ஆதவன் இளஞ்சிவப்பு நிறத்தில், பெருத்த வடிவில், மறைந்தும் மறையாமலும், கருமுகிலகள் சிறு கீற்றாய் குறுக்கில் வர, ஒளி விடைபெற்று, இருள் அரங்கேறிக் கொண்டிருந்த நேரம். சந்தையில் இருந்து வந்த பட்சணங்களையும், பலாப்பழச் சுளைகளையும் உண்டு களைப்பாறிய பாலகன் பழமைபேசிக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை.
“அம்மா, அப்பன் எப்ப வரும்?”
“ஆடுகளைக் கொண்டு போயிச் சாளையில நிறுத்திப் போட்டு, பொள்ளாச்சி வண்டி இராசூசு வந்துட்டுப் போறதுக்குள்ள வந்துரும்டா, நீ எங்க போற?”
“அம்மா, நான் பெருமாளு அவிக ஊட்டுக்குப் போயிட்டு வாறம்மா!”
“செரி, வேற எங்கயும் போயிராத கண்ணூ!”
“செரிம்மா!”
பெருமாளு வீடு பழமையின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரம், இவனது வீட்டுப் பொடக்காளி வழியாக பின்புற வீதியில் உள்ள அவர்கள் வீட்டிற்குச் செல்கிறான். அவ்ர்கள் நெசவாளர்கள். பெருமாளு, அவன் சகோதரன் தேவராசு, அவனுடைய தந்தை தொட்டண்ணன், சித்தப்பா சிக்கண்ணன், தாய் சரசுவதி, உறவினர் பையன் கோயிந்தன் என எப்போதும் ஒரு கூட்டம் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே இருப்பார்கள்.
தொட்டண்ணன் என்றால் பெரியண்ணன் என்றும், சிக்கண்ணன் என்றால் இளைய அண்ணன் என்று கன்னடத்தில் இருந்து மொழியாக்கம் செய்து, அந்த விபரத்தை பெருமாளு ஏற்கனவே பாலகன் பழமைபேசிக்கு சொல்லியும் இருந்தான். பழமைபேசிக்கு, பெருமாளு வீட்டில் இருப்பது என்றால் கொள்ளை ஆசை.
இரு தறிக்குழிகள் இருக்கும். தொட்டண்ணன், சிக்கண்ணன், கோயிந்து, இவர்களில் யாராவது இருவர் தறிக்குழியில் அமர்ந்து நெய்து கொண்டிருப்பார்கள். தறி என்றும் நிற்பது என்பது கிடையாது. சதா சர்வகாலமும் ‘ச்சடக், டடக்’ என்று இசைத்துக் கொண்டே இருக்கும். தறியின், பாவுச் சட்டத்திலிருந்து நாலாயிரம் நூலிழைகள் புறப்பட்டு, அவையாவும் மறு பக்கத்திலிருக்கும் உருளையில் சுற்றப்பட்டு இருக்கும். இரண்டாயிரம் இழைகள் மேல்ப் பாளமாகவும், இரண்டாயிரம் இழைகள் கீழ்ப் பாளமாக்வும் இருக்கும்.
இந்த இரண்டு பாளங்களுக்கும் இடையில், ஊடுநூலாக நாடாவைக் குறுக்கே செலுத்தியும், மேல் உள்ள பாளம் கீழாகவும், கீழ்ப்பாளம் மேலாகவும் ஒரே நேரத்தில் இயங்கி, தார்க்கதிர் ஓடினால் துணி உருப் பெற்று விடும். பாலகன் பழமைபேசிக்கு, கைத்தறியில் அவர்கள் கால்கள் கொண்டு விசையை இயக்குவதையும், கைகளால் நாடாவை இங்குமங்கும் இயக்குவதையும் பார்க்கப் புரியாத புதிராக இருக்கும். நூல் அறுந்து போகும் நேரத்தில், கைகளால் பாவு பிணைப்பதையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருப்பான்.
