அடுக்ககத்தின் இரண்டாவது தளத்தில் இருந்த அவனை, அவனுள் இருக்கும் ஏதோ ஒரு நினைவு அவனைத் தீண்டி இருந்திருக்க வேண்டும். தன் அங்கராக்கை எடுத்துப் போட்டவன் கதவைச் சாத்திவிட்டுக் கீழே இறங்க எத்தனித்தான்.
“இந்த மொட்டை வெயில்ல எங்க போறீங்க மாமா?!” மெல்லிய தாழ்ந்த குரலில் அக்கறைப்பட்டுக் கேட்டாள், மடிக்கணினியின் வில்லைகளில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த விரல்களுக்குச் சொந்தக்காரியும், மொகானூர் முருகேசனுக்கு வாக்கப்பட்டவளுமான செம்பருத்தி.
“மொட்டை வெயிலுக்கு விடிவு பொறக்குதுன்னு நினைக்கிறேன். இதா வந்துடறேன்!” சொல்லிக் கொண்டே கீழிறங்கிப் போனான் மொகானூர் முருகேசன்.
அடுக்ககத்தின் கீழ்தளத்துக்கு வந்தவன் புல்வெளியில் நின்று கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்தான். மனம் குதூகலித்தது. மேற்குதிசை அடிவானத்தில் இருந்து கருநீல வண்ணப் புகை திரண்டு வருவது போன்ற காட்சி. ஆனாலும், இவனிருக்கும் இடத்தில் தகிதகிக்கும் வெயில்.
வேகமாக மீண்டும் தன் அடுக்கக வீட்டிற்குள் நுழைந்தான். “செம்பருத்தி, நாஞ்சொன்னது நடக்கத்தான் போகுது பாரு!”
“நீங்க என்ன சொன்னீங்க? அப்படி இதுவரைக்கும் நீங்க சொன்னதுதான் அப்படி என்ன நடந்திருக்கு வாழ்க்கையில??”, அலுத்துக் கொண்டாள் செம்பருத்தி.
“மொட்டை வெயில் தாழப் போகுதுன்னு சொன்னது சரியாத்தான் ஆகப் போகுது!”
“அதெப்படி அப்படி உறுதியாச் சொல்றீங்க?”
“இங்கன பாரு. காத்தே வீசாத மாதிரி இருக்கு. ஆனாலும் அந்த மரத்து இலைக மட்டும் ஒருவாக்குல பறக்காம, நாலாபக்கமும் மாறி மாறிப் பறக்குது பாரு. மரத்து இலைக அப்படி மாறி மாறிப் பறக்குறப்ப மலை வரும்னு எங்க பக்கத்தூட்டு அமுச்சி சொன்னது ஞாவகத்துக்கு வந்துச்சு. அதான் கீழ போயிப் பார்த்துட்டு வந்தேன். அடிவானங் கறுத்து வந்திட்டு இருக்குது செம்பருத்தி, நீ வேணா ஒரு எட்டு போயிப் பார்த்துட்டு வா போ!!”
மடமடவெனத் தன் செராய்ப்பையில் இருந்த ஐபோனை எடுத்து, அதன் தொடுதிரையில் தன் ஆட்காட்டி விரல்கொண்டு மாறிப் மாறிப் பொட்டு வைத்தான்.
“அகோ... ஆரு தங்கராசுதான?”
“ஆமாங்க, நீங்க?”
“நான் சார்லட்டுல இருந்து மொகானூர் முருகேசன் பேசுறந் தங்கராசூ!”
“அண்ணா, சொல்லுங்க்ண்ணா! செளக்கியந்தானுங்க? ஊர்ல மழைங்களா??””
“இன்னித்தான் பெய்யும் போல இருக்குது. ஒரே உப்புசமும் ஆறாட்டமுமா இருந்துச்சி. திடீல்னு பார்த்தா, மரத்து எலைக ஆலவட்டம் போட ஆரமிச்சு இருக்கு. மரத்து எலைக ஆலவட்டம் போட்டா மழை வரும்னு உங்கமுச்சி சொன்னது ஞாவகத்துக்கு வந்துச்சு. உன்ற ஞாவகமு வந்துச்சு தங்கராசூ!”
