இந்த monotony எனப்படும் உளத் தனிமையிலிருந்து விடுபட கிடைக்கும் ஓய்வுகளின் போதெல்லாம் உல்லாசங்களின் ஈடுபட விரும்புகிறார்கள் அவற்றுள் ஒன்று ஆண்டுதோறும் அவர்கள் கொண்டாடி மகிழும் FeTNA திருவிழா. இதற்குக் கவர்ச்சி சேர்ப்பதற்காகவும் மக்களை ஈர்ப்பதற்காகவும் பெரும் பொருட்செலவில் தென்னக சினிமா நட்சத்திரங்களை வரவழைக்கிறார்கள் என்பதுதான் சிலரால் எனக்குத் தரப்பட்ட சித்திரம்.
ஆனால் தமிழ் அறிஞர்கள் - இலக்கிய கர்த்தாக்கள் - இசை வல்லுநர்கள் - நடன மணிகள் - பல்வேறு திறமைகள் கொண்டவர்கள் என்று இவர்கள் வரவழைத்தவர்கள் பட்டியல் சினிமா நட்சத்திரங்களை விட மிக, மிக நீளமானது என்பது அங்கு அழைப்பின் பேரில் நேரில் சென்றபோதுதான் தெரிந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் - வருபவர்களுக்கான வசதிகள் -உணவு உபசரிப்பு- அதை இன்முகத்தோட்டு ஓடி ஓடி கவனிக்கும் உற்சாகமிகு தொண்டர்கள் - கண் துஞ்சாது மெய் வருத்தம் பாராது அயராது பாடுபடும் இதன் தளபதிகள் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோருக்கு மிக நல்ல முன்மாதிரிகள். இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது,
வந்திருந்த தமிழ் அறிஞர்கள் பயனுள்ள உரைகளை வழங்கினார்கள். இவர்களில் பேராசிரியை புனிதா ஏகாம்பரம், புதுவை பேராசிரியர் இளங்கோவன் உள்ளூர் அறிஞரைப் பொறுத்தவரை பேரா: “கபிலர்’ பாசுகரன் ஆகியோரை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
சிலம்பம் முதலிய பாரம்பரியக் கலைகளுக்கு தரப்பட்ட முக்கியத்வம் - “பறை”யை பல்லாயிரம் பொருட் செலவில் தென்னகத்திலிருந்து வரவழைத்து முழங்கச் செய்தது - அவ்வாறே கரக ஆட்டத்தின் பெருமையையும் கூடி இருந்த மக்களுக்கு உணர்த்தியது ஆகிய அனைத்து வியந்து பாராட்டுவதற்கு உரியன - பாராட்டுவோம்.
நடிகர் நாசர் நல்லதோர் உரையாற்றினார். அது அவருடைய இலக்கிய அறிவையும் ரசனையையும் வெகுவாகப் புரிந்து கொள்ள உதவியது. அந்த இனிமை - எளிமை - யதார்த்தம் சொக்க வைத்தது. அவரை நடிகர் என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுக்கி விட நினைப்பது பாவம்.
நடிகர் சார்லி வெறும் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. M.Phil பட்டம் வரை கையில் வைத்திருக்கும் ஓர் அறிவு ஜீவி. அவரும் அவரது இரு நண்பர்களித்த அந்த நகைச்சுவை விருந்து அதிலும் அந்த பசுவின் கதை எளிதில் மறக்கக் கூடியதல்ல. விலா நோகச் சிரிப்பது என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.
நாடகம் : அவர்கள் ஆர்வத்தைப் பாராட்டலாம். திறமையைப் பாராட்ட வேண்டுமானால் அவர்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதே சமயம், இன்னும் சின்னப் பெண் போலவே இருக்கும் ‘கோடை மழை’ வித்யாவின் “சிவகாமியின் சபதம் “ நாடகத்தில் அவரது அனுபவ முத்திரை தெரிந்த்தது.
அதுபோல உள்ளூர் நடன மணிகள் - அதாவது அமெரிக்க வாழ் இளம் குருத்துக்கள் - அளித்த நடன நிகழ்ச்சிகள் அற்புதம். என்ன வேகம் - என்ன அழகு - என்ன நேர்த்தி - ‘கோரியோ-கிராஃபி’ எனப்படும் நடன அமைப்பு உத்தியை இவர்கள் நங்கு புரிந்துகொண்டு செயல்படுத்துகிறார்கள் என்பது இதன் பொருள். இவற்றோடு ஒப்பிட்டால் ‘மானாட..மயிலாட’ மற்றும் ‘ஜோடி நம்பர் ஒன்” ஆகியவை வெறும் குரங்காட்டங்கள் - குப்பைகள்.....!!!!!!!!!!
