பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே!
திருமந்திரம் (2843)
மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே!
திருமந்திரம் (2843)
வணக்கம்! பார்ப்பான் அகத்திலே ஐந்து பசுக்கள் உண்டு, அவையாவும் மேய்ப்பர் அற்று மனம் போன போக்கில் சென்று திரிவனவாம். அவற்றை கட்டுப்படுத்தி மேய்க்கும் மேய்ப்பர் கொண்டு செயல்படும் பட்சத்தில் அவையாவும் பாலாய்ச் சொரிந்திடச் செய்யும் என்கிறார் திருமூலர்.
அதாவது பார்ப்பவன் உடலிலே ஐந்து பசுக்கள் எனப்படுகிற ஐம்புலன்கள் உள்ளது. பார்க்கும் எல்லாவற்றிலும் அவை ஈடுபடத் துவங்கும். அது அவ்வாறில்லாமல், கட்டுப்பாட்டுடன் தேவையானவற்றுடன் மட்டுமே மனம் கொண்டு இருப்பின் பேரின்பம் தழைக்கும் என்பதைத்தான் சொல்கிறார் திருமூலர்.
இன்றைய இதழியல் என்பது பெரும்பாலும் கசடு கலந்த இதழியலாகவே இருக்கிறது என்பது சொல்லித் தெரிவதில்லை. வன்முறை, வக்கிரம், தனிநபர்த் தாக்குதல், உள்ளதை உள்ளபடி கூறாமல் ஏற்றியும் இறக்கியும் சொலல் என எண்ணற்ற மாச்சரியங்களைக் கொண்டே உள்ளது. ஆகவே, பார்ப்பவன் அது உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதே வேளையில், பதிவர்களும் அதையுணர்ந்து மக்கள் இதழியலில் பெரும்பாங்கு ஆற்றிட முன்வர வேண்டும் என்கிற எண்ணத்திலே குழுமியதுதான் இந்த பதிவர் சந்திப்பு என்பது.
காலையிலேயே அட்லாண்டா மாநகரிலிருந்து, கல்விமான்களின் குடும்பப் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான தென்றல் தென்னவன் அவர்கள் சார்லத் வந்தடைந்தார். கோயம்பத்தூர் விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருப்பார் என எண்ணுகிறோம்.
ஏற்பாடுகளுக்கு இடையே வட கரோலைனா மாகாணத்தின் மறுகோடியில் இருக்கும் Cary எனும் இடத்தில் இருக்கும் மருத்துவர் ஐயா உயர்திரு. ஆத்திகம் VSK அவர்கள் அழைத்து இருந்தார். முன்கூட்டியே அவரைத் தொடர்பு கொள்ளாமல் சொதப்பியதற்கு அடியேன் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் எனவும் எதிர்வரும் காலங்களில் இக்குறைபாட்டினை களைய முற்படுவேன் எனவும் உறுதி அளித்தோம்.
திட்டமிட்டபடி மாலை ஆறுமணிக்கு சந்திப்பென்பது எந்தவிதமான சடங்குகளும் அற்று இயல்பாகத் துவங்கியது என்றே கூறலாம். ஆம, சந்திப்பின் தலைவர் அண்ணன் சீமாச்சு அவர்கள், சுவையானதொரு இனிப்பான பொங்கலை வழங்க இனிமையான அந்த மாலைப் பொழுது நகர ஆரம்பித்தது.
பின்னணியில் செந்தமிழில் சிலப்பதிகாரமானது வில்லுப்பாட்டாக இசைத்துக் கொண்டிருந்தது. மிகவும் இரம்யமாக இருந்தது. ஆனாலும் அந்த நிகழ்ச்சியின் முக்கிய கர்த்தாவான பாடகியானவர் அடிக்கடி கோவலன் செட்டியார், மாசாத்துவன் செட்டியார், மாநாயக்கன் செட்டியார் என விளிப்பதை சற்றும் இரசிக்காத அண்ணன் சீமாச்சு அவர்கள், இலக்கியமான வில்லுப்பாட்டு என்பது இப்படி செட்டியார் பாட்டாக்கப்படுவது நியாயம்தானா எனக் குறைபட்டுக் கொண்டார். நாங்களும் அதை ஆமோதித்துக் கொண்டோம். இலக்கியங்களில் இனியாவது இது போன்றவை அகலும் என எதிர்பார்ப்போமாக!