சிகாகோ நகரில் இருக்கும், சோமனூர் தங்கராசுவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தான் சார்லட் நகரில் இருக்கும் மொகானூர் முருகேசன்.
“தங்கராசூ, வாற விடுப்புக்கு, அதான் சூலை ரெண்டு, மூனு, நாலாந்தேதி விடுப்புக்கு சார்ல்சுடன் வந்துருங்க. பூங்கொடிகிட்ட நாஞ்சொன்னன்னு சொல்லிக் கூட கொழைந்தைகளையும் கூட்டிகிட்டு வந்துருக்க என்ன?”
“செரிங்ணா... அவளும் எங்கனாச்சியுமு கொழந்தைகளைக் கூட்டிட்டுப் போலாம்னு சொல்லிட்டுதான் இருக்காளுங்க. ஆரெல்லாம் வாறங்க? சிறப்பா என்ன நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கப் போகுதுங்கண்ணா??”
"தங்கராசூ... எனக்கு நம்பூர் மாகாளியாத்தா கோயல் நோம்பிக்கு அல்லாரும் ஒன்னு கூடுற ஞாவகந்தான் வருது... அந்தக் கம்பம் சுத்தி ஆடுறதும், வெளக்குமாவு எடுக்குறதும், முளைப்பாரி எடுக்கையில நாம் ஆடி வாறதும்...
அதெல்லாம் ஒரு காலம். அதை ஈடுகட்டுறதுக்கு ஒரு வாய்ப்பா அமைஞசதுதான் இது நமக்கு. போன பெட்னாத் திருவிழாவுல மதுரைவீரன் தெருக்கூத்துல ஆட்டம் போட்டம். இந்தவாட்டி, திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் தப்பாட்டாம் இருக்குதாமில்ல? பாத்திகட்டி ஆடிட வேண்டியதுதான்.. என்ன சொல்ற நீயி?!”
”கண்டிப்பாங்கண்ணா... நம்ம புதுக்கோட்டை அப்துல்லா சொன்ன, புதுகை பூபாளம் நகைச்சுவைக் குழுவினரும் வாறங்கன்னு சொல்லிச் சொன்னாங்க... நெசமாங்க முருகேசண்ணே?!”
”ஆமாமா... அவங்களும் வாறங்க... கூட, கோடைமழை வித்யாவோட நிகழ்ச்சியும் இருக்கு. அப்புறம் வழக்கம்போல, நம்ம பீற்றர் அண்ணனோட இலக்கிய வினாடி வினா, கவிஞர் நா.முத்துக்குமார் தலைமையில கவியரங்கம், ஐயா அப்துல் ஜப்பார் அவிங்க தலைமையில பட்டிமண்டபம்.. அல்லாமும் சிறப்பா அமையப் போகுது!”
“மூணு நாளும் ஒரு கெடையில நம்ம ஊட்டுக் கொழைந்தைக இருக்குமா? நெம்பச் சிரமமுங்க முருகேசண்ணே!”
“அதுக்கென்ன இப்ப? எண்ணிப் பத்து மைல்கூட வராது... கடற்கரை, அழகான சார்ல்சுடன் நகர புரவியோடும் வீதிக்ள்னு சுத்திப் பாக்குறதுக்கு நெம்ப இருக்குதான தங்கராசூ?”
”வேற யாரு நம்மாளுங்க வாறங்க?”
“ஆமா, நீ கேட்டதுந்தான் ஞாவகத்துக்கு வருது. நீ தொடர்புலயே இரு. மறுவழியில நம்ப ஈழத்துப் பங்காளி மோகனுக்கு ஒரு தாக்கல் போடுறேன்!!”
“செரீங்”
“யாரு மோகனா?”
“சொல்லுங் முருகேசன். எல்லாம் நலந்தானே?”
“நாங்க நல்லா இருக்கம். நம்ப தங்கராசும் தொடர்புல இருக்காருங்க”
“தங்கராசூ... என்ன கன நாளாக் கதைக்கவே இல்ல நீங்கள்?”
