழினி, சாந்தன் மற்றுமுள்ள மாணவர்களோடு விபரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த இடம், இயல்பான சூழலில் இருந்து விலகிக் கொந்தளிப்புக்குள்ளாகிறது.

“இது என்ன விசர்க்கதை? நாங்கள் இதுக்கு ஒத்துக்கொள்ள மாட்டம்! சாந்தன், மோகனுக்குக் கோல் எடுங்கோவன். இந்த வாரமே, எதோ ஒரு கோயில்ல வெச்சித் தர்சினிக்கும் நம்ம சுதனுக்கும் கல்யாணம்! என்ன சொல்றீங்க மணி அண்ணை?”, யாழினியும் நந்தினியும் உணர்ச்சிப் பிழம்போடு கூச்சலுங் கோபமுமாய். தர்சினியின் தோழிகள் ஆயிற்றே?

”நந்தினி, கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? என்ன விசியம், ஏதுன்னு ஒன்டுந் தெரியாம??”

சுதன் யாருடனோ தன் அலைபேசியினூடாகப் பேசியபடி ராஸ் மண்டபத்துக்குள் நுழைவதைப் பார்த்ததுமே, சக நண்பர்கள் அவனை நோக்கி விரைகிறார்கள். அவனும் அவர்களும் ஏதோ கையை நீட்டிப் பேசியபடி டிம்ஹார்ட்டன்ஸ் குளம்பியகத்துனுள் வந்தமர்ந்ததும்,

“என்ன சுதன்? உங்களுக்கு விசியந்தெரியுமா?”

“தெரியும் மணி சார்!”

“தர்சினி கூடப் பேசினீங்களா?”

“அவதாஞ் சொன்னதே!”

“சரி, என்னதான் முடிவு?”

“மொகேந்திரன் அண்ணை, அவ தமையன்கிட்டக் கதைக்கிறனெண்டு சொல்லிச் சொன்னவர்! அதான், அவர் என்ன சொல்றாருண்டு பார்த்துட்டு மிச்சத்தைப் பேந்து பாப்பமிண்டு!”

“அவ்வளவுதான்! இதுக்குப் போயி ஏன் கொந்தளிக்கிறீங்க நீங்கள்?”

சிறிது நேரம் ஒரே இரைச்சல். கெளரி விடை பெற்றுச் செல்கிறாள். யாரும் தத்தம் வகுப்புகளுக்குச் செல்வதாக இல்லை. மதியத்திற்குப் பிறகு, இருந்தவர்கள் கலையவும், மாலை நேரத்து வகுப்புக்கான தமிழ் மாணவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.

டொரோண்டா மாநகர். அடடா, என்ன அழகு? வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகரம். சாலைகள் கிழக்கு மேற்குமாகவும், வடக்கு தெற்காகவும் வளைவுகளற்ற நேர்கோடுகளாய்ச் செல்லும். நேர்கோடுகளும் குறுக்குக் கோடுகளும் சந்திக்கும் இடம் எல்லாம் பேருந்து நிறுத்துமிடங்கள்.

சாலையின் இருமருங்கிலும் மேப்பில்இலை மரங்கள், பச்சைப் பசேலென இருக்கும் கோடை காலத்திலும் வசந்தகாலத்திலும்! இரயிலடிகள் ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் ஒன்றாய். உலகின் மிகச் சிறந்தநகரம் எனப் பல தடவை விருது வாங்கிய நகரமது.

நகரின் கீழ்க்கோடியில் இருக்கும் ப்ரிச்மவுண்ட் இரயிலடியில் ஏறி, கிழமேற்காகச் செல்லும் தொடர் வண்டியில்ச் சென்று, நகரின் மையப்பகுதியான துண்டாஸ்-யங் சந்திப்பில் இறங்கி, தென்வடலாகச் செல்லும் வண்டிக்கு மாறிப் பயணித்து, யார்க் பல்கலைக்கழகம் வந்தாயிற்று. நேற்றைய தினம் போலவே, இன்றும் டிம்ஹார்ட்டன்சு பகுதிக்குச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

”என்னங்க, இன்னைக்கு ஆர்ட்டிபிசியல் இன்ட்டெலிஜென்ஸ் வகுப்பு இருக்குதானே? என்ன, யாழினியக் காணோம்?”

