சிங்கப்பூரின் பிரதான இடத்தில், அவர்களுக்காக அவர்கள் பணி புரியும் நிறுவனத்தினரால் ஒதுக்கப்பட்ட மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு. இடதுபுறமாகக் கூப்பிடு தூரத்திலேயே, முஸ்தபா, வி.கே.கல்யாணசுந்தரம் பல்பொருள் அங்காடிகள்;
அதனருகிலேயே ஜலன்பெசார் வீதி. பெருமளவிலான தாயகத்து மக்கள், முதல்முதலாய்க் கண்ட சிவப்பு விளக்கு அந்த இடத்திலாகத்தான் இருக்கும். அதையும் கடந்து சென்றால், சனி, ஞாயிறுகளில் மாதவிகள் வருகைக்காகக் கோவலர்கள் கூடும் செராங்கூன் கடைத்தெருவும், திறந்தவெளிப் புல்தரையும்.
”என்ன மனோ, நீங்க மட்டும் வர்றீங்க?”
“ஆமாம் மணி, குணான் இப்பதான் லேவண்டர் எம்.ஆர்.டில வந்தெறங்கி இருக்கானாம். நேரா சுதாஸ்க்கு வர்றேன்னு சொல்லிட்டான்!”
”ஏன் லேவண்டர்ல இறங்கினான்? அடுத்தது புகீஸ்! அங்க எறங்கி இருந்தா இன்னும் பக்கமாச்சே?”
“என்னங்க மணி?! இறங்கினவிட்டுத்தானே அவனுக்குத் தெரியும் நாம சுதாஸ் போறம்ணு?!”
“ஓ, ஆமாயில்ல?!”
“ஆமாம் மட்டுந்தான்!”, கடித்துக் கொண்டே நியூபார்க் நட்சத்திர விடுதியையும் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.
“ச்சே, மூக்குல பஞ்சு வெச்சுட்டுத்தான் வரணும் போல இருக்கு? மூக்குல பூந்து, தலைய ஆட்டு ஆட்டுன்னு ஆட்டுதுங்க இந்த துரியன் பழம்!”
“ஆமாங்கக் கர்மம்! இரயில்ல எல்லாம் கொண்டாரக் கூடாதாம். இப்படிச் சனங்க போய் வர்ற எடத்துல மட்டும் கடையப் போடலாமாம்?!”
“அங்க பாருங்க! குஷ்புவும் பிரபுவும் போறாங்க பாருங்க!!”
“ஆமாங்க! அப்ப பேப்பர்ல வர்றது எல்லாம் நெசந்தானா?”
“க்கும், அதான் நேத்து டிவிலயே வந்துச்சே? முஸ்தபாவுக்கு வந்துட்டு போறாங்க போலிருக்கு?!”
சுதா உணவகத்தில் நுழைந்ததுமே, அங்கு பணிபுரியும் பணியாளர்களான செந்தமிழரசும், குமாரும், இவர்களிடம் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். அவர்கள் இருவருமே, இவர்களுக்கும், இவர்களுடைய நண்பர்களுக்கும் நெருக்கமான நண்பர்கள்.
அவர்களோடு அளவளாவிக் கொண்டு இருக்கையில், ராய் மற்றும் குணா என்கிற குணசேகரனும் வந்து சேர்ந்து கொண்டனர். ராய், சிங்கப்பூரில் ஓரிரு ஆண்டுகளாய் இருப்பவர். அமோக்கியோ பகுதியில் இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. குணசேகரன், சிங்கப்பூருக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.
”என்ன குணா, எப்படி இருக்கு சிங்கப்பூர்? ச்சும்மா, வாங்கிக் குடி இராஜா!”
“இல்லங்க ராய்! வந்து ஒரு வாரந்தான் ஆகுது. ஒன்னாந்தேதி சம்பளம் வந்தாத்தான்....”, இழுத்தான் குணா!.
“கவலைப்படாத இராஜா! நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்.... சம்பளம் வந்த பின்னாடிக் குடு இராஜா!!”, இராய் ஆசுவாசப்படுத்தினார்.
“ஆமாமா, இன்னைக்கு இராத்திரியாவது நாங்க நிம்மதியாத் தூங்கணும்!”, உள்குத்தை அவிழ்த்து விட்டான் மணி.
தொடர்ந்து, கடையில் இருந்த பட்சிகளான மின்மினி மற்றும் பச்சைக்கிளி ஆகியோரைச் சீண்டியபடியும், அவர்களுடைய தினசரி வரும்படி குறித்தான கேள்விகளைக் கேட்டபடியும் இருந்த இவர்கள், பேராயக் கட்சியில் இருந்து மூப்பனார் பிரிந்து சென்றது சரியா, தவறா எனும் விவாதத்திற்குத் தாவினர்.
