8/17/2009

தெள்ளு விளையாடிட்டு, அப்புறம் இலக்கியம் பேசுலாம் வாங்க!

//Venkatesan said...
எல்லாம் புரிஞ்சது ..ஆனா ஒன்னு... தெள்ளு விளையாடுறதுன்னா என்ன சார்? இதுக்கு தனி பதிவு போடனும்மோ ;-)

-வெங்கி//

வாங்க வெங்கி! நீங்க அலைபேசியில அழைச்சி, என்ன ஐயா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையேன்னு கேட்டப்ப மிரண்டு போயிட்டேன். அதுக்கு முன்னாடி, ஒரு சின்ன கதை; அதை மொதல்ல பார்க்கலாம் வாங்க!

20-25 ஆண்டுகளுக்கு முன்னாடி, தெலுகு தேசத்துல இருக்குற இராயல்சீமா பகுதியில எப்பவும் உள்தகராறு, வெடிகுண்டு, கொலை, கொள்ளைன்னு நடந்துட்டே இருக்குமாம். அந்த நேரத்துல ஒரு பகுதியச் சார்ந்தவங்க, அந்த ஊருக்குள்ள போகவே அங்க யாருமே இல்லையாம்.

வந்த மக்கள் செய்வதறியாது நிக்கவே, அந்த கூட்டத்துல இருந்த ஒருத்தன், ‘ரே சீனிவாசு!’ன்னு உரக்கக் குரல் கொடுத்ததுதான் தாமதம், ’பொலு பொலு’ன்னு ஊர்ல ஒளிஞ்சிருந்த ஆண் பிள்ளைகள்ல பாதிப்பேர் அங்க இங்கன்னு இருந்து குதிச்சாங்களாம். அப்புறம் என்ன? ஒரே போடு; அத்தனை பேரும் போய்ச் சேர்ந்துட்டாங்களாம்.

அந்த மாதிரி, வெங்கடேசன், வெங்கி, வெங்கட்ன்னு நிறைய வாசகர்கள் நம்ம பக்கத்துல அப்ப அப்ப தலை காண்பிக்கிறது உண்டு. அதுபோல நம்ம பதிவுலக நண்பர்கள்ல, இந்த வெங்கியும் ஒருத்தர்னு நினைச்சிட்டேன். நீங்க அலைபேசில அழைச்சப்பதான் தெரிஞ்சது, ரவ்வும்பகலும் கூட இருந்து குப்பை கொட்டுன வெங்கின்னு, மன்னிச்சுகுங்க!

ஆனாக் கேட்டது எந்த வெங்கியா இருந்திருந்தாலும், கேட்ட கேள்விக்கு நிச்சயமா பதில் சொல்லி இருப்பேன், சொல்லிட்டு இருக்கேன்; வாங்க மேல படிக்கலாம்!

தெள்ளு விளையாட்டுன்னா என்ன? பாருங்க கண்ணுகளா, இது நான் கடைசியா எட்டாம் வகுப்பு விடுமுறையில விளையாடினதுன்னு நினைக்குறேன். சலவநாயக்கன் பட்டிப் புதூர் மாகாளியாத்தா கோயல் மைதானத்துல நாங்க எல்லாம் ஒன்னாக் கூடுவோம். கூடும்போதே, தட்டையா, வட்ட வடிவத்துல ஆளுக்கொரு கல் கையில வெச்சிருப்போம்.

ஒரு கோட்டைக் கிழிச்சிட்டு, ஒவ்வொருத்தரா கல்லை நேர் வாக்குல வீசணும்; அப்ப யாரோட கல் குறைஞ்ச தூரம் வீசப்பட்டு இருக்கோ அவங்க ஆட்டத்துக்கு இலக்காளி. அதே கோட்டுல இருந்து, காலடியில ஆறு எட்டு நடந்து போயி, அங்க வட்டமா ஒரு கோடு கிழிச்சி, அதுல இலக்காளியோட கல்லை வெச்சிடுவோம்.

இப்ப ஆட்டம் ஆரம்பிக்கும். கிழிச்ச கோட்டுல இருந்து ஒருத்தன், வட்டத்துல இருக்குற கல்லை, நல்லாக் குனிஞ்சு, தன்னோட காலுக்குள்ள ஒரு கைய விட்டு இலாவகமா அடிக்கணும். அப்ப வட்டத்துல இருந்த கல் முன்னோக்கி நகரும்.

இப்ப அடுத்தவன், இலக்காளியோட கல் முன்னாடி இருந்த இடத்துல இருந்து அதேபோலக் காலுக்குள்ள கைய விட்டுத் தன்னோட கல்லால அடிக்கணும். இப்படியே, அடிக்கிறதுல குறி தவறாத வரைக்கும் அடிச்சி நகர்த்திட்டே போவோம். எங்க தவறுதோ, அந்த இடத்துல இருந்து, தள்ளு ஆரம்பிச்ச வட்டத்து வரைக்கும் இலக்காளியானவன் நொண்டி அடிக்கணும்.