“ஆமாங்க மோகன். நெம்ப நாளாச்சு!!”
“நீங்கள், சார்ல்சுடன் வாற நீங்கள்தானே? நான் கனடிய முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா, நம்ப சதீசு, பராபரம், மொகேந்திரன் அல்லாரும் வாறமென்ன?”
“அப்ப நானும் வந்திடறனுங்க”
“முருகேசன், தங்கராசும் வாறார். நாம பம்பலா இருந்து கதைக்கலாமென்ன?! உங்கட ஆயத்தம் எல்லாம் வடிவாப் போகுதுதானே?!”
“எல்லாம் போயிட்டுத்தான் இருக்குதுங்க் மோகன்!”
“ஒண்டு கேட்க வேணுமிண்டு இருந்தநான். பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழான்னு போட்டிருக்கு. யார் அவர்?”
“இதென்னங்க மோகன்... எங்க வீட்டு பெரியம்மணி சொல்றாங்க கேளுங்க!”
“முருகேசன், இருந்து ஆறுதலாக் கேட்க வேணும். இப்ப நேரமில்ல. ஆனா, உங்க பெட்டை நல்லா வடிவாத் தமிழ் கதைக்கிறா என்ன?!”
“நாம பேசாம வேற யாரு பேசுவாங்க மோகன்?! ஆனா, எனக்கு இப்ப கொஞ்சம் அலுவல் இருக்கு.
மோகன், தங்கராசூ, நீங்க ரெண்டு பேருமே அங்க இருக்குற எல்லாருக்கும் சொல்லுங்க. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தமிழ் விழாவுக்கு வாங்கன்னு சொல்லுங்க. நான் பேந்து கதைக்குறன். சூலை, 2,3,4 ஆகிய திகதிகள்ல சந்திக்கலாம், தென்கரோலைனா சார்ல்சுடன் நகர்ல... வணக்கம்!!
தமிழராய்ப் பிறந்தோம்! தமிழால் இணைவோம்!!
9 comments:
தாருங் சோமனூர் தங்கராசு. புகைப்படத்துல உங்க கூட இருந்தாரே அவரா:))
வணக்கம் சகோதரரே சுவாரஸ்சியமான
நல்ல தகவல்கள் அடங்கியதளம். இதை இன்றுதான் பார்த்தேன் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்!.
கடைய திறந்திட்டீங்க போல இருக்குதே!வாழ்த்துக்கள்.
@@வானம்பாடிகள்
புளியங்குடித் தங்கராசுக்கும் சோமனூர் தங்கராசுவுக்கும் வேறுபாடு தெரியலையாங்ணே??
@@ அம்பாளடியாள்
நன்றிங்க
@@ராஜ நடராஜன்
அப்பப்ப... இஃகிஃகி!!
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.
சுவாரஷ்யமான நடையும், தகவலும் அருமை!
ஆகா... பாட்டாப் பாடியிருக்கிறா உங்க பொண்ணு..
ஆலவட்டம்? இதற்கு அர்த்தம் நான்கு பக்கங்களையும் நோக்கி அசைவதா?
அங்கராக்கு என்று எந்த உடையைச் சொல்லியிருக்கிறீர்கள்? ஓவர்கோட்? சர்ட்?
விழா சிறக்க வாழ்த்துகள்..
//ஒரே உப்புசமும் ஆறாட்டமுமா இருந்துச்சி. //
உப்புசம் என்றால் என்னங்க? இதுக்கு எப்பவோ நீங்க பதில் கொடுத்ததா நாபகம். எங்க ஊர்ல உப்புசம் என்றால் வயிறு கெட்டு (கோளாறாகி) புளி ஏப்பமா விட்டறத (வர்ரத) தான் சொல்லுவாங்க.
@@குறும்பன்
*உப்பிசம் uppicam
, n. See உப்பசம்.
உப்பிட்டது uppiṭṭatu
, n. < உப்பு + இடு-. That which is salted and preserved, pickles; ஊறுகாய்.
உப்புக்கரித்தலாக இருப்பது.
Post a Comment