6/03/2009

உப்பைக் குறைச்சிக்கலாம்!

உடுக்க உடை! உண்ண உணவு!! உறங்க உறைவிடம்!!! வாழ்வாதாரங்களான இந்த அடிப்படை வசதிகளைத் தராத ஆட்சி, ஒரு ஆட்சியா? இவர்களுக்கு ஓட்டு ஒரு கேடா?? இவைகளுக்கு உத்தரவாதம் தராத தலைவன், ஒரு தலைவனா???

மேலே கூறியது போல வெகு காரசாரமாக உணர்ச்சி உரைகளைப் பொழிவார்கள்! ”ஆகா, என்ன உரை? என்ன உரை??” என்றெல்லாம் பொங்கி, சீட்டி அடித்து, கனகச்சிதமாகக் கை கொட்டி ஆர்ப்பரிப்போம். இது இன்று, நேற்றல்ல, கி.பி 400ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது என்கிறது வரலாறு. எப்படி?

ஆம். அன்றிலிருந்து எந்த மன்னனும் சரி, மக்களாட்சி செய்தவர்களும் சரி, தன்னுடைய மக்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டுக்கு சரியானதொரு பாதுகாப்பைத் தரத் தவறியதைக் காணலாம்! மக்களும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதும் இல்லை.

உணவு, உடை, உறையுள் இருக்கட்டும், எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் என்று எப்போதாவது, யாராவது கேட்டதுண்டா? உயிருக்குத்தானே உணவு, உடை, உறையுள்? ஆனால், நாம் அதை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. காரணம், நாம் மேலே சொன்ன உரையில் நம்மை நாமே இழந்ததுதான்.

இந்த வரிசையில் இந்திராவும், சஞ்சய் காந்தி மட்டும் விதிவிலக்கு. அண்டை நாடான சீனா, இந்தியா சீனா பாயி பாயி என்று சொல்லி நட்பு நாடகம் ஆடி, நேருவின் முதுகில் குத்தியதின் விளைவாய், அவர் தீராத வேதனையுடன் உயிர் நீத்ததின் தாக்கம்தான் அதற்குக் காரணம். இந்திராவின் மறைவுக்குப் பின் எந்தத் தலைவருக்கும் நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை.


தேர்தல் வரும். ஒருவரை ஒருவர் புழுதி வாரித் தூற்றுவார்கள். நாமும் நம் பங்குக்கு அந்த ஆட்டத்தில் வெகு மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறோம். இதனால் நாட்டின் பாதுகாப்பு கேலிக்குரியதாகி, பின்னர் அதுவே மாநிலத்தின் பாதுகாப்பு அல்லது உரிமைகள் என்ற அளவுக்கு கீழிறங்கி, தற்போது அது இன்னும் ஒருபடி கீழிறங்கி, சமுதாயம் என்கிற மக்கள்த் திரள் சிதறத் துவங்கி இருக்கிறது.

எப்படி அதைத் தீர்மானிக்கிறோம்? இது அவநம்பிக்கை(pessimism) ஆகாதா என்றெல்லாம் வினவலாம்?? இது அவநம்பிக்கை அல்ல. ஒருவனுக்கு தன்னுடைய உள்ளார்ந்த நிலை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் தனது குறைகளைக் களைய ஏதுவாக இருக்கும்.


மாறாக அதை மறைக்க முற்பட்டு மழுப்புவதால் மேலும் பின்னடைவே ஏற்படும்; ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஈழத்தின்பால் மனிதாபக் குரல் கூட எழுப்ப முடியாமல் போனதும் இதன் காரணமாகத்தான். அது காவிரிக்கும் தொடரும், பெரியார் அணை தாவாவுக்கும் தொடரும், எதற்கும் தொடரும் என்ற நிலையில்தானே நாம்?!

தமிழனின் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? உணர்ச்சி வசப்படுவது, அதனால் திட்டமிட்ட போலிப் பரப்புரைகளுக்கு இரையாவது என்பதுதானே? அறிவியல் என்ன சொல்கிறது? உப்பும், புளிப்பும், காரமும் அளவுக்கு அதிகமானால், அது மாறுபட்ட விளைவுகளைத் தூண்டுகிறது என்பதுதான்.

தெலுங்கனுக்குத் தலைவலி அவன் உண்ணுகிற காரத்தைத் தரவல்ல மிளகாயில் என்றால், தமிழனுக்குத் தலைவலி அவன் உண்ணும் உப்பில்தான்! இதில் பெருமையாக உசுப்பல், என்னவென்று? நீயெல்லாம் உப்புப் போட்டுத் தின்கிற தமிழனா? சூடு சொரணை என்கிற பெயரில், இனியும் எத்தனை நாட்களுக்கு நம் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கப் போகிறோம்??

உப்பு என்பது உடலுக்குத் தேவை, ஆனால் அது தேவையான அளவில்! உப்பே உணவாக உட்கொண்டால்? உணர்ச்சி வசப்படுவோம், இருதய நோய் வரலாம், வாதநோய் வரலாம், மன உளைச்சல் நேரிடும், இரத்த அழுத்தம் மேலோங்கும், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

தேவையான உப்பு என்பது, உணவின் மூலப் பொருள்களிலேயே அடங்கி உள்ளது, அதாவது காய்கறிகளில், பதனிட்ட உணவுகளில் என்று. அமெரிக்க மருத்துவக் கழகம் சொல்கிறது, தினமும் ஒரு கிராம் உப்பைக் குறைத்துக் கொள்வதின் மூலம், அமெரிக்காவில் மாத்திரமே பத்தாண்டுகளில் 2 லட்சம் பேரின் இழப்பைத் தவிர்க்கலாம் என்று.

ஆகவே உட்கொள்ளும் உப்பு, கூடவே காரம் மற்றும் புளிப்பைக் குறைத்து வாழ்வில் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்துவோம். அதோடு தனிநபரின் உயிருக்கு உத்தரவாதம், சமூகத்தின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிமை கோருவோம்!

28 comments:

ராஜ நடராஜன் said...

தேன் எடுக்கிறவன் விரல் சூப்பத்தான் செய்வான்:) உப்பு எடுக்குற நாம் உப்பு போட்டுக்க வேண்டாமுன்னா எப்படி?

உணர்ச்சி வயப்படுதல் நமக்கு மட்டும்ன்னு எப்படி வாதாட முடியும்? சமீபத்து பஞ்சாப்,பீகார்ன்னு இரு மாநிலங்களில் ரயில்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.அதையெல்லாம் ஓரம் கட்டிட்டு நாட்கள் நகர்கின்றன.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
தேன் எடுக்கிறவன் விரல் சூப்பத்தான் செய்வான்:) உப்பு எடுக்குற நாம் உப்பு போட்டுக்க வேண்டாமுன்னா எப்படி?//

தூக்குல போடுறவன், தானும் தூக்கு மாட்டிக்கணுமா என்ன? இஃகிஃகி!

//உணர்ச்சி வயப்படுதல் நமக்கு மட்டும்ன்னு எப்படி வாதாட முடியும்? சமீபத்து பஞ்சாப்,பீகார்ன்னு இரு மாநிலங்களில் ரயில்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.அதையெல்லாம் ஓரம் கட்டிட்டு நாட்கள் நகர்கின்றன.
//

அவன் எல்லாம் எப்பாவவது உப்பு போட்டுச் சாப்புடுற ஆளு? செரி, நீங்களே கேட்டுச் சொல்லுங்க... நீயெல்லாம் உப்புத்தான் போட்டுத் திங்கிறயா? உப்பிட்டவரை உள்ளளவும் நினை...இந்த மாதிரி உப்புப் பழமொழிகள் அவிங்ககிட்டவும் இருக்கான்னு....

Unknown said...

சிந்திக்க வைக்கும் பதிவு பழமை

பதி said...

சுருக்கமா சொன்னா,

அரசியல் அடிமைகளுக்கு எதுக்கு சொரணை???

ம்ம்ம்ம்ம்

நியாயமாத்தான் தோனுது....

நசரேயன் said...

நான் சோத்துக்கு உப்பே போடுறதில்லை

வில்லன் said...

பழமை பேசி அண்ணாச்சி சொன்ன சரியாத இருக்கும். தங்கமணி கிட்ட சொல்லி உப்பே போடாம சமைக்க சொல்லிருவோம்.

பின் குறிப்பு... இப்ப உப்பு போட்டு சாப்பிட்டே சூடு சொரணை இல்லாம போச்சி தங்கமணி ஆதிக்கத்துல... இதுல வேற உப்பே போடாம சாப்பிட்டா இன்னும் நெலம மோசம் ஆய்ரும்.... தலைக்கு மேல வெள்ளம் போன பிறகு ஜான் போனா என்ன மோளம் போனா என்ன!!!!!!!!!!!!!!!!

பழமைபேசி said...

@@செல்வன்
@@பதி
@@நசரேயன்

நன்றிங்க மக்களே!

பழமைபேசி said...

//வில்லன் said...
பின் குறிப்பு... இப்ப உப்பு போட்டு சாப்பிட்டே சூடு சொரணை இல்லாம போச்சி தங்கமணி ஆதிக்கத்துல...
//

அண்ணாச்சி,

நெசமாலுமேதான் சொல்லுதேன்.... நான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடியேவுமு குறைக்க ஆரம்பிச்சுட்டேன்...நிறைய மாற்றம் தெரியுது...

HDL/LDL எல்லாம் சரியான அளவுக்கு வந்திருச்சு.... நான் வாரா வாரம் வெளியூர் போறவந்தானே? அப்ப விமான நிலையத்துல குறுக்க சனங்க வந்தாலோ, 5, 10 நிமிசம் தாமதம் ஆனாலோ, கோபம் கோபமா வரும்.... இப்ப எல்லாம் பழகிப் போச்சு.... இஃகிஃகி!

ஆ.ஞானசேகரன் said...

உப்பிட்டவரை உள்ளலவும் நினை என்பது?

உப்பு போட்டு தின்ன அரசியல்வாதிக்கு சொரணை இருக்கா என்ன?

நல்ல பதிவு நண்பா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தினமும் ஒரு கிராம் உப்பைக் குறைத்துக் கொள்வதின் மூலம் பத்தாண்டுகளில் 2 லட்சம் பேரின் இழப்பைத் தவிர்க்கலாம் //


நாக்கு ரொம்ப சக்தி வாய்ந்தது தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,

நிகழ்காலத்தில்... said...

இலையில் உப்பு தேவையே இல்லை

தயிருக்கு உப்பு எப்பொழுதுமே போடுவதில்லை. அதுமட்டுமல்ல

உப்பை குறைக்கம், தாகம் குறையும்

வல்லிசிம்ஹன் said...

பழமை பேசி, உப்புக் குறைக்க வேண்டும் என்பதில் மறு வார்த்தை நான் சொல்வதாக இல்லை.
உடல் ஆரோக்கியத்துக்கு அரை டீஸ்பூன் உப்பு ஒரு நாளைக்குப் போதும் என்று எங்க மருத்துவர் சொல்லுவார்.

ஆனால் ஏமாற்றுபவர்களை எந்த முறையில் மாற்றுவது?
ஓற்றுமை என்கிற உப்பு எல்லார் உள்ளத்திலும் இருப்பதில்லை.
நான் மட்டும் தான் வளருவேன். நீ செடியாகவே இரு என்று சொல்பவர்கள் முன் ஏழை சொல்லா அம்பலம் ஏறும்.

தேவன் மாயம் said...

ஆகா! சின்ன விசயத்தை வைச்சு ஒரு இடுகை!! நிறைய விரைவு இடுகைகள்
வந்து கொண்டே இருக்கு உங்கள் தளத்தில்!!
பின்னுங்க!

vasu balaji said...

/இந்திராவின் மறைவுக்குப் பின் எந்தத் தலைவருக்கும் நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை./
சரியாச் சொன்னீங்க‌

/உப்பே உணவாக உட்கொண்டால்?

உணர்ச்சி வசப்படுவோம்/
அவ்வளவுதான். அதுக்கு மேல

உருப்படியா ஒண்ணுஞ்செய்ய மாட்டாமா உடைஞ்சு போவம்.

ஆனா ஒண்ணு. எத்தனையோ மரபெல்லாம் கெடாசிட்ட தமிழன் இன்னும் விடாப்பிடியா பண்ணுற விடயம் ஒண்ணு உண்டுன்னா, இப்பவும் மளிகைக் கடை வாசல்ல உப்பு மூட்டைய விட்டுப் போறதும், தேவையானவங்க அளவா எடுத்து வந்து அப்புறம் காசு போடுறதும். முன்னல்லாம் காசும் அதுலயே போடுவாங்க. உப்பதான் திருடக் கூடாது காசுக்கு என்னான்னு எடுத்துட்டாங்களா தெரியல. இப்போ காசு போடுறதில்லை.

Unknown said...

நல்ல பதிவு...... ஆனா எத்தன தடவ சொன்னாலும் ..... நம்ம மானகெட்ட ஜனங்க நூறு ரூவா குடுத்தா ... வாய பொளந்துகிட்டு அந்த பரதேசி நயிங்குளுக்கே ஊட்ட போட்டுட்டு வந்திருறாங்க..... !! அப்பறம் ... குத்துதே ... கொடையுதேன்னு ஒப்பாரி வெக்க வேண்டியது.......!!!!!!

