7/29/2011

முனைவர் மு.இளங்கோவன் சொல்வீச்சு

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் -மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மக ளின்துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் -ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் -என்றன்
தாயின் இனிய தமிழ்மொழி யின்துயர்
தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் -ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்
கால்கை பிடித்தாலும் -எனைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் -அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

--கவிஞர் காசி ஆனந்தன்.

5 comments:

அம்பாளடியாள் said...

கவிஞர் காசி ஆனந்தனின் அழகிய கவிதையைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சகோ உங்களுக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....

Anonymous said...

அருமை நண்பரே... அழகிய வரிகள்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல..

சத்ரியன் said...

பகிர்விற்கு நன்றிங்... அண்ணே.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

சொல்வீச்சு கதிர்வீச்சாய் வலிமை கொண்டது.