பள்ளத்துல முள் பொறுக்க நீ வருவே!!
ஓடையில துணி தொவைக்க நீ போவே!
ஓடக்கல் பொறுக்க நான் வருவேன்!!
சங்கத்துல பால் ஊத்த நான் போவேன்!
கோயல்ல விளக்கு வெக்க நீ வருவே!!
தையக்காரன்கிட்ட துணி தெக்க நீ போவே!
தச்சங்கிட்ட கீல் வாங்க நான் வருவேன்!!
கண்ணடக்கம் வாங்க நான் போவேன்!
பொன்னரளி பொறிக்க நீ வருவே!!
கொடுமுடித் தீர்த்தம் பாக்க நீ போவே!
நீநிக்க இடஞ் செய்ய நான் வருவேன்!!
பூளைப்பூவு வாங்க நான் போவேன்!
கோலமாவு வாங்க நீ வருவே!!
கோதும்பி அரைக்க நீ போவே!
தவுடு வெலை கேக்க நான் வருவேன்!!
அறுவடையின்னு மக்கிரி வாங்க நான் போவேன்!
பொடைக்க மொறம் வேணுமின்னு நீ வருவே!
சுண்டப்பானை வாங்கியாற நான் போவேன்!
தீபம் வெக்க விளக்கு வாங்க நீ வருவே!!
தூரிகட்ட கயிறு வாங்க நீ போவே!
பட்டம்வுட கைநூலு வேணுமின்னு நான் வருவேன்!!
காய்ச்சலுன்னு செறகடிக்க நான் போவேன்!
கணுக்கால்ச் சுளுக்குன்னு நீவியுடச்சொல்லி நீ வருவே!!
உன்ற வயசு பதிமூணு
என்ற வயசு பதினாலு
பார்க்காத நாளில்லை
நெனைக்காத பொழுதில்லை
கடைசி வரைக்கும்
ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!
உள்ளத்தில் நீங்காச் சுடர்கள், எங்கிருந்தாலும் வாழ்க!