”இராஜா... மனோ!! பாத்து காசைக் குடுத்துட்டு, சரியாக் கணக்கு எழுதி வெச்சிரு!!”, இராய் புறப்பட ஆயத்தமானார்.
“மணி, போதும்! அவளுக இருக்குற இடத்துப் பக்கம் பாத்துறாத! கூட வர்றேன்னு சொல்வாளுக!!”
“என்ன விளையாட்டா? இந்நேரம் பொங்க வெச்சதெல்லாம் நீங்க! போகும் போது எனக்கு புத்திமதியா? சரி, வாங்க போலாம்!”
செட்டிநாட்டு உணவும், புலிப்பாலும், இவர்களை நித்திரையின் உச்சத்திற்கே இழுத்துச் சென்றது.
வீட்டிற்குச் சென்றதுமே, அவரவர் அறையில், அவசர கதியில், ஆடைகளைக் களைந்து மாற்றாடைக்குள் தஞ்சம் புகுந்து சயனித்துப் போயினர் அனைவரும்.“என்னங்க மணி, கொஞ்சம் இங்க வாங்க!”, எங்கோ தொலைவில், கேளாங் தாண்டிக் கெம்பாங்கன் பகுதியில் இருந்து யாரோ கூப்பிடுவது போல இருந்தது. அருகில் வந்து, உலுப்பினார் மனோ!
“மணி, இன்னைக்கும் நமக்கு நேரஞ் சரியில்ல. குணா, உக்காந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்!”
“அடக் கடவுளே! இவனுக்கு என்ன பிரச்சினை இப்ப??”
“வேறென்ன? ஹோம் சிக்தான்! ஏழாவது மாடியில வேற இருக்கோம். ஏதாவது செஞ்சிட்டா என்னங்க செய்யுறது??”, குணாவின் அறைக்குள் நுழைந்தனர்.
“என்னங்க குணா, இப்படிச் செய்யுறீங்க?”
“மணி, முடியலை! எனக்கு எங்கம்மா ஞாபகமாவே இருக்கு!! இராத்திரி வீட்டுக்குப் போனா, சொந்தக்காரங்க கதையெல்லாஞ் சொல்லி, சாப்பாடு போட்டு, நான் படுத்ததுக்கு அப்புறம் எனக்குத் தலைமாட்டுல ஒரு சொம்பு நிறையத் தண்ணி வெச்சிட்டுத்தான், அவங்க படுப்பாங்க தெரியுமா??”, குலுங்கிக் குலுங்கி அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.
“அய்யோ... அதெல்லாம் தெரிஞ்சுதான வந்தோம்?! நல்லா யோசிச்சுப் பாருங்க. சும்மா ஒன்னும் வரலை நாம. பாண்டியனுக்கு எழுபதாயிரம் அழுதுட்டு, டிக்கெட்டுக்கு இருபத்தோராயிரம்... ஒரு இலட்சம் ரூபா கடனோட இருக்கோம்... அது போக, உங்களுக்கு இருக்க வீடுகூடக் கிடையாதுன்னு சொன்னீங்க. எல்லாம் யோசிச்சுப் பாருங்க!”
“தெரியுது... ஆனா, முடியலை! அவங்க மட்டும், அங்க என்ன, நல்லா இருப்பாங்களா?”
“அதான், உங்க அக்கா, மச்சான் எல்லாம் இருக்காங்களே பக்கத்துல! நீங்க படுங்க குணா!!”
“இல்ல மணி!”, சடாரெனக் காலில் விழுந்தான்.
“என்னை, எப்படியாவது, இப்பவே ஊருக்கு அனுப்பிடுங்க! எனக்கு என்னோட அம்மா வேணும்...”, அன்றைய இரவு அழுகையிலும், அனத்தலிலும் கழிந்தது. அவனுக்கு மட்டுமல்ல, மற்றவருக்கும் சேர்த்தே!
மணியனும், குணாவும் ஒரே நாளில், ஒரே விமானத்தில் சிங்கப்பூர் வந்தவர்கள். மணியனிடமும் போதிய பணபலம் இருந்திருக்கவில்லை. இராய் மற்றும் மனோவின் தயவில், மறுநாளே ஒரு இலட்ச ரூபாய்க் கடனோடு திரும்பினான் குணசேகரன்.
காலங்கள் கழிந்தது. இராய் மற்றும் மனோ இருவரும் அவுசுதிரேலியாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். மணியன், மேற்படிப்புக்கென கனடாவுக்கு இடம் பெயர்ந்தான்.
