7/02/2011

FeTNA: பேரவை விழா எழுச்சியுடன் ஓங்கியது!

அரங்கம் எங்கும், பனைநில தமிழ்ச்சங்கத்துக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளைப் பறைசாற்றும் விதமாகப் பல்வேறு பதாகைகளுடனும், வண்ண மலர்கள் சூட அழகுற எழிலோடு அமையப் பெற்றிருக்கிறது. கடையெழு வள்ளல்கள், முதல், இடை, கடைச்சங்கம் போற்றும் படங்கள் என பல்வேறு கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்ச்சிறார்கள் வாழ்த்துரைக்க, நிகழ்ச்சி மங்கல் ஒலியுடன் துவங்கியது. அதையொட்டி, முனைவர் தண்டபாணி குப்புசாமி வரவேற்புரை வழங்கினார். அதையடுத்து குத்துவிளக்கேற்றி முறையாக நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் முனைவர் பழனிசுந்தரம் அவர்கள் உணர்வுமிகு தலைமையுரை வழங்கினார். இதோ, இம்மணித்துளியில் கவிஞர் சேரன் அவர்களின், பூமியின் அழகே, பரிதியின் சுடரே பாடலுக்கு தமிழ்நாட்டியத் தாரகைகள், தமிழிசைக்கொப்ப நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பாடல் வரிகள், அரங்கத்தைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அதற்கடுத்து, வட அமெரிக்க சிலம்பம் மற்றும் குத்துவரிசைக் கழகத்தினரின் சிலம்பாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

தற்போது முனைவர் அரசு செல்லையா அவர்கள், அமெரிக்க தமிழ்க் கழகத்தினை அறிமுகப்படுத்தி பேசி வருகிறார். இக்கழகத்தின் தேவை, ஒருங்கிணைந்த பாடத்திட்டம், அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் தமிழை இடம் பெறச் செய்வது, தற்போதைய முன்னெடுப்புகள் முதலானவற்றை மிகவும் கருத்துச் செறிவோடும், நுட்பங்களின் அடிப்படையில் உரை நிகழ்த்தினார்.

அவரை அடுத்து அட்லாண்டா தமிழார்வலர் இரவி, சியார்ச்சியா மாகாணத்தில் தமிழ் அங்கீகாரம் பெற்றது எப்படி என்பதை விளக்கி வருகிறார். தமிழை பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக அங்கீகாரம் செய்த சியார்ச்சியா மாகாணத்திற்கு நமது நன்றிகள். அவர் இச்செய்தியைப் பகரும் தருவாயில் அரங்கம் அதிர்ந்தது.

அதையடுத்து, கட்டமைப்புக்கு வலுவூட்டிய நண்பர் செளந்திர பாண்டியன் மற்றும் முனைவர் சங்கரபாண்டி ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. பாடநூல்களை முக்கிய விருந்தினர்கள் வெளியீடு செய்தார்கள்.

அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகம் நிச்சயம் வலுப்பெறும். அமெரிக்க மண்ணில் தமிழ் தழைத்தோங்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தற்போது தமிழ்ப் பேராசிரியர் திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள், தம் தமிழ்ப் பேச்சால் அவையைக் கட்டிப் போட்டு உரையாற்றினார். நல்ல தமிழ் சொல்வீச்சு.

விழாவின் கருவுக்கிணங்க, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தமிழச்சி அவர்களின் மேடைநடத்தும் பாங்கு அமைந்திருந்தது. தமிழும், தமிழ் உச்சரிப்பும் தமிழுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது.

திருமதி.புனிதா ஏகாம்பரத்தின் சொல்வீச்சுக்குப் பின், நடிகர் சார்லி அவர்களின் மேடைநாடகம், கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் வினா,விடை நேரம் அமைந்திருந்தது.

இணை அரங்கில் தமிழ்த்தேனீ போட்டிகள், உலகத் தமிழர் அமைப்பின் கூட்டங்கள் என பலவும் இடம் பெற்று வருகிறது. அமெரிக்க மருமகள் ஆண்டிப்பட்டி மாமியார் எனும் தலைப்பில் இடம் பெற்ற நகைச்சுவை நாடகம் கைதட்டலை அள்ளிக் குவித்தது. இணையரங்குகளில் இடம் பெற்ற தமிழ்த் தேனீ நிகழ்ச்சியில், அமெரிக்க இளஞ்சிறார்களின் தமிழாற்றம் வியக்கத்தகு விதமாய் இருக்கக் கண்டோம்.

அத்துடன் எல்லா அரங்குகளிலும் நிகழ்ச்சிகள் உணவு வேளைக்காக இடை நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. உணவு ஏற்பாடுகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் மட்டுமே, வந்திருப்போரை ஒருமுகமாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. பெரும் கூட்டம். 1100 பேர் வரையிலும் வந்திருக்கக் கூடும் எனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது.


Watch live streaming video from fetnaorg at livestream.com
பரிதியின் சுடரே, நற்றமிழே வாழ்க! நின் கொற்றம் சிறக்கவே!!

--அரங்கத்தில் இருந்து பழமைபேசி

3 comments:

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்தொன்று சொல்லுங்கள் உறவுகளே...........

நிரூபன் said...

வாழ்த்துக்கள் சகோதர்களே, கடல் கடந்தும் தமிழால் இணைந்திருந்து தமிழிற்கு விழாவெடுக்கும் உங்களின் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன்.

Vassan said...

1.23 மணியில் தொடங்கி சில மணித்துளிகளே அறிமுகப்பேச்சு செய்த பெண்மணியின் தமிழ் அருமை. நன்றி. இதற்கு எதிர்மாறாக இருந்தது, முழுக்கை சட்டையை சுருட்டி விட்டு கொண்ட பேசிய நடிகரின் தமிழ். வருத்தம்.