8/08/2009

இன்மை!

வணக்கம் மக்களே! கடந்த 2004 - 2005ம் ஆண்டுகள்ல இசுரேல் நாட்டைச் சார்ந்த நிறுவனமான Amdocsங்ற நிறுவனத்துல நாம வேலை செய்துட்டு இருந்தோம். அந்த சூழ்நிலையில இசுரேல் மற்றும் சைப்ரசு நாடுகள்ல ஒரு ரெண்டு மாசம் பொட்டி தட்டப் போயிருந்தேன்.

ஒரு நல்ல நாள் அதுவுமா புராதன தொல்பொருள் ஆராய்ச்சி வளாகங்களைச் (archaeological sites) சுத்தி பார்க்கப் போயிருந்தோம். நிறைய இடங்கள் பார்த்தோம். அதுல ஒரு ஓவியம் என்னை மிகவும் பாதிச்சது.

ஆமாங்க, மொழியியல் அறிஞர்கள் எல்லாரும் உட்கார்ந்து பேசிட்டு இருக்குற மாதிரியான வண்ண ஓவியம் அந்த அரண்மனைக் கூடத்தோட மையப் பகுதியில இருந்தது. கரிய நிறத்துல ஒருத்தர் முழுக்கை சட்டையோட. கூட வந்த வழிகாட்டி தெளிவா சொன்னாரு, ‘He is a representative of Thamizh!.

உடனே எனக்கு, உலகின் ஆதி மொழிகள் சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ, தமிழ், சமசுகிருதம் ஆகியவைன்னு எங்கோ படிச்சதை உறுதிப்படுத்திக்க முடிஞ்சது. இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு நீங்க கேட்கலாம். அதுல ஒரு நியமக்கூறு இருக்குது இராசா, இருக்குது!

நேற்றைய இடுகையில உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைன்னு சொல்லவே, நண்பர்கள் ஒன்னு ரெண்டு பேர், அதை ஏத்துக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குதுன்னு குறிப்பிட்டு இருந்தாங்க.

நான் என்னோட முந்தைய இடுகைகள்ல சொன்னதுதான், ஆதி மொழிகளில் ஒன்னான தமிழ்ல எந்த உணர்வு, செய்கை மற்றும் பொருளையும் தனித்துக் குறிப்பிடும்படியான சொற்கள் கிட்டத்தட்ட கி.பி 1900ம் ஆண்டு வரையிலும் இருந்தது. அதற்குப் பின்னாடி, தமிழ் மொழிய விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளின் வளர்ச்சிக்கு இணையாக் கொண்டு போகாம விட்டுட்டாங்க.

அது மட்டுமா? இருந்த மொழியின் பயன்பாடும் குறைஞ்சு போச்சு, அதனோட விளைவுதான் இன்றைக்கு இன்மைங்ற சொல்லை, உண்மைக்கு எதிர்ப்பதமா ஏற்றுக் கொள்ள முடியலை! அந்த பின்னணியில விபரத்தைப் பாக்கலாம் வாங்க!

இன்மை, இல்லை, இன்றி, இல்லாதது இதெல்லாம் non existanceஐ குறிக்கிறது. உண்மை, உள்ளது, உள, உளல் இதெல்லாம் existanceஐ குறிக்கிற சொல். ஆக, உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைதான்!

உண்மை: இருப்பதை இருப்பதாகக் குறிப்பிடல்

இன்மை: இல்லாததை இல்லாததாகக் குறிப்பிடல்
பொய்: இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் குறிப்பிடல்
மெய்: இருப்பதை இருப்பதாகவும், இல்லாததை இல்லாததாகவும் குறிப்பிடல்

ஆக, உண்மை X இன்மை, பொய் X மெய் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா? ஆனா இதாங்க சரியானது. மெய்யுரை, பொய்யுரை கேள்விப்பட்டு இருப்பீங்க. உண்மையுரை கிடையாது. உண்மை(யை) உரைன்னு சொல்லலாம். அதேபோல இன்மையுரை கிடையாது. இன்மை(யை) உரைன்னு சொல்லலாம்.
உள்ளமை உண்மை; இல்லாமை இன்மை! சரியானது மெய்; தவறானது பொய்!!


பல் போனா சொல் போச்சு!
சொல் போனா மொழி போச்சு!!
மொழி போனா இனமே போச்சு!!!

14 comments:

தமிழ் காதலன் said...