தாயகமெங்கும் அலைபேசிப் புரட்சி. கணனி யுகத்தின் ஆர்ப்பரிப்பு. தீவிரவாதம் எழுந்து தோற்றது. தமிழினம் வஞ்சிக்கப்பட்டது. இப்படியாகக் காலச்சக்கரம், அதன் நியமத்தில், கிரமம் தவறாது சுழன்று கொண்டே இருக்கிறது.
இதனிடையேதான், வாழ்க்கைப் பயணத்தில், என்றோ, எங்கேயோ பார்த்துக் கொண்ட இரு ஜீவன்கள் சந்தித்துக் கொண்டன.
”வாங்க, வாங்க மணி! நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கேன்! என்ன குணா இது? பயங்கரமாக் குண்டாயிட்டீங்க?”
”ஆமாம் மணி, நீங்கென்ன வெள்ளைக்காரனாட்டமே இருக்கீங்க?”
“அய்ய... “
“பாத்து எத்தினி வருசமாச்சு?”
“ஆமாம்... உனக்கு குழந்தைக?”
“பையன் ஆறாவது படிக்கிறான்; பொண்ணு ரெண்டாவது, கலைமகள்ல படிக்கிறா!”
”அடேங்கப்பா... என்னோட பொண்ணு இப்பதான் ஒன்னாவது!”
“ஆமாங்க... எல்லாம் எங்கம்மா புண்ணியத்துல....”, மடாரென அதே நிகழ்ச்சி. கலவரமுற்றுப் போனான் மணி. நல்ல வேளை, இம்முறை காலிலெல்லாம் விழவில்லை; மாறாகக் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டான் குணா.
“என்ன குணா இது? எல்லாரும் பாக்குறாய்ங்க!!”
“அதானாலென்ன? அன்னைக்கு மட்டும் நீங்க ஊருக்கு திருப்பி அனுப்பாம இருந்திருந்தா, இன்னைக்கு நான் இந்த நெலமைக்கு வந்தே இருக்க மாட்டன்!”
பரஸ்பரம் நலம் விசாரிப்புகள் முடிந்து, அறிமுகம் செய்து வைத்தலும், விருந்தோம்பலும் நல்லபடியாக நடந்தேறியது.
“ஆமாம் மணி. நான் வந்த கொஞ்ச நாள்லயே செருப்புக் கடை ஒன்னு போட்டேன். ஓரளவுக்குப் போச்சு. அப்புறம் அம்மாவோட தயவுல கல்யாணமும் நடந்தது! கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசத்துலயே அம்மா தவறிட்டாங்க!”, மீண்டும் நினைவுகளில் மூழ்கியவனாய்க் கண் கலங்கினான் குணா.
அவனே மெளனத்தைக் கலைத்து விட்டுத் தொடர்ந்தான்,
“சிங்கப்பூர்லயே இருந்திருந்தா, அம்மாவைக் கண்ணுல பாக்காமயே கூடப் போயிருக்கும். வந்ததுதான் நல்லதாப் போச்சு!”
“விடுறா குணா, இப்ப என்ன செய்யுறே?”
“இப்ப ரெண்டு செருப்புக் கடை இருக்கு. அப்பொறம், இந்த செப்டிக் டேங்க் சுத்தம் பண்ற லாரிக நாலு ஓடுது!”
“பரவாயில்லையே... நான் வெளிநாட்டுல இருக்கேன்னுதாம் பேரு...ம்ம்.. மத்தபடி வசதிகெல்லாம் எப்படி?”
“அம்மாவோட புண்ணியத்துல, ஒரு இருபது முப்பது தேறும்னு நினைக்குறேன்!”
“என்ன குணா இது? இது சொந்த வீடுதானே?”
”ஆமாம்... ரெண்டாயிரத்து நானூறு சதுர அடி, மொத்தம் அஞ்சரை சென்ட்!”
“அப்பறமென்ன, இருபது முப்பதுன்னு?”
”ஆமாம் மணி, இருபது கோடியெல்லாம் சுலுவுல தேறும்....”
இலட்சத்திற்கும் கோடிக்குமான குழப்பத்தைக் கடுமையாகப் பிரயத்தனப்பட்டுச் சமாளித்தான் மணி. பின், அரசியல், நாட்டு நடப்பு எனப் பலதும் பேசிக்கொண்டு இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமாகச் சென்று கொண்டிருந்தது. குணாவுக்கு அலைபேசியில் அழைப்புகள் வந்தபடியே இருந்தன. அதை அவதானித்த மணியன் விடைபெறலானான்.
“சரி குணா, நான் வரட்டுமா?”
“சரி மணி, இன்னொரு நாளைக்கு குடும்பத்தோட வரணும் சரியா?”
“சரி குணா!”
முற்றத்தில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த குணாவின் மகளைக் கண்டு,
“பாப்பா, உம்பேரு என்னம்மா?”