“என்ன மணி சார் நீங்க? ஒன்னும் விசியந் தெரியாதபடிக் கதைக்குறீங்க?”

“இல்லங்க மோகன், எனக்கு எதுவுந்தெரியாது. எனக்கு நேத்து இராவு வேலை, முடிஞ்சு போகயில மணி ரெண்டு ஆயிட்டதென்ன?”

“அப்பிடிங்களா மணி சார். சாந்தன் ஆட்கள் எல்லாம் தர்சினியத் தூக்கிட்டாங்க என்ன? சுதனும் காணக் கிடைக்கல; எல்லாரும் மோன்ட்ரியால் போயிட்டாங்கன்னு சொல்வினம்!”

புரிந்து விட்டது. நட்புக்காக உயிரைத் துச்சமென நினைக்கும் கூட்டமல்லவா இது? யாழினியும் சாந்தனும் காதலர்கள். பல்கலைக்கழகமே அவர்களைப் பார்த்து, Made for each other! எனச் சிலாகிக்கும். அப்படி இருக்கையில், அடுத்தவர் காதலுக்கு ஒரு இடர் என்றால் வாளாது இருப்பரோ இவர்?

இவர்கள் எங்கு சென்று இருப்பார்கள் என எளிதில் தெரிந்து விட்டது. மோன்ட்ரியால் சென்று இருக்க மாட்டார்கள்.

ஏக்ராஜ் அண்ணாச்சி என்கிற தணிகையரசு, குட்டி இந்தியா எனப்படுகிற ஜெரார்டு வீதியில் வசிப்பவர்; சென்னையில் வழக்கறிஞராகப் பணி புரிந்தவர். டொரோன்ட்டோவில் தமிழர்களின் வழிகாட்டி; அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரை அழைத்துக் கொண்டு, தமிழ் மாணவர்கள் செறிவாக வாழ்கிற யாடவாப் பல்கலைக் கழகத்திற்குத்தான் சென்றிருக்க வேண்டும் என எளிதில் புரிந்தது.

யாடவாப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் மயூரனுக்கு, அவனது அலைபேசியில அழைக்க,

“மணி சார், என்ன நீங்க வரலை?”

“டே, என்னடா இப்படி செஞ்சிட்டீங்க? மொகேந்திரன்கிட்டப் பேசுறேன்னு சொன்னீங்களேடா?”

“எனக்கு எதும் தெரியாது அண்ணை!”

“சரி, யாழினி இருக்கே?”

“அண்ணை, சொல்லுங்கோ! எல்லாம் முடிஞ்சது அண்ணை!!”

“என்ன யாழினி இது?”

”சாரி மணியண்ணை! சொன்னா, நீங்க ஒத்துக்க மாண்டீங்கள், அதான்!!”

அதற்குப் பின், இரு வீட்டுக்கும் பரிச்சியமான கங்காதரன் என்பவர் இரு வீட்டாரோடும் பேசி, ஒரு இணக்கத்திற்கு வந்து, அந்த வாரக் கடைசியிலேயே திருமண வரவேற்பும் இனிதாய் நடந்தது.

காலச் சக்கரம் சுழலாமல் இருக்குமா, என்ன? குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் பிறந்தது. கூடவே குதூகலமும்! யாழினி, சாந்தன் உள்பட நிறைய மாணவர்கள், குதூகலத்தை நுகரும் பொருட்டு கோடைகால வகுப்புகளுக்குப் பதியவே இல்லை. வெகு சிலரே, அதுவும் மாலை வகுப்புகளுக்கு மட்டுமே வந்தனர்.

அந்த கோடைகாலத்தின் மாலை வேளையில், கலைந்திருந்த சந்தைப் பேட்டை போலக் காட்சியளித்தது பல்கலைக்கழக வளாகம். எங்கும் வெறிச்சோடி, ஆள் அரவமற்று இருந்தது டிம்ஹார்ட்டன்சுப் பகுதியும். பட்டப்படிப்பை விரைவாக முடிக்கும் பொருட்டு, சில மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர்; அவர்களும் ஆங்காங்கே தனித்தனியாய் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள்.

கூரை எதுவுமின்றி, வெளியாய், சில மரங்களும் புல்படர்ந்த தரையுமாக இருந்தது வளாகத்தின் மையப்பகுதி. அந்த மரங்களின் பூவொன்றில், ஹம்மிங்பேர்டு எனப்படுகிற தேன் நுகரும் சிட்டு ஒன்று அழகாய்ப் பருகிக் கொண்டிருந்தது! கண்ணிமைக்கும் நேரத்தில் தொன்னூறு முறை சிறகடிக்கவல்லது அது.

அதன் சிறகடிப்பில் லயித்து இருந்த நேரத்தில், “மணி சார், உங்களை எங்கெல்லாந் தேடுறது? இந்தாங்க, சுதன் பேசுறான்!”

“சொல்லுங்க சுதன்! நல்லா இருக்கீங்களா?”

“இருக்கம் மணி சார்; நீங்க உடனே இந்த அஜின் கோர்ட் லைப்ரரியடிக்கு வர முடியுமே?”

“வர்றங்க சுதன்! ஏன், என்னாச்சு??”

“நீங்க நேர்ல வாங்கோ, கதைப்போம்!”

“சரி வாங்க போலாம்!”

“இல்லங்க மணி சார்! பஸ் எடுத்துப் போனா, கனநேரம் புடிக்குமென்ன? நம்ம, அர்ணாப், இந்தியப் பொடியன் இருக்கான் பாருங்க, அவன்ட கார்ல போலாம் வாங்கோ!”

யார்க் பல்கலைக் கழகத்தில் இருந்து, கிழக்குப் பகுதியில் இருக்கும் அஜின்கோர்ட் செல்ல எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும். என்ன நடந்திருக்கும்? சுதன் ஏதாவது வம்பு வழக்கில் சிக்கிக் கொண்டானா? ஏக்ராஜ் அண்ணாச்சிக்கு அழைத்தால் என்ன? ஏக்ராஜ் அண்ணாச்சியும் அழைத்த அழைப்புக்கு, தொடர்பில் வரவில்லை.


”அவர் ஒன்று தண்ணியில் மிதந்து கொண்டு இருப்பார். அல்லது யாருக்காவது உதவி செய்து கொண்டு இருப்பார்”, என நினைத்துவிட்டுப் பின் நிதானத்துக்கு வந்ததும், வெளியே பார்த்தால் வாகனமானது பெருஞ்சாலை-401ல் பாம்பைப் போல, உள்தெருவுக்கும் வெளித்தெருவுக்கும், வளைந்து நெளிந்து கிழக்கு நோக்கி சீறிப் பாய்ந்து கொண்டு இருந்தது.

வண்டி நூலக வாயிலுக்கே நேராகச் சென்றது. வண்டியைப் பார்த்ததும் யாழினிதான் ஓடோடி வந்தாள். கலைந்த தலை; விரிந்து, பிரிந்து, நாலாப்புறமும் சிதறிய கேசம்; சோகமும், அழுகையும் முகத்தில்; ஆனால், உக்கிரமான கோபக் கனல் கண்களில்!

“மணியண்ணை!”, ஓ வென்றுப் பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள்.

அஜின்கோர்ட் நூலகத்தின் வெளியில் இருக்கும், அமர்விடத்தில் பத்துப் பதினைந்து பேர் குழுமி இருந்தார்கள். சாந்தன் ந்டுநாயகமாய் இருந்தான். இவர்களுக்குள் காதல் முறிவா? அல்லது, ஒழுக்கக் கேடான காரியத்தைச் சாந்தன் செய்து விட்டானா? யாழினியின் கூச்சலில், ஒன்றுமே புரியவில்லை.

“என்ன ஆச்சு? என்னை எதுக்கு வரச் சொன்னீங்க?? என்ன விசயம்???”

இடைமறித்தாள் யாழினி, “இவனெல்லாம் ஒரு மனுசனா? என்னோட ஒன்னுவிட்ட தங்கை, பூமாதிரி இருப்பாளண்ணே! ஊர்ல ஆமிக்காரங்கிட்டக் கசங்கிப் போயி, இப்ப கொழும்பு வந்து நிக்குறா! இனி யாரு அவளைக் காப்பாத்துவாங்க?!”

