7/28/2008

வீடு வழிக்லீங்களா?

மக்கிரி, மொறம், கூடைனு எல்லாத்தையும் சாணீல மொழுகி விடுவாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் வெயில்ல வெச்சி எடுப்பாங்க. அப்ப அதுல இருக்குற சின்ன சின்ன ஓட்டை எல்லாம் அடைபட்டுப் போகும். அரிசி ராகி கம்புனு எந்த தானியமும், கூடை மொறத்துல இருந்து சிந்தாது. எங்க பாட்டி வீட்டை நெனச்சி பாக்குறன். ம்ம்... இன்னும் அப்படியே என் கண்ணுல நிழல் ஆடுது.

எங்கம்மா கூட பொறந்தது மொத்தம் எட்டு பேரு. பெரிய வீடு. இந்த தெருவுக்கும் அந்த தெருவுக்கும் இருக்கும். வீட்டுக்குள்ளயே சின்ன கெணறு. பத்து அடிலயே தண்ணி இருக்கும். சமயக்கட்டுல இருந்து ரெண்டு எட்டு வெச்சா கெணறு. பெரிய கொட்டம் பூரா சிமிட்டித்தரை. அப்புறம், வீடு முச்சூடும் சாணித்தரைதான். தண்ணி கொட்டிப் போனாலும் கவலை இல்லை. உடனே அந்த தண்ணி தரையில இறங்கி, காஞ்சி போயிரும். பத்து நாளைக்கு ஒருவாட்டி, வீடு பூரா சாணி போட்டு வழிப்பாங்க. அடுப்படி மட்டும் தினமும். எங்க சின்ன சித்திதான் வீடு வழிச்சு கோலம் போட்டு உடும். மொதல்ல வீட்டை நல்லா விளக்குமாரு வச்சுப் பெருக்கணும். அப்புறம் சாணிக்கரைச்சல்ல ஒரு துணியை முக்கி மெழுகிகிட்டே பின்னால வரணும். உக்காந்தவாக்குல கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நகர்ந்து வரணும். மெழுகி முடிச்ச உடனெ இன்னும் ஒருக்கா வீட்டைப் பெருக்கணும். இப்ப கூடுதலா இருக்கற சாணித்தூள் மெத்துமெத்துன்னு சீமாருலே சுலபமாப் பெருக்க வரும். ஆனா தரையிலே இன்னும் ஈரம் கொஞ்சம் இருக்கும். அந்த சமயம் கோலமாவு எடுத்து நல்லதா அழகாக் கோலம் போட்டுருவாங்க எங்க சித்தி. அந்த ஈரத்துலெ அது ஒட்டிப் பிடிச்சு அழியாம மூணு நாள் அப்படியே இருக்கும். நாங்க ஒரு பத்து பதினஞ்சு வாண்டுக, குறுக்க போவோம்.... அங்க போவோம்... இங்க போவோம்.... சினிமா கொட்டாய்காரன், புது படத்துக்கு கூட்‌டு வண்டில நோட்டீசு குடுக்க வந்தா வாங்குறதுக்கு ஓடுவோம். ஒரே குதூகலமா இருக்கும்.

ம்ம்... இப்ப அந்த வீடும் இல்ல, சாணியும் இல்ல, மாடு கன்னுகளும் இல்ல, எங்க பாட்டியும் இல்ல, அந்த கூட்‌டு குடும்பமும் இல்ல, எங்கம்மா ஒரு பக்கம்... எங்க சித்தி ஒரு பக்கம்.... நாங்க அண்ணன் தம்பிக ஒரு பக்கம்.... என்னத்த சொல்ல?! அட, "ஆத்தோட விழுந்த எலை ஆத்தோட போகும். நீ பட்ட இன்ப துன்பம் உன்னோட வரும்"னு சொல்லுறது இதானோ?? கண்ணக் கட்டுதுடா சாமீ.... நீங்க போயி உங்க வேலைகள பாருங்க! எதோ உங்ககிட்ட சொல்லி, மனச ஆத்திக்கலாம்னு நெனச்சேன். நீங்க போயி, உங்க வேலைகள பாருங்க!!

7/27/2008

விவசாயம்: சிந்தனைக்கு!

செய்தி:1

பிரிட்டீசார் இந்தியாவை ஆண்டபோது 1880-85ல் இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் இறந்தனர். இந்தியாவில் பஞ்சம் எனவே இறந்தனர் எனும் பொய்யைப் பரப்பினர். இப்பஞ்சம் விளைச்சல் இல்லாததால் அல்ல. விளைந்ததை வேறு இடத்திற்கு அனுப்பியதால்தான். இந்தியாவில் புதுமை விவசாயம் செய்ய உழவியல் நிபுணரை இலண்டனிலிருந்து வரவழைத்தனர். அவர் ஆறுமாத காலம் இந்தியாவைச் சுற்றி வந்தபின் இங்கிலாந்திற்கு எழுதிய கடிதச் செய்தி: 'இந்திய விவசாயிகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க எதுவுமே இல்லை. இந்திய விவசாயிகளுக்கு எல்லாமே தெரியும். அவர்களிடமிருந்து நான்தான் கற்றுக்கொண்டேன்'.

செய்தி:2

ஒன்று வரலாற்றில் ரசாயன உரங்களை இடுவது எப்படிப் புழக்கத்தில் வந்தது? இரண்டாவது ரசாயனங்களை இடவேண்டுமா? உலகப்போர் முடிவடைந்த தருவாயில் வெடி மருந்து தயாரித்த வியாபாரிகள் கவலைப்பட்டார்கள். போர் முடிவடைந்து விட்டதே இனி நம் வியாபாரத்திற்கு வழி என்ன என்று இப்பொழுது விஞ்ஞானிகள் புதிய வழிகாட்டினார்கள். செடிகளுக்கு அமோனியா தேவை. உப்புத் தொழிற்சாலையை உர உற்பத்திக்காக மாற்றி விடலாம் என்றார்கள். 1925-ல் அமோனியம் சல்பேட் அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தது. அப்போதே அங்கு எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்காலத்தில் இது தீங்காக அமையும் என்றார்கள். இந்தப் போக்கிற்கு எதிரான ஆராய்ச்சிகளும் ஐரோப்பாவில் நடந்தது. ஆனால் இட்லர் தலை தூக்கிய காலத்தில் இந்த ஆராய்ச்சிகளை அழித்து விட்டனர். 2-ம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் வெடி உப்புத் தொழிற்சாலைகள் உர உற்பத்தில் ஈடுபட்டன. ஐரோப்பாவில் அடக்க முடியவில்லை. உலகம் முழுதும் பரவலாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
--வேளாண்துறை நிபுணர் கோ.நம்மாழ்வார்

7/26/2008

ஒளவையின் பதிலடி

ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர், ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாக, அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார், "ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி, அது யாது?" என்று. இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.

தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது.


எமன் ஏவும் பரி என்பது 'எருமை'.

பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'.

மூதேவியின் வாகனம் கழுதை.

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'.

குலராமன் தூதுவன் 'குரங்கு'.

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.

ககரத்தில் கவி காளமேகம்

"காக்கைக்காகாகூகை கூகைக்காகாகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!"


இதனைப் பிரித்துப் படிக்கவேண்டும்.

காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகை(ஒரு வகை ஆந்தை) இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.

கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை வெல்வதற்கு முடியாது. ஆகாத காரியம்.

கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்;
கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு

கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.

கைக்கைக்கு = பகையை எதிர்த்து

காக்கைக்கு = காப்பாற்றுதல்

கைக்கைக்காகா = கைக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.

பாடலின் பொருள்: தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து, வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும்.

நன்றி:- அகத்தியர் தொடுப்பு


கவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்று

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி"

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் சற்றுத் திகைக்க வேண்டி வரும். இதோ அதன் பொருள்:

தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது!
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!


கவிஞர் கண்ணதாசன் 'வானம்பாடி' திரைப்படத்துல, இதே பாடலை:


நடுவர்- உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?

ஆண்- கேக்க சொல்லுங்க....

பெண்-
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..


ஆண்- கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?

நடுவர்- அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே

ஆண்- நான் திணர்றேனாவது..

நடுவர்- பின்ன என்ன? வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க

ஆண்- முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்

நடுவர்- சரி சொல்லுங்க..

