5/26/2019

பொதுப்புத்தி

சமூகத்தில், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளைச் சார்ந்த சமூகத்தில் பொதுப்புத்தி என்பது எங்கும், இடையறாது விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அதற்கு நமது தமிழ்ச்சமூகம், நாம் கடைபிடிக்கின்ற அல்லது அண்டியிருக்கின்ற சமயமும் விலக்கானது அல்ல. இன்னும் சொல்லப் போனால், நாம் சார்ந்து வாழும் சமுகப்பண்பாட்டிலும் சமயத்திலும்தான் பொதுப்புத்தியாலான கட்டமைப்பின் ஆணி வேர்கள் வலுவாக விரவிப் பரவியிருக்கின்றன. இத்தகைய வேர், என்னிலும் இருக்கின்றது; உங்களிலும் இருக்கக்கூடும். அதனைப்பற்றிய சிந்தனைக்கு வெளிச்சம் பாய்ச்சுவதைத்தான் இலக்காகக் கொண்டு இவ்வாக்கத்தைத் தொடர்கின்றேன்.
அண்மையில் எனது ஃபேசுபுக் கணக்கின் நிலைத்தகவல் வரிசையில் மீண்டும் மீண்டும் ஒரு காணொலி முகப்பில் வருவதும் போவதுமாக இருந்து கொண்டே இருந்தது. காணொலியின் தோற்றப்படத்தில் ஒரு பெண்மணியின் முகம் தெரிந்தது. ஏதோ உள்ளோங்கிய ஊர் ஒன்றின் பேருந்துநிலையம், சாராயக்கடை போன்றதொரு இடத்தில் அப்பெண் நின்று கொண்டிருப்பதாகப்பட்டது நமக்கு. ஓரிரு நாட்கள் நான் அதனைப் புறந்தள்ளிவிட்டுக் கடந்து சென்றேன். மூன்றாவது அல்லது நான்காவது நாளிலும் அது மீண்டும் முன்வரிசையில் வந்து நின்றிருந்தது. திரும்பத் திரும்ப இது ஏன் முகப்பு வருகின்றது? அந்தக் காணொலியின் பின்னூட்டத்தில் தொடர்ந்து கருத்துகள் இடப்படுவதால் வருகின்றது. இப்போதும் எனக்கு காணொலியைக் காண மனம் இடம் கொடுக்கவில்லை. என்னதான் கருத்துரைக்கின்றார்கள் எனச் சென்று பார்த்தேன். நண்பர்கள் எல்லாரும் ஓரிரு சொற்களில் வியப்பையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு நானும் சென்று காணொலியைப் பார்க்கத் தலைப்பட்டேன். மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டியது அப்பெண்மணியின் இசைவெள்ளம். அவ்வளவு அருமையான குரலில், பாடுவதற்குக் கூடுதல் திறம் தேவைப்படுகின்ற பாடலைப் பாடுகின்றார் அவர். எதோவொன்று நம்மைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றது. திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கின்ற அந்த அசல் பாடலை நாம் திரும்பத் திரும்பக் கேட்டதில்லை. அப்படியானால் ஏதோவொன்று இக்காணொலியைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கின்றது, அது என்ன என்கின்ற வினாவானது நம்மை அடுத்தடுத்த தருணங்களில் துரத்திக் கொண்டிருந்தது.
காணொலியைப் பார்க்கத் துவங்கிய முதல் விநாடியிலேயே, அப்பெண்மணியிடமிருந்து வெளிப்படும் இசைநயம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இசையின்நிமித்தம் வியப்பு மேலிடுகின்றது எனக் கருதுவோமானால், நாம் அப்பாடலை எத்தனையோ முறை கேட்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் எழாத வியப்பு இப்போது ஏன் எழுகின்றது எனும் வினா முளைக்கின்றது. காரணம் வேறொன்றுமில்லை. இப்படியான எளிய தோற்றத்தில், உருவத்தில், உடையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்னின்னதுதான் தெரியும்; ”படிப்பு, இசை, கலை” முதலானவையெல்லாம் எட்டாக்கனிகள் அல்லது அவை அவர்களுக்கானது அல்ல என்கின்ற பொதுப்புத்தி நமக்குள் விதைக்கப்பட்டிருக்கின்றது. அப்படியான பொதுப்புத்தியில் புடம் போடப்பட்டிருக்கின்ற நம்மால் அதைப் பார்த்ததும் ஏற்படுகின்ற அதிர்ச்சியானது வியப்பாய் இடம் பிடிக்கின்றது. இசைநயமும் இருக்கப் பெறவே, அதைத்தொட்டு செவிமடுக்க விழைகின்றோம். நம்மிலும் அப்பெண்மணி வர்க்கரீதியாக, சாதிரீதியாக, படிப்புரீதியாக, பொருளாதாரரீதியாக என எல்லாப் படிநிலைகளிலும் தாழ்ந்தவர் என்கின்ற எண்ணம் நம் ஆழ்மனத்தில் பொதுப்புத்தியாய் குடிகொண்டிருக்கின்றது. எனவே அப்பெண்மீது கழிவிரக்கம், பச்சாதாபம் பிறக்கின்றது. இதெல்லாமும் மாந்தத்தன்மைக்கு உகந்த பண்புநலன்கள் அல்ல. கட்டம் கட்டுதல், புறந்தள்ளுதல், நிராகரித்தல் முதலானவற்றின் தோற்றுவாய் நமக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இத்தகு பொதுப்புத்திதான். ஏன், எளிய, அத்தகைய பெண்களுக்கு இசைஞானம் இருக்கக் கூடாதா? ஊர்களில், வயல்களில், காடுகழனிகளில் இயற்கையின் போக்கில் அன்றாடமும் பாடல்களைப் பாடுபவர்கள்தானே? அப்படியிருக்க, அப்படியான ஒரு பெண்ணின்பாற்பட்டுப் பாராமுகம் கொள்வது சரியா? இப்படியான பொதுமைப்படுத்தல்கள் எங்கும் நிறைந்துள்ளன.
பொதுவாக, பொதுமைப்படுத்தற்பண்பு என்பது இருவகைப்படும். முதலாவது, நாம் அறிந்தே மேற்கொள்வது. எடுத்துக்காட்டாக, ‘கூழை குடியைக் கெடுக்கும்; குட்டைக்கலப்பை உழவைக் கெடுக்கும்’ என்பது தமிழ்ப்பழமொழி. வழக்காறு. இதன்படி குட்டையாக, குள்ளமாக இருப்பவர்கள், தந்திரசாலிகளாக, தீயநச்செண்ணெம் உள்ளவர்களாக இருப்பார்கள் எனும் நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பது. சமூகமேம்பாட்டின்வழி, அத்தகைய எண்ணமானது பிற்போக்குத்தனமானது, ஆகவே அத்தகைய வழக்காற்றினை விட்டொழிக்க வேண்டுமென்பதும் எளிதில் வசப்படும். ஏனென்றால், பொதுமைப்படுத்தலின் தோற்றுவாயை நாம் வெளிப்படையாக அறிந்தே வைத்திருக்கின்றோம். இரண்டாவது வகையான, உள்ளார்ந்த பொதுமைப்படுத்தல் என்பதுதான் களைவதற்கு மிகவும் கடினமானதாகும். ஏனென்றால் அதன் உட்பொதிவு நமக்கு வெளிப்படையாகத் தெரிந்திராது. இத்தகு பண்புக்கான எடுத்துக்காட்டுத்தான் நாம் மேற்கூறிய காணொலி நிகழ்வாகும். சமூகத்தின் கண்களுக்கு எளிதில் அகப்படாத இத்தகு ஸ்டீரியோடைப்பிங், பொதுமைப்படுத்தல்களை நாம் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்துவதன் வழி மற்றவர்களுக்கும் அகக்கண்கள் திறவுபடும். நாட்டில் எத்தனை எத்தனை கோமதி மாரிமுத்துகளோ? அத்தகைய திறம்மிக்கவர்கள், அலுவலகங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதே அரியதானவொன்றாகவே இருக்கும்.அடுத்து, இப்படியான பொதுமைப்படுத்தல்கள் எப்படி நம்முள் புதைந்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
ஒருவர் வனமொன்றில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றார். நான்கைந்து யானைகள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன. நான்கு கால்களும் தளைகளின்றி விடுதலாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் அவை நான்கும் நிலையான இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றன. பம்மிப் பதுங்கிப் பதுங்கி அவற்றின் அருகே செல்லத் தலைப்படுகின்றார். அப்போதுதான் தெரிகின்றது அதன் முன்னங்கால்களில் இடக்காலில் காலைச்சுற்றியும் ஒரு பெரிய கயிறு சுற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் அக்கயிறு வேறு எதொனோடும் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. பல தப்படிகள் நடந்து செல்ல, யானைப்பாகன் ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிகின்றது. அவரிடம் பேச்சுக் கொடுக்கின்றார் இவர். எப்படி, யானைகள் அங்குமிங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே இருக்கின்றன எனக் கேட்கின்றார். அதற்கு பாகன் சொல்கின்றார், முன்னங்கால்களில் இருக்கும் கயிற்றுவளையத்தை நீக்கினால் அவை பலவாக்கிலும் செல்லத் தலைப்படுமென்கின்றார். அது எப்படியெனக் கேட்டமைக்குச் சொல்லத்தலைப்படுகின்றார் பாகன்.குட்டிகளாக இருந்த நேரத்தில் முன்னங்காலினைச் சுற்றி ஒரு கயிற்றுவளையல் இட்டு அவ்வளையலை கல், தூண் போன்றவற்றில் கட்டி வைத்துப் பழக்கியிருக்கின்றனர். அதன்படி, காலில் கயிற்றுவளையம் இருந்தால் நாம் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பது அவற்றின் பொதுப்புத்தியாகி விட்டிருக்கின்றது. வளர்ந்து வலுக்கொண்ட பெரியதாகி விட்டிருந்தாலும், நாம் கட்டப்பட்டிருக்கின்றோமெனும் பொதுப்புத்தியானது அவற்றுக்கே அறியப்படாமல் விதைக்கப்பட்டிருக்கின்றது. அப்படித்தான் நம்முள்ளும் எத்தனை எத்தனையோ பொதுப்புத்திகள், அதிகாரவர்க்கத்தால், ஆதிக்க விழைவுகளால் விதைக்கப்பட்டிருக்கின்றன. அத்தகையவற்றை உணரும் போதெல்லாம், ஒருவருக்கொருவர் அதன்நிமித்தம் தெரியப்படுத்திக் கொள்வதன் வாயிலாகவே நாம் அவற்றினின்று விடுதலை கொள்ள முடியும்.
மயில்களைப் பார்க்கும்போது மட்டுமின்றி போய்ப் பார்க்கும் போதும் சொல்லியாக வேண்டியிருக்கிறது, மயிலே, மயிலே, நீ எந்த மயிரானுக்கும் இறகு போடாதே!! -கவிஞர் ஜெயபாஸ்கரன்
ஏய் பல்லக்கு தூக்கி!
கொஞ்சம் நிறுத்து…
உட்கார்ந்து உட்கார்ந்து 
கால் வலிக்கிறது!! -கவிஞர் தாமரை

இப்படியான கவிதைகள் எல்லாம் நம்முள் உறைந்திருக்கும் பொதுப்புத்தியினை இடித்துரைக்கின்றன. நேரெதிராக, தமிழ் அமைப்புகளில், ஊடகங்களில் இடம் பெறும் பட்டிமன்றம், பேச்சரங்கம் போன்றவற்றிலெல்லாம் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டி அதனையே பொதுமைப்படுத்தி, கட்டி வைத்த யானைகளாக நாம் ஆக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் நாள்தோறும். பொதுமைப்படுத்தல்கள் உணர்ந்து கொள்ளப்பட வேண்டியது! பொதுமைப்படுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டியது!!
-பழமைபேசி.

No comments: