4/03/2009

என்னா இழவுடா இது?

இந்த வாரம் ஒரே வேலை முசுவுங்க. வலைப்பக்கம் தலை வெச்சிக்கூடப் படுக்க நேரமில்லை. எருமைக்குப்(Buffalo, NY) போயிட்டு இராவுல வந்து சேர்ந்தாச்சு. இனி எதையாவது சொல்லி இடுகை ஒன்னைப் போடுவம்ன்னுதான்... இஃகிஃகி!!

போன வாரங்கள்லே, எத்துனை வகையான அழுகைகள் இருக்குன்னு பார்த்தோம். இப்ப, அந்த அழுகைகளுக்கான காரணங்கள் என்னவா இருக்க முடியும்ங்றதை அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!

இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே!

இப்படிப் பாட்டுலயே அழுகைக்கு நான்கு காரணங்கள் இருக்குன்னு தொல்காப்பியர் சொல்றாருங்க.

இளிவு, இழிவு, இளப்பம்ங்றது ஒரு பொருட் கிளவிகள். இழிவாகுறது, வலியன் எளியன் ஆகுறதுங்க. அப்ப, அடுத்தவங்க இழிவைக் கண்டு தான் அழுவறதும், தன்னோட இழிவு கண்டு அடுத்தவங்க அழுவுறதும் இந்த வகையில வருதுங்க.

இழவு, இழப்புங்றது ஒரு பொருட் சொல்லுகள். இழவுங்றது, உயிரோ, பொருளோ, எதோ ஒன்னை இழந்து போறது. அடுத்தவங்க இழப்புக்கும், தன்னோட இழப்புக்கும் அழுவுறது.

அசைவு, தளர்ச்சி, நிலைமாறுகைங்றது ஒரு பொருட்கிளவிகள். அதாவது, இருந்த நிலையிலிருந்து தாழ்ந்து போறது.

வறுமை, நல்குரவுங்றதும் ஒரு பொருட் சொல்லுகதான். வறுமைன்னா என்னன்னு சொல்லத் தேவை இல்லை. இல்லாமல் போதல்!

இதுகெல்லாந்தாங்க, அழுகைக்கான மூல காரணங்கள். சரி, வந்துட்டீங்க, இந்த கணக்குக்கும் விடை சொல்லிட்டுப் போங்க!! இஃகிஃகி!!

ஒரு இராசா அரண்மனைக்கு 24 வாசலுண்டு. இந்த இராசாவுக்கு ஒரு பால்காரன், 300 படி பால் கொண்டு வந்தான். முதல் வாயிற்காக்கிற கொல்லன் நாழி(ஒரு படி)பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தான். இப்படியாக, இருபத்து நான்கு வாயிற்காரரும் நாழி பால் எடுத்துக் கொண்டு நாழி தண்ணீர் வார்த்தார்கள். அதன் பிறகு பால் கொண்டு போய் இராசாவின் முன்னே வைத்தான் பால்காரன். இராசாவும், பாலைப் பார்த்து, அது தண்ணீராய் இருக்கக் கண்டு 24 பொன் அபராதம் விதித்தான். அதன்பிறகு, பால்காரன் வாசற்காரர்கள் செய்த செயலைச் சொல்லவே, அந்த அபராதத் தொகையை வாயிற்காரர்கள் கட்டினார்கள். அப்படியானால், ஒவ்வொரு வாயிற்காரரும் கட்டிய தொகை என்ன?


3/27/2009

மாப்பு மாடசிங்கமே, ஏன்டா உனக்கு இந்த காந்தல்?

நம்ம மாப்பிள்ளை மாடசிங்கம் இருக்கானே, நொம்ப நல்ல பையன்! என்ன, அப்பப்ப அவனுக்கு திரி அவுஞ்சி போயிரும். ஆமுங்க, காரசாரமாப் பேசிப் பத்த வெச்சி விடணும். ஆங்கில மொழிக்கு பரிஞ்சு பேசியும், தமிழை நொந்துகிட்டும் பிராணானை வாங்குவான். போன வாரத்துல Montrealல்ல இருக்குற சிநேகிதனைப் பத்திப் பேசுனமுங்களா?! இவன் அவன் இல்லீங்க. இவன் இப்ப பெங்களூர்ல குப்பை கொட்டிட்டு இருக்கான். கெட்டிக்காரப் பைய. இவன் எப்பவும் அறிவியல்ல சத(100%)ந்தான்.

அப்படித்தாங்க ஒரு நாள் இவன், நாங்க படிச்ச பாடத்துல இருந்து சில சொல்லுகளைச் சொல்லி, இதுகளுக்கெல்லாம் தமிழ்ல என்னன்னு கேட்டுப் பிராணனை வாங்கினான். இப்பவே, எனக்கு அறிவுங்றது நெம்பக் குறைச்சல். அப்ப, எம்புட்டு இருந்திருக்கும்ன்னு நீங்களே யூகம் பண்ணிகிடுங்க. சரி, இவனுக்கு இப்ப பதில் சொல்லிப் பழைய கடனைத் தீர்த்துகிடலாம் வாங்க!

தமிழ்லயும், 'இப்ரூ'வுலயுந்தான் எதையும் நுணுக்கமாச் சொல்ல முடியுன்னு ஆராய்ச்சி செய்து, பெரியவங்க சொல்லி இருக்காங்க. Tamil is the far most sensitive language in which one could express as it is! இந்த வாசகம் நான் சமீபத்துல படிச்சது. இது வெறும் ஏட்டளவுலதானே இருக்கு? கி.பி 1820ல அகில உலக தமிழர் மக்கள் தொகை, ஒரு கோடின்னும் அதே புத்தகத்துல சொல்லி இருக்காங்க. இன்னைக்கு ஒரு கோடி, ஆறு கோடிக்கு மேல ஆயிடுச்சி. இங்கதாங்க எனக்கு பெரிய வியப்பு?! 2000 ஆண்டுகளுக்கு முன்னாடி, தமிழர்களோட மக்கள் தொகை என்ன?? ஒரு சில இலட்சங்கள்தானா??

அந்த ஒரு சில இலட்சம் மக்களை வெச்சிட்டு, ஒரு மொழியை உண்டாக்கி, அதைப் பேணிப் பாதுகாத்தாங்களா? இல்லை, இடையில எதோ காரணங்களால மக்கள் தொகை அருகி, மறுபடியும் பெருகி இருக்கா?? இந்த மாதிரி நிறையக் கேள்விகள்! அலசிட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க.

அதைவிடுங்க, இந்த நூற்றாண்டுல தமிழ், தமிழ் வளர்ச்சின்னு சொல்லுறவங்க தமிழர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் செஞ்சது என்ன? வீழ்ச்சிக்கு அடிகோலினது மற்றவங்களா? கிடையவே கிடையாது! தேர்தல் நேரம்!! இதுகளைப் பேசி பலன் ஒன்னுங் கிடையாது. வாங்க, நம்ம விபரத்துக்கு வருவோம்.

மாப்பு மாடசிங்கமே, நீர் கேட்டது spinning, rotating, revolving, whirl, curl இவைகளுக்கான தமிழ்ச் சொற்கள்தானே? இதோ, அதை விடவும் நுணுக்கமாய்!

ஆமாங்க, வட்டமாச் சுத்துறதுல என்ன நுணுக்கம் இருந்திட முடியும்? சுத்துது, சுழலுதுன்னு மேம்போக்காச் சொல்லிட்டிப் போறோம் நாம?! ஆனாப் பெரியவிங்க எப்படியெல்லாம் நுணுக்கமாச் சொல்லி இருக்காங்கன்னு அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!

சுழல்தல்: எதோ ஒன்னு, ஒரு மையப் புள்ளியில நின்னுட்டு சுத்துறதுங்க (spin) இது. பூமி தன்னைத் தானே சுழலுது.

சுற்றுதல்: ஒரு மையப் புள்ளியில நிக்காம, எதோ ஒன்னைச் சுத்தி வர்றது சுற்றுதல்(rotate). பூமி, சூரியனை மையமா வெச்சி சுத்துது.

உருளுதல்: படுகிடையாப் படுத்துட்டு சுத்துறது, உருளுதல் (roll-in). கோவிலில் உருண்டு வலம் வந்தான்.

புரளுதல்: நெடுகிடையா விழுந்து சுத்துறது புரளுதல்(to tumble over). உயர வாக்குல சுத்துறது.

உழல்தல்: வட்டமாச் சுழலுலறதுல, ஒரு பகுதி மாத்திரம். வட்டப் பாதையில போவதும், வருவதும் உழல்தல்(oscillation), இதை ஊசல்ன்னும் சொல்லுறோம். இது நெடு(vertical movement)வாக்குல நடக்குற அசைவு. கடிகார ஊசல்.