“யாழினி, புரியுது, கொஞ்சம் மெதுவாப் பேசுங்க! சனங்க நம்மளையே பாக்குறாங்க!”

“பாக்கட்டும்ணே! அந்த விசரனுக்கு நீங்க சொல்லுங்க!! இவன விட்டா, நான் யார்கிட்டப் போயிக் கேப்பன்? இவம் போயி, அவளக் கல்யாணங்கட்டிக் கூட்டியாறலாமண்ணே! நீதான் வேணுமின்னு நிக்கிறான். இங்க இருக்குற எனக்கு எதுக்கண்ணே, கல்யாணம்?”, யாழினியின் அழுகையால், தர்சினி, சாமா, கணையாழி என உடனிருந்த அவளது தோழியர் அனைவரும் விசும்ப ஆரம்பித்தனர்.

பாதிக்கப்பட்டு, செய்வதறியாது இருக்கும் சகோதரியின்பால் பாசங்கொண்டு, கொண்ட காதலை அர்ப்பணித்து, ஆர்ப்பரித்துத் தெறிக்கும் அந்த சகோதரவெறி கொண்ட மனிதநேயத் திவலைகள், அங்கு குழுமியிருந்தோர் அனைவரது மேலும் விழுந்து சுட்டது; சாந்தனின் இறுகிய மனமும், அந்த சூட்டில் இளகி, உருக ஆரம்பித்தது.

”டே சுதன்! நான் இனி யார்க் வரப் போறது இல்ல; மூர்த்தியண்ணங்கிட்டச் சொல்லிக் கொழும்புக்கு டிக்கெட் போடணும்டா!!”

28 comments:

vasu balaji said...

மனசு நிறைய நிறைய படிச்சு கடைசியில எல்லாம் காணாமப் போய் கனத்துப் போச்சு. :(

Anonymous said...

:(

படிச்சு முடிச்சதும் மனசு கஷ்டமாயிடுச்சு.

Thekkikattan|தெகா said...

பழம, ஈழத் தமிழ்ல எப்போ இது மாதிரி முழுசா ஒரு பதிவு எழுதுவீங்கன்னு இருந்தேன். ம்ம்ம் அருமை. //விசர்க்கதை// <===அப்படின்னா, என்னாவே?

நசரேயன் said...

பால அண்ணன் சொன்னதை வழி மொழிகிறேன்

ஆரூரன் விசுவநாதன் said...

மனம் கனக்கிறது.....என்ன சொல்வதென்றே தெரியவில்லை

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உண்மைச் சம்பவமா? அந்த மணியண்ணை நீங்கள் தானா? இலங்கைத்தமிழை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க!

பிரபாகர் said...

கலங்கவெச்சிட்டிங்கண்ணே கடைசியில! என்ன சொல்ல...

பிரபாகர்.

Paleo God said...

இறக்கி வெச்சிட்டீங்க..

ஏத்திகிட்டு, விக்கித்து போய்ட்டேன்..:(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

யார்க் பல்கலைக்கழகம், டொரண்டோ.. தமிழ் அன்பர்கள் என அனைவரும் கண்முன்னே நிற்கிறார்கள்... கடைசியில் மனம் வலிக்கிறது.

Unknown said...

அழகு ஈழத்தமிழில் மனதை கனக்க வைத்த பதிவு..

//யாழினியின் கூச்சத்தில், ஒன்றுமே புரியவில்லை//

கூச்சலில்?

எம்.எம்.அப்துல்லா said...

:(

தாராபுரத்தான் said...

அழ வைத்து விட்டீர்களே தம்பி.மறக்கவே முடியாது.

sultangulam@blogspot.com said...

இலங்கைத் தமிழிலும் அழகாய் எழுதுகின்றீர்கள்.
நெகிழ வைக்கிறது இடுகை.

*இயற்கை ராஜி* said...

:-(

சிநேகிதன் அக்பர் said...

படிச்சிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஈரோடு கதிர் said...

யாழினி வாழ்க

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்
@@சின்ன அம்மிணி
@@நசரேயன்
@@ஆரூரன் விசுவநாதன்
@@பிரபாகர்
@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
@@ச.செந்தில்வேலன்
@@எம்.எம்.அப்துல்லா
@@தாராபுரத்தான்
@@இய‌ற்கை

வணக்கம் மக்களே, யார் மனதையும் நோக வைக்க வேண்டுமென்பது அல்ல; காதல் என்பது அர்ப்பணிப்புக்கும் துணை போகும் என்பதே இங்கே வலிந்து சொல்லப்படுகிறது.

//
Thekkikattan|தெகா said...
//விசர்க்கதை// <===அப்படின்னா, என்னாவே?//

விசர் என்றால், பைத்தியம், புத்தி தெளிவில்லாதது, மனம் நோவது என இடத்திற்கேற்றாற் போல் வரும். இங்கே, தெளிவில்லாத, விரும்பத்தகாத கதை கதைக்காதே என்று பொருள் தாங்கி வருகிறது.

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
உண்மைச் சம்பவமா? அந்த மணியண்ணை நீங்கள் தானா? இலங்கைத்தமிழை ரொம்ப //

நன்றிங்க! மட்டுறுத்தலுடன் கூடிய, உண்மைத் தழுவல்தான். உங்கள் யூகம் சரியே, மணி சார் நானேதான்!

@@முகிலன்

நன்றிங்க; பொருட்பிழை திருத்தியமைக்கும்!

@@சுல்தான்

வணக்கம் ஐயா! நன்றிங்க!!

@@ஈரோடு கதிர்

அது!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மட்டுறுத்தல் என்றால் புரியவில்லை.. யாழினி - மிகவும் மேன்மையானவராக இருக்கிறார்.. அவருடைய காதலரும்.. நன்றி பகிர்வுக்கு! என் தோழியரிடம் (இலங்கைக்காரர்கள்) இந்த லின்கைப் பகிர்ந்து கொள்கிறேன்..

அப்பாவி முரு said...

:(

இப்படி போடுறதைத் தவிர வேறொன்னும் செய்வதற்கில்லை...

Anonymous said...

//இளகி, உருக ஆரம்பித்தது//

படித்தோர் மனங்களும் தான்...

க.பாலாசி said...

ரொம்ப பொறுமையாத்தான் படிச்சேன்...கடைசியா...என்னத்த சொல்ல..?? :-(

கண்ணகி said...

ஒன்றும் சொல்ல இயலவில்லை..

PPattian said...

:( .. நெகிழ்ச்சி

சரண் said...

கதைப் படிச்சு முடிக்கும்போது துக்கம் தொண்டக்குழிய அடைக்குதுங்க..
ஈழத்துல நடகறதெல்லாம் மனம் நிறைய வேதனைய்யயிருந்தாலும் என்ன முடிவுங்கறது ரொம்ப குழப்பாமாவே இருக்கு.. யாரையும் நம்ப முடியல..

மாதேவி said...

இலங்கைத் தமிழ் நன்றாய் வந்துள்ளது.
:(

பழமைபேசி said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
மட்டுறுத்தல் என்றால் புரியவில்லை..
//

ஒரு சிலதைக் குறைத்தும் மறைத்தும் வெளியிடுவதுங்க!

@@அப்பாவி முரு
@@கண்ணகி
@@சரண்
@@மாதேவி

நன்றிங்க!

சுயபச்சாதாபம்... புரியுதுங்க!

@@தமிழரசி
@@PPattian : புபட்டியன்

நன்றிங்க!

@@க.பாலாசி

ப்ச்

Unknown said...

காலம்காலமாய், நம் தமிழ்ச் சகோதரிகளுக்கு, ஈழத்தில் நடக்கும் கொடுமை மனதை பாடாய்ப்படுத்துகிறது; இயலாமை எம்மை கொஞ்சம்கொஞ்சமாய் கொன்று திண்கிறது. பெண்களை மான பாங்கப்படுத்தும் கயமை ஒழிய வேண்டும் !!!

மற்றபடி ஈழத் தமிழ் தெவிட்டாத தேனின்பம் :)

தி.நடராஜன்
பெங்களுரு

ராஜ நடராஜன் said...

தாமதமாக வந்த பின் வாசிப்பில்!

மௌனம் விட்டுச் செல்கிறேன்.