வேத்தியன் said...

மிகவும் ரசித்தேன்...

நன்றி...

தீப்பெட்டி said...

இப்போ சாப்பிடுற உப்புக்கே நம்ம மக்கள் ஈழத்தில் என்ன நடந்தா என்ன? காவேரில தண்ணி வந்தா எனக்கென்ன? ஒக்கேனக்கல் குடிநீர் திட்டத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு நினைக்குறாங்க.. உப்பே போடாட்டி நல்லாத் தான் இருக்கும்.. பேசமா நமிதா படங்கள பாத்தே காலத்த ஓட்டிரலாம்..

ஆமா பழமைபேசியாரே உப்புக்கு மாற்றா வேற ஏதாவது பரிந்துரை பண்ணுங்களேன்..
உடம்பை கெடுக்காம உணர்ச்சி வர மாதிரி ( சிந்தனையோடுதான்)

அகநாழிகை said...

அன்பின் பழமைபேசி,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
உப்பு என்பது உணர்வோடு தொடர்பான விஷயம். மனித வரலாற்றில் உப்புக்கு மிக முக்கியமான தனியிடம் உண்டு. உப்பு வரிக்கு எதிராக காந்தியடிகள் சட்ட மறுப்பைத் தொடங்கிய காரணம், உப்பு அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதால்தான். உப்புக்கு வரி போடும் அரசும் ஒரு அரசா என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தி ஆங்கிலேயரின் ஆளத்தகுதியற்ற நிலையை கேள்விக்குள்ளாக்கியது தேசிய இயக்கம். ‘சம்பளம்‘ (சம்பா+அளம்) என்ற வார்த்தையே உழைப்புக்கு ஊதியமாக (சம்பா) அரிசியும் (உப்பு) அளமும் பெற்றதனால்தான் வந்தது. Salary என்ற ஆங்கில வார்த்தையும் Salt என்பதையொட்டியே வந்த ஒரு வார்த்தை. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். கோவளம், பேரளம் என்பதெல்லாம் இவையே. இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்வதற்காக உப்பிடாமல் சமைக்கும் வழக்கமும் உண்டு.
உப்பு நன்றியுணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது.
”நன்றி கெட்ட விதுரா - சிறிதும்
நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே - நாசம்
தேடுகின்ற விதுரா“
என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கையைப் பதிவு செய்கிறான்.

உங்கள் பதிவு உப்பு பெறாத விஷயம் இல்லை. முக்கியமானது.
உப்பைக் குறைத்துக் கொள்ளலாம்,
உணர்வுதான் குறையக்கூடாது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்
@@நிகழ்காலத்தில்...

நன்றிங்கோ!

@@வல்லிசிம்ஹன்

வணக்கங்க அம்மா! தகவலுக்கு நன்றிங்க. எறும்பு ஊறக் கல்லும் தேயும்ங்றாங்க.... சொல்லிகிட்டே இருந்தே மனசுல பதியுமாயிருக்கும்!

@@thevanmayam

நல்ல நல்ல மருத்துவர்கள் நீங்க எல்லாம் இருக்கீங்க... பாத்து எடுத்துச் செய்யுங்க அன்பரே! நன்றிங்க!!

@@பாலா...

பாலாண்ணே வாங்க, கடைசில சொன்ன விசயம்.... எனக்கு மறந்தே போச்சு... நினைவுபடுத்தினதுக்கு நன்றிங்கோ!

@@லவ்டேல் மேடி

இஃகிஃகி! வாங்க!! நன்றி!!

@@வேத்தியன்

நன்றிங்க நண்பா!

@@தீப்பெட்டி

தினமும் பச்சைத் தண்ணியில குளிச்சா, சிந்தனை பெருக்கெடுத்து ஓடும்ன்னு சொல்றாங்களே சிவகாசியார்?!

@@அகநாழிகை"

வாங்க நண்பா! நல்ல தகவல்கள் பல கொடுத்து இருக்கீங்க... இது மாதிரி நிறைய உங்ககிட்ட இன்னும் இருக்கும்... இடுகைகளா போடுங்க... வலையில இருக்கட்டும்... நன்றிங்க!

குறும்பன் said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அப்படின்னும் சொல்லி இருக்காங்க. இஃகிஃகி

//இந்த வரிசையில் இந்திராவும், சஞ்சய் காந்தி மட்டும் விதிவிலக்கு//

இந்திரா காந்தி சரி, இதுல சஞ்சய் காந்தி எங்க வந்தாரு?