பெண்-
அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு.


7/24/2008

விகடம்

அது ஒன்னும் இல்லீங்க.... நம்மூரு இளவட்ட பையன், சட்டம் படிக்கணும்னு ஒரு சட்ட வாத்திகிட்டப் போய் படிக்க சேந்தான். அவன்கிட்ட குருவுக்கு செலுத்த தட்சிணை இல்லை. அதனால ஒரு ஒப்பந்தம் செஞ்சிகிட்டான் தன்னோட குருவோட. அதாவது 'தான் எப்ப வழக்காடி வெல்றானோ அப்ப, நூறு பொற்காசுகள, தான் குருவுக்கு தட்சிணையா செலுத்துவேன்' அப்படின்னு. ஆனா பாருங்க, ஆண்டுகள் பல வந்துச்சு போச்சு, இவன் குருவுக்கு தட்சிணை தர்ற மாதிரி தெரியல.குரு பொறுத்து பொறுத்து பாத்தாரு, கடைசியா இது குறிச்சு ஊரு நீதிசபைல வழக்கு தாக்கல் செஞ்சாரு. வழக்கும் விசாரணைக்கு வந்துச்சு.

கடைசில, 'மாணவன் குருவுக்கு நூறு பொற்காசுகள் தர வேணும்'னு சொன்னாங்க. மாணவன் யோசிச்சு பாத்துட்டு நீதிசபைல சொன்னான், 'நல்ல தீர்ப்பு சொன்னீங்க. அப்ப, அந்த நூறு பொற்காசுகல நான் தர தேவை இல்ல'னு. குழம்பிப்போன நீதி அரசர், 'மாணவனே, என்ன சொல்லுற?, அதான் நீ தர வேணும்னு தீர்ப்பு சொல்லி ஆச்சே'னு கேட்டாரு. அவன் சொன்னான், 'அதான் நான் இந்த வழக்குலயும் தோல்வி கண்டுட்டேன், ஆக பேசின ஒப்பந்தப்படி, எந்த வழக்குலயும் வெல்லாத நான் தர தேவை இல்ல'னு. குருவோ, 'தீர்ப்பின் படி எனக்கு நூறு பொற்காசுக வேணும்'னு கேட்டாரு.

குழம்பின நீதி அரசர், தீர்ப்ப மாத்தி, 'மாணவன் காசு தர தேவை இல்ல'னு சொன்னாரு. மாணவனுக்கு மகிழ்ச்சி! ஆனா பாருங்க, குரு மாணவன பாராட்டிட்டு கேட்டாரு, 'இப்ப நீ வழக்குல வெற்றி அடஞ்சுட்ட, ஆக பேசின ஒப்பந்தப்படி நீ காசுகளை தர வேணும்'னு. நீதி அரசர்கிட்டயும் இத சொல்லி முறையிட்டாரு. நீதி அரசர் என்ன தீர்ப்பு சொல்லி இருப்பாரு?


எனக்கு இதை யோசிச்சு யோசிச்சு மண்டை வெடிச்சிரும் போல இருக்கு. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன். தயவு செஞ்சி யோசிங்க... சொல்லுங்க....

7/19/2008

நவநிதிகள்

நவநிதி என்றால் ஒன்பது விதமான செல்வங்கள் தான். செல்வத்திற்கு அதிபதியான குபேரனிடம் ஒன்பது விதமான செல்வங்கள் (நவநிதிகள்) இருப்பதாகச் சொல்வார்கள். அவை:
  1. சங்கநிதி (சங்கின் வடிவில் இருப்பது),
  2. பதுமநிதி (தாமரை வடிவில் இருப்பது),
  3. மகரநிதி (சுறாமீன் வடிவில் இருப்பது),
  4. கச்சபநிதி (ஆமை வடிவில் இருப்பது),
  5. முகுட நிதி (தலையணி - மகுட வடிவில் இருப்பது),
  6. நந்த நிதி (இன்பமளிப்பது),
  7. நீல நிதி (நீல நிறத்தில் இருப்பது),
  8. கர்வ (karva - not Gharva) நிதி (குறளன் வடிவில் இருப்பது) மற்றும்
  9. மஹாபதும நிதி (பெருந்தாமரை வடிவில் இருப்பது).