என்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை.
தாம் தவறிழைத்து விட்டதாக எண்ணி அவள் அழுவது கூட இதுதான் முதல்முறை. யோசித்துப் பார்க்கக் கூட அவகாசம் வாய்த்திருக்கவில்லை. நமக்கு வேண்டிய நேரத்திலெல்லாம் காலத்தை நிறுத்தி வைக்கவா முடிகிறது? மொட்டைமலைக் குன்றின் மேல் பெய்யும் மழையைப் போல, சடாரென அதன் போக்கில் அது போய்க் கொண்டே இருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கிறோம். மற்றதெல்லாம் விடுபட்டுப் போய்விடுகின்றன. அப்படி விடுபட்டுப் போனதில் ஒன்றுதான் இதுவும்.
எதுவொன்றுக்கும் ஆட்படாத வரையிலும் அதுகுறித்தான கவலையில்லை. மகன் குறித்தான கவலையில் இருக்கிறாள் லிண்ட்சி டொமினிக்! அது அவளை என்னவெல்லாமோ நினைக்க வைக்கிறது. அழுகை அழுகையாக வருகிறது. அவன் பேசினாலாவது என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தெளிவற்றுப் பேசுகிறானவன். அவன் வேறு யாருமல்ல, தன் மூத்தமகன் நேகன் கோல்டுசுமித்துதான். எதுவானாலும் அலைபேசியில்தான் பேச முடிகிறது அவனிடம். நேரில் சென்று பார்க்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.
தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் ஏன் வேறு வேறாக இருக்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுமாயின், அது நியாயமானதும் சரியானதுமேயாகும். முதன்மைப் பெயரை விட மரபுப் பெயருக்குத்தான் அமெரிக்காவில் முக்கியத்துவம். மரபுப் பெயர் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகும். ஆனால் தகப்பன் பெயரையே மரபுப் பெயராகக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை ஃபேமிலி நேம், லாஸ்ட் நேம், சர் நேம், அப்பர் நேம் எனப் பலவாறாகச் சுட்டுவார்கள்.
அமெரிக்காவுக்கு வந்த தமிழ் நாட்டுக்காரன் ஒருவன் சமூகநல அடையாள எண் வாங்கப் போனான். அங்கே கொடுத்த விண்ணப்பத்திலிருந்த ஃபேமிலி நேம் எனுமிடத்தில், ’நாட் அப்ளிகபிள்’ என எழுதி விட்டு வந்தான். பின்னர், மிஸ்டர் நாட் அப்ளிகபிள் என மற்றவர்கள் அவனை அழைக்கத் தலைப்பட்ட போது நாணிக் குறுகினான். கட்டிய மனைவி கூடக் காலமெல்லாம் சொல்லிச்சொல்லி கேலி செய்வதாய் அழுது புலம்பினான்.
தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் வேறுவேறாய் இருப்பதை அமெரிக்காவில் எங்கும் பார்க்கலாம். நேகன் கோல்டுசுமித்து ஆப்பிரிக்க அமெரிக்கன். அதாவது அவனது தோலின் நிறம் கருப்பு. பண்புகருதி தோலின் நிறத்தைக் கொண்டு குறிப்பிடுவதில்லை. ஆங்கிலாய்டு அல்லது காகேசாய்டு, மங்கோலாய்டு, நீக்ராய்டு என மாந்தரை மூன்று பிரிவுக்குள் அடக்கினாலும், இடத்தின் பெயரால் சுட்டுவதே வழக்கு. மாந்தர் குலத்தின் வயது கூடக் கூட, நாகரிகமும் பண்பும் முதிரத்தானே வேண்டும்? இனியும் ஊனமுற்றோர் எனச் சொல்லலாகுமா?! மாற்றுத் திறனாளிகள் எனப் பண்பு பேணுகிறோம் அல்லவா?? அதைப் போலத்தான், நேகன் கோல்டுசுமித் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன். அவன் அம்மா லிண்ட்சி டொமினிக் வெள்ளை நிறத் தோலுடைய காக்கேசியன்.