நொண்டி அடிக்கும் போது, காலைக் கீழ ஊனிட்டா, மறுபடியும் திரும்பப் போயி குறி தவறுனதுல இருந்து அடிச்சிட்டு வரணும்; என்ன கொடுமைடா சாமி? இதாங்க, தள்ளு விளையாட்டு. ஆனா, நாங்க தெள்ளு விளையாடுறதுன்னுதாஞ் சொல்றது! இஃகிஃகி!!


//ஆரூரன் விசுவநாதன் said...

"இலக்கியம்" என்னும் வார்த்தை சங்க இலக்கியங்களில், திருக்குறளில், தொல்காப்பியத்தில் இல்லை???????? இலக்கியம் என்ற வார்த்தைக்கு பொருள் என்ன? இது எங்கிருந்து வந்தது. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் நண்பரே....

நானும் நண்பர் கதிரும் நீண்ட வாதத்திற்கு பின் உங்களை கேட்பது என்ற முடிவிற்கு வந்துள்ளோம்.//

ஆமா, நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல? அவ்வ்வ்.... நான் எதோ எனக்குத் தெரிஞ்சதை எழுதி காலத்தை ஓட்டிட்டு இருக்கேன். இப்படி எல்லாமா, ஒருத்தனை அந்தலை சந்தலை ஆக்குறது? மாப்பு, சீர் வரிசை எல்லாம் ஒழுங்காத்தான எங்க ஊட்டுல இருந்து அனுப்பியுட்டோம்?!

கேட்டு போட்டீங்க; இனி சொல்லுலைன்னா அங்க ஊட்டுல போயி அம்மிணிகோட ஓரியாடுவீங்க! சரி வாங்க படிக்கலாம் மேல!! பாருங்க கண்ணுகளா, திருவாச்கத்துல ஒரு பாட்டு:

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து!


உங்க மாமனுக்குப் புடிச்ச பாட்டு, அதனாலத்தான் உங்க மாப்புளையோட பேரு மணிவாசகம். இஃகி! வழிஞ்சது போதும், பாட்டு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் வாங்க!!

நல்ல அமிர்தம் போல்பவனாகிய பெருமானது திருவடியை என்மனத்தில் இருத்திச் சொல்லளவைக் கடந்த, அவனது திருவார்த்தையைப் பேசி, அவன் திருப்பெருந்துறையை வாழ்த்தி என் பிறவித் தளையை ஒழித்தேன். இங்க, பொருள் கொண்ட மணியான வார்த்தைகள் கொண்டு பேசும் பேச்சை இலக்கிதம்ன்னு குறிப்பிடுறாரு மணிவாசகர்.

அது போக, திருவருட்பா, ஆறாம் திருமுறையில இராமலிங்க அடிகளார், அதாங்க நம்ம வள்ளலார் சொல்றாரு,

குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்தருளே!

இது மாத்திரம் இல்லீங்க, இன்னும் சீவக சிந்தாமணி போன்ற பல நூல்கள்ல இலக்கிதம்ங்ற சொல் பாவிக்கப்பட்டு இருக்கு. மற்றபடி எந்த நூல்கள்ல இருக்குன்னு எனக்கு இப்பத் தெரியாது. இப்போதைக்கு ஏழாம் நூற்றாண்டுதான் இச்சொல்லின் பிறப்புன்னு வெச்சிக்கலாம். இன்னுந் தேடுவோம். மக்கள்கிட்டக் கேட்போம், அதுபோக, இங்கயும் ஒரு எட்டுப் போயிட்டுப் போங்க!!

ஆனா, அதுவரைக்கும் ஊட்ல போயி அம்மணிகளையுமு, சின்ன பாப்பாத்தியையுமு தொந்தரவு பண்ணக் கூடாதாமா, சொல்லிப் போட்டேன்!

19 comments:

Unknown said...

ரொம்ப அருமையான விளக்கம். ரொம்ப நன்றிங்க சார்.

-அன்புடன் வெங்கி

பழமைபேசி said...

//Venkatesan said...
ரொம்ப அருமையான விளக்கம். ரொம்ப நன்றிங்க சார்.

-அன்புடன் வெங்கி
//

எப்படிங்க இது? போட்ட உடனே வந்திட்டீங்களே?? நல்லது, நன்றி!

இராகவன் நைஜிரியா said...

தெள்ளு விளையாட்டுப் பற்றி இதுவரை கேள்விப் பட்டதில்லை. இப்போதுதான் முதல் முறையாக கேள்விப் படுகின்றேன். அருமையாக இருந்தது.

இலக்கியம் பற்றி அருமையான விளக்கம் கொடுத்து இருக்கீங்க.

பழமைபேசி said...

//அது சரி said...
நன்னாயிட்டு உண்டு...

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்...

//

அது சரி அண்ணாச்சி, அது அப்படி அல்ல;

ஒட்டக்கூத்தம் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!