திருச்சியை பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் செய்யது உட்பட குழுவினர் நடத்திய நிகழ்ச்சி யார் யாரிடமெல்லாமோ எதிர்பாரா வகையில் என்னென்ன ஏராளமான திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு, இவர்களை தேடிப்பிடித்து திறமை வெளிப்பட உதவிய FeTNA வின் சேவை இதுபோல் என்றும் தொடர வேண்டும்.
திருபுவனம் ஆத்மநாதனின் கச்சேரியில் பல இனிமையான பழைய பாடல்கள் ஒலித்தன. நாளின் கடைசி நிகழ்ச்சியாக இது அமைந்து போனதால் பலர் இந்த நல்ல இசை நிகழ்ச்சியை தவற விட்டு விட்டார்கள்.
உள்ளூர் இளைஞர் - யுவதிகள் கலந்து கொண்ட திரைப்படப் பாடல் இசை நிகழ்ச்சிக்குத்தான் அத்தனை நிகழ்ச்சியை விட ஏராளமான கூட்டம். ஏற்பாடுகளைச் செய்ய அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு நேயர்களின் பொறுமையை சோதித்தது அநியாயம். தொகுத்து வழங்கிய யுவதிக்கு மேடை ஆளுமை நிறையவே இருக்கிறது. அது போலவே ஆர்வக் கோளாறும் அதிகம். இவ்வளவு அலட்டல் வேண்டாம். இன்னும் கொஞ்சம் DIGNIFIED-ஆகக் கையாளலாம். பாடியவர்கள் அனைவரும் நன்றாகப் பாடினார்கள். ஆனால் பாடல் தேர்வுகள் சுகமாக அமையவில்லை. பாடல்கள் ஒன்றையொன்று இயல்பாக இனிமையாகத் தொடர வேண்டும் இப்படி கொப்புக்கு கொப்பு தாவக் கூடாது. இன்னொன்று நீங்கள் நீங்களாகவே இருங்கள், உங்களை இளையராஜா என்றும் SPB என்றும் நினைத்துக் கொண்டு சுயத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்பதே இவர்கள் இளமையின் தலை வாசலில் நிற்பதால் ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் என்னுடைய அன்பான - பணிவான அறிவுரை - வேண்டுகோள்.
அந்த வகையில் கனடா நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் உறுப்பினரான ராதிகா சிட்சபை ஈசன் (சிட்சபேசன் அல்ல - அவரே சொன்னது) அணுகு முறை எனக்கு ரொம்பவே பிடித்தது. ஓர் அழகான - எளிமையான - இனிமையான - பாசாங்குகள் ஏதுமில்லாத உரை ஒன்றை ஆற்றினார். அந்த ஆளுமை - தன்னம்பிக்கை எனக்கு இந்திரா காந்தியை நினைவு படுத்தியது. அதை அவரிடம் சொல்லவும் செய்தேன், “நான் ராதிகாவாகவே இருப்பதில் யாருக்கு என்ன ஆட்சேபனை இருக்க முடியும். நான் இறுதிவரை ராதிகாவாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.அது..அது தலைமத்துவப் பண்பு.. அது அவரிடம் நிறையவே இருக்கிறது. அரசியலில் இன்னும் வளர்வார் என்கிற நம்பிக்கையை நம்மிடம் நிறையவே ஏற்படுத்துகிறார்.
இதே விழாவில் எழுச்சி உரையாற்றிய ‘ நாடுகடந்த திமிழ் ஈழ அரசாங்கத்தின் (Transnational Govt. of Tamil Eelam’ பிரதமர் விஸ்வநாதன் உருத்திர குமார் உதிர்த்த கருத்துக்கள் அவரது எதிரிகளையும் அவர் பால் ஈர்த்து கட்டிப் போடக் கூடியவை. வெறும் வார்த்தை அலங்காரமாக இல்லாமல் நிறைய தகவல்கள் - புள்ளி விவரங்கள் என்று தன் வாதங்களை முன் வைத்தார். வழக்கறிஞராகப் பணி புரியும் அவரது வழக்கு வாதங்களை சம்பந்தப்பட்ட நீதிபதி ஏற்றுக்கொள்வாரோ மாட்டாரோ தெரியாது.அன்று கூடியிருந்த பெரும் திரளாவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
கொண்டாட்டமும் கோலாகலமுமாக நடைபெற்ற இந்த விழாவில் அருகருகே வேறு பல தனி அரங்குகளும் நடைபெற்றன. பேச்சுப் போட்டி - திருக்குறள் போட்டி. அமெரிக்க ஈழத் தமிழருக்கான நடவடிக்கைக் குழு - பதிவர் கூட்டம் - மருத்துவர்கள் கருத்தரங்கு - இலக்கிய கருத்தரங்கு முதலிய SERIOUS-ஆன விஷயங்களும் இந்த விழாவுக்கு பெருமை சேர்த்தன.
இவற்றுக்கெல்லாம் சிகரம் அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் தமிழை காப்பதற்கும் - வளர்ப்பதற்கும் - அரசு ரீதியான அங்கீகாரம் பெறுவதற்கும் செய்து வரும் முயற்சிகள் இவைமெய் சிலிர்க்க வைக்கின்றன. அந்த விஷயத்தில் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கும் நாம் நம் அரிய சொத்துக்கள் பறிபோவது தெரியாமல் உறங்கிக் கிடக்கிறோம் அதனால் தமிழகத் தமிழர்கள் தலை குனியத்தான் வேண்டும். அமெரிக்காவில் வாழும் அந்தத் தமிழர்களும்தமிழகத் தமிழர்கள்தானே என்கிற பம்மாத்து வேண்டாம். அவர்கள் அமெரிக்கத் தமிழர்கள்..! அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது பேரா: புனிதா ஏகாம்பரம் சொன்னது போல் நான்காம் தமிழ்ச் சங்கம்....!!!
இதை 24 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கும், தியாக உள்ளத்தோடு அயராது உழைக்கும் தொண்டர்கள். இவர்களுக்கு தலைமை ஏற்கும் தன்னலமில்லாத தலைவர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவிக்க உலகெங்கும் வாழ் தமிழ்ச் சமுகம் கடைப் பட்டிருக்கிறது.
இங்குள்ள திறமை வாய்ந்த கலைஞர்களுக்கும் ‘கலைமாமணி’ விருதும், இங்கு அரும் பணியாற்றும் தலைமைத்வ பண்புள்ள பெரியவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளையும் வழங்க மைய அரசு முன்வரவேண்டும் என் பது என்னுடையது மட்டுமல்ல தமிழார்வம் கொண்ட அத்தனை நல்ல உள்ளங்களின் அவா - ஆசை- ஆதங்கம் வேண்டுகோள் எல்லாம். வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை ! நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு..!!
எழுதியவர்: அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
4 comments:
//தமிழகத்தில் இருக்கும் நாம் நம் அரிய சொத்துக்கள் பறிபோவது தெரியாமல் உறங்கிக் கிடக்கிறோம் அதனால் தமிழகத் தமிழர்கள் தலை குனியத்தான் வேண்டும்.
அண்ணே,
நிகழ்ச்சியை அருமையாக தொகுத்தளிமைக்கு பாராட்டுக்களும், நன்றியும்.
ஆனால் பாருங்க,மேலே குறிப்பிட்டுள்ள தலைகுனிதலை உணர்ந்த நாம் ( நானும் தான்) எல்லோருமே இது போன்ற நிகழ்வுகளைக் கண்டு உணர்ச்சிவசப் படுவதும், தமிழகம் சென்று சேர்ந்த ஒரு வாரத்தில் உணர்ச்சியிழந்து ஜடமாகிப் போவதையும் என்னவெனச் சொல்ல?
//அமெரிக்காவில் வாழும் அந்தத் தமிழர்களும்தமிழகத் தமிழர்கள்தானே என்கிற பம்மாத்து வேண்டாம். அவர்கள் அமெரிக்கத் தமிழர்கள்..!//
உண்மையே, அயல்நாடுகளில் குடியுரிமைப் பெற்று அவர்களின் கடும் உழைப்பினாலும், முயற்சியினாலும் பெறுகின்ற அங்கீகாரங்களை (தமிழகத்தில் “டாஸ்மாக்” கடைகளில் அமர்ந்துக் கொண்டு ) பங்கிட்டுக் கொள்வதை எண்ணும் போது நமது செயல் “பேடித்தனமாக” தான் இருக்கிறது.
நன்றி ஐயா. உங்களின் கருத்துக்களை பட்டிமன்றத்திலும் ஈழத் தமிழருக்கான நடவடிக்கைக் குழுவிலும் மற்றும் இலக்கிய அரங்கிலும் பகிர்ந்து கொண்டீர்கள். இங்கும் எழுதியுள்ளீர்கள். நன்றிகள் மீண்டும்
////அந்த வகையில் கனடா நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் உறுப்பினரான ராதிகா சிட்சபை ஈசன் (சிட்சபேசன் அல்ல - அவரே சொன்னது) அணுகு முறை எனக்கு ரொம்பவே பிடித்தது.///
அடியேன் ஒரு சிறிய திருத்தம். சிட்சபை ஈசன் அல்ல - சிற்சபை ஈசன் என ‘ற்’ வரவேண்டும் என நினைக்கிறேன். சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் கனகசபையில் உள்ள ஈசனைக்குறிப்பிடுகிறது
//நடிகர் நாசர் நல்லதோர் உரையாற்றினார். அது அவருடைய இலக்கிய அறிவையும் ரசனையையும் வெகுவாகப் புரிந்து கொள்ள உதவியது. அந்த இனிமை - எளிமை - யதார்த்தம் சொக்க வைத்தது. அவரை நடிகர் என்கிற ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுக்கி விட நினைப்பது பாவம்//
மிக..மிக உண்மை!
Post a Comment