செயிண்ட் லூயி நகரின் மருத்துவமனை ஒன்றில் தாதியாக வேலை பார்த்து வந்தாள் லிண்ட்சி. அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கனான மார்க் கோல்டுசுமித்துக்கும் லிண்ட்சிக்கும் இடையே பூத்தது காதல். காதல் கண்களுக்கு நிறம் ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை. அதன் பயனாக, லிண்ட்சி ரோமா என்பவள் லிண்ட்சி கோல்டுசுமித் ஆனாள். லிண்ட்சி கோல்டுசுமித்தாக மாறின ஓரிரு ஆண்டுகளில் அவர்களுக்கு நேகன் கோல்டுசுமித்தும் பிறந்தான். சுருள் முடியும் கறுப்பழகும், அவளைத் தாய்மைக் கடலில் ஆழ்த்திப் பேரின்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தின் பிற்பகல் யாமப் பொழுதொன்றின் போழ்து அறிமுகமானான் காக்கேசிய ஆடவன் குவிண்ட் டொமினிக். அடுத்து வந்த குளிர்காலத்தின் போது, குவிண்ட் டொமினிக் வீட்டிற்குத் தன் கைக்குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள் லிண்ட்சி. வீடு தேடி வந்தவர்களை வரவேற்று குவிண்ட்டும் ஆதரவளிக்க, லிண்ட்சி டொமனிக்கன் ஆக பெயர் மாற்றம் கொண்டாள் அவள்.
செயிண்ட் லூயி நகரில் இனியும் இருக்க வேண்டாமென நினைத்து, டொமினிக் தம்பதியர் தங்களது குழந்தை நேகன் கோல்டுசுமித்தோடு காலியர்வில்லில் வந்து குடியேறினார்கள்.
நேகன் கோல்டுசுமித் என்பவன் தன்னுடைய மகனாயிற்றே? தன் மரபுப் பெயரைத் தாங்கி வளர்கிற குழந்தையை மறந்துவிட முடியுமா?? பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாரத்துக்கு ஒரு முறையாவது பார்த்து விட ஏங்கினான் அப்பன் மார்க் கோல்டுசுமித். டென்னசியில் இருக்கும் காலியர்வில் நகருக்கும், மிசெளரியில் இருக்கும் செயிண்ட்லூயி நகருக்கும் முந்நூறு மைல்கள். நெசவுதறியில் சிக்குண்ட ஊசுகோல் போல, தன் மகனைப் பார்ப்பதற்காக இங்குமங்குமாக வந்து போய்க்கொண்டிருந்தான் மார்க் .
அடுத்த பிள்ளைப் பேறு நெருங்கி வர, தன் மகனுக்கான தாயின் கவனம் அருகி வந்தது. அதைக் கவனித்த அப்பன்காரனும் காலியர்வில் நகருக்கே குடி வந்து விட்டான். பின்னாளில் தன் மகனின் அம்மாவுக்குப் பிள்ளை பிறந்ததை அறிய நேர்ந்ததும், மகனைத் தன்னுடனேயே கூட்டி வந்து வைத்துக் கொண்டான் மார்க்.
மார்க் தச்சு வேலை பார்த்தான். அருகிலிருக்கும் பண்ணைகளுக்கெல்லாம் கட்டுத்தறிகள் செய்வது, வீட்டுக்கூரைகள் செய்வது முதலானவற்றைச் செய்து வந்தான். தன் அப்பாவிடமே கைத்தொழில் கற்று வந்த நேகனும், தேர்ந்த தச்சன் ஆகிவிட்டிருந்தான். வரச் சொன்ன நாட்களில் மட்டும் போய் தன் அம்மாவைப் பார்த்து விட்டு வருவான். அங்கிருக்கும் தம்பியோடு விளையாடி மகிழ்வான். வீட்டு வேலைகள் இருந்தால் செய்து கொடுத்துவிட்டு வருவான். ஆனால் வெள்ளைக்காரத் தம்பி ஸ்டீபன் டொமினிக்குக்குத் தன் கருப்பு அண்ணனைக் கண்டாலே ஆகாது. நாளடைவில் அவன் வருவதையே நிறுத்தச் செய்துவிட்டான் ஸ்டீபன். இதற்கு நடுவில் வேறு யாருடனோ ஓடிப் போய்விட்டான் லிண்ட்சியின் நடப்புக் கணவனும் ஸ்டீபனின் அப்பனுமான குவிண்ட். சில வருடங்களில், மார்க்கும் உடல் நலம் குன்றி இறந்து போனான்.
செத்தவன் ஒன்றும் சும்மா விட்டு விட்டுப் போகவில்லை. தன் மகனுக்கு காலியர்வில் ஒதுக்குப் புறத்தில் அழகானதொரு வீட்டைத் தச்சுப் பட்டறையுடன் கட்டிக் கொடுத்து விட்டுத்தான் போயிருக்கிறான். சின்ன வீடுதான். ஆனால் அடிப்படை வசதிகளோடும் மரங்கள் புடைத்த நல்லதொரு இயற்கைச் சூழலோடும் அமைந்திருந்தது அந்த வீடு.
ஆர்லிங்டன் பண்ணையொன்றில் கூரை மேய்வதற்குப் போன இடத்தில், நேகனுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையான செர்ரி மூட்டிக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து செர்ரி மூட்டியைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான் நேகன். மகிழ்ச்சியாக இருந்தார்கள். இடையில் தன் தோழி ஒருத்திக்கு திருமணம் என்று சொல்லி, இல்லினாய் மாகாணத்தில் உள்ள கெய்ரோ நகருக்குப் போனாள் செர்ரி மூட்டி.
பத்து நாட்கள் கெய்ரோவில் இருந்துவிட்டுத் திரும்பியவள் வேறு ஆளாக வந்திருந்தாள். படுக்கையில் இருந்த நேகன் வாந்தி எடுக்கப் போனான். இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். முடிவில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் தன்னைக் கஞ்சாவுடன் மெஸ்கல் அல்லது டகீலா குடிக்க அனுமதிக்க வேண்டும் என உறுதி வாங்கிக் கொண்டாள். குடியில் தகப்பனைப் பறிகொடுத்த நேகன், இவளுக்கும் போதைப் பழக்கம் அண்டியிருப்பது கண்டு கலங்கி நின்றான்.
வாரக் கடைசி வந்து விட்டால் போதும், மெம்ஃபிசு நகருக்குக் கிளம்பி விடுவாள் செர்ரி மூட்டி. ஓரிரு மாதங்கள் அப்படியாகக் கழிந்தன. மீண்டும் காலியர்வில் வீட்டிலேயே தன் ஆட்டத்தைத் துவங்கினாள் செர்ரி. இரவு நேரங்களில் கஞ்சா புகைத்து விட்டு சல்லாபத்துக்கு அழைப்பாள். கிட்ட நெருங்கினாலோ குடல் குமைந்து வாந்தி வரும் அவனுக்கு. வராவிட்டால் தான் கத்தியால் குத்திக் கொள்ளப் போவதாகச் சொல்லி மிரட்டினாள். வீதியில் போவோரை அழைக்கத் தலைப்பட்டாள். துயர் தாளாது, அவளைக் கொண்டு போய் மெம்ஃபிசு நகரிலுள்ள அவளது நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டான். இது நடந்து பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. போனவள் போனதுதான்.
சோவென்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. மரங்கள் எல்லாம் அவ்வப்போது சிலிர்த்தன. ஒவ்வொரு சிலிர்ப்பின் போதும் பன்னீர்த் துளிகள் தன்மீது பட்டுத் தெறிப்பதை உள்வாங்கி மகிழ்ந்தான். வானத்தைப் பார்த்தான். முகில்கள் கலைவதும் புணர்வதும் விதவிதமாய் நகர்வதுமாக இருந்தன. தனக்குப் பிடித்தமான முகில் ஒன்றின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டான். அதன் மேல் உலாப் போவதன் இன்பம் மனத்துள் ஊற்றெடுத்தது. கிழக்குப் புறத்திலிருந்த ஆலிவ் மரம் அவனைப் பார்த்துச் சிரித்தது. “யூ, ஆலி பப்ளீ” என்று கத்திக் கொண்டே போய் கீழார்ந்த கிளையப் பிடித்துக் தொங்கினான். தொங்கியதில் அது சிலிர்க்க, நீர்த்துளிகள் அவனைப் பதம் பார்த்தது. “அஃகஃகா, யூ டுக் ரிவெஞ்ச் ஆன் மி, இஸ் இட்?” என்று வினவிக்கொண்டே வீட்டின் முன்புறமிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே ஆலிவ் மரத்தைப் பார்த்தான். ஆலிவ் மரமும் அவனும் கண்களால் பேசிக் கொண்டு அன்புற்றுப் கலப்பதை முகில்கள் பார்த்துக் கொண்டே கடந்தன.
மீண்டும் இருட்டி வருவதைப் போல உணர்ந்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு போனான். பட்டறையில், உளி கதிர்கள் முதலான சாமான்கள் போட்டது போட்டபடி இருந்தன. வீடு கூட சாத்தப்படாமலேதான் இருக்கிறது. உண்மையாய் நேசிக்கும் ஆலிவ் மரமும், செர்ரி மரங்களும், மேப்பிள் மரங்களும் காவலுக்கு இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதற்கான அவசியம் அவனுக்கு இருந்திருக்கவில்லை.
வாங்கி வந்த ரொட்டி ரெண்டு ராத்தலையும், பால் ஒரு கேலனையும் வண்டியின் பின்புறத்தில் வைத்து விட்டுக் கதவைச் சாத்தினான். யாரோ காருக்குள் முனகுவது போல இருந்தது. மீண்டும் பின்பக்கக் கதவைத் திறந்தான். மழை துளிக்கத் துவங்கியிருந்தது. யாரோ இருட்டைக் கொண்டுவந்து கார் முழுக்கத் திணித்திருந்தார்கள். காருக்குள் நெருக்கடி தாளாமல், இருட்டுதான் அழுது கொண்டிருக்கிறதா? அவற்றின் கண்கள் எங்கேயென்று துழாவினான். ஆனால், திடீரென மின்னிய மின்னல் ஒன்றில் செத்துச் சாம்பலாகிப் போனது இருட்டு. கதவை மூடிவிட்டு வந்து காரின் முன்பக்கக் கதவைத் திறக்க முற்பட்ட போதுதான் கவனித்தான்.
ஹிக்கரி மரத்திற்குக் கீழே என்னவோ அசைவது போலவும், அசையும் அந்த எதுவோ அதுவிலிருந்துதான் சத்தம் வருகிறது என்பதையும் உணர்ந்தான். மேப்பிள் இலையின் மஞ்சள் பழுப்புக்கும் செம்பழுப்புக்கும் இடையிலான ஒரு நிறத்தில் மெலிதான துணியொன்று போர்த்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது. அருகே செல்லச் செல்ல அதற்கு இரண்டு கால்கள் முளைக்கத் துவங்கின. அட, ஆச்சரியமில்லை. இரண்டு கைகளும் இருக்கின்றன. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கி மார்புக்கு மேல வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலையும் இருக்கிறது. ஒருக்களித்து இருப்பதால் சரியாகத் தெரியவில்லை. கூடவே முனகலும்.
”ஏய், என்னாச்சு உனக்கு?”
“பசிக்குது”
“சரி வா அப்ப”
என்ன ஆச்சர்யம்? அது ஒரு பெண். அதுவும் புள்ளத்தாச்சி. அடிவயிறு பெருத்து இருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ”ஓ விழப் போகிறது, விழப் போகிறது!!”, யாரோ எட்ட இருந்து அலறினார்கள். ஒரே பாய்ச்சல், அலேக்காய்த் தூக்கினான் நேகன். கொண்டு போய்க் காரில் போட்டான்.
“அம்மா, நான் இப்ப அங்க வரலாமா?”
”ஏய், நேகன்! என்ன ஆச்சர்யம்? அம்மா நினைப்புகூட உனக்கு இருக்காடா??”
“அம்மா, அதெல்லாம் வேண்டாம். நான் இப்ப அங்க வரலாமா??”
“ஓ, உன்னோட தம்பி கூட வெளியில போயிருக்கான். சீக்கிரமா வா, அவன் வர்றதுக்கு முன்னாடியேவும்!”