உளர்தல்: சுழலும்போது, தொய்வடைஞ்சா மாதிரி, வலுவில்லாமச் சுழலுறது. உளர்ந்த பம்பரம் போலானான்(whiffle).

சுலவுதல்: எதோ ஒன்னைச் சுத்தி நெட்டுக்குத்தலா, வளைஞ்சி வளைஞ்சி சுத்துறது, coil around. தென்னையைச் சுலவிய கொடி.

சிலுப்புதல்: இதுவும் உழல்தல் மாதிரிதான், ஆனா படுகிடையா (horizontal) நடக்குற அசைவு. தலையைச் சிலுப்பினான்.

சுரிதல்: படுகிடையா, வளைஞ்சி வளைஞ்சி சுத்துறது (spiral around).

சுழங்குதல்: சுற்றிகிட்டே (toss) மேல கீழ அசையுறது. துடுப்பாட்ட மைதானத்தில், நாணயம் சுழங்க இரு அணித் தலைவர்களும் வெளிப்படுகிறார்கள்.

இந்த மாதிரி இன்னும் கொஞ்சம் சொற்கள், சூர்தல், சொரிதல், முறுகுதல், துடித்தல், விசிறுதல், அலமருதல், ஆவர்த்தித்தல்ன்னு இருக்குங்க. காந்தலான மாடசிங்கம், இதைப் படிச்சதும் சாந்தமாயிடுவான். ஆனா, இதுக்கு மேலயும் நீட்டி முழக்கினா, படிக்கிற நீங்க காந்தல் ஆயிடுவீங்க! அதான், இதோட முடிச்சிகிடுறேன்!! இஃகிஃகி!!!

3/24/2009

பள்ளயம் 03/27/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய பதிவினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

அமெரிக்காவில்:

பள்ளயத்துல ஒரு படைப்பு அமெரிக்காவைப் பத்தினதா எழுதுறது வழக்கம்! அதான், இன்னைக்கும்!! விசயம் என்னன்னா, ஊரே கதி, நாடே கதின்னு, இருக்குற சனங்களையெல்லாம் தேடித் தேடி, இந்தா புடிச்சுக்கோ, இந்தா புடிச்சுக்கோன்னு கடனட்டை(credit card)ய வலுவுல போயிக் குடுத்தது அந்தக் காலம்.

சொரிஞ்சு தேய்க்காத எண்ணெயும், பரிஞ்சு போடாத சோறும் பாழ்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சாக? வாங்குனதுல நெம்பப் பேரு திவால்க் கணக்குல போறாங்களாம். அதனால, நலிஞ்சவங்களா இருந்து, வாங்குன அட்டைய நிலுவை எதுவும் இல்லாமத் திருப்பித் தர்றவங்களுக்கு, இலவசமா $300 திருப்பித் தர்றாங்களாம் இப்ப!

நாட்டுப்புறத்தில்:

இன்னைக்கு கெரமாத்துப் படம் எதுவும் போடலை பாருங்க, அதான் கெரமத்துப் பாட்டு ரெண்டு உங்களுக்கோசரம்! இஃகி!

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

ரெட்டைச் சிலாக்கு
கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

மூக்குச் சிலாந்தி
மூக்குச் சிலாந்தி

நாக்குல வரணும்
நாக்குல வரணும்

ஐயப்பஞ் சோலை
ஐயப்பஞ் சோலை

ஆறுமுக தாளம்
ஆறுமுக தாளம்

ஏழுக்குக் கூழு
ஏழுக்குக் கூழு

எட்டுக்கு முட்டி
எட்டுக்கு முட்டி

ஒம்ப‌து க‌ம்ப‌ள‌ம்
ஒம்ப‌து க‌ம்ப‌ள‌ம்

ப‌த்துக்கு ப‌ழுப்பேன்
ப‌த்துக்கு ப‌ழ‌ம‌டி

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு
============================

ஈரிரிண்டைப் போட‌டா
இறுக்க‌ மாட்டைக் காட்ட‌டா

ப‌ருத்திக் கொட்டை வைய‌டா
முக்க‌ட்டு வாணிய‌ன் செக்க‌டா

செக்கும் செக்கும் சேந்தாட‌
வாணிய‌ன் வ‌ந்து வ‌ழ‌க்காட‌
வாணிச்சி வ‌ந்து கூத்தாட‌

நாலை வ‌ச்சி நாலு எடு
நார‌ய‌ணன் பேரெடு
பேரெடுத்தபின்ன‌ பிச்சையெடு

அஞ்சுவ‌ர‌ளி ப‌சு ம‌ஞ்ச‌ள்
அரைக்க‌ அரைக்க‌ப் ப‌த்தாது
ப‌த்தாத‌ம‌ஞ்ச‌ள் ப‌சு ம‌ஞ்ச‌ள்

