1/25/2010

மரகதா!

“டே கண்ணூ, பத்து அயனம் பன்னெண்டு அயனமுன்னு பல வருசங்களுக்கு ஒருக்கா இங்க வர்றே?! போகும் போது சித்த ஒரு எட்டு வீதம்பட்டிக்கும் போயிட்டு போயிடு இராசா!”என்று, பயந்தவனுக்குப் பூசாரி அடிக்கும் பாடத்தைப் போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.

“ஆமாடா, அம்மா இவ்ளோ தூரம் சொல்லுது பாரு. இப்படி இந்த வழியாப் போறது, கொங்கல்நகரம், பெதப்பம்பட்டி போயி அப்படியே ஒரு எட்டு உங்க மாமானையும் பார்த்துட்டு போயிடு!” இன்னமும் அம்மாவுக்குப் பின்பாட்டுப் பாடுவதை மாற்றிக் கொள்ளாத அப்பா.

“வந்தா உங்களோட இமிசி தாங்க முடியலைடா சாமி. சரி, போயிட்டுப் போறேன்!” வேண்டா வெறுப்பாக இசைவு தெரிவித்தான்.

“சாமியண்ணே, வண்டியில டீசல் இருக்குதா? நாம பொள்ளாச்சி வழியாப் போகுலை. வடக்க, ஊருக்குப் போயிட்டுப் அப்பிடியே போயிறலாம்!”.

“அதெல்லாம் தாங்குங்க சார், ஒன்னும் பிரச்சினை இல்லீங்க!”

அம்மா, தேங்காயும் புறக்கொல்லையில் விளைந்த அவரைக்காய் மற்றும் புடலங்காய்களை தனது மூன்று மருமகள்களுக்கும் தனித்தனியாக, வாகாகக் கட்டி வாகன ஓட்டுனரிடம் தந்துவிட்டு, “இதா தம்பீ, இதுகளை மூணு வீட்லயும் பதலமாக் குடுத்துரு, என்ன?”

“சரிங்க அம்மா!”

வண்டி வீட்டில் இருந்து புறப்பட்டது. ஊரில் இருக்கும் மாற்றங்களை எல்லாம் பார்த்து வியந்தபடி அந்தியூர் எல்லையைக் கடந்தான். போகிற வழியில் விண்ணைத் தொடும் காற்றாலைகள்; மானாவாரிப் பூமியாக இருந்த நிலத்தில் எல்லாம் சொட்டு நீர்ப் பாசனத்துடன் தென்னந்தோப்புகள்; பார்க்கப் பார்க்கப் பரவசமுற்றான்.

வண்டி சரியாக பெதப்பம்பட்டியைக் கடந்து சென்றதும், எதிரில் வந்த சிந்திலுப்பு, சிக்கநூத்து ஆகிய ஊர்களின் பெயர்ப் பலகைகளைப் பார்த்து, வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இருந்து விடுபடலானான். கைபட்ட தொட்டாச் சிணுங்கியைப் போல வாடியது அவன் முகம்.

நடக்கக் கூடாதது நடந்த அந்த நாளில் இருந்து, எந்த ஊருக்குச் செல்லாமல் இருந்தானோ, அந்த ஊர் இன்னும் பத்து மணித் துளிகளில் வரப் போகிறது. மாமாவைப் பார்ப்பதிலோ, அல்லது மாமா வீட்டுக்குச் செல்வதிலோ இவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஊரோரம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றுவிட்டு, ஊருக்குள் செல்லாமல்ப் போவது சரியாக இருக்காது. ஊரடியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்குப் போக வேண்டும். இல்லாவிட்டால் அம்மா கேட்பாள். அங்கு சென்றால், எப்படியும் ஊரார் கண்ணில் விழ வேண்டி இருக்கும்.

இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை, மூங்கில்த் தொழுவுப் பிரிவில் இருந்து மேற்கே செல்வதற்குப் பதிலாக, நேராக செஞ்சேரி மலைக்கு வண்டியை விடச் சொல்லி விடலாம். குழப்பத்தில், மனம் கிணற்றடியில் தொங்கும் தூக்கணாங்குருவி போல ஊசலாடிக் கொண்டிருந்தது.

