4/18/2009

பாங்கா இருந்துக்கடா!

மாலை வேளை, எரிசனம்பட்டிக் கானகம், அமராவதி காடுகள், கோடந்தூர் வனம் என்றெல்லாம் இரை தேடிச் சென்ற கொக்குகளும் குருவிகளும், அவைதம் குடிகொண்ட தென்னை மற்றும் மாமரத் தோப்புகளை நோக்கிப் படை படையாக திரும்பும் வேளை அது. தென்புறத்து மலைகளில் பெரும்பாலும் நிழல் படர்ந்து விட்டது. ஆனாலும், பாலகன் பழமைபேசியின் வயல் வடபிரதேசத்தில் சமவெளியில் இருப்பதால், ஆதவனின் பார்வை இன்னும் படர்ந்திருந்த வேளை அது.

மதிய உணவு உண்டபின் தம் வயல்வெளிக்கு வந்து பேச்சியுடன் பொழுதைக் கழித்தவன், ஊருக்குள் இருக்கும் வீடு திரும்பும் வேளையாகி ஆகிவிட்டபடியால், ஒத்தைக் கால்த் தடம் வழியாக, ஊர் செல்லும் இட்டேரிக்கு பேச்சி முன் செல்ல இவன் பின் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறான். செல்லும் வழியில் இருக்கும் தம் பெரியப்பாவின் சாளையைக் கடக்கும் வேளையில்,

“கண்ணூ பழமை, வந்துட்டு சாளைக்கு வராமயே போறியே? வா, வந்து காப்பித் தண்ணியாவது குடிச்சிட்டுப் போவியாமா?” என்கிறாள் அவனுடைய பெரியம்மா.

“இல்ல பெரியம்மா, நான் ஊட்டுக்குப் போகோணும், பொழுது உழுந்திட்டு இருக்கு பாரு!”

“அப்பத்தா வந்துருவாங்க கண்ணூ, இங்கியே இருக்குறது?!”

“அம்மா, ஊட்டுக்கே ராத்திரிப் படுக்கைக்கு வரச் சொல்லியிருக்கு பெரீம்மா!”

“செரி அப்ப, தடம் வழியில யாருன்னா வழுக்குவாலுக வந்தா அவிங்களோட பழமை பேசாம, பெராக்குப் பாக்காம, நேரங்காலமா ஊடு போயிச் சேரோணும், செரியா?”

”செரீங் பெரீம்மா, நாம் போயிட்டு வாறனுங்க அப்ப!” என்று சொல்லி விட்டு நடையைத் தொடர்கிறான்.

சிறுகால்த் தடத்திலிருந்து இட்டேரியை அடைந்து, இட்டேரியில் நடந்து செல்கிறான் பாலகன் பழமைபேசி. பேச்சியும் உடன் வருவதில் அவனுக்கு ஆறாம்மேட்டைக் கடப்பதில் எந்தத் தயக்கமும் இருந்திருக்கவில்லை வீடு திரும்புகையில். உடன்வரும் பேச்சியும், இட்டேரியில் புல், புதர், செத்தை கண்ட இடங்களிலெல்லாம், அவற்றின் மீது பின்னங்கால்களில் உள்ள இடதுகாலைத் தூக்கியபடி சிறிதாய்ச் சிறுநீர் கழிப்பதும், பின்பு ஓடி வந்து இவனுடன் சேர்ந்து கொள்வதுமாக உடன் வந்து கொண்டிருக்கிறது.

பேச்சியின் இந்த சிறுநீர் கழிக்கும் செயல் கண்ட பாலகன் பழமைபேசி, தன் அப்பாருடன் நடைபயணமாக மாலை கோயில் சென்றபொழுது, பேச்சி ஏன் இப்படி உடன் வரும் போதெல்லாம் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது என்பதைப் பற்றி அளவளாவியதை நினைவு கூர்ந்து கொள்கிறான்.

”அப்பாரு, ஏன் பேச்சி அடிக்கொருக்கா சொலுக்கு மல்லு ஊத்திட்டே வாறானுங்க?”

“அதா கண்ணூ. நாம இப்ப பெதப்பம்பட்டிக்கு பக்கத்துல இருக்குற ஆல்கொண்ட மாலை கோயிலுக்கு போயிட்டு இருக்குறமல்லோ?”

“ஆமாங்கோ!”

“அப்ப, நாமகீன அவனை உட்டுப் போட்டு எங்கனாச்சும் போயிட்டோம்ன்னு வையி, அவந் தோட்டத்துக்கு திரும்பி வரோணுமல்லோ?”

“ஆமாங்!”

“அதாங்கண்ணூ, திரும்பிப் போற தடம் மறக்காம இருக்குறதுக்கு ஒன்னுக்கு ஊத்திட்டே வாறான்!”

“என்னுங்க அப்பாரு... சொலுக்கு மல்லு இப்பிடி ஊத்திட்டே வந்தா தடமெப்பிடி தெரியுமுங்கோ?”

“அதா, அது வந்து இராசு, நாயிகளுக்கு மோப்பம் பிடிக்குற சத்தி இருக்குது பாரு, அதாங்காரணம். அதனோட ஒன்னுக்கை அது கண்டு பிடிச்சுப் போடும்!”

“செரீங்!”

“அப்ப, அதை மோப்பம் புடிச்சுட்டே வந்த வழியப் புடிச்சு சாளைக்குப் போயிச் சேந்துருமது!”

இந்த உரையாடலை நினைத்து அசைப்போட்டவாறே, ஆறாம் மேட்டையும் கடந்து, இட்டேரியிலிருந்து ஆற்றை யொட்டியுள்ள பிரதான மண்சாலைக்கு வந்து விட்டான் பழமைபேசி.

“டேய் பேச்சி, இன்னி நீ சாளைக்குப் போகுலாம், போடா!” என்று பேச்சியைத் திரும்பப் போகச் செல்கிறான். அது கேட்காது உடன்வரவே, கையை வீசிப் போகச் சொல்கிறான். அதைப் பார்த்த பேச்சி தன் நடையை நிறுத்தி விட்டு, அந்த நிலையிலேயே இவனை வாஞ்சையுடன் பார்த்தவாறு நின்று கொண்டது.

“நான் நாளா மக்காநேத்து வாறஞ் செரியா?” என்று விடை பெற்றுக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் சிறுவன் பழமைபேசி. திடீரென ஏதோ நினைத்தவனாய், வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறான்; பார்த்துவிட்டு, மனம் நெகிழ்ந்து, கலங்கி, ஏதோ ஒன்றைத் தொலைத்தவனாய் உணர்கிறான். ஆம், பேச்சி, அதே இடத்தில் இவன் மறையும் வரை இருந்து வழி அனுப்பிவிட்டுச் செல்வோம் என்கிற நினைப்பில் நின்று கொண்டிருக்கிறது! அது கண்ட இவன் நெக்குருகிப் பாடுகிறான்,


அட பேச்சி, அந்தி சாயுதல்லோ? இருட்டுக் கட்டுதல்லோ?
மலைச் சந்தயில யிருந்து புதாடுக இன்னிக்கு வருமல்லோ?
இனி ஊட்டுக்கு நாம்போயிருவேன், நீ சாளைக்குப் போயிருடா!
இட்டேரியில கண்டதுந்திங்காமப் பாங்கா இருந்துக்கடா!!

30 comments:

Anonymous said...

//இட்டேரியில கண்டதுந்திங்காமப் பாங்கா இருந்துக்கடா//

இஃகி இஃகி , நல்லாச்சொன்னீங்க,

கொல்லப்பக்கம் போகாதே கொட்டிக்கிடக்கு ...... பூ படம் பாட்டு ஞாபகம் வருது

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
//இட்டேரியில கண்டதுந்திங்காமப் பாங்கா இருந்துக்கடா//

இஃகி இஃகி , நல்லாச்சொன்னீங்க,
//

வாங்க அம்மிணி! இவன் தடம் வழில பூச்சி புழுவத்திம்பானுங்க அதான்!!

அப்பாவி முரு said...

//பழமைபேசி. திடீரென ஏதோ நினைத்தவனாய், வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறான்; பார்த்துவிட்டு, மனம் நெகிழ்ந்து, கலங்கி, ஏதோ ஒன்றைத் தொலைத்தவனாய் உணர்கிறான். ஆம், பேச்சி//

அண்ணா., உருக்கமா இருக்கூண்ணா.,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“செரி அப்ப, தடம் வழியில யாருன்னா வழுக்குவாலுக வந்தா அவிங்களோட பழமை பேசாம, பெராக்குப் பாக்காம, நேரங்காலமா ஊடு போயிச் சேரோணும், செரியா?”//


கேட்டீங்களா தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அது கேட்காது உடன்வரவே, கையை வீசிப் போகச் சொல்கிறான். அதைப் பார்த்த பேச்சி தன் நடையை நிறுத்தி விட்டு, அந்த நிலையிலேயே இவனை வாஞ்சையுடன் பார்த்தவாறு நின்று கொண்டது.
//


நன்று

vasu balaji said...

வழுக்குவாலுக, சொலுக்கு மல்லு இதுக்கெல்லாம் அர்த்தமாரு சொல்றது. பேச்சி வழியனுப்புன பாங்கு அருமை. கொங்கு நாட்டு கி.ரா. வேறென்ன சொல்றது.

ஆ.ஞானசேகரன் said...

//பாங்கா இருந்துக்கடா! //

மதுரை வட்டார சொல் சூதனமா இருந்துக்கடா .... நல்லாதான் இருக்கு

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல அருமை நண்பரே..

கயல் said...

//
“நான் நாளா மக்காநேத்து வாறஞ் செரியா?” என்று விடை பெற்றுக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் சிறுவன் பழமைபேசி. திடீரென ஏதோ நினைத்தவனாய், வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறான்; பார்த்துவிட்டு, மனம் நெகிழ்ந்து, கலங்கி, ஏதோ ஒன்றைத் தொலைத்தவனாய் உணர்கிறான். ஆம், பேச்சி, அதே இடத்தில் இவன் மறையும் வரை இருந்து வழி அனுப்பிவிட்டுச் செல்வோம் என்கிற நினைப்பில் நின்று கொண்டிருக்கிறது!
//நெகிழ்வாயிருந்தது!

கபீஷ் said...

ரொம்ப நல்லா இருந்துச்சி. இது மாதிரி அடிக்கடி எழுதுங்க(வேண்டுகோள் இல்ல, நேயர் விருப்பம்)

Unknown said...

பழமை தம்பி

வெகு நாளைக்குப் பொறகு மறுக்கா பதில் எழுதறனாக்கு...
சூந்தோ சூந்துக்கு பதில் போட்டது.

பிஏபி வாய்க்கால் பத்தி எழுதுனையா மறுக்கா ஊர் நேவகம் வந்திருச்சு. சக்கார்பாளையம் போகோணுமாட்ட இருக்குது பழமை.

உன்ற பேச்சி கதையாட்டாவே என்ற பொழப்பும் இருந்தது. எங்கூடவே எண்ற
நாய்க்குட்டியும் சுத்தீட்டேதாங்கண்ணு இருககுமாக்கு..மனசப் பொறட்டுது கண்ணு
நீ மறுக்கா மறுக்கா பழசப் பூரா கெளரி உட்டுப்போடறே.. முடியில கண்ணு..
பழசுக்கு மனசு ஏங்கிப் போகுது சாமி..

பிஏபி வாய்க்கால்ல ஒடற கருப்பச்சை கலரு டேம் தண்ணியப்பாத்தாலே மனசெல்லாம்
அத்தன ஆசைய இருக்கும். இந்த மாதிரி மே மாச லீவுலெ காலீல நேரத்துலெ கெளம்பி போயி துணியெல்லா தொவச்சிட்டு நெல்லா குளிச்சு நீச்சலடிச்சுபோட்டு
வீட்டுக்கு வர்றத நெனச்சாலே மனசு லேசாகுது கண்ணு...அப்பெல்லா இந்த டென்சனு, ப்ரசரு இதெல்லா என்னென்னே தெரியாது சாமி...

இது நுங்கு சீசன்ல்லோ..நுங்கு வண்டியெல்லாஞ் செஸ்ஸு ஒட்டியிருக்குறையா?
இப்பத்து பசங்களுக்கெல்லா அதெல்லா எங்கே தெரியப்போகுது?

ஆடி மாசத்துல மே காத்து திரும்பியாச்சுன்னா பட்டம் உடறது.. எட்மாஸ்டருக்கு தெரியாமெ குண்டு வெளையாடறது...

இதுக்கே தனியா பக்கம் பக்கமா எழுதோணுமாக்கு...

உன்னொரு நாளக்கி வரங்கண்ணு..

இண்ணக்கி என்ன அரிசோறா? சோளச்சோறா எது உண்ட? சோளச் சோத்துல மொளகு ரசம் ஊத்தி உண்டுருக்கறையா? காட்டு கீரைய கடஞ்சு வச்சு வீசுனீன்னு வெச்சுக்கோ...என்ன சாப்பாடு சாப்டறானுக இப்பெல்லா எங்கண்ணு..

செரி மறுக்கா பாக்கலாஞ்சாமி...

பழமைபேசி said...

//பாலா... said...
வழுக்குவாலுக, சொலுக்கு மல்லு இதுக்கெல்லாம் அர்த்தமாரு சொல்றது. பேச்சி வழியனுப்புன பாங்கு அருமை. கொங்கு நாட்டு கி.ரா. வேறென்ன சொல்றது.
//
பாலாண்ணே வாங்க, வணக்கம்!

சொலுக்கு: ‍கொஞ்சமா
மல்: சிறுநீர்
வழு: பிழை, வழுக்குவால்: ‍ பிழையாய் குறும்பு செய்பவர்

பழமைபேசி said...

//கபீஷ் said...
ரொம்ப நல்லா இருந்துச்சி. இது மாதிரி அடிக்கடி எழுதுங்க(வேண்டுகோள் இல்ல, நேயர் விருப்பம்)
//

இலண்டன் மாநகர் சீமாட்டி,

வணக்கம்! இது ஒரு நெடுந்தொடர், சிறுகதைத் தொகுப்பு... நீங்க அடிக்கடி வாங்க மொதல்ல... சரியா? யார்கிட்ட??!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
அண்ணா., உருக்கமா இருக்கூண்ணா.,
//

அப்பிடீங்களா தம்பீ... நல்லது!

கலகலப்ரியா said...

//பழமை பேசாம, பெராக்குப் பாக்காம, நேரங்காலமா ஊடு போயிச் சேரோணும், செரியா?”//

அவங்க சொல்லை மீறனும்னு பிடிவாதமா இப்பவும் பேசிக்கிட்டிருக்காங்க பழமை..

//ஆமா, உங்க பேரும் ஸ்ரீநிதியாங்க? இஃகிஃகி!!// (முந்திய இடுகைக்கு)

காக்கா எல்லாம் கருப்புன்னா.. கருப்பு எல்லாம் காக்காவான்னு கேக்குற மாதிரி இல்ல இருக்கு இது.. யாரு கிட்ட..! இந்த இடுகையின் தலைப்பைப் பார்க்கவும்..!

பழமைபேசி said...

// கலகலப்ரியா said...
//ஆமா, உங்க பேரும் ஸ்ரீநிதியாங்க? இஃகிஃகி!!// (முந்திய இடுகைக்கு)

காக்கா எல்லாம் கருப்புன்னா.. கருப்பு எல்லாம் காக்காவான்னு கேக்குற மாதிரி இல்ல இருக்கு இது.. யாரு கிட்ட..! இந்த இடுகையின் தலைப்பைப் பார்க்கவும்..!
//

அடச் சே! நானும் உங்களை ஒரு நாளாவது வெல்லணும்ன்னு பாக்குறேன்... முடிய மாட்டேங்குதே?! விட்ட அம்பு நம்மளையே வந்து பதம் பாக்குதே?! அவ்வ்வ்வ்.... இருங்க நாம்போயி எங்காத்தாவைக் கூட்டியாறன்!

கலகலப்ரியா said...

//ஓஹோ.. இப்டி வேற ஒண்ணு இருக்கோ.. பெரியாத்தாளையும் சேர்த்தே அழைச்சிண்டு வாங்கோ.. நாம வெயிட் பண்றோம்..//

கலகலப்ரியா said...

cha.. ippo ethukku slash poatten..

பழமைபேசி said...

//கலகலப்ரியா said...
//ஓஹோ.. இப்டி வேற ஒண்ணு இருக்கோ.. பெரியாத்தாளையும் சேர்த்தே அழைச்சிண்டு வாங்கோ.. நாம வெயிட் பண்றோம்..//
//

செத்துப்போன எங்காத்தா வர மாட்டாங்கங்ற ஒரு தைரியத்துல பேசுறீங்க.... எனக்கு எங்க ஆத்தா வேணும்....

கலகலப்ரியா said...

ங்கொக்கமக்கா.. இதேதுடா வம்பா போச்சு.. செத்துப் போன ஆத்தாவ நினைச்சு வருத்தப் படுறதா.. இல்ல இந்தப் புள்ளைய சமாதானப் படுத்துறதா.. எழுந்திரப்பு.. நான் போயீ ஆத்தா கிட்ட பேசிக்கிறேன்.. கொஞ்சம் கால அவகாசம் வேணும்.. அம்மா பேரு சரோசினிதானே.. அட்ரெஸ்ஸு நானே கண்டு புடிச்சிக்கறேன்... யப்பே... தாங்கலடா சாமீ...

தாரணி பிரியா said...

வாயில்லாத ஜீவனுக்கு இருக்கிற நன்றி உணர்ச்சியை என்ன சொல்ல. எங்க வீட்டுலயும் பெப்சின்ற பேருல ஒரு பேச்சி இருந்தது. அது ஞாபகம் வந்துட்டது :(

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
//பாங்கா இருந்துக்கடா! //

மதுரை வட்டார சொல் சூதனமா இருந்துக்கடா .... நல்லாதான் இருக்கு
//

இருக்கட்டு, இருக்கட்டு... :-0)

பழமைபேசி said...

//கயல் said...
நெகிழ்வாயிருந்தது!
//

நன்றிங்க கவி கயல்!

பழமைபேசி said...

//senthil said...
பழமை தம்பி

//

அண்ணா, வாங், வாங்! நல்லா இருக்கீங்களா? உங்களுக்குமு பெரிய வாய்க்கால் ஞாவகம் போல இருக்கு... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//தாரணி பிரியா said...
வாயில்லாத ஜீவனுக்கு இருக்கிற நன்றி உணர்ச்சியை என்ன சொல்ல. எங்க வீட்டுலயும் பெப்சின்ற பேருல ஒரு பேச்சி இருந்தது. அது ஞாபகம் வந்துட்டது :(
//

அப்படீங்க்ளா...நல்லது!

தெய்வசுகந்தி said...

பிஏபி வாய்க்கால், மால கோயில், பேச்சி எனக்கும் நிறைய கதை இருக்கு இதோட.

ராஜ நடராஜன் said...

பேச்சி கதை கேட்டுப்புட்டு என் ஜிம்மி நெனப்பு வந்துருச்சே.

பழமைபேசி said...

//Deivasuganthi said...
பிஏபி வாய்க்கால், மால கோயில், பேச்சி எனக்கும் நிறைய கதை இருக்கு இதோட.
//

ஆமா, இதுகளுக்கு பின்னாடி, பல ஆயிரங் கதைக இருக்குமுங்க... திண்ணைக்கு வந்து போறதுக்கு நெம்ப நன்றிங்க!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
பேச்சி கதை கேட்டுப்புட்டு என் ஜிம்மி நெனப்பு வந்துருச்சே.
//

அண்ணே, வாங்க, வணக்கம்!!!

வில்லன் said...

ரொம்ப நல்லா இருந்துச்சு......... அப்படியே மனச ஊருக்கு கொண்டு போய்டிங்க......

பேச்சிக்கெல்லாம் பாடுறிங்க.... எங்களுக்காக ஒரு பாட்டு பாட கூடாதா!!!!!!!!!!!!!!!!!!!!!!