//உண்மை: இருப்பதை இருப்பதாகக் குறிப்பிடல்
இன்மை: இல்லாததை இல்லாததாகக் குறிப்பிடல்
பொய்: இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் குறிப்பிடல்
மெய்: இருப்பதை இருப்பதாகவும், இல்லாததை இல்லாததாகவும் குறிப்பிடல்
//
அருமையான விளக்கம்.
தொடரட்டும் உங்கள் உண்மை பதிவுகள்.

பழமைபேசி said...

@@தமிழ் காதலன்

நன்றிங்க அன்பரே!

ஈரோடு கதிர் said...

உண்மைக்கு எதிர் பொய் இல்லை என்பதை வலுவான ஆதாரங்களோடு உண்மையோடு விளக்கிய பழமைக்கு மெய்யான வாழ்த்துக்கள்

Unknown said...

//அதற்குப் பின்னாடி, தமிழ் மொழிய விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளின் வளர்ச்சிக்கு இணையாக் கொண்டு போகாம விட்டுட்டாங்க.//

முற்றிலும் உண்மை. மொழியார்வமுடைய அன்பர்கள் அவங்கவங்க துறைசார்ந்த செய்திகள தமிழ்படுத்த ஆரம்பிச்சா இந்த வெற்றிடத்த நிரப்ப முடியும்!!!

பழமைபேசி said...

@@கதிர் - ஈரோடு

நன்றிங்க மாப்பிள்ளை!

@@நளன்

ஆமாங்க நளன்!

ஆ.ஞானசேகரன் said...

//இன்மை, இல்லை, இன்றி, இல்லாதது இதெல்லாம் non existanceஐ குறிக்கிறது. உண்மை, உள்ளது, உள, உளல் இதெல்லாம் existanceஐ குறிக்கிற சொல். ஆக, உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைதான்!///

அப்படிதான் தோன்றுகின்றது நண்பா

கயல் said...

உங்கள் முந்தைய இடுகை மிகவும் நன்று!அப்பாடா!!எல்லா சொல்லுக்கும் தமிழில் அர்த்தம் இருக்கு அப்படிதானே!பெருமையா இருக்கு!
தமிழில் பொருள் இல்லாத சொல் வேரொரு சொல்லின் ஏதோ மருஉ(!) சொல் போல!
திரிந்து வருவதை எப்படி சொல்லுவது? இது பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் ஆசானே!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான இடுகை. நம்ம பயன்படுத்தற பல சொற்கள் இந்த மாதிரித் தான் இருக்கு. "மொக்கை"ன்னா கூர்யின்மைனு அர்த்தமாம். ஆனா மொக்கை போடறேன்னு, எழுதறேன்னு சொல்றதுல நமக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி :)

"மொழி போச்சுன்னா இனமே போச்சு"ங்கறது உண்மை

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//நளன் said...
//அதற்குப் பின்னாடி, தமிழ் மொழிய விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளின் வளர்ச்சிக்கு இணையாக் கொண்டு போகாம விட்டுட்டாங்க.//

முற்றிலும் உண்மை. மொழியார்வமுடைய அன்பர்கள் அவங்கவங்க துறைசார்ந்த செய்திகள தமிழ்படுத்த ஆரம்பிச்சா இந்த வெற்றிடத்த நிரப்ப முடியும்!!!
//

உண்மை நளன்!

priyamudanprabu said...

மெய்யாலுமே நல்லாயிருக்கு

vasu balaji said...

இன்மைக்கு மட்டுமே ஒரு இடுகைன்னா உண்மை கோவிச்சிக்கிடும்ல பழமை.உள்ளது உள்ளபடி சொல்றது உண்மைன்னா சத்தியம்னா என்ன? உண்மைக்கு நிரூபணம் தேவை. சத்தியத்துக்கு தேவை இல்லைன்னு சொல்லுவாங்களே. அதனால தான் நீதி மன்றத்தில் நான் சொல்லுவதெல்லாம் உண்மைன்னு பிரமாணம் வாங்குறாங்களா?

Unknown said...

சத்தியம் தமிழே இல்லை வானம்பாடிகள்...

பழமைபேசி said...

//நளன் said...
சத்தியம் தமிழே இல்லை வானம்பாடிகள்...
//

ஆமாங்க.... ஆனாலும் அண்ணன் கேட்ட வாக்குக்கும் உண்மைக்குமான வேறுபாடுகள் இடுகை இட்டாச்சுங்க...

சிநேகிதன் அக்பர் said...

இத்தனை நாளா பொய்யாக நினைத்திருந்ததை நீங்கள் இன்மை ஆக்கி விட்டீர்கள்.