தறிக்கூடத்தில் இருந்து வெளியே வந்தால் திண்ணையில், பெருமாளுவின் அம்மா சரசுவதியக்கா எப்போதும் நூல்ச் சுற்றில் இருந்து கழி சுற்றுவதும், இராட்டை கொண்டு கழியிலிருந்து தார்க்குச்சி சுற்றுவதுமாக இருப்பதையும், வைத்த கண் பிறழாது பார்த்துக் கொண்டு இருப்பான். தேவராசு சுற்றினால் மணிக்கு 30 தார் சுற்றுவான். இவன் அருகில் அமர்ந்து அதையெல்லாம் பார்த்துக் கொண்டே அளவளாவிக் கொண்டு இருப்பான்.
தார்க்குச்சியை நாடாவில் இட்டு, அதிலுள்ள நுண்துளை வழியாக வாயினால் உறிஞ்சி இழுக்கும் போது, ‘சூ’ என ஒரு ஒலிச்சிந்தல் மேலிடும். அது மேலிடும் போதெல்லாம், வினோதமாய்ப் பார்ப்பான் பாலகன் பழமைபேசி. வாரம் ஒருமுறை, நெகமத்தில் இருந்து வாங்கி வரும் பாவுநூலைக் கஞ்சியிட்டு பதப்படுத்துவார்கள். அப்போது பள்ளிக்கூட மைதானத்துக்கு அவர்களுடன் சென்று, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கும் பழக்கம் இருந்தது.
பெருமாளு, தேவராசு இருவரும் அவ்வப்போது இராட்டையைக் இவன் கையில் கொடுப்பதும் உண்டு. இன்றும் அவ்வாறே, பழமையும் தார் சுற்றிக் கொண்டிருந்தான். திடீரென, பின்னால் இருக்கும் அறையிலிருந்து, “ஐயோ பாம்பு, பாவுக்கஞ்சி போடறதுக்கு வெச்சிருந்த நூல்க்கத்தைல பாம்பு!” என்று அலறினாள் சரசுவதியக்கா.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஊரே கூடியது. பின்புற அறைகளில் மின்விளக்கு இருந்திருக்கவில்லை. யாரோ கொண்டு வந்த கை மின்விளக்கில் பார்க்க அது கண்களுக்கு அகப்படவில்லை.
“யாரப்பா அங்க, அதெல்லாம் நெம்பக் கடினமப்பா தேடி அடிக்கிறது!”
“என்னுங்க பண்ணுறது? அப்படியே உட முடியுமா புள்ளை குட்டி இருக்குற எடத்துல?”
”ஏ என்னப்பா பேசுறீங்க, சித்த யாருனாச்சிம் போயி மாயனைக் கூட்டிட்டு வாங்க! அவன் வந்து புடிச்சிட்டுப் போறான், என்ன நாஞ்சொல்றது?”
“ஆமா, ஆள் உட்டுக் கூட்டியாறச் சொல்லுங்க! சிக்கா போடா, போயிக் கூட்டியாடா!”
மாயன் கையில், மழைக்காகித நெகிழிக் கோணியோடும் மகுடியோடும் வந்து விட்டான் உடனே. மாயன் அந்தப் பகுதியில் பாம்பு பிடிக்கும் பிரபலம்.
”சித்த அல்லாரும் வெலகி நில்லுங்க!”
மகுடியால் மெதுவாக இசைக்கத் துவங்கினான். முதல் ஐந்து நிமிடங்களில் ஒன்றும் நடக்கவில்லை. அனைவரும் பொறுமை இழந்ததை உணர்ந்த மாயன், யாரையும் பேச வேண்டாம் என்று இடதுகையால் சைகையில் பேசினான். அவன் சொல்லி ஓரிரு நிமிடங்களில், எங்கிருந்து வந்தன என்றே தெரியவில்லை, இரண்டு அரவுகள் இசைக்கு நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாலகனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. பெருமாளு, தேவராசு, பழமை மூவரும் அடுத்தவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு நடப்பதறியாது பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாயன் இலாவகமாக, இசைத்துக் கொண்டே நெகிழிப் பையை விரித்துப் பிடிக்க அவை இசையின் மயக்கத்தில் தஞ்சம் புகுந்தன அந்த பைக்குள்ளாக. மாயன் பையைக் கவனமாக இறுகக் கட்டி, பின்னர் தான் கொண்டு வந்திருந்த இரும்புத்தடியை அதன் மீது வைத்த பின்னர், ஊராரை வெற்றிப் பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.
“சரசூ, ம்ம், மாயனுக்கு குடுக்க வேண்டிய ஒரு படி அரிசியைக் குடுத்தனுப்பு!”, என்றாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி. பாம்பு பிடித்தவனுக்கு ஒரு படி அரிசி என்ற ஊர் வழக்கை ஆமோதிப்பது போல் கூட்டத்தினரும்!
“ம்ம்... எங்க வீட்ல, குடுக்குற அளவுக்கு அரிசி மொடாவுல இல்லீங்களே!”
“அதுக்கென்ன சரசூ பண்ணுறது? குடுக்குற முறையச் செய்யாமப் போயி, ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடப் போகுது?”
“ம்ம்... கழுவு நூல்ல நூத்த துண்டு வேணா இருக்கு, யாராவது அதை இரவிக்கை தெக்கிறதுக்கு வாங்கிட்டு, படி அரிசியை மாயனுக்கு குடுத்தனுப்புங்க! அதான் இப்பத்திக்கு எங்கட்ட இருக்குது வேலம்மக்கா!”
ஓரிரு நிமிடங்கள், நிசப்தம் நிலவியது. நிசப்தத்தைக் கலைப்பது போல், பாலகன் பழமைபேசியின் தாயார்,
“இந்தா சரசூ, நான் வேணுமின்னா ஊட்டுக்குப் போயி ஒரு படி அரிசியை தேவங்கிட்டக் குறியாப்பாக் குடுத்து அனுப்புறேன். வாடா தேவா, கூட வருவியாமா?” என்று சொல்லிவிட்டு, பழமையின் கையையும் பற்றிக் கொண்டு வீடு நோக்கி நகரவும், அதைப் பார்த்த பெருமாளு நன்றியுணர்வோடு ஓடி வந்து, அவனிடம் இருந்த முள்ளூசி, காதூசி, இடுக்கி ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த வளையத்தை, யாரும் பார்க்காத நேரத்தில் பழமைபேசியின் கால்ச்சட்டைப் பையில் போட்டுவிட்டுச் சொன்னான், ”டேய், ஒன்னும் பயப்படாத!”.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
அருமையா இருக்கு....
//பொள்ளாச்சி வண்டி இராசூசு // தெரியாதவங்களுக்கு பொள்ளாச்சி பஸ் Rajus. 5:30க்கு பொள்ளாச்சில எடுத்தா 6:05க்கு அந்தியூரு வரும்.
வழக்கம் போல இந்த இடுகையும் அழகா நெய்தாச்சு பழமை. குறியாப்பான்னா கைமாத்து மாதிரியா? அதே அளவில் பின்னாடி திருப்பிக் கொடுக்கிறதா? முள்ளூசி, காதூசி, இடுக்கி ...அவ்வ்வ்.. இதத்தேடி அலையா அலையுறன். முன்னல்லாம் நரிக்குறவர்ட வாங்கலாம். இப்ப அவிங்கல்லாம், கூலிங்கிளாசு, ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் பேன்டு தான் விக்கிறதாம். இதென்னான்னு அவிங்களுக்கே தெரியல.
வலைச்சரத்திலிருந்து உங்களுடைய பதிவுகளுக்கு வர நேர்ந்தது. முழுவதையும் படிக்க முடியவில்லை. படித்துவிட்டு பதிவிடுகிறேன்.
//சந்தையில் இருந்து வந்த பட்சணங்களையும், பலாப்பழச் சுளைகளையும் உண்டு களைப்பாறிய பாலகன் பழமைபேசிக்கு//
கட்டுச் சோறு போதுமாத்தான்னு சொன்னப்ப அச்சோ என்னா பொருப்பான புள்ளன்னு தோணிச்சி. இப்பல்ல தெரியுது. கம்பந்தண்ணி, கள்ளிப்பழம், சூரிப்பழம், பலாப் பழம், பலகாரம்னு பின்னாடி நெம்ப வேல இருக்குன்னு. களைக்காதா பின்ன. இப்படி எல்லாமா நாக்கூற வைக்கிறது? நீங்க சாப்டதெல்லாம் சொல்லி ஏங்க வைக்கிறத நான் சாப்பிடாம ஏங்கினத சொல்லி ஒரு இடுகை போடுறன்.
//Mahesh said...
அருமையா இருக்கு....
//பொள்ளாச்சி வண்டி இராசூசு // தெரியாதவங்களுக்கு பொள்ளாச்சி பஸ் Rajus. 5:30க்கு பொள்ளாச்சில எடுத்தா 6:05க்கு அந்தியூரு வரும்.
//
அண்ணே, சரியான தகவல்!
கூடவே, Rajusங்ற ஒத்தை வண்டி, பொள்ளாச்சிக்கும் வா. வேலூருக்கும் ஓடிட்டு இருந்தது. பொள்ளாச்சியில இருந்து புறப்பட்டுச்சுன்னா, தோட்டம் தோட்டமா நின்னு, வேலூர் வர விடிஞ்சு போகும். Madras to பாண்டிச்சேரி மாதிரியே இருக்கும்.
பின்னாடி அது, பல பேர்கள்ல உருமாறி 52B, MBSன்னு ஓடிகிட்டு இருந்துச்சு.
//Krishna Prabhu said...
வலைச்சரத்திலிருந்து உங்களுடைய பதிவுகளுக்கு வர நேர்ந்தது. முழுவதையும் படிக்க முடியவில்லை. படித்துவிட்டு பதிவிடுகிறேன்.
//
நன்றிங்க! கால அவகாசம் இருக்கும் போது இடுகைகளைக் கண்டுட்டு போங்க!!
//பாலா... said...
//சந்தையில் இருந்து வந்த பட்சணங்களையும், பலாப்பழச் சுளைகளையும் உண்டு களைப்பாறிய பாலகன் பழமைபேசிக்கு//
கட்டுச் சோறு போதுமாத்தான்னு சொன்னப்ப அச்சோ என்னா பொருப்பான புள்ளன்னு தோணிச்சி. இப்பல்ல தெரியுது. கம்பந்தண்ணி, கள்ளிப்பழம், சூரிப்பழம், பலாப் பழம், பலகாரம்னு பின்னாடி நெம்ப வேல இருக்குன்னு. களைக்காதா பின்ன. இப்படி எல்லாமா நாக்கூற வைக்கிறது? நீங்க சாப்டதெல்லாம் சொல்லி ஏங்க வைக்கிறத நான் சாப்பிடாம ஏங்கினத சொல்லி ஒரு இடுகை போடுறன்.
//
ஆகா! அண்ணே, தொடர்ந்து வர்றீங்க.... வாங்க, வாங்க!
குறியாப்பு: குறியாப்புன்னா, எதோ ஒரு பொருளை குறிப்புலயோ, அல்லது இவ்வளவு வாங்கிட்டுப் போறேன்னு குறிச்சு சொல்லி வாங்கிட்டு வந்துட்டு, அதை குறிச்ச வெச்சா மாதிரி திருப்பிக் குடுக்குற வாடிக்கைதான் குறியாப்பு! //முள்ளூசி, காதூசி, இடுக்கி ...அவ்வ்வ்.. இதத்தேடி அலையா அலையுறன். //
மனசு வலிக்குது! முன்னெல்லாம், ஒத்தை எட்டிக்காயும், இந்த வளையமும் இல்லாத அரைஞாண் கயிறு இருக்காது.
அட அட அடடா! கொளுத்திட்டீங்கண்ணா! அப்படியே தறிக்கூடத்துக்கே போய்ட்டேன்.
அந்த ஒரு படி விசயம் நெகிழ வச்சிடிச்சி!
//தமிழ் நாடன் said...
அட அட அடடா! கொளுத்திட்டீங்கண்ணா! அப்படியே தறிக்கூடத்துக்கே போய்ட்டேன்.
அந்த ஒரு படி விசயம் நெகிழ வச்சிடிச்சி!
//
வாங்க தமிழ்நாடன். நன்றிங்க!!