ஆக்குருத்த‌லம் குருத்த‌ல‌ம்
அடுப்புத்த‌ண்ட‌ல‌ம் த‌ண்ட‌ல‌ம்
வேம்பு சுட்டா வெங்க‌ல‌ம்

ஏழுபுத்திர‌ச் ச‌காய‌ம்
எங்க‌புத்திர‌ச் ச‌காய‌ம்
மாட்டுப்புத்திர‌ச் ச‌காய‌ம்

எட்டும் பொட்டும்
எட‌க்க‌ண்ணு பொட்டை
வ‌லக்க‌ண்ணு ச‌ப்ப‌ட்டை

ஒம்போதுந‌ரி சித்திர‌த்தை
பேர‌ன் பொற‌ந்த‌து பெரிய‌க‌தை
பெத‌ப்ப‌ம்ப‌ட்டிப் பெரிய‌த்தை

ப‌த்துரா சித்திரா கோலாட்ட‌ம்
ப‌ங்குனி மாச‌ங் கொண்டாட்ட‌ம்
ஆடி வெள்ளி வ‌ந்துச்சுன்னா
அம்ம‌னுக்க‌ல்ல‌ கொண்டாட்ட‌ம்.

திண்ணையில்:

ஒரு பட்டணத்திலே வியாபாரஞ் செய்யும் ஓர் வாணியன் வீட்டில், சில கன்னக்கோல்காரர்கள் கன்னம் போட்டு வீடு சோதிக்கையில் ஒரு திருடன் கையில் ஒரு முடிப்பு அகப்பட, அந்த நேரத்திலே ஆள்வரவு சப்தங்கண்டு எல்லோரும் முகமிட்டவாக்கிலே ஓடிப் போனார்கள்.

முடிப்பகட்டப்பட்ட திருடன் அவ்வூருக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கோயிலில் மறைவிடமாக இருந்து அந்த முடிப்பை அவிழ்த்துப் பார்த்தான். அதில் முத்துகளாயிருந்தன. இது எத்தனை முத்தோவென்று எண்ணிப் பார்க்கையில், ஒரு திருடன் வந்து இதில் எனக்குப் பங்குண்டு என்றான்.

நல்லதென்று இரண்டாய்ப் பகருகையில் ஒரு முத்து மீந்தது. அதை எனக்குனக்கு என்று இருவரும் வாதித்துக் கொண்டிருக்கையில், மற்றொருவன் வந்து எனக்கும் பங்குண்டு என்றான். நல்லதென்று மூன்றாய்ப் பகருகையில் ஒரு முத்து மீந்தது.

இப்படியாக ஆறு திருடர்கள் வாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு முத்து மீந்தது. ஏழாவது திருடனுக்கும் சேர்த்து ஏழு பங்கிடச் சரியாயிருந்தன அந்த முடிப்பிலிருந்த முத்துகள். அப்படியானால், இருந்த முத்துகள் எத்தனை?

3/23/2009

முதல்தாரம், ரெண்டாந்தாரம் ஆன கதை!

’Hello'க்குத் தமிழ்ல என்னன்னு பார்த்தோம் இல்லீங்களா?! அதையொட்டி யோசிக்கையில எங்கூடவே ஏழாம் வகுப்புல இருந்து, பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, இப்ப Montreal நகரத்துல இருக்குற என்னோட நண்பனோட ஞாவகம் வந்திச்சி.

அவனும், நானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்துலதான் Toronto வந்து, படிக்கிறோம் பேர்வழின்னு அங்க குப்பை கொட்டிட்டு இருந்தோம். அப்பவே, அவனோட பேச்சு வழக்கு மாறினா மாதிரி இருந்துச்சி. படிப்பு முடிஞ்சதும் அவனுக்கு கல்யாணம் ஆச்சுது. அந்த அம்மணியும் அவனும் மருந்துக்கு கூட தமிழ்ல பேசுறது கிடையாது. அவரு, எங்கூடப் பேசும்போதும் அப்படியே அள்ளி விடுவாரு. அப்பப்ப வாங்கிக் கட்டிக்கவும் செய்வாரு.

அப்படித்தானுங்க, ஒரு நாள் Hello'க்குத் தமிழ்ல என்னன்னு கேட்டு ஒரே கிண்டல்! நாம தகவலைச் சொன்னவுடனே, ’Ta-Ta க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். ’Good-Bye க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். நான் திருப்பிக் கேட்டேன், ‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!

இந்த மாதிரி ஆட்களுக்குங்க தமிழைக் கண்டா ஒரு இளக்காரம். மஞ்சள்க் காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு ஊர்வழில சொல்வாங்க. அந்த மாதிரி, தமிழ்ல எதையும் கேலியாத்தான் பாப்பாங்க இவங்க. தாய்மொழி முதல்தாரம். அடுத்தடுத்து கால நேர சூழ்நிலைக்களுக்கு ஏத்தமாதிரி மத்ததுகளும் அமைஞ்சு போகுது. ஒன்னு, முதல் தாரத்துக்கு ஏத்த மரியாதை குடு. இல்லையா, எல்லார்த்துக்கும் தனி இடத்தைக் குடுத்துட்டுப் போ. அதெப்படி, அவங்களுக்கு முதல்குடி மனசளவுல ரெண்டாந்தாரமாவும், ரெண்டாந்தாரம் ஒசத்தியாவும் ஆகுதுன்னுதான் புரியலை?!

உண்மை நிலவரம் என்னன்னா, ஆங்கிலமொழி பேசுற, 90% வெள்ளைச் சாமிகளுக்கே Tah-Tah, Good-Bye இதுகளுக்கான வெவரந் தெரியாது. இந்தப் பொழப்புல இவனுங்க அலம்பல் வேற? உண்மையாலுமே, தமிழ்ல அர்த்தம் கேக்குறத நாம பாராட்டுறோம். இப்படி வெறுப்பேத்தறதுக்குன்னே கேட்டா, நாமளும் கேப்பமில்ல?

அவங்கதைய விடுங்க, இப்ப நாம வெவரத்துக்கு வருவோம். 'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம். இது இப்படி இருக்க, ஆங்கிலம் பேசுற வேறொரு வட்டாரத்துல, கடவுள் உன்னோடு இருப்பார் அன்பேங்ற அர்த்தத்துல, tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.

இந்த பின்னணியில ta-taக்கு தமிழாக்கம், ’ஆண்டவன் ஆசியுறுக’ங்ற பொருள்ல ’ஆஆ’ன்னு வெச்சிக்கலாம்ன்னு நான் சொன்னா, நீங்க ஏத்துகிடவா போறீங்க?! ’Ta Ta’தான் சொல்லியாகணுமா? எதோ ஒன்னு நீங்க சொல்லிகிங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனிப் போய் பொழப்பு கிழப்பைப் பாக்கலாம்! இஃகிஃகி!!

மொழி தவறினவன், வழி தவறுவான்!

3/22/2009

பதிவுலக வாசகர்களுக்கு சூடான கேள்வி!

விமர்சனங்கள் நல்லதா, கெட்டதா? ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துகள் கொண்டதாக இருப்பினும், நாகரிகமான நடையில், பேச்சில் இருக்கும் பட்சத்தில் அவை நல்லவையே! அதுவே, நாகரிகமற்ற முறையில், அபாண்டங்களோடும், காழ்ப்புணர்ச்சியின் பொருட்டுமாக இருப்பின் அவை கெட்டவை என்பது எம் கருத்து. இம் முறையில், பிறழ்ந்து வரும் மறுமொழிகள் ஏற்கப்படுவதும் சரியானது அல்ல. அவற்றை மட்டுறுத்துவது, வலைப்பூவின் பொறுப்பாளரின் கடமை என்ற எமது பணிவான கருத்தோடு, இவ்விடுகையைத் தொடர்கிறேன் வாசகர்களே!

திரட்டிகளிலே வாசகர் பரிந்துரையை ஏற்கும்படியாக, அதற்கான வசதிகளை அளித்து இருக்கிறார்கள். அது குறித்து சிந்திக்க முற்பட்டதின் விளைவே இவ்விடுகையின் ஆக்கம். சிந்தனையில், எம்முள் தோன்றியவற்றை இனிக் காண்போம், வாருங்கள்!