இவன் சுதாரிப்பதற்குள்ளாகவே, வண்டி சலவநாயக்கன் பட்டியைக் கடந்து மேற்கு திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

சிறிது தொலைவில், உப்பாற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கையில், வீதம்பட்டி சமீபமாக ஒரு பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் சென்றால், தரையானது வாகனத்தின் கீழே இடிக்குமா எனச் சோதிக்கும் பொருட்டு கீழே இறங்கினான்.

“யாரு, வெள்ளையுஞ் சொல்லையுமா? வெளியூருங்களா தம்பி நீங்க??”

மறுகணமே, தாயின் மீது ஏற்பட்ட அளவு கடந்த சினம் இவனது தலைக்கேறியது, “அடச் சே, இந்த கெரகத்துக்குத்தான நான் இத்தினி வருசமும் இந்த பூமிக்கு வராம இருந்தேன்? வந்தவனைக் கொஞ்சம் நிம்மதியா விடுறாங்களா இவங்க. வாழ்க்கை பூராவும் இவங்க தொல்லைதானே நமக்கு?”

இனி புலம்பிப் பிரயோசனமில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய், “என்னங்க, என்னை அடையாளந் தெரிலீங்களா? நாந்தான் அந்தியூர் மெளனு மகன்!”

“அடடே, யாரு? சின்னவரா நீங்க?? என்ன தம்பி, இப்பிடிப் பண்ணிப் போட்டீங்க?? எத்தினி வருசம் ஆகுது பாத்து?? எங்களையெல்லாம் ஞாவகமாவது வெச்சு இருக்கீங்களா?” தொடர்ந்து பேசவும், தலைகவிழ்ந்து சோகத்தின் இரைக்கு ஆளானான்.

“ஏங்க தம்பி, எதுவும் பேச மாட்டேங்கிறீங்க? நல்ல வேளை, நான் பழையூர் தம்புவைப் பார்க்குறதுக்கு வந்தங்காட்டி உங்களைப் பாத்தேன். இல்லாட்டி நீங்க தோட்டத்தோடயே போயிருப்பீங்க!”

எட்ட இருக்கும் அந்தச் சீமையிலும் கூட ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டாவது இருதயமாய், இருதயத்தின் மேலே ஒரு அலைபேசி. இவரும் அந்த இரண்டாவதை இயக்கலானார்,

“கண்ணூ மரகதம், நம்ம ஊட்டுக்கு நெம்ப முக்கியமான ஒரு ஒறம்பரை வந்துட்டு இருக்கு. நீ எங்க இருக்கே? தாயார் அக்கா ஊட்டுலயா? செரி அப்ப, சராங்கமா ஊட்டுக்கு வந்துரு!”

இவனும் மரகதமும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். ஒன்றாம் வகுப்பில் இருந்தே பால்ய சிநேகிதர்கள். ஒரு கட்டத்தில் பள்ளிப் படிப்புக்காக இலட்சுமி நாயக்கன் பாளையம் சென்று விட்டான். என்றாலும் நீல நிற உள்ளூர்த் தபால்கள் இங்குமங்குமாய் இருக்கும் இருவரையும், அணுக்கமாக வைத்திருந்தது.

அவ்வப்போது அம்மாவும், மரகதமும் வேலூர் சந்தையில் பார்த்துப் பேசிக் கொள்வார்கள். உடுமலை செல்ல வரும் போதெல்லாம், வீட்டிற்கு எந்தத் தங்கு தடையும் இல்லாமல் வந்து போகக் கூடியவளாயும் இருந்தாள். நாட்கள் உருண்டது, அவள் உடுமலை விசாலாட்சியில் படித்தாள். இவன் கோவையில் படிப்பு, வேலை என்றாகி சிங்கப்பூரும் சென்றுவிட்டான்.

ஒருமுறை தாயகத்துக்கு வந்த போதுதான், விபரத்தை அறிந்து மிகவும் ஏமாற்றப்பட்ட, ஒரு விரக்தியான மனோநிலைக்குத் தள்ளப்பட்டான். பெற்றவர்களும் சொந்த ஊருக்கே குடி பெயர்ந்து இருந்தார்கள். பிறகு, அவளைப் பார்க்க மனம் கொள்ளாது இந்தப் பக்கமே வராமல் இருந்தவன், இன்று அவளை நேருக்கு நேர் பார்க்கப் போகிறான்.

வண்டியை விட்டு இறங்கவும், கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்தே விட்டான். உடம்பு சிறிது கனமாகி இருந்தது, ஆனாலும் அதே பொலிவான முகம், சுடரான சிரிப்பு, மாலை நேரத்து மல்லிகை தலையில்! இவனுக்குத் தாங்க முடியாத வியப்பு! இவனால் எதுவும் பேச முடியவில்லை!!

“டே பழமை! இதென்றா வெள்ளைக்காரனாட்டம் ஆயிட்டே? ஊளைமுக்கு ஒழுக்கிட்டு, கொத்தவரங்காயாட்ட இருப்ப நீயி? என்னங்க இங்க வாங்க, அம்முலு அம்மா பேரன்னு சொல்லிப் பேசுவம்மல்ல? அந்தப் பழமைதான், அமெரிக்காவுல இருந்து வந்துருக்கறான்! ”

”திருமணமாகிக் குறுகிய காலத்திலேயே வாழ்க்கையை இழந்தவளது முகத்தைப் பார்க்கக் கூடிய திராணி இல்லாமல், இவளை இத்தனை நாளும் மறந்தவன் போலவே நடித்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோமே?” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன், சிநேகிதிக்கு மறுவாழ்வு தந்த அந்த மனிதனின் யதார்த்தமான, கனிவான பேச்சில் கரைந்தவனானான்.

பழங்கதைகள் பல பேசி, அளவாளாவி, அவர்களது கடுமையான விருந்தோம்பலுக்குப் பிறகு, விடை பெறமுடியாமல் விடை பெற்று வந்தான்.

பார்க்காமலே போயிருந்திருக்கக் கூடும்! நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அம்மாவைத் திட்டி விட்டோமே என நினைத்தவன்,

“சாமியண்ணே, இராத்திரிக்கு கோயமுத்தூர் போயே ஆகணுமா?”

“இல்லங்க சார், பரவாயில்லங்க சார்!”

“மத்தியானம் அம்மாவை நெம்பப் பேசிப் போட்டேன். மறுபடியும் அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு. வண்டியத் தெக்கயே உடுங்க!”.

29 comments:

Mahesh said...

//வண்டியைத் தெக்கயே உடுங்க....//

ம்ம்ம்... நெம்ப நெகிழ்ச்சியாப் போச்சுது...

ஆரூரன் விசுவநாதன் said...

இளமைக்கால நினைவுகளை மறக்க முயற்சித்தாலும் நடப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் அது அவ்வப்போது நம் நினைவுகளை கிளறிக்கொண்டேதான் இருக்கின்றன.

பழய நினைவுகளை அசைபோடப் போட, ஒரு விதத்தில் மனம் மகிழ்ந்தாலும், முடிவில் ஒரு மறுக்கமுடியா கணத்த சோகத்தை பதிந்துவிட்டுத்தான் செல்கிறது.

பகிர்வுக்கு நன்றி

சீமாச்சு.. said...

எப்படிங்கையா? ஒரு நாளைக்கி 2 இடுகையாப் போட்டுத் தாக்குறீங்க?

நான் எழுத நெனச்சதே மனசுல குவிஞ்சுக்கிட்டுப் போகுது.. எழுத முடியல..

ஒங்களப் பாத்தா பொறாமையா இருக்குங்கையா.. வெளிப்படையாவே சொல்லிக்கிறனுங்க...

தாராபுரத்தான் said...

மனது வலித்திருக்குமே.அனைவரின் வாழ்விலும் நடக்கிற நிகழவுதான்.பதியும் போது புதிய சுவை ஏற்படத்தான் செய்யும்.எங்களுக்குந்தான்.

*இயற்கை ராஜி* said...

ரொம்ப நல்லாயிருக்குங்க‌:-)

சீமாச்சு.. said...

நல்லாயிருக்குங்கையா இடுகை.. எங்க வீட்டுத் தங்கமணியும் படிச்சுப்புட்டு.. “நம்ம ஐயா எப்படி எழுதறாங்க பாருங்க.. நீங்களும் எழுதறீங்களே..” ந்னு ரொம்ப அலட்டிப்புட்டாங்க..

“இரண்டாவது இருதயம்”, “தூக்கணாங்குருவிக் கூடு” எல்லா வார்த்தைப் பிரயோகங்களும் நல்லாருந்தது..

செல்வநாயகி said...

welcome back:))

sathishsangkavi.blogspot.com said...

//”திருமணமாகிக் குறுகிய காலத்திலேயே வாழ்க்கையை இழந்தவளது முகத்தைப் பார்க்கக் கூடிய திராணி இல்லாமல், இவளை இத்தனை நாளும் மறந்தவன் போலவே நடித்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோமே?”//

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது நண்பனே.. நண்பனே...

பிரபாகர் said...

அருமைங்க!

//ஊளைமுக்கு ஒழுக்கிட்டு, கொத்தவரங்காயாட்ட இருப்ப நீயி? //

நம்மையும் சில பெருசுங்க பாத்துட்டு, கெலப்ப கால போட்டுகிட்டு இருப்பான், இப்ப எம்ம ஒசரம், போலீசு மாதிரி இருக்கான்னு சொல்லுவாங்க. கிராமம் இன்னும் நல்லவர்களை நிறைய கொண்டிருக்கிறது...

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அடடா... நீங்க ஊருக்கு வந்துட்டுப் போன தாக்கம் தீர சில மாதங்கள் ஆகும் போலிருக்கே. நம்ம ஊரயெல்லாம் கண்ணுக்குள்ள நிறுத்தறீங்க.

தெக்க வடக்கங்கறப்பவே நீங்க எந்த ஊருக்குப் போறீங்கனு தெரியும் :)

ஈரோடு கதிர் said...

அருமைங்க மாப்பு...

காரவுட்டு எறங்குனப்போ வந்த கோவத்த அருமை பதிவு பண்ணீருக்கீங்க

நிகழ்காலத்தில்... said...

//கொத்தவரங்காயாட்ட இருப்ப நீயி? //

இப்பன்ன மட்டும் என்ன!!

அப்படியேதான் :))

vasu balaji said...

பழமை கோபம் புதுமை:)

meenamuthu said...

சல சலவென்று வாய்க்காலில் ஓடும் தெளிந்த நீராய்!அத்தனை பதிவும் அருமை!

தொடருங்கள்... தொடருகிறோம்.

தாராபுரத்தான் said...

நடக்கக் கூடாதது நடந்த அந்த நாளில் இருந்து/படிக்க படிக்க ஞாபகம் வருது.

நாகா said...

மூங்கத் தொழுவு பிரிவு தாண்டி செஞ்சேரிமலை போறப்பவெல்லாம் உங்க ஞாபகம் வரும். இனிமேல் இந்த இடுகையும் ஞாபகம் வரும்...

Unknown said...

ரெம்ப இயற்கையா ஊர்ல கேட்ட பேச்சு மாரியே இருக்குங்க. படிக்க படிக்க சந்தோஷம்.

நம் வாழ்க்கையில் செய்த எஸ்கேப்பிஸங்களை சில சமயம் இப்படித்தான் சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வைகோல - வியாகூலம் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாமோ?.

பழமைபேசி said...

//நம் வாழ்க்கையில் செய்த எஸ்கேப்பிஸங்களை சில சமயம் இப்படித்தான் சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.//

போட்டுத் தாக்கிட்டீங்க.... உள்ளபடியே மனசாட்சியும் சொல்லுது, “நீ ஒரு கோழை!”ன்னு... சமூகத்தை எதிர்த்து நிற்கமுடியாத பயந்தாங்க்கொள்ளின்றது பொதுவுல எப்படிச் சொல்ல முடியும்?

பழமைபேசி said...

//வைகோல - வியாகூலம் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாமோ?.//

இருக்கலாமுங்க...நானும் ஒன்னு ரெண்டு பேர்கிட்ட கேட்டு இருக்கேன்.

பழமைபேசி said...

//நாகா said...
மூங்கத் தொழுவு பிரிவு தாண்டி செஞ்சேரிமலை போறப்பவெல்லாம் உங்க ஞாபகம் வரும். இனிமேல் இந்த இடுகையும் ஞாபகம் வரும்...
//

ஆகா!

//தாராபுரத்தான் said...
நடக்கக் கூடாதது நடந்த அந்த நாளில் இருந்து/படிக்க படிக்க ஞாபகம் வருது.
//

இஃகி!

//meenamuthu said...
சல சலவென்று வாய்க்காலில் ஓடும் தெளிந்த நீராய்!அத்தனை பதிவும் அருமை!