ஹஹ ஹா ஹருமை தலைவா
//“ஆடுகளைக் கொண்டு போயிச் சாளையில நிறுத்திப் போட்டு, பொள்ளாச்சி வண்டி இராசூசு வந்துட்டுப் போறதுக்குள்ள வந்துரும்டா, நீ எங்க போற?”
“அம்மா, நான் பெருமாளு அவிக ஊட்டுக்குப் போயிட்டு வாறம்மா!”
“செரி, வேற எங்கயும் போயிராத கண்ணூ!”//
இன்னுமுமா இந்த உலகம் நம்மல நம்பிகிட்டு இருக்கு
//Suresh said...
ஹஹ ஹா ஹருமை தலைவா
//
நன்றிங்க!
சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சிட்த்திர கைத்தறி சோலையடி.
நம்ம தென்னாட்டில் கொண்டாடும் வேலையடி....(பட்டுகோட்டை)
நல்லா இருக்கு நண்பா..
http://www.trekearth.com/gallery/photo1028427.htm
nice ( no tamil)
see that picture
//ஆ.ஞானசேகரன் said...
சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரும் சிட்த்திர கைத்தறி சோலையடி.
நம்ம தென்னாட்டில் கொண்டாடும் வேலையடி....(பட்டுகோட்டை)
நல்லா இருக்கு நண்பா..
//
பாடலுக்கு நன்றிங்க!
//
அதைப் பார்த்த பெருமாளு நன்றியுணர்வோடு ஓடி வந்து, அவனிடம் இருந்த முள்ளூசி, காதூசி, இடுக்கி ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த வளையத்தை, யாரும் பார்க்காத நேரத்தில் பழமைபேசியின் கால்ச்சட்டைப் பையில் போட்டுவிட்டுச் சொன்னான், ”டேய், ஒன்னும் பயப்படாத!”.
//
தினைத்துணை உதவி பெறினும் பண்போடு செய் நன்றியாற்றும் மாண்பு கிராமத்துக்கே உரித்தானது! நல்ல குறியீடு! பெருமாளு மனசுல நிக்கிறாருங்க!
தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி
சின்னத்தம்பி பெரியதம்பி எப்பிடிங்க கூப்பிடுவாங்க
ஜீப்பரு
:))
ரொம்ப அருமையாப் போயிட்டு இருக்கு கதை, சுயசரிதையா வெளியிட்டுறலாம் இன்னும் கொஞ்சம் வயசான பிறகு, கொங்கு பேச்சு வழக்கு படிக்கும் கண்களுக்கு பொள்ளாச்சி வயல்கள் போலவே நெம்பக் குளுமையாத்தானுங்கன்னா இருக்கு.
//பெருசு said...
தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி
சின்னத்தம்பி பெரியதம்பி எப்பிடிங்க கூப்பிடுவாங்க//
தொட்டன், சிக்கான்.... இஃகிஃகி!!!
good.vazhakkam pola.
//பெருசு said...
தொட்டண்ணன் சிக்கண்ணன் -சரி
சின்னத்தம்பி பெரியதம்பி எப்பிடிங்க கூப்பிடுவாங்க//
தொட்டன், சிக்கான்.... இஃகிஃகி!!!
மாட்டிக்கிட்டீங்க பழம,
தொட்டான் என்றால் பெரியவன்
சிக்கான் என்றால் சிறியவன்.
சீக்வன்ஸ் சரியா போடுங்க.
//பெருசு said...
மாட்டிக்கிட்டீங்க பழம,
தொட்டான் என்றால் பெரியவன்
சிக்கான் என்றால் சிறியவன்.
சீக்வன்ஸ் சரியா போடுங்க.
//
ஆகா, எனக்கும் ஆப்பு வெக்க ஆட்கள் தயாராத்தான் இருக்காங்களா? அவ்வ்வ்.......
பேருதான் பெருசு
உங்களுக்கு நான் "சிக்கான்"
(சிக்கான் என்று சொன்னால் சிக்கமாட்டான் என்றும் பொருள் கொள்ளலாமோ)
//பெருசு said...
பேருதான் பெருசு
உங்களுக்கு நான் "சிக்கான்"
//
சிக்கான் சிக்குவாரு, சிக்குவாரு...
Post a Comment