  • பதிவுக்கு வரும் வாசகர்கள் இடுகையினை வாசித்த பின்னர், யாதொரு வாக்கும் அளிக்காமல் செல்லும் பட்சத்தில், அது குறித்த விமர்சனத்திற்கு இடமெதுவும் இல்லை.

  • வாக்களித்துச் சென்றவர்கள், நன்றிக்கு ஆட்பட்டவர்கள். விமர்சனத்திற்கு இடமில்லை!

  • இடுகையினை இட்ட பதிவருக்கு அபிமானத்தைத் தெரிவிக்கும் பொருட்டும், அளவளாவும் பொருட்டும் பின்னூட்டம் இட்டுவிட்டு, வாக்களிக்காமல் விடுகிற பட்சத்திலும், அதனை விமர்சனம் செய்வதற்கு எதுவுமில்லை.

  • ’சூப்பர், கலக்கல், நச்னு இருக்கு, அருமை, அள்ளுது, பயனுள்ளதா இருக்கு’, இந்த ரீதியில் பின்னூட்டம் இட்டுவிட்டு வாக்களிக்காமல் செல்வோருக்கு இரு வேறு காரணங்கள் இருக்க முடியும் என நினைக்கிறேன். இரண்டுமே விமர்சனத்திற்கு ஆட்பட்டவை என்பது இந்த சாமன்யனின் எண்ணம்.

  1. இடுகையினை உள்ளபடியாகவே இரசித்து, பாராட்டும் விதமாக பின்னூட்டம் இட்டுவிட்டு, வாக்களிக்க வேண்டும் என்கிறதில் சிரத்தை இல்லாமல் போதல். சிரத்தையுடன் நேரம் செலவு செய்து ஊக்குவிக்கும் இந்த வாசகர், மற்ற வாசகர்களுக்கும் இப்பதிவைச் சுட்டிக் காட்டுவதில் ஏனிந்தப் பாராமுகம்? வாக்களியுங்கள் வாசகர்களே!
  2. பதிந்த பதிவரின் அபிமானத்தைப் பெறும் முனைப்பில், இடுகை பாராட்டுக்கு தகுதி இல்லாதிருந்தும் பாராட்டிவிட்டு, தெரிந்தே வாக்களிக்காமல் செல்வது. தகுதியில்லாத இடுகைக்கு பாராட்டுவது தேவையா? அல்லது, வாக்களித்து மேலும் அதிகப்படியான அபிமானத்தைப் பெறுவதில் என்ன சிரமம்?? ஒன்று போலியாகப் பாராட்டுவதைத் தவிர்க்கலாம். அல்லது வாக்களித்து, இட்ட பின்னூட்டத்திற்கு வலுச் சேர்க்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில், இட்ட பின்னூட்டம் போலியானதுதானே?

வாக்களிக்க நினைவூட்டுவதை இகழ்வாகக் கருதி விமர்சனம் செய்ததின் பொருட்டு, அப்படிக் கோருவதை பல பதிவர்கள் அறவே கைவிட்டு விட்டார்கள். அவர்களுள் அடியேனும் ஒருவன். அந்த ஒரு தகுதியின் பொருட்டாகவே, இவ்விடுகையினை இடுகிறேன் வாசகர்களே!

’நீயெல்லாம் பதிவிடவில்லை என்று யார் அழுதார்கள்?’ என்று வினவும் வாசகரா நீங்கள்? இப்பதிவைப் படிக்க வந்த உங்களைப் போன்றோருக்கும், இன்ன பிற வாசகர்களுக்காவும்தான் பதிவிடுகிறோம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் நண்பா!


ஒத்தடம் அரை வைத்தியம்!

ஞாயிறு போற்றுதல்!

உஷாவுக்கு அமெரிக்கர்களுடன் அளவளாவும் அளவுக்கு ஆங்கில புலமையும் இல்லை. பொதுவான விசயங்களும் இல்லை. அதனால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். தொழில்கூடம் விட்டால் வீடு என்ற நிலையில் அமெரிக்கர்களுடன் பழக வாய்ப்பே இல்லை. தொழிற் கூடத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு அதுவும் அமெரிக்க கருப்பு பெண்களுக்கு சற்று உரக்கவே பேசுவதும் சிரிப்பதும் இயல்பான வழக்கம். உஷாவுக்கு இது தெரியாததால் அவர்கள் சிரிக்கும் போது, ஒருகால் தன்னைத்தான் கிண்டலாக சிரிக்கிறார்களோ என்று மெல்ல மெல்ல நினைக்கத் தொடங்கினாள்.

அதை ஜெயராமனிடமும் சொன்னாள். ஜெயராமன் அப்படி யாரும் அமெரிக்காவில் பிறரைக் கிண்டல் செய்வது, பணி இடத்தில் தடை செய்யப்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் சிரிப்பது உன்னைப் பார்த்து அல்ல. அவர்களுக்குள் நகைகச் சுவையாக பேசிக் கொள்வார்கள் நீ கவலைப்படாமல் உன் வேலையில் கவனம் செலுத்து என்றார்.

உஷா கணவன் சொல்லுவதை நம்பினாலும் பணி இடம் சென்றால் அந்த சந்தேகம் வலுத்து கொண்டே வந்தது. அது உண்மையே என்றும் சொல்லத் தொடங்கினாள். "அவர்கள் அடிககடி "Quit" என்று சொல்லி என்னை வேலை விட்டு போக சொல்லுகிறார்கள்" என்றும் சொன்னாள். ஜெயராமன், "அப்படி நீ நினைத்தால் மேலாளரிடம் புகார் செய்யலாமே" எனச் சொல்ல, "அவரிடம் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது", என்றாள் இவள்.

உஷா தொடந்து பணிக்கு போய்க் கொண்டுதான் இருந்தாள். ஆனால், ஒரு நாள் விடிகாலை எழுந்ததும், "உங்களுக்கு தெரியுமா? GE நிறுவனத்தில் ஆயுதங்கள் செய்கிறார்கள். சதாம் உசேன் அமெரிக்கருக்கு எதிராக சதி செய்கிறான், எங்கள் நிறுவனத்தில் திரைச்சீலை தொங்கவிடும் குழாய்களில் ஆயுதங்களை ஒளித்து வைக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. நாம் இந்தியாவுக்கே திரும்பிப் போய்விடலாம்", என்று தொடர்பு இல்லாதவற்றை சொல்லத் தொடங்கினாள். ஜெயராமன் அதிர்ந்து போனான்.

தன் மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது உறுதியாகிவிட்டது. எனவே, "சரி நாம் ஊருக்கு போயிடலாம். நீ இனிமேல் வேலைக்கு போகவேண்டாம். வீட்டிலேயே இரு. நாம் மருத்துவரை போய் பார்க்கலாம், உனக்கு உடம்புக்கு சரியில்லாமல் இருக்கலாம்." என்றான். உஷாவும் அன்று முதல் பணிக்குப் போகவில்லை. "எனக்கு அந்த அமெரிக்க டாக்டர் வேண்டாம். இந்திய பெண் டாக்டர்கிட்டதான் போவேன்" என்றாள்.

அடுத்த நாள் ஒரு இந்திய பெண் மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவரோ எல்லாவற்றையும் கேட்டு விட்டு, " நம் நாட்டில் இருந்து வந்த பலர் இந்த மாதிரி ஆகி இருக்கிறார்கள். இது பண்பாட்டு வேறுபாட்டால் வருவதுதான். நான் ’புரொசாக்’ என்ற மருந்து கொடுக்கிறேன். அதை சாப்பிட்டால் உடம்பில் உற்சாகம் இருக்கும், ஆனால் தொடர்ந்து பல நாள் சாப்பிட வேண்டும் " என்றார்.

ஜெயராமன் அவர் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்கி உஷாவுக்கு தினமும் சாப்பிட கொடுத்தான், இந்த காலத்தில் உஷா அதிகமாக யாருடனும் பேசுவது இல்லை. ஏதோ சிந்தனையில் இருப்பவள் போல் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பாள். ஜெயராமனோ தன் மனைவிக்கு நேர்ந்ததை நினைத்து மிக கவலையுற்றான். இந்த அயல் நாட்டில் எத்தனை நாட்களுக்கு இந்த மாதிரி மனநிலமையில் இவள் இருப்பாளோ? எப்படி இவளை குணப்படுத்துவது?

அந்த குளிர்காலம் முழுமையும் உஷாவின் மனநிலமை ’புரோசாக்'கின் தயவால் கட்டுக்குள் இருந்தது. ஒரு அடக்கமான பெண்ணைப் போல் யாருடனும் அதிகம் பேசாமல் தான் உண்டு தன் வீட்டுப்பணி உண்டு என்று இருந்தாள். குளிர்காலம் முடிந்து இளவேனில் தொடக்கத்தில் ஒருநாள் ஜெயராமன் அலுவலகத்தில் அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்தான். அதில் நலவாழ்வு பற்றிய பகுதியில் கண்ட ஒரு கட்டுரை அவனை ஆர்வமுடன் வாசிக்க செய்தது.

அந்த கட்டுரையின் சுருக்கம் இதுதான். "சூரிய ஒளிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் சூரிய ஒளிக்கும் மனநிலைக்கும் தொடர்பு உள்ளது என ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பல மக்களின் மன நிலை பாதிக்கப்பட்டு ஒரு மனநிலை சுணக்கம் (depression) உண்டாகிறது. கோடையில் அது நீங்கி புத்துணர்வு பெறுகிறார்கள்"

அடுத்த குளிர் காலத்தில் உஷாவின் மனநிலை எப்படி இருக்குமோ என ஜெயராமன் தயங்கிக் கொண்டுதான் இருந்தான். அதே நேரத்தில் வீட்டுக்குள் சன்னல்கள் வழியே சூரிய வெளிச்சம் நன்கு பாயும் வண்ணம் பார்த்துக் கொண்டான். உஷாவும் தன் சூரிய வழிபாட்டை தொடர்ந்தாள்.

அவன் அஞ்சியதற்கு மாறாகவே உஷாவுக்கு மனநிலை சுணக்கம் என்பது ஒரு முடிந்து போன பழம்கதை ஆகிவிட்டது. அவளும் வழக்கம் போல கலகலப்பான ஒரு இல்லத்தரசியாக மிளிர்ந்தாள்..

http://www.usatoday.com/weather/resources/safety/2005-02-21-health-mental-health_x.htm


வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

3/21/2009

வட்டத்திற்குள் பெண்!

நன்றி: ஷைலஜா அக்கா

ன்பு வட்டத்துள் பிரதானம் நீயாவாய் பெண்ணே!

லவட்டத்தில் அழகுற நிறைந்திருப்பாய் பெண்ணே!

ன்னிறவையால் வட்டம்மேல் ஏறிடுவாய் பெண்ணே!

டன்பாடு ஊக்க வட்டத்திலுள்ள உன்னாலே பெண்ணே!

மைக்கு வட்டமிட்டு சிவனுலாவ முடியாது பெண்ணே!

ர்கோழ்வட்டம் மதியை ஒழிக்கமுடியாது பெண்ணே!

ரிவட்டத்தில் மங்கையர்க்கு இடமில்லை பெண்ணே!

றுவட்டம் உம்மிடம் கொள்ளின் ஏற்றமில்லை பெண்ணே!

க்கிய வாழ்வுக்கு அன்புவட்டத்தில திகழ்வாய் பெண்ணே!

ளிவட்டத்தில் தாயெனுஞ் சுடராய் மிளிர்வாய் பெண்ணே!

லாட்டம் பாடுற உமக்கு வட்டம் இல்லை பெண்ணே!

ரிதத்துக்கு வட்டமிட்டு வாழ்க்கையில்லை பெண்ணே!

’தத்துக்கு வட்டம் போட்டு தமிழ் வாழாது பெண்ணே!

=============================================

ஆலவட்டம்: மயிற்தோகையால் சூழ்ந்த
இறைவை: ஏணி
ஈடன்பாடு: பெருமை
ஊர்கோழ்: நிலாவைச் சுற்றியுள்ள
எரிவட்டம்: ஏழு நரகத்தில் ஒன்று
ஏறுவட்டம்: கோளவியலில் வேறுபாடு என்பதைக் குறிப்பது
ஓலாட்டம்: தாலாட்டு
ஔரிதம்: தரும நூல்

அண்ணன் மகேசு, இந்த வலைத் தொடர் பதிவுக்கு அழைப்பு கொடுத்து இருந்தாரு. அண்ணன் சொன்னா, நாம செய்யணும் இல்ல? அதான்! வட்டத்தில் பெண்ங்ற தலைப்புல அவரோகணம் எதுக்குன்னு, ஆரோகணம் பாணியில, அதாங்க பெண்மைய உயர்த்தி எழுதி இருக்கேன். பெண்களே நாட்டின் கண்கள்! உயர்த்திப் பேசுவோம், நாமும் உயர்வோம்!!

நம் பக்கத்தில் இருந்து, சகோதரர் அப்பாவி முரு அவர்களைக் கோர்த்து விடுகிறேன்!


பெண்ணுக்கு மதிப்பளித்துப் பார்!
மூளைக்கு பணியளித்துப் பார்!!