ரொட்டியில் கொஞ்சத்தைப் பிய்த்துக் கொடுத்துவிட்டுக் கேட்டான், “உன்னோட வீடூ எங்க சொல்லு. நான் கொண்டு போயி விட்டுடுறேன்!”
இசிக்கிய மாங்காயைப் போன்ற தலை மட்டும் ஆடியதிலிருந்து புரிந்தது அவள் ஒரு வீடில்லா ஏதிலியென்று.
ஒரே அமுக்கு. வின்ச்செஸ்டர் சாலையிலிருந்து பல சாலைகளைக் கடந்து நியூவில்லோ சாலைக்குப் போய்ச் சேர்ந்தான். வீட்டு வாசலியே லிண்ட்சி நின்று கொண்டிருந்தாள். “ஹாய், நேகன்! என்னோட செல்லம், வாடா வாடா!!”, அரவணைத்துக் கொண்டாள். வீட்டுக்குள்ளிருந்த தன் தம்பியின் மனைவி பமீலா எட்டிப் பார்த்துக் கொண்டே ‘அகோ’ சொன்னாள்.
“அம்மா, எனக்கு ஒரு ஃபேவர் வேணும். உள்ள இருக்கிற அந்தப் பொம்பளைக்கு எதாவது குடுத்து இன்னிக்கி இராத்திரி இங்கயே வெச்சுகுங்க!”
லிண்ட்சியும், பமீலாவும் காருக்கு ஓடிப் போய்ப் பார்த்து மிரண்டு போனார்கள். “யார்றா இது? போட்டுக்கத் துணி கூட இல்லையாமா?”
“அம்மா, நானே அவளை இப்பதான் அந்த வின்ச்செஸ்டர் டாலர் ஸ்டோர்கிட்டப் பார்த்தேன். குளிர்ல நடுங்கிட்டுக் கீழ கிடந்தா!”
“போடா! இந்த நிலைமையில, உன் தம்பி வந்தான்னா அவ்ளோதான். துப்பாக்கி எடுத்துட்டு வந்து உன்னையும் போட்ருவான். என்னையும் போட்ருவான். போயிடு, நீ இங்க இருந்து போயிடு!”
“என்னமா சொல்ற? நான் இந்தப் பொம்பளைய என்ன செய்வேன்? ப்ளீஸ்மா, புள்ளத்தாச்சியா வேற இருக்கா?!”
”அங்க எங்கனாவது சர்ச்ல கொண்டு போயி உட்ரு, போ!”, வீட்டுக்குள் ஓடியே போய்விட்டாள் பமீலா.
”அப்ப நீயே சொல்லு. எனக்கும் சர்ச்சுக்கும் ஏழுகாத தூரம். எனக்கென்னம்மா தெரியும்?”
“போடா, நீயே போயி என்னமோ செய். நாளக்கி போன் பண்ணு!”, அம்மாவும் உள்ளே போய் விட்டாள்.
காருக்கு வந்தான் நேகன். அது மீண்டும் காருக்குள் சரிந்து விட்டிருந்தது. பழுப்பு நிறத் துணி சரிந்து எல்லாமும் தெரிந்தது. தன் கைகள் கொண்டு அந்தத் துணியை எடுக்கப் போனவன், சரேலெனக் கைகைப் பின்வாங்கிக் கொண்டான்.
காலியர்வில்லுக்கும் ஆர்லிங்ட்டனுக்கும் இடையிலிருக்கிற தன் ஒதுக்குப் புற வீட்டுக்குப் போனான். டெரிக் ஓடி வந்து பாய்ந்தான். “ஏய் டெரிக்! நம்ம வீட்டுக்கு ஒரு மிஸ் வந்திருக்காங்க. பாரு!!”
காரின் பின்பக்கக் கதவைத் திறந்து விட்டான் நேகன். அம்மணமாய் எழுந்து வந்தாள் அவள். டெரிக் பதறிப் போய் தச்சுப் பட்டறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவசர அவசரமாய் அந்த மெல்லிய பழுப்புத் துணியை எடுத்து அவள் மேல் போட்டான். அதை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள் அவள்.
