4/15/2009

ஆறாம்மேட்டுப் பேய்!

சூரிப் பழங்களையும், கள்ளிப் பழங்களையும் சுவைத்தவாறு, வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் பாலகன் பழமைபேசி. சென்று கொண்டிருந்த இட்டேரியில் இருந்து பிரிந்து, சிறுகால்த் தடம் வழியாக அவ்ர்களுடைய வயலுக்குச் செல்லும் இடம் நெருங்க, அவனுள் இனம் புரியாத ஒரு அச்சம் மேலிட்டது.

அந்த அச்சம் மேலிடக் காரணம், அவன் ஆறாம்மேடு கடந்துதான் அந்த சிறுகால்த் தடத்தை அடைந்தாக வேண்டும். ஆறாம்மேடு என்றால் பாலகனுக்கு ஒரே அச்சம். அவன், ஒரு நாள் அவனுடைய அப்பாருடன் வயலுக்கு வந்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியால் அவனுடைய அப்பாருடன் வினவினான்,

“அப்பாரு, ஏன் இந்த எடத்தை ஆறாம்மேடு, ஆறாம்மேடுன்னு சொல்லிச் சொல்றாங்க?”

“அதா, அது வந்து நம்மூரு மேக்கால வளவுல இருக்குற பெருமா கோயல்ல ஆறான், ஆறான்னு, ஆறுமுகம்ங்ற அன்னக் காவடி இருந்தான். அவன் ஊருக்குள்ள அன்னக்காவடி எடுத்து சோறுண்டுட்டு, ஊர்க் கோயலுகளுக்கு எல்லாம் சேவகம் செஞ்சிட்டு இருந்தான்.”

“அன்னக் காவடின்னா என்னுங்க அப்பாரு?”

“அதா, காவடி நொகத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு குண்டாவுக, சங்கிலியில தொங்கிட்டு இருக்கும். அந்த சங்கிலியில மணியோசை சத்தம் வாற மாதர சலங்கை மணியெல்லாம் இருக்கும். அப்ப, ஆறான் ஊருக்குள்ள வரும்போது அந்த சத்தங்கேட்டு, ஊட்டை உட்டு வெளியில வந்து அவனுக்கு சோறு கஞ்சி ஊத்துவாங்க. அவனும், அந்த அன்னக்காவடியில இருக்குற குண்டாவுல அதை வாங்கி உண்டுட்டு பொழப்பு நடத்திட்டு வந்தான்!”

“செரீங்க அப்பாரு!”

”அப்பிடியிருக்க, அவன் ஒரு நாளு இந்த இட்டேரி வழியா பூரண்டா பாளையம் பரமசிவங் கோயலுக்கு போயிட்டு இருக்குறப்ப, திடீல்ன்னு இந்த எடத்துல நெஞ்சு வலி வந்து உசுரை உட்டுட்டான். அதுனால, இந்த எடத்துக்கு ஆறாம் மேடுன்னு பேரு வந்ததுடா இராசா!”

“அப்ப, ஆறானோட பேய் இங்க இருக்குமா அப்பாரு?”

“நீ தெகிரியமா இருடா...அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லடா கண்ணூ!”

இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமைபேசி. இன்றும் அவ்விதமாகவே, ஆறாம் மேட்டைக் கடந்து சிறுகால்த் தடம் வழியாக வயலுக்குள் நுழைந்தான். முதலில் வருவது, அவனுடைய பெரியப்பாவின் வயல்.