தொடருங்கள்... தொடருகிறோம்.
//

நன்றிங்க!

//வானம்பாடிகள் said...
பழமை கோபம் புதுமை:)
//

பாலாண்ணே, வணக்கம், நன்றி!

@@நிகழ்காலத்தில்...

அவ்வ்வ்வ்வ்வ்........

@@ஈரோடு கதிர்

நன்றிங்க மாப்பு!

@@ச.செந்தில்வேலன்

சிட்டெறும்பு ஆத்தோட, ஊர்ப்பழமை நம்மோட... இஃகி!

//பிரபாகர் said...
அருமைங்க!
//

சிங்கை அண்ணே, நன்றிங்க!

@@Sangkavi

இது இந்த நாள் ஞாவகமுங்கோ!

//செல்வநாயகி said...
welcome back:))
//

Thank You!

//Seemachu said... //

இஃகி, நன்றிங்க ஐயா!

//இய‌ற்கை said...
ரொம்ப நல்லாயிருக்குங்க‌:-)
//

நன்றிங்க!

//தாராபுரத்தான் said...
மனது வலித்திருக்குமே.
//

நெம்ப!

//ஆரூரன் விசுவநாதன் //

அழகாகக் கூறி இருக்கிறீர்கள்!

// Mahesh said... //

நம்மூர் அண்ணா, நன்றிங்கோ!

S.Muruganandam said...

//வண்டி வீட்டில் இருந்து புறப்பட்டது. ஊரில் இருக்கும் மாற்றங்களை எல்லாம் பார்த்து வியந்தபடி அந்தியூர் எல்லையைக் கடந்தான். போகிற வழியில் விண்ணைத் தொடும் காற்றாலைகள்; மானாவாரிப் பூமியாக இருந்த நிலத்தில் எல்லாம் சொட்டு நீர்ப் பாசனத்துடன் தென்னந்தோப்புகள்; பார்க்கப் பார்க்கப் பரவசமுற்றான்.//

ஆமாங்க நம்ம ஊரெல்லாம் எப்பிடி மாறிப் போச்சுங்க.

ரொம்ப நல்லா எழுதறீங்க.

Paleo God said...

ரொம்ப ரசிச்சேன்..அருமையான நடை.:) அனுபவிப்பு இருந்தா மட்டுமே இப்படி எழுதமுடியும். ::))

மரகதம்.:))

கயல் said...

அருமை! வார்த்தைகளே இல்லை பாராட்ட‌!

நசரேயன் said...

நல்லா இருக்கு அண்ணே

Anonymous said...

ஊர் போயிட்டு வந்து இந்த மாதிரி விஷயங்களைச்சொல்லுவீங்கன்னுதான் எதிர்பாத்தனுங்க :)

மாதேவி said...

நிகழ்வுகளைச் சொல்லும் விதம் அருமை.

க.பாலாசி said...

//”திருமணமாகிக் குறுகிய காலத்திலேயே வாழ்க்கையை இழந்தவளது முகத்தைப் பார்க்கக் கூடிய திராணி இல்லாமல், இவளை இத்தனை நாளும் மறந்தவன் போலவே நடித்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோமே?” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன், சிநேகிதிக்கு மறுவாழ்வு தந்த அந்த மனிதனின் யதார்த்தமான, கனிவான பேச்சில் கரைந்தவனானான். //

ஆனாலும் சிலநேரத்துல இந்தமாதிரி உறவுகளை நெனக்கிறப்ப கண்ணு கலங்காம இருக்காது. அந்த மனுசனும் நல்லவருதான்.

பழமைபேசி said...

@@Kailashi
@@ பலா பட்டறை
@@கயல்
@@நசரேயன்
@@மாதேவி

நன்றிங்க!


// சின்ன அம்மிணி said...
ஊர் போயிட்டு வந்து இந்த மாதிரி விஷயங்களைச்சொல்லுவீங்கன்னுதான் எதிர்பாத்தனுங்க :)
//

ஆகா... நீங்க நீங்கதானுங்....

//க.பாலாசி//

நெம்பக் கரெக்ட்!

Unknown said...

பழமை பழசானாலும் இளசா வெட்டி போட்ட வெண்ட காயை பபோல
நறுக்ந றுக் கவி தை சுருக்குனுஇருந்தது ......... chitram