பழமைபேசி said...

//குறும்பன் said...
இந்திரா காந்தி சரி, இதுல சஞ்சய் காந்தி எங்க வந்தாரு?
//

அய்ய, அவ்ர்தான நிழல் பிரதமர்?

♫சோம்பேறி♫ said...

இதுல நீங்க சொல்ல வந்தது வேற விஷயமா இருக்கலாம்.. ஆனாலும் என்னோட ரெண்டு பைசா..

நாம சாப்பிடுற உப்போட அளவைப் பொருத்து (எட்டு மடங்கு) அதிகமா தண்ணி குடிக்கனும். இதனால பாதிப்பின் அளவு குறைச்சலா இருக்கும் (இதனால தான் உப்பு சாப்பிட்டவன் தண்ணி குடிச்சாகனும்னு ஒரு பழமொழி இருக்கு.)

அயோடின் கலந்த உப்பு: மனித உடலுக்கு அயோடின் தேவைப் படுகிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த உப்பில் உள்ள அயோடின் என்ற வேதியல் பொருள் அல்ல. இந்திய அரசாங்கம் டாட்டா உப்பை விளம்பரப் படுத்துவது முழுக்க முழுக்க தனி மனித அரசியல்.

நம் உடலில் அயோடினின் அளவு ஒரு மில்லி உயர்ந்தாலும் ஆரோக்யத்தைக் கெடுக்கும். நம் ஜீரன மண்டலத்துக்கு அயோடினை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாது. எனவே, அயோடின் உப்பை பயன்படுத்துவதால் 4 நோய்கள் குணமாகுமென்றால், 40 நோய்கள் புதிதாக வரும்.

மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது (குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். சுவையில் எந்தக் குறையும் இருக்காது).

இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இஃகிஃகி!

பழமைபேசி said...

//♫சோம்பேறி♫ said... //

வாங்க, வாங்க! நல்ல தகவல் சொன்னீங்க!

இந்த அயோடின்க் கதை பெரிய கதை... வெப்பத்துல அது கரைஞ்சிடுமாம்.... உப்பைக் கத்தரிக்கா குழம்புல போட்டு வேக வைக்கும் போது அதுந்தான் கரையுது... இன்னும் இப்படி நிறைய....

குறும்பன் said...

//மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது//

பாக்கிஸ்தானில் இந்து உப்பா??? அது பழைய உப்பா இருக்குங்க இப்ப அத கரைச்சாச்சி.. இஃகிஃகி

"உழவன்" "Uzhavan" said...

உப்பைக் குறைத்துக் கொள்ளலாம்,
உணர்வுதான் குறையக்கூடாது.

அருமையான விளக்கம் ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன் சார்.. நன்றி

செந்திலான் said...

உப்பு மட்டுமில்ல தட்ப வெப்ப நிலையும் ஒரு காரணம்.வெப்பம் அதிகமாக இருந்தால் எரிச்சல் அதிகமாகி சண்டை அதிகமாக வருகிறது.இதுவே வெப்பம் குறைவாக இருந்தால் உணர்ச்சி வயப்படுதல் குறைவாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் தான் சண்டைகளும் அதிகமாக இருக்கிறது.குளிர் அதிகமாக இருந்தால் மக்கள் அதிகம் சோம்பல்வயப் பட்டு சண்டை சச்சரவுகள் இல்லை இதற்கு சென்னை பெங்களூர்களே சாட்சி.சென்னையில் மக்களின் மொழியே கொஞ்சம் சூடாக உணர்ச்சி அதிகமாக இருக்கிறது.பெங்களூர் சோம்பல் வயப்பட்டு பதினோரு மணிக்கே ஊர் அடங்கி விடுகிறது.இந்த கருத்தை எனது நண்பர்களிடமும் நீண்ட விவாதம் செய்தே முடிவுக்குவந்தேன் இதைப்பற்றி உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்

பழமைபேசி said...

@@செந்தில்


வாங்க செந்தில், இதே கருத்தைத்தான் நான் வேறொரு இடுகையில இப்படிக் குறிப்பிட்டு இருந்தேன்.


//@@தீப்பெட்டி

தினமும் பச்சைத் தண்ணியில குளிச்சா, சிந்தனை பெருக்கெடுத்து ஓடும்ன்னு சொல்றாங்களே சிவகாசியார்?!//