வீட்டுக்குள் சென்று படுக்கையின் மேலிருந்த போர்வையைக் கொண்டு வந்து போர்த்தினான். மெலிதாகச் சிரித்தாள் அவள். தன்னுடைய ஒரு இலையைக் கூட அசைய விடாது நின்று பார்த்துக் கொண்டிருந்தன ஆலிவ் மரமும், மேப்பிள் மரங்களும்.
“தண்ணி கொஞ்சம் கிடைக்குமா?”, சன்னமான குரலில் பேசினாள். இறுக்கம் தளர்ந்து இலைகளை அதனதன் போக்கில் அசைய விட்டன சுற்றியிருந்த மரங்கள். வாலை ஆட்டிக் கொண்டே வெளியே வந்து நின்றான் டெரிக்.
”கமான் இன்!”, தண்ணி பாட்டிலைக் கையில் பிடித்தபடி பூத்துச் சில நொடிகளேயானதொரு புது முகத்துடன் வரவேற்றான் நேகன்.
நேராக உள்ளறைக்கு அழைத்துப் போய் தன் படுக்கையைக் காண்பித்தான். அவளும் போய்ச் சாய்ந்து கொண்டு அரைக்கால்வாசிக் குரலில் சொன்னாள், “ஓக்கே ஓக்கே!”.
அடுக்களைக்கு ஓடினான். ஒரு தட்டில் ப்ளேக் பீன்சையும் கொஞ்சம் கெட்ச்அப் கலவையையும் போட்டு நுண்ணலையடுப்பில் வைத்துச் சூடேற்றினான். தலையை இங்குமங்கும் திருப்பிக் கொண்டு அமைதியாய் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.
கொடுத்ததைச் சிறு கரண்டி கொண்டு தின்னத் துவங்கியிருந்தாள் அவள். தண்ணீர் பாட்டில்கள், வாழைப்பழம், மெலிந்த துணியாலான துண்டு முதலானவற்றைப் பவ்யமாய் அவளது தலைமாட்டில் வைத்தான்.
“இங்கதான் கழிப்பறை இருக்கு. இங்க தண்ணி இருக்கு!”, சொல்லிய பின் பட்டும் படாமல் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்.
“இங்கே என்ன நடக்கு?”, என்கிற தோரணையில் டெரிக் ’வவ்’வென்றான்.
“என்னடா அப்படிப் பாக்குறே? ச்சீ, நாயே! அப்படியெல்லாம் ஒன்னுமில்ல! ஷி வாஸ் எபவுட் டு டை தெரியுமா? நாந்தான் காப்பாத்திக் கூட்டிட்டு வந்தேன். எங்கம்மா ஒரு பிட்ச். வெள்ளக்காரியாம் பெரிய வெள்ளக்காரி. ரெட் நெக் ஆளுகளே ஒரு கோழப்பசங்க. ஒரு வெள்ளக்காரி இன்னொரு வெள்ளக்காரிக்கு உதவி செய்யக்கூடாதா? எங்கப்பா சொன்னது சரிதாம் போலிருக்கு!”
வெளியே வந்தான். தச்சுப் பட்டறைக்குப் போனான். குதூகலமாய் இருந்தது. சீவலுளியை எடுத்து வேலை பார்க்கத் துவங்கினான். பாட்டுப் பாடினான். இந்த உலகம் இனிமையானதென்றான். படகு இருந்தால் அதற்கான துடுப்பும் அமையும் எனச் சொல்லிக் கொண்டான்.
மூலையில் கலைந்திருந்த கழிகளையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்தான். அடைபட்டிருந்த அரைவாசி அளவுக்கும் மேற்பட்ட இடம் ஒழுங்காகி, பட்டறையே பெரிதாகிப் போனது.
“டே, டெரிக்! அப்படியெல்லாம் போயி அடுத்தவங்க என்ன செய்யறாங்கன்னு பாக்கக் கூடாது. அவங்களுக்குப் பிரைவசி வேணும்ல? நீ எங்கூடவே இரு!”
சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் டெரிக். பேசாமல் பின்னால் வந்து நின்று கொண்டான்.
சத்தத்தைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, இருவரும் அமைதியை வாங்கிக் கால்களில் போட்டுக் கொண்டனர். சமையலறையிலேயே உட்கார்ந்து வேண்டியதெல்லாம் எடுத்துச் சாப்பிட்டான் நேகன். பால் மட்டும் குடித்து விட்டு, வேறெதுவும் வேண்டாமென்கிற வாக்கில் வந்து சோபாவில் ஒய்யாரமிட்டுக் கொண்டான் டெரிக்.
கதவுகளைச் சாத்தி விட்டு பட்டறைக்குப் போனார்கள். மீண்டும் இழுவுளியால் கழிகளைச் சீவிச்சீவி மிளிர்ப்பூட்டினான். நாளைக்குச் செய்ய வேண்டிய வேலை எல்லாவற்றையும் முன்னிரவிலேயே செய்து முடித்து விட்டான். சத்தத்தைப் பட்டறையிலேயே இறக்கி வைத்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர் இருவரும்.
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலிருக்கும் சோபாவில் நீட்டிப் படுத்து விட்டான் நேகன். அவனுக்கு மேலே ஏறி அந்த முடக்கில் முடங்கிக் கொண்டான் டெரிக்.
வெளியே ஆலிவ் மரத்துக்குப் பொறுக்க முடியவில்லை. தன்னுடையவன் தன்னிலிருந்து போய் விடுவானோயென்கிற இட்டுமுட்டு அதற்கு. மேப்பிள் மரத்து இலைகள் ஒன்றுக்கொன்று பொரணி பேசிக் கொண்டிருந்தன. செர்ரி மரத்துக் கிளைகளில் இருந்த டிப்பர் குருவிகள், “கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரப் போகிறது; அதற்குள் எதற்கு இந்த அரசல்புரசல்?” என்று ஒருமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஒன்றுக்கொன்று ஏககாலத்தில் ஆலிங்கனம் செய்து கொண்டன.
எதோ கனவில் எழுகிற சத்தம் போல இருந்தது. “டே டெரிக், பேசாம இருடா. தூங்கிட்டு இருக்கன்ல?”.
சத்தம் நன்றாகவே கேட்கிறது. திடுக்கிட்டு எழுந்தான்!
“அகோ, மிஸ்!”
“விடிஞ்சிடிச்சில்லயா? ஒட்டு உறவு, வீடு வாசல் இல்லாத ஒரு நாடோடி நான். போகத்தானே வேணும்?”
உணர்வற்றுப் போய் இருளோவென்றிருந்தது. உள்ளோங்கிய குகையொன்றினூடாக இருக்கும் கைகளுக்கெதுவும் தட்டுப்படாத வெளியில் தள்ளிவிட்டது போலிருந்தது.
முகத்தை மூடிக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்திருந்தான் அவன்.
திடுமென எழுந்து வெளியில் ஓடினான். அவன் ஏறிடவும் தெருமுனையில் ஒரு புள்ளியாய்த் தெரிந்து பின் மறையவும் சரியாய் இருந்தது.
“ஹோல்ல்லி ஷிட்!”, பெருங்குரலெடுத்து இரைந்து கொண்டே எட்டி ஒரு உதை விட்டதில் ’க்க்கைன்ய்’ என்று கத்திக் கொண்டே போய் எட்ட விழுந்தான் டெரிக். அவன் வீட்டு மரங்களோடு அண்டைப்புறத்து மரங்களும் அதிர்ந்து நடுங்க, அதனதன் அடிப்பழுப்பு இலைகளெல்லாம் உதிரத் துவங்கின.
பின்னங்கால்த் தொடைகளில் முழுப்பாரத்தையும் இறக்கி வைத்து முன்னங்கால்களால் முன்னூன்றிக் குந்திக் கொண்டு, வைத்த கண் வைத்தபடியே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.
கேவிக்கேவி அழுது கொண்டிருக்கும் தன் மணவாளனைத் தேற்றுவதற்குத் தன்னிடம் பேசும் சக்தி இல்லையேயென்று புழுங்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆலிவ் மரமும்!!
நன்றி: வல்லமை
No comments:
Post a Comment