6/20/2013

புல்லும் கல்லும்!!

தற்போது தங்கி இருக்குமிடமும் சரி; அலுவலகமும் சரி, சரியான மலையும் மலைப்படுகையும் சார்ந்த இடம். இரவு உண்டி ஆனதன் பிறகு என்ன செய்வாய் எனக் கேட்டான் அன்றாடம் நாளிதழ் போடுவார்கள். வாசித்துக் கொண்டிருப்பேன் அல்லது இணையத்தில் உசாவிக் கொண்டிருப்பேன் எனக் கூறினேன். என் விடுதியில் இருந்து சரியாக உன் விடுதிக்கு ஏழு மணிக்கு வந்து விடுகிறேன். இருவருமாக அந்த அடிவாரம் வரை நடந்து விட்டு வருவோம் எனச் சொன்னான். இங்கு பாம்புகள் நடமாட்டம் வெகுவாக இருக்குமென்று சொல்கிறார்களே என வினவியதற்கு, நாம் சாலையோர நடைபாதையிலேயே போய்விட்டு வந்து விடுவோம் எனச் சொன்னான். 

அதன்படியே நானும் ஏழுமணிக்கெல்லாம் விடுதி முன்பு போய் நிற்க அவனும் வந்து சேரச் சரியாக இருந்தது. அவன், அவனுடைய அலைபேசியினூடகப் படங்கள் எடுத்து வந்தான். நான் எனது அலைபேசியினூடாகப் படங்கள் எடுத்து வந்தேன். இடையில், ஊருக்கு அழைத்து மனைவி மக்களோடும் ஒரு முறை சுருக்கமாகப் பேசினேன். பேசிவிட்டுப் பார்க்கும் போதுதான் அது நடந்தது. 

திருப்பதி லட்டு அளவிலான கல்லொன்று உருண்டோடி வந்து மற்றொரு கல்லின் மீது மோதியதில், உருண்டு வந்த கல் அங்கேயே நின்றுவிட்டது. மோதப்பட்ட கல் உருளத் துவங்கியிருந்தது. நான் அவனைப் பார்க்க, ஏற்கனவே அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். சிக்கினான் சிங்காரம் என்கிற தொனியில் விரிக்கத் துவங்கினான். ஓடி வந்த கல்லின் எடையும், உருண்டு போன கல்லின் எடையும் தெரிந்தால் உருண்டு வந்த வேகத்தையும் உருண்டு போன வேகத்தையும் கணக்கிட்டுச் சொல்ல முடியும். அல்லது, உருண்டு வந்த தூரமும் வேகமும் தெரிந்தால் இரண்டு கற்களின் எடையையும் கணக்கிட முடியும் என விரித்துரை ஆற்றிப் பெருமைப்பாடு அடைந்து கொண்டிருந்தான். அதற்குள் சில பல அடிகள் முன்னேறியும் வந்து விட்டோம். திடீரென என்ன நினைத்தேனோ தெரியவில்லை; வா, போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்கும் காத்திராமால் நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ஓடுவதற்கும் சற்று இளம்புள்ளியான வீச்சுநடையுடன் வந்து என்னைப் பிடித்து விட்டான். இருவருமாக அந்தப் பக்கம் பார்வையை வீசி எறிந்தோம். மோதிவிட்டு நின்ற அந்தக் கல்லையும் இப்போது காணவில்லை. அதுவும் கீழே உருண்டு போய்விட்டது என நினைக்க வேண்டியிருக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன், முகத்தில் எப்படி ஈஈஈ ஆடும்? ’ஒ’தான் ஒடுங்கி இருந்தது. அதற்கு மேலும் நான் அவனைக் கட்டாயப்படுத்தி அதை அலசி ஆய்ந்தெடுக்க விரும்பவில்லை. நடையை முன்னயபடியே தொடர்ந்தோம். 

கடைசி வரைக்கும் அந்த பழைய கெழுத்தி மீளப் பெறவே இல்லை. நான்தான் எஞ்சிய நடைநேரத்தையும் சொற்கள் பலவற்றால் நிரப்பி வேண்டி இருந்தது. நன்றாகவே விடை பெற்றுக் கொண்டோம். அடுத்து வருகிற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த வரைவு(RFP)க்கான வேலைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதை வைத்தே ஒப்பந்த ஒப்புதலுக்கான கைச்சாத்தும் அவனிடமிருந்து பெற்றுவிடலாம் எனும் நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கல்லைக் கண்டுபிடித்து ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. வல்லவனுக்குப் புல் மட்டுமல்ல, கல்லும் ஆயுதம்தான்!! 

No comments: