தமிழ்நாட்டின் தொன்மை, சங்ககால மன்னர்களின் இருப்பு, தமிழ்மொழியின் எழுத்து வடிவம் குறித்த வரலாற்றுப் புரிதலில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய சான்று மதுரை மாங்குளம் கல்வெட்டாகும். வரலாற்றறிஞர்களால் "தமிழ் கல்வெட்டியலின் தாய்" என்று போற்றப்படும் இக்கல்வெட்டு, சங்க இலக்கியங்கள் வெறும் கற்பனையல்ல, அவை உண்மையான வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை என்பதை உலகிற்கு முதன்முதலில் நிறுவிக்காட்டியதும் இதுதான்.
மதுரையிலிருந்து வடகிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாங்குளம் என்ற கிராமத்தின் 'கழுகு மலை' (ஓவமலை) என்ற குன்றில் இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இக்குன்றில் இயற்கையாக அமைந்த குகைத் தளங்களில், சமண முனிவர்கள் தங்கி வேள்வி புரிதலுக்காகப் பாறைகளைச் செப்பனிட்டுச் செய்யப்பட்ட 'கற்படுக்கைகள்' பல உள்ளன. மழைநீர் குகைக்குள் வராமல் இருக்கப் பாறையின் விளிம்பில் அகழி வெட்டப்பட்ட அமைப்பும் இங்குள்ளது. இந்தத் தலைமாட்டுப் பகுதியில்தான் பழமையான தமிழ்-பிராமி எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் ஆறு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டுகளை முதன்முதலில் 1882-ஆம் ஆண்டு ராபர்ட் சீவெல் என்ற ஆங்கிலேய அதிகாரி கவனித்தார். பின்னர் 1906-இல் கல்வெட்டறிஞர் வி. வெங்கய்யா இதனை ஆய்வு செய்தபோது, இது அசோகர் காலத்து பிராமி எழுத்து வடிவில் இருந்ததால், 'பாலிய்' மொழியில் எழுதப்பட்டிருக்கலாமெனத் தவறாகக் கருதினார். ஆனால், 1924-இல் புகழ்பெற்ற கல்வெட்டறிஞர் கே. வி. சுப்பிரமணியம், "இது பாலிமொழி அல்ல; பிராமி எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்ட தூய தமிழ் மொழி (தமிழி)" என்பதை மிகச்சரியாக வாசித்து உலகிற்கு நிறுவினார். அதன் பிறகு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் இதன் காலத்தை அறிவியல் பூர்வமாக கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 2-ஆம் நூற்றாண்டு வரை என்று உறுதி செய்தனர்.
இங்குள்ள கல்வெட்டுகள் அனைத்தும் சமண முனிவர்களுக்குத் தமிழகத்து மன்னர்களும் வணிகர்களும் படுக்கைகள்(பள்ளி), தங்குமிடங்களைக் கொடையாக அளித்ததை விவரிக்கின்றன. இதில் மிக முக்கியமான முதல் கல்வெட்டு, "கணிய் நந்த அஸிரியஇ குவ் அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பணஅன் கடல்அன் வழத்திய் கொட்டுப் பித்தஅ பளிஇய்" என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், 'கணிய நந்தஸிரிகுவன்' என்ற சமண முனிவருக்கு, சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பணியாளும், அவரது உறவினருமான கடலன்வழுதி என்பவர், பாறையைக் குடைந்து இந்தப் பள்ளியை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பதாகும். மற்ற கல்வெட்டுகள் அரச குடும்பத்தினரின் கொடைகளையும், 'நிகமம்' எனப்படும் வணிகக் குழுக்கள், முத்து வணிகர்கள் அளித்த கொடைகளையும் குறிப்பிடுகின்றன.
மொழியியல் ரீதியாக இக்கல்வெட்டு மிக உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்கே உரிய சிறப்பு எழுத்தான 'ழ', கல்வெட்டுச் சான்றுகளில், இதுவரையிலும் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில், முதன்முதலில், இந்த மாங்குளம் கல்வெட்டில்தான் (நெடுஞ்செழியன், வழத்திய்). மேலும், வட இந்திய பிராமி எழுத்துக்களில் இல்லாத, தமிழின் சிறப்பொலிகளான ள, ற, ன, ழ போன்ற எழுத்துக்களை எழுதத் தமிழர்கள் தனியாகக் குறியீடுகளை உருவாக்கிப் பயன்படுத்தியதற்கு இக்கல்வெட்டே மிகப்பழைய சான்றாகும். சமூக ரீதியாக, பாண்டிய மன்னர்கள் வைதீக சமயங்களைப் பின்பற்றினாலும், சமண முனிவர்களுக்கும் ஆதரவளித்துக் கொடைகள் வழங்கியுள்ளனரெனும் உயரிய சமய நல்லிணக்கத்தையும், அக்காலத்துச் சிறந்த வணிகக் கட்டமைப்பையும் இது பறைசாற்றுகிறது.
சுருக்கமாகக் கூறின், தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகளிலேயே மிகவும் தொன்மையானது மாங்குளம் கல்வெட்டுதான். மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கள் போற்றும் 'பாண்டியன் நெடுஞ்செழியன்' வெறும் கற்பனைப் பாத்திரம் அன்று; அவன் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே மதுரையை ஆண்ட வரலாற்றுப் பெருமகன் என்பதை இக்கல்வெட்டு சமகாலச் சான்றாக நின்று நிறுவுகின்றது. தமிழர்களின் எழுத்து மரபையும், சங்ககால வரலாற்றையும் உலக அரங்கில் நிலைநிறுத்திய மாங்குளம் கல்வெட்டு தமிழினத்தின் அழியாத வரலாற்றுச் செல்வமாகும்.
நாம் நேர்மையாக எழுதுகின்ற எதுவும் எதிர்காலத்தின் ஆவணம்தான்!
No comments:
Post a Comment