நாள்முழுதும் வெயில் உமிழ்ந்து, சுடராய்ச்சுட்ட பரிதி மறைந்திருக்க, நிலவின் மங்கிய பாலொளி புவியெங்கும் படர்ந்திருக்க, விண்மீன்கள் ககனமார்க்கத்தில் மின்மினியாய்ச் சிறகடிக்க, முன்செல்லும் அன்னையவளைப் பின்தொடர்ந்து, தன் வீட்டை அடைகிறான் பாலகன் பழமைபேசி.
குறியாப்புக்கு அரிசி கொடுக்கும் விதமாய்த் தாயானவள் வீட்டினுள் செல்ல, குறியாப்பு வாங்க வந்த தோழனுடன் சில மணித்துளிகள் கழித்தவனாய் பழமைபேசி!
முன்வாசலில் வெண்குழல் விளக்கின் மெல்லிய வெள்ளொளி வீச, நேற்று பூத்த சாமந்திப் பூக்களைக் காணுகிறான் பழமைபேசி. அவைகளை எண்ணிச் சில மலர்கள் கூடியிருக்க்க் கண்டு,
“தேவண்ணா, இன்னிக்கு இனியுமு நெறைய இருக்குது பாருங்கோ!”
“பழமை பாத்துறா, இந்த மாதர பத்தைகளுக்குள்ள எல்லாம் பூச்சி புழுவுக இருக்குமடா!”
“அப்படியாங், வாங்க அப்ப போயிருலாம்!”
அரிசி வாங்க வந்த தேவராசு அரிசியோடு இடத்தை விட்டு அகலவும், அருகண்மை வீட்டுக் குடியானவளான செங்கமலம் தன் மூன்று வயது பாலகனுடன் வாசலுக்குள் நுழைகிறாள். மாலை நேரம் எந்த வீட்டுக்குச் சென்றாலும், எதையாவது கொடுத்துப் பின் அளவளாவிவிட்டு வருதல் எனும் வழக்கம் முறிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைத்தவளாய், வீட்டுப் புறக்கொல்லையில் விளைந்த காய்கறிகளுடன் வந்து இருக்கிறாள் செங்கமலம்.
“சரோசினி அக்கா, எங்க காட்டுக்குப் போயிட்டீங்களாக்கூ? ஊடு பூட்டியே கெடந்துச்சூ!”
“நான் இன்னைக்கு மலைச் சந்தைக்குப் போயிட்டு சாயந்தரம் போலத்தேன் வந்தேன்!”
“அப்பிடீங்களா, சித்த சொல்லியிருந்தா நானுமு தங்கவேலனை அவிங்க அப்பத்தாகிட்ட உட்டுப்போட்டு, கூடா வந்துருப்பம் பாருங்க?!”
“அவிங்க அப்பன், திடீல்ன்னு ஆடு வாங்கப் போகோணும், நீயுமு, கூட வரணோமுன்னு கையோட கூட்டிட்டிப் போனதுல, போட்ட்து போட்டபடி போட்டுட்டுப் போயிட்டன்ஞ் செங்கமலம்!”
“ச்சேரி செரிங்கோ!”
”செரீ, நின்னுட்டே பேசிட்டு இருக்காட்டீ என்னோ? இப்படிக் குக்கு, நான் வாறன்!” என்று சொல்லிவிட்டு உள்ளே போன பழமையின் தாயானவள் வெங்காயம் கிட்த்திய முறத்தோடு வந்து வாசலில் அமர, இருவருமாய்ப் பழமைபேச ஆரம்பித்து விட்டார்கள்.
தாயானவள் பேச்சு பேச்சாய் இருக்க, ஆடுகளை அடைத்து விட்டு வரும் தகப்பனுக்குச் சூடாய்ச் சமைத்து வைக்கும் பொருட்டு, வெங்காயத்தில் இருந்து தோல் உரிக்கும் லாவகத்தைப் பார்த்து இரசித்தவனாய் பழமைபேசியும் அருகில். தன் அன்னையின் மடியில் உட்கார்ந்து கொண்டு, அன்னையின் மடியில் இருந்து பெயர மாட்டேன் என்கிற பாங்கில் தங்கவேலன்.
நத்தக்காடையூர் பொடாரப்பன் கோயிலில் மொட்டை அடிப்பதற்க்காய் வளர்ந்திருந்த நீண்ட முடியுடனும், கன்னக் குழியழகோடும் இருந்த தங்கவேலனைச் சடையப்ப வள்ளல் என்றே பழமைபேசி விளிப்பான். அவனது நிலையிலிருந்து, அவனை மாற்றித் தன் வழிக்குக் கொண்டுவரும் பொருட்டு, வீட்டினுள் சென்று, தனது அமுச்சி ஊரான லெட்சுமாபுரம் திருவிழாவின் போது வாங்கிய மொசப்பந்தை எடுத்து வந்தான் பழமைபேசி.
தங்கவேலன் கவனத்தை ஈர்க்கும்படியாய், அந்த மொசப்பந்தினை இங்குமங்கும் உருட்ட, ஃகிஃகி என்று பகர்ந்தவனாய் மெள்ள மெள்ள மனம் மாறி, முதலில் எழுந்து நின்றான் மழலைச் சிறுவன் தங்கவேலன். வேண்டுமென்றே, பந்தைத் தவறவிட்டவனாய், தங்கவேலன் நிற்க்குமிடத்துப் பந்தை நழுவவிட்டான் பழமை.
‘அஃபிச்சீ’ என்று சிருங்காரித்து, பின் புளகாங்கிதம் பெருக்கிடப் பந்தைப் பிடித்து, பின்னர் அந்த பிஞ்சுக்கையால் உதறினான் தங்கவேலன். வெகுபெரியவன் போன்றதொரு தோரணையோடு புன்முறுவலிட்டுக் கொண்டான், வெற்றி பெற்ற உவகையுடன் பாலகன் பழமைபேசி.
வாசலின் ஒரு கோடியில் நின்று கொண்டு தங்கவேலனை நோக்கிப் பந்தை இவன் உருட்ட, அவன் அதை திருப்பி இவனை நோக்கி உருட்ட, கள்ளங்கபடமில்லாச் சிரிப்புடன் இருவரும் மரத்தடியில் ஓடியாடும் அணிற்ப் பிள்ளைகளாய். போகிற போக்கில் பழமைபேசி உற்சாகம் உற்றவனாய்ப் பாட, அவன் சொல்லுவதை தங்கவேலனும் மழலையில் பின்குரலிட்டுக் கொண்டான்.
“பந்தாடம்மா பந்தாடு!’
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு!
“அக்கம்பக்கம் பாத்து பந்தாடு!”
“அக்குபக்கு வாத்து ஃபண்டாடு!”
“பந்தாடம்மா பந்தாடு!”
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு”
“குதிச்சுக் குதிச்சுப் பந்தாடு”
“குய்ச்சு குய்ச்சுப் பண்டாடு”
இப்படியாக இருவரும் சிறிது நேரம் வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். களைப்பு தலைகாட்டியதும், இருவரும் திரும்ப வந்து த்த்தம் அன்னையர் மடியில் தஞ்சம் புகுந்தார்கள். பழமைபேசி தனது அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது.
தொப்புள்க் கொடி அறுபடும் போது, முதல் பிரிவு! வீட்டைச் சுற்றி வலம் வரும் குழந்தை, முழுநேரப் பள்ளிக்குச் செல்லும் அந்த முதல்நாள் இரண்டாம் பிரிவு! பதின்ம வயதில், படிப்பு, வேலை இப்படியாக ஏதோவொன்றிற்கு மாற்று இருப்பிடம் நாடிச் செல்லும் நாள் மூன்றாவது பிரிவு! இந்த மானுடம்பு மண்ணுக்கு இரையாகும் நாளோ, இறுதிப் பிரிவாகிறது!
இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
// களைப்பு தலைகாட்டியதும், இருவரும் திரும்ப வந்து தத்தம் அன்னையர் மடியில் தஞ்சம் புகுந்தார்கள். பழமைபேசி தனது அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது.
தொப்புள்க் கொடி அறுபடும் போது, முதல் பிரிவு! வீட்டைச் சுற்றி வலம் வரும் குழந்தை, முழுநேரப் பள்ளிக்குச் செல்லும் அந்த முதல்நாள் இரண்டாம் பிரிவு! பதின்ம வயதில், படிப்பு, வேலை இப்படியாக ஏதோவொன்றிற்கு மாற்று இருப்பிடம் நாடிச் செல்லும் நாள் மூன்றாவது பிரிவு! இந்த மானுடம்பு மண்ணுக்கு இரையாகும் நாளோ, இறுதிப் பிரிவாகிறது!
இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.//
கவிதை வரிகள். நிற்க.
கடைசி பிரிவுக்கு முந்தைய பிரிவு இன்னொன்று உண்டு. அதுதான் குழந்தையின் திருமணம். புது உறவு வருவதில் பழைய உறவுடன் சில நேரங்களில் மனத்தளவில் பிரிவு வரலாம். மாமியார் மருமகள் சண்டையும் அதனால் உருவாகுகிறது.
அதே சமயம் பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள் இல்லையெனில் வாழ்க்கை ஏது? இச்சுவடுகளே என்னை “சமீபத்தில் 1953-ல்” என்றெல்லாம் சொல்ல வைக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கடைசி பிரிவுக்கு முந்தைய பிரிவு இன்னொன்று உண்டு. அதுதான் குழந்தையின் திருமணம். புது உறவு வருவதில் பழைய உறவுடன் சில நேரங்களில் மனத்தளவில் பிரிவு வரலாம். மாமியார் மருமகள் சண்டையும் அதனால் உருவாகுகிறது.//
வணக்கமுங்க ஐயா! இதானுங்க ஐயா, மகாத் துயரம்.... அந்தப் பிரிவின் மேல எனக்கு இருக்கும் ஒருவிதமான வெறுப்பாலதான், நான் சொல்லலை.... நீங்க சொல்வது மெத்தச் சரி!
//அதே சமயம் பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள் இல்லையெனில் வாழ்க்கை ஏது? இச்சுவடுகளே என்னை “சமீபத்தில் 1953-ல்” என்றெல்லாம் சொல்ல வைக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றிங்க ஐயா!
ஒரு பாலகன் மதியம் பனிரெண்டு மணி வாக்குல இருந்து, நித்திரைக்குப் போனது வரையிலான அவனது நனவுகளைப் பார்த்தீங்க. அவனோட, அந்த நாள் நித்திரையோட நனவுகள்-1 முற்றுப் பெற்றது. இதோ, புத்தக வடிவில் உங்களுக்காக!
பணிவுடன்,
பழமைபேசி.
நாங்கள்ளாம் இன்னும் தங்கவேலன் தான்,
“பந்தாடம்மா பந்தாடு!’ வை,
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு! ன்னு தான் எழுதுவோம்...
இஃகி, இஃகி
//அப்பாவி முரு said...
நாங்கள்ளாம் இன்னும் தங்கவேலன் தான், //
அப்படீங்களா... சடாமுடியோடதான் அலையுறீங்களா அப்ப?
/மொசப்பந்தை/
?
/அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது./
ஏங்கிப் போச்சிங்க பழமை. நல்லா வளந்து நாப்பது வயசுக்கு மேல மனசு கனத்துப் பைத்தியம் பிடிக்கிறா மாதிரி இருக்கிறப்போ இப்படி மடியில படுத்தா, ஒரு வார்த்த பேசாம நாக்குட்டிய தடவராமாதிரி தலைய தடவுற அம்மா. எல்லாம் போச்சின்னு நைஞ்ச மனசு பாரமெல்லாம் இறக்கி பஞ்சு மாதிரி ஆகி, அந்த கொஞ்ச நேரத்துல என்ன மாயம் நடக்குமோ? மெதுவா தலை தூக்கி அம்மாவ பார்த்து சிரிச்சி எழும்புறப்போ அர்த்தமா ஒரு சிரிப்பு. அது பெருமையா? பன்னாட ஏழு கழுத வயசானாலும் எம்புள்ள குழந்தைன்னு ? வார்த்தையிலடங்கா உணர்வுகள். இருக்கிறப்போ தெரியாத இந்த சுகம் போனப்புறம் மனசு இதுக்கு ஏங்கித் தவிக்கிற நரகம் இருக்கே. படுறவங்களுக்கு தெரியும்.
/அவனோட, அந்த நாள் நித்திரையோட நனவுகள்-1 முற்றுப் பெற்றது./
யாரக் கேட்டிங்க முடிக்கிறதுக்கு? அடுத்த நாள் ஆரம்பிச்சாகணும். திரும்ப படிச்சவங்களை குழந்தையாக்கினதுக்கு நன்றி சொல்லியாகணும். தினம் தினம் குழந்தையாகணும் பழமை.
முத்து முத்தான உணர்வுகளை புத்தகமா சேத்து தந்துட்டீங்க நன்றி!!!
எல்லாமும் ரொம்பவும் கவிதையா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!!
ஆனா ஏன் இம்புட்டு சீக்கிரமா முடிச்சீங்க?
//பாலா... said...
/மொசப்பந்தை/
?
//
நன்றிங்க பாலாண்ணே!
மொசப்பந்து: மசைப் பந்து, அதாவது சின்ன பந்தால ஓங்கி ஒருத்தனை அடிக்க, அவன் ஒன்னு அதை இலாவகமாப் பிடிச்சி எறிஞ்சவனையே திருப்பி அடிக்கணும், அல்லது அது அவனைப் போட்டுத் தாக்கும்.... இந்த விளையாட்டுக்குப் பேரு எங்க ஊர்ல மொசப்பந்து வெளையாடுறது... இஃகிஃகி!!
//கயல் said...
முத்து முத்தான உணர்வுகளை புத்தகமா சேத்து தந்துட்டீங்க நன்றி!!!
எல்லாமும் ரொம்பவும் கவிதையா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!!
ஆனா ஏன் இம்புட்டு சீக்கிரமா முடிச்சீங்க?
//
நன்றிங்க கயல்விழி! விரைவில அடுத்த இடுகைகள் வராமலா போயிடும்.... இஃகிஃகி!!
/இந்த விளையாட்டுக்குப் பேரு எங்க ஊர்ல மொசப்பந்து வெளையாடுறது/
இங்க அழகா தமிழ்ல முதுகுபஞ்சர்னு சொல்லுவாய்ங்க. இஃகிஃகி.
//இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.//
அண்ணே, எங்கியோ இருக்க வேண்டிய ஆளு. எப்படி புடுச்சுப்போட்ட்டீங்க வார்த்தைகள.
கண்ணுல தண்ணி கட்டுதங்கண்ணா!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை!
கதையப் படிச்ச, கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிங்கோ!!!
Post a Comment