வயலுக்குள், ஒரு பெரிய வேம்பு மரம் இருக்கும். அந்த வேம்பு மரத்தடியில் நாட்ராயன் சாமியும், அந்த சாமிக்கு நேர் எதிரே ஒரு வேலும் நடப்பட்டு இருக்கும். அந்த மரத்தடியில், பெரியப்பா பண்ணையில் வேலை செய்யும் தேவராசுவின் மனைவி முத்துலட்சுமி தன்னுடைய குழந்தையை, அந்த வேப்பமரத்தில் கட்டியிருந்த தொட்டிலில் கிடத்தி தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
சீராரும் பசுங்கிளியே தெவிட்டாத தெள்ளமுதே
நேராக உறங்கிலையோ நிறையன்பு ஊக்கிலையோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

இந்த பாடலையும் கேட்டவாறே, பாலகன் பழமைபேசி பெரியப்பாவின் வயலைக் கடந்து அவனது வயலுக்குள் செல்ல முற்பட்டான். அப்பொழுது, இவன் தலை தெரியக் கண்டதும், அவனுடைய தோட்டத்து நாய் பேச்சி ஒரே ஓட்டமும் பாய்ச்சலுமாய் இவனை நோக்கி வந்தது.


இவனுக்கு தன்னுடைய வயலுக்குள் வந்ததும் ஒரே குதூகலமும், பேச்சி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து, பிள்ளைப் பிறப்பு கண்ட தாய் போன்றதொரு உணர்வும் மேலிட்டது. அவனையறிமாலே, கீழ்க்கண்டவாறு கத்திக் கூச்சலிட்டான்,

ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்
பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்
பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி!!

25 comments:

ஆ.ஞானசேகரன் said...

பாலகன் பழமைபேசி னா யாரப்பு?

Mahesh said...

நல்லா இருக்குங்க நினைவலைகள் !!

அந்த ஆறாம்மேடு இன்னமும் இருக்கா இல்ல குப்பமேடு ஆயிடுச்சா?

அப்பாவி முரு said...

பழமைபேசியண்ணா...

கன்னித்தீவு தொடர் போல, ஒரு தொடரை பிடிச்சுட்டீங்க போலிருக்கே... வாழ்த்துகள்.

ஆனா, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன், அப்பிடின்னா என்ன??

Poornima Saravana kumar said...

அப்பாவி முரு said...
பழமைபேசியண்ணா...

கன்னித்தீவு தொடர் போல, ஒரு தொடரை பிடிச்சுட்டீங்க போலிருக்கே... வாழ்த்துகள்.

ஆனா, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன், அப்பிடின்னா என்ன??

//

அலணு - அணில்

பழமை நாஞ் சொன்னது சரிதானுங்க?

Poornima Saravana kumar said...

ஒரு வழியா நம்ம தோட்டத்துக்கு வந்து சேர்ந்தாச்சு....- பாலகன் பழமைபேசி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஒரு குதியும் போட்டுக் கொண்டான்:))
ரைட்டா??

Poornima Saravana kumar said...

ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்
பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்
பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி//

பாடல் அருமை...

Poornima Saravana kumar said...

இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமைபேசி.//

ஏனுங்ண்ணா இந்த இடத்திலயும் உங்க பாட்ட எடுத்து விட்டிருந்தா பேய் அலறி அடிச்சு ஓடிருக்கும் இல்ல:) (lol)

பழமைபேசி said...

//Poornima Saravana kumar said...
அலணு - அணில்

பழமை நாஞ் சொன்னது சரிதானுங்க?
//

ஆமாங்க சகோதரி!

அணில்: அலண்
மணல்: மலண்
மதுரை: மருதை
குதிரை: குரதை

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
பாலகன் பழமைபேசி னா யாரப்பு?
//

இஃகி! தூங்குற ஞானியை எழுப்புறது நெம்பக் கடினமாச்சே?!

பழமைபேசி said...

//Mahesh said...
நல்லா இருக்குங்க நினைவலைகள் !!
அந்த ஆறாம்மேடு இன்னமும் இருக்கா இல்ல குப்பமேடு ஆயிடுச்சா?
//

அண்ணே, இன்னும் இருக்குன்னு ஒரு நம்பிக்கை....

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
பழமைபேசியண்ணா...

கன்னித்தீவு தொடர் போல, ஒரு தொடரை பிடிச்சுட்டீங்க போலிருக்கே... வாழ்த்துகள்.

//

நன்றிங்க...

பழமைபேசி said...

//Poornima Saravana kumar said...
ஒரு வழியா நம்ம தோட்டத்துக்கு வந்து சேர்ந்தாச்சு....- பாலகன் பழமைபேசி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு ஒரு குதியும் போட்டுக் கொண்டான்:))
ரைட்டா??
//

அதேதானுங்க... சூழ்நிலையப் புரிஞ்சு வெகு நேர்த்தியா போட்டுத் தாக்குறீங்களே?!

பழமைபேசி said...

//Poornima Saravana kumar said... ஏனுங்ண்ணா இந்த இடத்திலயும் உங்க பாட்ட எடுத்து விட்டிருந்தா பேய் அலறி அடிச்சு ஓடிருக்கும் இல்ல:) (lol)
//

அஃகஃகா! நல்லாருக்கு, நல்லாருக்கு...

ராஜ நடராஜன் said...

ஆறாம் மேட்டுப் பழம நல்லாயிருக்குது.இப்படி காரணப் பெயர்கள் தேடினா தமிழ்நாட்டுல புதையல் புதையலா கதை கிடைக்கும்.

ராஜ நடராஜன் said...

//ஆனா, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன், அப்பிடின்னா என்ன??//

மனுசங்களுக்கு விடுகதை விடை சொல்றதுக்கே பின்னூட்டம் சரியா இருக்கும் போல தெரியுதே:)

vasu balaji said...

தொடர் வெகு நேர்த்தியா போகுது. ஒரு குட்டிக் கத, ஒன்னோ ரென்டோ பாட்டு பழமையோட நினைவுப் பின்னல்ல. அருமை.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
மனுசங்களுக்கு விடுகதை விடை சொல்றதுக்கே பின்னூட்டம் சரியா இருக்கும் போல தெரியுதே:)
//

அண்ணா, வாங்! அதுக்குத்தான நாம இடுகை இடுறதுங்களாச்சுங்களே?! இஃகிஃகி!!

பழமைபேசி said...

//பாலா... said...
தொடர் வெகு நேர்த்தியா போகுது. ஒரு குட்டிக் கத, ஒன்னோ ரென்டோ பாட்டு பழமையோட நினைவுப் பின்னல்ல. அருமை.
//

பாலாண்ணே, வாங்க, வணக்கம்!!

கயல் said...

ரொம்ப தெளிவான நடை! கலக்குறீங்க போங்க! பாலகன் பழமைபேசி(!) தன் வயசுக்கு படிப்பவர்களையும் இறங்கி வரச் செய்வது உங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி!அருமையா இருக்கு!வாழ்த்துக்கள்!!

பழமைபேசி said...

//கயல் said...
ரொம்ப தெளிவான நடை! கலக்குறீங்க போங்க! பாலகன் பழமைபேசி(!) தன் வயசுக்கு படிப்பவர்களையும் இறங்கி வரச் செய்வது உங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி!அருமையா இருக்கு!வாழ்த்துக்கள்!!
//

மிக்க நன்றிங்க கயல்!

கலகலப்ரியா said...

நான் பேய்க்கதை எல்லாம் படிக்கிறதில்ல அப்புறம் மாசக்கணக்கா வேப்பிலை அடிச்சாலும் தூக்கம் வராது.. அவ்...

அது சரி(18185106603874041862) said...

நல்லா இருக்குங்....

ரிதன்யா said...

நம்ம ஊர்ல (10 வயசு வரைக்கும் )சுத்தி, நம்ம ஆளுக பேச்ச கேக்கறமாதிரி இருக்குங்க மணி.

தெய்வசுகந்தி said...

அருமையான நினைவலைகள்ங்க. தொடருங்க.

கொங்கு நாடோடி said...

சில நேரங்களில் மனித உடல்களும் மிதந்து வரும் இந்தக் கால்வாயில். --- அந்த இரு கோவை சிறுபிள்ளைகள் கொள்ளப்பட்ட செய்தி- PAP வாய்காலில் மிதந்த உடல்கள். பழமைபேசியின் மனதில் என்ன தோன்றியது?