பாப்பா, ஊஞ்சலை விட்டு இறங்கித் தகப்பனின் பின்னால் வந்து நின்று கொண்டாள். அது கண்ட குணா, தானே தொடர்ந்தான்!
“அம்மோவோட பேர்தான் இவளுக்கும்..... சகுந்தலா!”
15 comments:
கலக்குறீங்க
ஆஹா.. குணா கலக்கிட்டாரே.. உண்மையான அம்மா பாசம்..
வழக்கமா இந்த மாதிரி மறுபடியும் சந்திக்கிற கதையிலயெல்லாம் அந்த நண்பர் ரொம்ப நொடிஞ்சு போயித்தான் இருப்பார்.. உங்க நண்பர் நல்ல நிலைமையில இருக்கறார் :))
மாதவியை இழிவுபடுத்தியதற்கு கடும் கண்டனம்.
குணா ஈரோட்டுக்காரரா? கலைமகள் பள்ளி அங்க புகழ்பெற்றது அத வச்சி கேக்கறேன்.
மணியனுக்கு வசதி குறைச்சலா நம்பற மாதிரி இல்லையே.
//குறும்பன் said...
மாதவியை இழிவுபடுத்தியதற்கு கடும் கண்டனம்.
//
இன்னும் ரெண்டு வாரந்தான இருக்கு! அந்தப்பக்கம் வரும் போது, வீட்ல சொல்லிடுறேன்.... நீங்க இப்படி மாதவிக்குப் பரிஞ்சு பேசினதாத்தான்!!
நல்லா இருக்குண்ணே.. அடுத்த தொகுப்பு உங்களோடதா?
வேற வழியில்ல. கதிருக்குதான் ஃபோன் போடணும். அல்ல்ல்லோஓஓஓ. யாருங்க குணா?
@@சின்ன அம்மிணி
நன்றிங்க!
@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..
ஆமாங்கோ!
//குறும்பன் said...
குணா ஈரோட்டுக்காரரா? கலைமகள் பள்ளி அங்க புகழ்பெற்றது அத வச்சி கேக்கறேன். //
கோவை, பல்லடம், சூலூர், இந்தப் பகுதியிலயும் இந்தப் பெயர்ல பள்ளிகள் இருக்குங்கோ!
//முகிலன் said...
நல்லா இருக்குண்ணே.. //
நன்றிங்க முகிலன்... அப்படி எல்லாம் இல்லீங்க...
// வானம்பாடிகள் said...
வேற வழியில்ல. கதிருக்குதான் ஃபோன் போடணும். அல்ல்ல்லோஓஓஓ. //
ஆகா!
நீதி: உங்ககூட இல்லாததால அவரு பெரிய ஆளாயிட்டாரு:-)
அம்மான்னா சும்மாவா?
// பேராயக் கட்சியில் இருந்து மூப்பனார் //
காங்கிரஸ் அப்படிங்கறதத்தான் இப்படி எழுதியிருக்கீங்களா? தமிழ நல்லாத்தான் வாழ வக்கிறீங்க :-)
சகுந்தலா,பெயரை ப்போலவே அழகாய் இருக்கிறது.
//
முகிலன் said...
நல்லா இருக்குண்ணே.. அடுத்த தொகுப்பு உங்களோடதா?
//
எனக்கும் அப்படித்தான் தோணுது
நல்லா இருக்குங்க கதை.
// கபீஷ் said...
நீதி: உங்ககூட இல்லாததால அவரு பெரிய ஆளாயிட்டாரு:-)
February 24, 2010 10:31 AM//
அஃகஃகா... உள்ளதைச் சொல்லி இருக்கீங்க.... உங்களுக்கும் அப்பப்ப வேலை செய்யும் போல இருக்கே...
//கபீஷ் said...
// பேராயக் கட்சியில் இருந்து மூப்பனார் //
காங்கிரஸ் அப்படிங்கறதத்தான் இப்படி எழுதியிருக்கீங்களா? தமிழ நல்லாத்தான் வாழ வக்கிறீங்க :-)
//
நீங்க எல்லாம் கொடுக்குற ஊக்கந்தான் காரணம்!
// ஜெரி ஈசானந்தா. said...
சகுந்தலா,பெயரை ப்போலவே அழகாய் இருக்கிறது.
February 24, 2010 10:42 AM//
தலைமையாருக்கு நன்றி!
@@நசரேயன்
@@க.இராமசாமி
நன்றிங்க மக்களே!
அருமை, வெளிய வந்தவனெல்லாம் வெற்றியாளனில்லை, உள்ளூரில் இருப்பவனெல்லாம் தோற்றவனுமில்லை
Post a Comment