இப்ப நான் விமானம் புடிக்க போயிட்டு இருக்கேன்.... அடுத்த இடுகை, இதான்!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
தெள்ளு விளையாட்டுப் பற்றி இதுவரை கேள்விப் பட்டதில்லை. இப்போதுதான் முதல் முறையாக கேள்விப் படுகின்றேன். அருமையாக இருந்தது.
//

நன்றிங்க ஐயா!

ஆ.ஞானசேகரன் said...

தெள்ளுவை பற்றிய நல்ல விளக்கம் பழம...

naanjil said...

தம்பி ம்ணி

'இலக்கியம்' என்ற சொல்லைப் பற்றி நல்லதொரு ஆய்வுச் செய்தி எழுதியமைக்கு நன்றி.

வாழ்த்துக்கள்

நாஞ்சில் பீற்றர்

ஈரோடு கதிர் said...

//இலக்கியம் என்பது மனித வாழ்விலிருந்தே உருவாகிற கலையாகும். மனித வாழ்வை பார்த்தது போலச் செய்தலே இலக்கியம்.//

நன்றி மாப்பு..

தெள்ளு விளையாட்டு நினைவு தேனாக இனிக்கிறது

Anonymous said...

நாலடி மேல்வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கிய மாக
எல்லாப் பொருள்களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப்
பாடினார் ஞானசம் பந்தர்.

(சேக்கிழார் - பன்னிரண்டாம் திருமுறை)

இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை

(நக்கீரர் - பதினொராம் திருமுறை)

- அ. நம்பி

vasu balaji said...

தெள்ளு ஏங்க வைக்குது. இலக்கியம் தேட வைக்குது. நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

நடமாடும் encyclopedia (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை அபிதான சிந்தாமணி என நினைக்கிறேன்) விற்க்கு வாழ்த்துக்கள். மேலும் தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
அன்புடன்
ஆரூரன்.

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

சுப.நற்குணன்,மலேசியா. said...

நல்ல தகவலுக்கு நயமான பாராட்டுகள் பழமைபேசி.

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்
@@கதிர் - ஈரோடு
@@வானம்பாடிகள்
@@ஆரூரன் விசுவநாதன்
@@Ram
@@சுப.நற்குணன்

மிகவும் நன்றி மக்களே!

@@@@ஆரூரன் விசுவநாதன்

நண்பர் அ.நம்பி அவர்களோட மறுமொழியையும் பாருங்க!

பழமைபேசி said...

//naanjil said...
தம்பி ம்ணி

'இலக்கியம்' என்ற சொல்லைப் பற்றி நல்லதொரு ஆய்வுச் செய்தி எழுதியமைக்கு நன்றி.

வாழ்த்துக்கள்

நாஞ்சில் பீற்றர்
//

அண்ணா, வணக்கம்!

நான் பள்ளிப்பிராயத்திலேயே கவனித்தது உண்டு. அவரது புத்தகத்தில், இவர் முன்னுரை அளிப்பது; இவ்ரது புத்தகததில் அவர் சிலாகித்துப் பேசுவதும். அது கண்டு மனதின் ஓரத்தில் சிறு நெருடல் ஏற்படுவது உண்டு.

அதுபோலத்தான், எனது சக நண்பர்கள் பாராட்டுகிறார்கள். மனம் மகிழ்ச்சி கொள்கிறது. அதே வேளையில், வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணுவது உண்டு; அன்றைக்கு குறைபட்டுக் கொண்டாயே? இன்று உன் நிலையும் இதுதானே என.

அக்குறையைக் களைந்தீர்கள். பட்டறிவும், படிப்பறிவும் கூடிய, பதிவுலகிற்கு வெளியில் இருந்து வந்த தங்களின் ஆசிகளுக்கும், அறிவுரைக்கும் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன்.

பணிவுடன்,
பழமைபேசி.

பழமைபேசி said...

//nanavuhal said...
நாலடி மேல்வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கிய மாக
எல்லாப் பொருள்களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப்
பாடினார் ஞானசம் பந்தர்.

(சேக்கிழார் - பன்னிரண்டாம் திருமுறை)

இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை

(நக்கீரர் - பதினொராம் திருமுறை)

- அ. நம்பி
//

அ.நம்பி அவர்களே,

தங்களின் மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி!

குறும்பன் said...

தெள்ளு அப்படிங்கிறத படிச்சதும் எனக்கு கள்ளு & தெளுவு ஞாபகம் வந்துடுச்சி :-(

பழமைபேசி said...

//குறும்பன் said...
தெள்ளு அப்படிங்கிறத படிச்சதும் எனக்கு கள்ளு & தெளுவு ஞாபகம் வந்துடுச்சி :-(

//

ஆமாங்க...நெம்ப நாளாயிடிச்சி, இல்ல?!

Unknown said...

நாங்களும் தெள்ளு விளையாடியிருக்கோம்..

:-D