திருவிழாவில், தமிழர் கலை, இலக்கியம், பண்பாடு போற்றும் விதமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அவற்றுள் தனித்தன்மை கொண்ட நிகழ்ச்சியாக, ஆண்டு தோறும் இஅடம் பெற்று வருகிற இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இது ஒரு பல்லூடக(multimedia) நிகழ்ச்சியாகும். இந்த அருமையான நிகழ்ச்சி, இனப்படுகொலைக்கு உள்ளான ஊடகவியலாளர் இசைப்பிரியாவுக்கு உணர்வுப் பெருக்குடன் அர்ப்பணிக்கப்பட்டது.
ஆசான் உயர்திரு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள், கடும் உழைப்பைக் கொடுத்து இந்நிகழ்ச்சியை வடிவமைத்துத் தொகுத்தளித்தார். ஆசான் உயர்திரு கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் பயிற்சியாளராக இருந்து உதவிகள் செய்தார். இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில், கீழ்க்கண்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெற்றன.
- பதினெண்கீழ்க் கணக்கும், தமிழர் வாழ்வும்
- கீழ்க்கண்ட நூல்களில், தெரிவு செய்யப்பட்ட பகுதிகள்
- திருக்குறள்
- புறநானூறு
- குறுந்தொகை
- நாலடியார்
- முந்தைய ஆண்டு விழா மலரில், தெரிவு செய்யப்பட்ட பாடங்கள்
- 2007 மலர், பாமரர் வளர்த்த தமிழ்
- 2008 மலர், இலக்கியத்தில் சுற்றுலாவும், சுற்றுலாத் தலங்களும்
- 2009 மலர், பண்பாடு கெட்டால்...
- 2010 மலர், பெருமிதம் மிகுந்த பெருஞ்சித்திரனார்
- தமிழ் எழுத்துகளில் கிரந்தம்
- தமிழ்த் திரைப்படங்களும், தமிழர் பண்பாடும்
- தமிழிசையும் நாட்டுப்புறக் கலைகளும்
- ஐம்பெருங் காப்பியங்களுள் குறிப்பிடப்பட்ட பகுதிகள்
- நவீன இலக்கியம்
பெருஞ்சித்திரனார் அணிக்கு முனைவர் இரமாமணி செயபாலன் அவர்களும், முனைவர் இரா.திருமுருகனார் அணிக்கு பொறிஞர் சுந்தர் குப்புசாமி அவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். போட்டியின் நடுவர்களாக முனைவர் மு.இளங்கோவன், முனைவர் சொர்ணம் சங்கர் மற்றும் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் ஆகியோர் செயல்பட்டனர்.
இப்போட்டியானது, சகலதரப்பட்ட தமிழரும் நுகர்ந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்விதமாக, போட்டியில் எட்டு வயது முதல் எண்பது வயதானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ப்ங்கேற்ற எட்டு வயது சிறுமியான ஸ்ரீநிதி மணிவாசகம், எண்பது வயதுக்கும் மேற்பட்ட ஐயா உயர்திரு அமிர்தலிங்கம் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் சிறப்பிக்கப்பட்டனர்.
நகர்ச்சில்லுகளைக் காணொலியாக்கி, இணையத்தில் தரவேற்றுவதற்கே இரண்டு மணி நேரம் செல்வாகும் போது, அனைத்துப் பாடங்களையும் படித்து, அதில் சுவையான வினாக்களைத் தெரிவு செய்து, பாடல்களையும் காணொலிகளையும் தக்காரிட நிகழ்ச்சியின் நெறியாளர் ஆசான் நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களுக்கு எத்தனை மணி நேரங்கள் ஆனதோ?! யூகிக்கவே முடியவில்லை. கடும் உழைப்பை நல்கி இருக்கிறார் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி.
இதோ, நிகழ்ச்சியின் காணொலிகளைக் கண்டு பயனுறுங்கள். இந்நிகழ்ச்சிக்கு பலவழிகளிலும் உதவிகள் செய்து உறுதுணையாய் இருக்கும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையினர், தமிழ்மணம் குழுவினர், வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த லதா கண்ணன் அவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முதலானோர்க்கும் எமது பணிவன்புடன் கூடிய நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழால் இணைந்தோம்! தமிழராய் வாழ்ந்திடுவோம்!!
No comments:
Post a Comment