சர்க்கரைப் பொங்கல் சுவைத்தானவுடன், கலந்துரையாடல் என்பது சமூகத்தின்பால் பயணிக்கத் துவங்கியது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளன் என்கிற அடிப்படையில் என்றும் உடனுக்குடன் குறிப்பெடுப்பவனே ஆயினும் இம்முறை அதைக் கடைபிடிக்க இயலவில்லை. எனவே நினைவில் இருப்பவற்றை வைத்தே இந்த இடுகையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
இன்றைய இதழியலின் முக்கியக் கரு என்ன என்பதை அலசிப் பார்த்ததில், I-I-I, அதாவது Information, Importance, Interest என்பது புரிந்தது. தகவல், தணிக்கை, தன்னிலை என்பவைதான் அது. கிடைக்கும் தகவலைத் தணிக்கை செய்து, தன்னிலையை ஏற்றிச் சொல்வது என்பதையே காண்கிறோம்.
இதைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போதுதான், இந்நிலை உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா என வினவப்பட்டது. காலங்காலமாகவே நடந்து வருவதே ஆயினும், இன்றைக்கு பதிவுலகம் என்கிற கூரிய ஆயுதம் கிடைத்திருக்கிறது என்பதை நினைவு கூர்ந்து கொண்டோம்.
மேற்கத்திய நாடுகளிலே பதிவுகள் வாயிலாக பெரிய பெரிய அவலங்கள், உண்மைகள் வெளிக் கொணர முடிந்தைதையும் நினைவு கூறிக்கொண்டோம். இடையிடையே நகைச் சுவையோடு தீர்மானம் குறித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லியபடி நிறைய கருத்துகள் பரிமாறப்பட்டது. எனினும் பதிவர்கள் நடுநிலைமை கொண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, நேரிடையே காண்பவற்றை ஆதாரத்தோடு வெளிக் கொணர முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தே வெளிப்பட்டது.
உரையாடல் சுவாரசியத்துடன் பயணித்துக் கொண்டிருந்தது. இதன் இடையில் பானங்களுடன் கோழி வறுவல் மற்றும் சிறுதீன்கள் வழங்கப்பட்டது. தமிழுலகத்தில் ஒருவனுக்கு அவனை அறியாமலேயே ஒரு பிம்பம் ஏற்படுத்தப் படுகிறது. அவன் இன்னாருடைய ஆள், அவன் இந்த சாதிக்காரன், அவன் இந்த கட்சியைச் சார்ந்தவன் என்கிற பிம்பம் ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே சாமான்யர்களால் அண்டிப் பிழைக்க நேரிடுகிறது எனக் கூறிக் கொண்டோம்.
அதிலிருந்து சிறிதளவாவது தப்பிக்க வேண்டுமானால், எவரிடத்தும் மலிவான உதவிகள் கேட்கப்படக் கூடாது. சில பல நேரங்களில் ஒருவனை ஆட்படுத்தும் பொருட்டு, ஆதிக்க சக்திகள் வலிய வலிய வந்து உதவி செய்ய முற்படுவர். அத்தகைய நேரங்களில் சாமான்யர்கள் கவனத்துடன் செயல்படுதல் இன்றியமையாதது என அனைவரும் ஒப்புதல் வழங்கிக் கொண்டோம்.
இப்படி நிறைய, சுவையான செறிவான பல கருத்துகள் சிந்தனையைத் தூண்டும்படியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆறு மணிக்குத் துவங்கிய கலந்துரையாடல் ஒன்பது மணி வாக்கில், சிரத்தையான கலந்துரையாடல் என்பதில் இருந்து விலகி, அளவளாவல் எனும் பாங்குக்கு மாறியது. கூடவே இரவு உண்டிக்குத் தாவினர் அனைவரும்.
அதற்குப் பிறகு கலாய்த்தல், காலை வாருதல், சாமியார்களின் அடாவடி குறித்த நையாண்டி எனப் பயணித்தது ஒரு மணி நேரம். பத்து மணிக்கு விடை பெறும் நேரம் நெருங்கியது. கலந்துரையாடல் என்பது சிறப்பானதொரு முடிவுக்கு வந்ததை எண்ணிப் பெருமிதம் கொண்டோம் நாம்.
கழுத்திலே இருக்கிறது ருத்திராட்சம்!
மடியில் இருப்பது கன்னக்கோல்!!
மடியில் இருப்பது கன்னக்கோல்!!
17 comments:
உங்கள் தமிழ் நடை வெகுவாக கவர்கிறது. தொடர்ந்து படித்து வந்தாலும், இன்றைக்கு என்னவோ விசேஷமாக படுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
வெங்கிராஜா சொன்னதை வழி மொழிகிறேன்
இன்றைய தமிழினத்திற்கு வேண்டியது நாகரீகமானக் கருத்துப் பரிமாற்றம்.
இணையத்தைக் கூவமாக்காமல்,
காவிரி,தென்பெண்ணெய்,பாலாறு
கண்டதோர் வைகைப் பொருணை நதி
என்று ஆக்கிக் காட்டுவோம்.
அதாவது பார்ப்பவன் உடலிலே ஐந்து பசுக்கள் எனப்படுகிற ஐம்புலன்கள் உள்ளது. பார்க்கும் எல்லாவற்றிலும் அவை ஈடுபடத் துவங்கும். அது அவ்வாறில்லாமல், கட்டுப்பாட்டுடன் தேவையானவற்றுடன் மட்டுமே மனம் கொண்டு இருப்பின் பேரின்பம் தழைக்கும் என்பதைத்தான் சொல்கிறார் திருமூலர்.
////
நல்லாதான் சொல்லியிருக்கார்
பசுக்காளாய் இருந்தால் அடங்கிடும் காளைகளை என்ன செய்ய?????
சிறப்பான தொகுப்பு! திருமந்திரப் பாடல் விளக்கம் அருமை.. !
நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் தேவையானதே
//வெங்கிராஜா said...
உங்கள் தமிழ் நடை வெகுவாக கவர்கிறது. தொடர்ந்து படித்து வந்தாலும், இன்றைக்கு என்னவோ விசேஷமாக படுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
//
நன்றிங்க நண்பா...
//கடைநிலை ரசிகன் said...
வெங்கிராஜா சொன்னதை வழி மொழிகிறேன்
//
நன்றிங்க!
//Thamizhan said...
இன்றைய தமிழினத்திற்கு வேண்டியது நாகரீகமானக் கருத்துப் பரிமாற்றம்.
இணையத்தைக் கூவமாக்காமல்,
காவிரி,தென்பெண்ணெய்,பாலாறு
கண்டதோர் வைகைப் பொருணை நதி
என்று ஆக்கிக் காட்டுவோம்.
//
நன்று நன்று!!
உங்களின் சந்திப்பு இனிமையாக இருந்திருக்கின்றது. வாழ்த்துகள் பழம.
இனிய நண்பர்கள் தின் வாழ்த்துகள்
//அதாவது பார்ப்பவன் உடலிலே ஐந்து பசுக்கள் எனப்படுகிற ஐம்புலன்கள் உள்ளது. பார்க்கும் எல்லாவற்றிலும் அவை ஈடுபடத் துவங்கும். அது அவ்வாறில்லாமல், கட்டுப்பாட்டுடன் தேவையானவற்றுடன் மட்டுமே மனம் கொண்டு இருப்பின் பேரின்பம் தழைக்கும் என்பதைத்தான் சொல்கிறார் திருமூலர். //
நல்ல விளக்கம். அவர் சொன்ன விதம் அருமை!!
பதிவர் சந்திப்புன்னு வெச்சிட்டு ஒரு போட்டோ கூடப் புடிச்சுப் போடலியே.. வீட்டுக்குத் திரும்பி வந்தப்புறம்தான் எனக்கே நினைவுக்கு வந்த்து.
அடுத்த சந்திப்பில் புகைப்படம் எடுத்துப் போட்டுவிடுவோம்..
விளக்கம் அருமை. நண்பர்கள் தின வாழ்த்துகள் பழமை.
ஆமா, நானும் கேக்கலாம்னு நெனச்சேன் ஒரு போட்டோ கூடவா எடுக்கல? ம்ம், எல்லாரும் சொன்ன மாதிரி இன்னக்கி உங்க எழுத்து ரொம்பவே நல்லாருக்கு
அன்பின் பழமைபேசி
பதிவர் சந்திப்பினையும் பயனுற நடாத்தும் பாங்கு பாராட்டத் தக்கது. நான்கு மணி நேரம் ஒரு சந்திப்பு நடைபெறுவதெனில் அது உண்மையிலேயே ஒரு சிறப்பான சந்திப்பு தான். இதழியலைப் பற்றிச் சிந்தித்து விவாதித்து ஒத்த கருத்தினை ஏற்படுத்தியது நன்று.
இனிப்புடன் ஆரம்பித்து சிற்றுண்டிகள் மற்றும் இரவு உணவுடன் முடித்து அனைவரையும் மகிழச்செய்த அமைப்பாளர்களின் செயல் மகிழவினைத் தருகிறது.
அருமை நண்பர் வீஎஸ்கே கலந்து கொள்ள இயலாமையும் வருந்தத்தக்கதே
கலாய்த்தலும் காலை வாருதலுடனும் முடிவுக்கு வந்தது சிறப்புச் செய்தி
நல்வாழ்த்துகள் பழமை பேசி.
மிக்க நன்றி மக்களே, மாலையில் சந்திப்போம்!
Post a Comment