9/02/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 8

ஓரெழுத்து நடையில் ஓரங்க நாடகம். . . . . . . . . . .

"மீ"

"வா"

"பை"

"வை"

"ஊ"

"து"

"சீ"


"போ"

வணக்கம்! நாம கவி காளமேகத்தின் தாக்கங்ற தலைப்புல, சித்ரகவி வகைகள்ல பல தரப்பட்ட கவிதைகள் எழுதுற முயற்சி தொடர்ந்துட்டு இருக்கு. நீங்க இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிக்கலைன்னா, அதுகளை மொதல்ல படிச்சுட்டு வந்தா மேலும் சௌகரியமா இருக்குங்றது, எம்மோட தாழ்மையான எண்ணம். தினமும் பாட்டுகளையே பாத்துட்டு வந்தா சலிப்பா இருக்கும்னு இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா, ஓரெழுத்து ஓரங்கநாடகம்.

ஆமாங்க. அந்தக் காலத்துல எல்லாம், தமிழ்ப் புலவருங்க சத்திரம், கோயில், அரசவை இந்த மாதிரி பொது இடங்கள்ள ஒன்னு கூடும் போது, அவங்களுக்குள்ள பலவிதமான இலக்கியப் போட்டி வெச்சி, போட்டி போடுவாங்களாம். அந்த வகைல இதுவும் ஒரு வகை. ஒருத்தர் ஓரெழுத்து நாடகம், ஓரெழுத்துப் பாட்டு இப்படி சொல்ல, அடுத்தவர் அதுக்கு உண்டான அர்த்தத்தை சொல்லணும். சுவராசியமா இருக்குமாம். அது மட்டும் இல்லைங்க, கூடி இருக்குற மத்தவங்களும் ஆர்வமா கலந்துக்குற அளவுக்கு இலக்கிய ஞானம் இருந்ததுன்னும் சொல்லுறாங்க.

சங்ககாலத்துல, தமிழ் மொழி பேசுறவங்க எண்ணிக்கை வெறும் பதினஞ்சுல இருந்து இருவது இலட்சம்னு ஒரு யூகததுல சொல்லுறாங்க. அப்பவே செந்தமிழைப் பின்னு பின்னுனு பின்னி இருக்குறாங்க பாருங்க. சரிங்க, இப்ப மேல சொன்ன ஓரங்க நாடகத்தோட உரையப் பாக்கலாங்க:

மீ: மேன்மையானவரே, உம்மைக் காண ஓடோடி வந்தேன். (மீ: மேன்மை)

வா: வாருங்கள், உம்மைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.(வா: வாருங்கள்)

பை: இதோ "பை". இதில் உங்களுக்குப் பொன்னும் பொருளும் அரசர் கொடுத்து அனுப்பி உள்ளார்.

வை: அங்கு வையுங்கள். மிகவும் உவகை கொள்கிறேன்.

ஊ: பசியாற, ஊண் உளதா? (ஊ: ஊண், உணவு)

து: உண்ணுங்கள். உமக்கு உபசரிப்பது எம் பாக்கியம்.(து: உண்டல்)

சீ: நித்திரை வருகிறது! உண்டதால் நித்திரை கொள்ள இருப்பிடம் செல்ல வேண்டும். (சீ: நித்திரை)

போ: தாராளமாகப் போகலாம். உங்கள் சித்தம், என் சித்தம்.

ஒரு எழுத்துல இவ்வளவு அர்த்தம் இருக்கானு யோசிக்கக் கூடாது. அங்க அசைவு(body language)களோட, அந்த ஒரு எழுத்துக்கான பொருளையும் சேத்துப் பாக்கணும். அப்படிப் பாக்குறப்ப, இந்த ஓரங்க நாடகம் முழுமையா இருக்கும், குடுத்து இருக்குற உரைநடையும் பொருந்தும்.

(.........இன்னும் வரும்........)

5 comments:

சிக்கிமுக்கி said...

புதுமையான (பழைய) முயற்சி!

பாராட்டுகள்!

தொடர்ந்து எழுதுக!

Mahesh said...

நல்லாத்தான் இருக்கு....ஆனா சில சந்தேகங்களும் வருது...

1. அங்க அசைவுகளோட சொல்றதா இருந்தா, இந்த ஒரு எழுத்துக் கூட அவசியம் இல்ல. வாய் பேச முடியாதோர் மாதிரி சைகையிலேயே பேசிக்கலாம்.
2. அர்த்தம் இல்லாத ஓசைகளைக் கூட அங்க அசைவு மூலம் புரிய வெச்சுரலாம்.

ம்ஹூம்... எனக்கு புரியல...

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//சிக்கிமுக்கி said...
புதுமையான (பழைய) முயற்சி!

பாராட்டுகள்!

தொடர்ந்து எழுதுக!
//
பாராட்டுகளுக்கு மிக்க நன்றிங்க!!

பழமைபேசி said...

//
Mahesh said...
நல்லாத்தான் இருக்கு....ஆனா சில சந்தேகங்களும் வருது...

1. அங்க அசைவுகளோட சொல்றதா இருந்தா, இந்த ஒரு எழுத்துக் கூட அவசியம் இல்ல. வாய் பேச முடியாதோர் மாதிரி சைகையிலேயே பேசிக்கலாம்.
2. அர்த்தம் இல்லாத ஓசைகளைக் கூட அங்க அசைவு மூலம் புரிய வெச்சுரலாம்.

ம்ஹூம்... எனக்கு புரியல...
//

மகேசு,

நீங்க கேட்டு இருக்குற கேள்விக, தகவல் பரிமாற்றம்(communication) பத்தின கேள்விக. அந்தக் கோணத்துல பாத்தா, நீங்க கேக்குறது சரி.

ஆனா, இங்க நாம பாக்குறது நாடகக்கலை. வசனகர்த்தா வசனம் எழுதித் தர, நடிகன் அதை அப்படியே வாசிக்குறப்ப காட்சி
முழுமை அடையாது. தேவையான அளவு அங்க அசைவும், வசன உச்சரிப்புல ஏற்ற இறக்கமும் இருந்தாத்தான் அது முழுமை
அடையும். அதத்தான் நான் சொல்ல வந்தேன். ஒரு வேளை, நான் அந்த குறிப்பைச் சொல்லாம இருந்து இருந்தா, இந்த சந்தேகம்
வந்து இருக்காதுன்னு நினைக்குறேன்.

ஆனாலும், நீங்க இப்படிக் கேக்குறதுதான பதிவுக்கு மேலும் சிறப்பைக் கூட்டுது. அந்த வகைல,
உங்களுக்கு நொம்ப நன்றி! உங்களை மாதிரி வாசகரை அடையறது எம் பாக்கியம்!!