4/18/2020

உருகுவேக்காரனின் உருக்கம்



அன்புள்ள அத்தைக்கு,  புயோனா தியாசு. அம்மா சொன்னாள்.  ‘நாங்கள் எல்லாம் அங்கேயே இருந்திருக்கலாம். வரலாற்றுப் பிழை செய்து விட்டோம்’ என்று நீங்கள் சொல்லியதாய்ச் சொல்லி வருத்தம் கொண்டிருக்கிறாள்.

அத்தை, அந்த மாலைப் பொழுது நினைவிருக்கின்றதா? நான் அந்த உருளைக்கிழங்கு ஒன்றைத் தின்று கொண்டிருக்கின்றேன். அம்மா எதோ நறுவிசு செய்து கொண்டிருக்கின்றாள். நீயும் பாட்டியும் அம்மாவிடம் எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். எங்கிருந்தோ என் அப்பா, உங்கள் அண்ணன் வருகின்றார். பணம் கேட்கின்றார். நீங்கள் இருவரும் இல்லையெனக் கைவிரிக்கின்றீர்கள். அம்மாவை நையப் புடைக்கின்றார்.

என்னைக் காவி எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று அடைக்கலம் கேட்கின்றார். எல்லாரும் ஒதுங்கி ஓடுகின்றனர். நடந்தே வந்தோம் பாட்டியிடம். டாக்குரெம்போவில் இருக்கும் மாமனுக்குத் தகவல் போகின்றது. உயிரைப் பணயம் வைத்து மெக்சிக்கோ அனுப்பி விடுகின்றார். அங்கிருந்து ஊர் ஊராய்த் திரிந்து உயிரைக் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து சேர்ந்தோம். கால்களில் குத்திய முட்களின் எண்ணிக்கை தெரியாது. உடம்பில் கடித்த பூச்சிகளின் எண்ணிக்கை தெரியாது. ஆனால் அம்மாவிற்கு விழுந்த அடிகள் அத்தனையையும் நான் அறிவேன் அத்தை. மொத்த நாடும் எங்களை ஒதுக்கித் தள்ளியதுதானே?

வகுப்பில் விட்டார்கள். வயதைக் கருத்திற்கொண்டு மூன்றாம் வகுப்பில் விடப்பட்டேன். அடுத்த குழந்தையிடம் பேச முடியவில்லை. மொழி தெரியாது. டீச்சர் பட்லர் பியர்சு எனக்கு இன்னுமொரு அம்மாவாகிப் போனாள். படங்களைப் பார்த்துப் படிக்கச் சொன்னாள். எனக்கு மட்டும் டிவியில் ரைம்சு போட்டுக் காண்பித்தாள். ஒவ்வொரு சக மாணவரிடமும் பேசி, ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை எழுதித் தரச் சொன்னாள். அதுவும் பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகுதான் பேசிக் கட்டுரை எழுத வேண்டும். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஏன் அத்தனையும் பையன்களிடம் பேசியதாய் இருக்கின்றது? பையன், பொண்ணு என மாற்றி மாற்றி இருக்க வேண்டுமெனக் கடிந்து கொண்டாள். தயங்கித் தயங்கி பெண் பிள்ளைகளிடம் பேசினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது பெண்பிள்ளைகளிடம் கட்டுரை எழுதுவதுதான் மிகவும் எளிதென்று. அப்படியாக ஒவ்வொரு வாரமும் எனக்கு புதிது புதிதாக ஒரு நண்பர் என பல நண்பர்கள் கிடைக்கப் பெற்றேன். அத்தை, நினைவிருக்கின்றதா? என்னைச் சக உறவுக்காரப் பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டியதும், அதை நீங்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, என் அம்மா அக்கற்களைத் தம்மீது வாங்கிக் கொண்டதும்??

நான் இப்போது ஏழாவது வகுப்பு படிக்கின்றேன் அத்தை. அன்றாடம், நாங்கள் எல்லாரும் சூம் வீடியோகாலில் பேசிப் பழகி, பாடங்கள் படித்துக் கொண்டிருக்கின்றேன். அம்மா, ஒரு மூத்தோர் இல்லத்தில் துப்புரவு வேலை பார்க்கின்றாள். மரங்கள் சூழ இருக்கும் ஒரு வீட்டில் குடியிருக்கின்றோம். அம்மாவுக்கு கூடுதல் நேர வேலை. அந்த இல்லத்தில் இருக்கும் 175 மூத்தோருக்கும் அம்மாதான் செல்லப்பிள்ளையாம். கொரொனா வைரசு எங்களையோ, இந்த அமெரிக்காவையோ ஒன்றும் செய்துவிடாது அத்தை. மீண்டுவிடுவோம். சூழ்நிலையை மாற்ற முடியாவிட்டால், சூழலுக்கேற்றபடி எங்களை நாங்கள் மாற்றிக் கொள்வோம். இங்குள்ள மனிதர்கள் எல்லாரும் மண்ணின் பிள்ளைகள். மண்ணின் துகள்கள் சில மண்ணுக்குள்ளே போகலாம்தான். ஆனால் அதே மண்ணிலிருந்து அதே மண்ணின் பிள்ளைகளாய்  மனிதத்தோடு நெடுமரமென முளைத்துக் கொண்டே இருப்போம் அத்தை. எங்கள் இருப்பில் நாங்கள் மகிழ்ந்திருக்கின்றோம். அடியோசு!!     அன்புடன், பெண்ட்டில் பெண்ட்டோசு.

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

No comments: