8/14/2009

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்!

வணக்கம் மக்கா! நேற்றைக்கு பணம் பத்தும் செய்யும் எனும் தலைப்புல ஒரு இடுகை இட்டு இருந்தோம். அதைப் பார்த்த ஆசான் உயர்திரு. கொழந்தைவேல் இராமசாமி அவர்கள், ’பசி வந்தால் பத்தும் பறந்து போகும், இதுல வர்ற பத்து என்ன?’, அப்படீன்னு கேட்டு இருந்தாரு.

நாமளும் நம்ம பங்குக்கு,

பசி வந்தால் பற்றும் பறந்து போகும்;

பசி வந்தால் சட்டி பானையில் இருக்குற அடிப்பத்தும் பறந்து போகும்;

நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!


இப்படி நம்முடைய யூகத்துக்கு கிடைச்சதை எல்லாம் விட்டுப் பார்த்தோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை; கடைசில, யோசிச்சு யோசிச்சு பசிதான் வந்திருக்குன்னு சொல்லிச் சொன்னோம். அதைக் கேட்ட ஐயா அவர்கள், ஒளவையார் எழுதின நல்வழியில இருந்த ஒரு பாடலை நினைவு படுத்தினாங்க. அதுதாங்க, இந்தப் பாடல்:

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!


பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!

14 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

இதைப் பற்றி நானும் ஒரு இடுகை போட்டுள்ளேன். அதனைப் பார்க்கத் தருகிறேன்.

http://thirutamil.blogspot.com/2008/12/5.html

நாகராஜன் said...

எங்கிருந்து இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பிடிக்கறீங்க? நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்குதுங்க உங்க கிட்ட இருந்து...

Joe said...

நல்ல தகவல், வாழ்த்துகள்!

vasu balaji said...

ஈகையும் தானமும் ஒண்ணில்லிங்களா பழமை?.

அது சரி(18185106603874041862) said...

//
நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!
//

இதுவும் பொருத்தமா தான் இருக்கு :0))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//வானம்பாடிகள் said...
ஈகையும் தானமும் ஒண்ணில்லிங்களா பழமை?.//
பலன் கருதாது செய்வது ஈகை , (புண்ணியம் என்கிற ) பலன் எதிர்பார்த்து செய்வது தானம் என்று சொல்லலாமா பழமை? தமிலிஷ் ?

பழமைபேசி said...

@@சுப.நற்குணன்

நன்றிங்க ஐயா!

@@ராசுக்குட்டி
@@Joe

நன்றிங்க!

//வானம்பாடிகள் said...
ஈகையும் தானமும் ஒண்ணில்லிங்களா பழமை?.
//

இரண்டும் ஒன்றல்லங்க அண்ணே.... இடுகையில விளக்கம் வெளிவரும்...

@@அது சரி

வாங்க அண்ணாச்சி!

@@ஸ்ரீ

இல்லீங்கோ...

ஈரோடு கதிர் said...

//தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல்//

மாப்பு இதுவும் போயிடுமா

இஃகி..இஃகி

//பசிநோய்//

பசி நோயா? இயற்கையின் நியதிதானே

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
//பசிநோய்//

பசி நோயா? இயற்கையின் நியதிதானே
//

நல்ல கேள்விங்க மாப்பிளை...

நோய் அப்படின்னா, உடலுக்கோ மனதுக்கோ விளையும் ஒரு துன்பம்.... அது எதுவானாலும்....

பசலை நோய்--- தலைவன் தலவிக்குமிடையிலான பிரிவினையால் வரும் துயர்

பசி என்பது இயல்பாய் நிகழக் கூடியதே ஆனாலும், அதனாலும் உடலுக்கு ஒரு வலி வரத்தானே செய்கிறது...

vasu balaji said...

நன்றி பழமை.

குடுகுடுப்பை said...

அது சரி said...
//
நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!
//

இதுவும் பொருத்தமா தான் இருக்கு :0))
August 15, 2009 3:47 AM///

பழசு ஒரு ஆம்பிளை அவ்வையாரு.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

பழசு ஒரு ஆம்பிளை அவ்வையாரு.//

அண்ணே, ஒளவையார்ங்ற பேர்ல கிட்டத்தட்ட பத்து ஒளவையாருங்க எழுதினதாவும், அதுல ஒன்னு ரெண்டு பேர் ஆம்பிள்ளைங்க அப்படியின்னும் ஒரு தகவல் இருக்கு... இஃகிஃகி!

ஆரூரன் விசுவநாதன் said...

ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று என்ற அவ்வை வரிகளும்

ஈதல் இசைபட வாழ்தல் என்ற வள்ளுவர் வரிகளும்

ஈகை என்னும் குணத்தை குறிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாதல்லவா.
இதையும் கொஞ்சம் விளக்குங்களேன்
அன்புடன் ஆரூரன்.

பழமைபேசி said...

@@ஆரூரன் விசுவநாதன்

வாங்க நண்பரே!

ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

இதில் யாசிப்பதும், யாசிப்புக்கு பணிந்திட மாட்டேன் என்பதே பொருள்.