12/16/2019

கல்லூரிப்படிப்பு குறித்த கருத்தரங்கம்

வடகரொலைனா மாகாணத்தில் இருக்கும் கெரி நகரச் சமூகக்கூடத்தில், இளம் மாணவர்கள் நடத்திய கல்லூரிப்படிப்பு குறித்த கருத்தரங்கமானது டிசம்பர் 15, 2019ஆம் நாள் காலை பத்து மணிக்கு இடம் பெற்றது. முழுக்க முழுக்க கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுடன் பள்ளிக்கூட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்பதாலும், தேர்ச்சியுடன் கூடிய துவக்கப்பணிகளாலும் எதிர்பார்ப்பு வெகுவாக மிகுந்திருந்தது. நிகழ்ச்சியின் விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தபடியே, கருத்தாடற்குழுவில் 1. Samuel Eshun Danquah, Yale Univesity, 2. Aravind Ganesan, Georgia Tech, 3. Vinayak Ravichandran, NC State, 4. Srikar Nanduri, NC State, Park Scholar, 5. Keenan Powers, Duke University, 6. Katie Liu, University of Southern California, 7.TJ Nanugonda, UNC 8.Abhi Manhass, UNC 9.Suraj Rao, NCSSM ஆகியோர் பங்கு பெற்றிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கின், தீயணைப்புத்துறை வரம்பு (firecode occupancy) 172 பேர் என்பதாகும். அதாவது, அந்த அறையில் 172 பேருக்கும் அதிகமாக இருந்தால் அது விதிமுறை மீறல். இதெல்லாம் உணர்ந்து செயலாற்றக் கூடிய தேவை இருக்கின்றதா? அந்த அளவுக்கு sensitivity உணர்வுவயப்பட வேண்டுமா?? வேண்டும். அதுவும் குறிப்பாக அமெரிக்க மண்ணில் வாழும் இளையோருக்கு அது முக்கியமாகக் கருதப்படக் கூடியதுதான். ஆகவே, முன்கூட்டியே கூட்டத்திற்கான வருகைப்பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்படி, 172 இடங்களும் கைப்பற்றப்பட்டுவிட்டதால் பதிவு செய்யாதோர் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். ”எவ்ளோ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் வெளிய நில்லு!” பள்ளி மாணவர்களிடம் இப்படி அப்படி என்பதற்கு இடமில்லை. நான் பார்த்துச் சிரித்தபடியே வெளியே நின்று கொண்டிருந்தேன். சமூகக்கூடத்தில் நிகழ்ச்சி இடம் பெறும் அரங்குக்கான அறிவிப்புப்பலகை இருந்தும், நிகழ்ச்சிக்குக் காலத்தாழ்ச்சியாக வந்து விட்டோமோ, சரியான இடம் கிடைக்காமற் போய்விடுமோ எனும் நினைப்போ அல்லது பாராமுகமோ என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உள்நுழைந்தவுடன், பதற்றத்துடன் இங்குமங்கும் பார்ப்பவர்களை அகச்சிரிப்போடு அணுகி அறை அங்கேயெனச் சொல்லிக் கொண்டிருந்தேன். உமக்கு ஏனிந்த வேலை என்பதாக நீங்கள் நினைப்பதும் சரிதான். இஃகிஃகி, நிகழ்ச்சிக்கு பதிந்தவர்களில் என் பெயர் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இஃகி. அங்கே உள்நுழைய முற்பட்டு மொக்கை வாங்க வேண்டுமாயென்ன? நான் நிகழ்ச்சிக்கு வரும் நண்பர் ஒருவருக்காகக் காத்திருந்தேன். காத்திருக்கும் அந்த நேரத்தில்தான் நம்மாலான ஒரு தொண்டு. அப்படி அனுப்பப்பட்ட சிலர் பதிந்திருக்கவில்லை. மீண்டும் என்னிடமே திரும்பி வந்தனர். பொறுமையாகக் காத்திருங்கள். எப்படியும் பதிந்தவர்களில் சிலர் வராமற்போக வாய்ப்புண்டு என்று ஆறுதல் அளித்தேன். அதன்படியே அவர்களும் காத்திருந்தனர். மிகச்சரியாகப் பத்து மணிக்கு, வராதவர்களின் உள்நுழைவுச்சீட்டு காத்திருந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு இடமளிக்கப்பட்டது. அதுபோக ஓரிரு உபரி இடங்கள் இருந்ததால் என்னையும் உள்ளே வருமாறு அழைத்தனர். வந்திருந்தோர் அனைவருக்கும் குடிக்கத் தண்ணீர் போத்தல் தரப்பட்டு உட்கார வைக்கப்பட்டனர். இஃகி, நீங்கள் நினைத்த இடத்தில் உட்கார முடியாது. உள்ளே வருபவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். மற்ற வரிசைகள் கயிற்றால் மறிக்கப்பட்டு இருந்தன. என்னோவொரு ஒழுங்குடா சாமீ?! நிகழ்ச்சி துவங்கும் போது எல்லா வரிசையும் நிரம்பி விட்டது. ஒருவரை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் சூழல்தான். அந்தச் சூழலைக் கண்டவுடனேயே, உள்ளே நுழைந்தவருக்குள்ளும் ஒரு மகத்தான ஒழுங்கு பிறந்து விடுகின்றது. 172 பேர் இருக்கும் இடத்தில், 2 மணி நேரத்தில் நான்கு முறை அலைபேசி ஒலிப்புச் சத்தம் கேட்க முடிந்தது. சத்தம் கேட்டதுமே அலைபேசிக்கு உரியவர்கள் வெட்கி நாணிப் போயினர். ஒரே ஒருவர்மட்டும், மழை பொழிந்த எருமைமாடு போல அலைபேசியில் அலோ சொல்லிப் பேச முற்பட்டார். அவருக்கு ஐம்பத்தைந்து அறுபது வயதிருக்கலாம். நிகழ்ச்சியின் ஐந்து மணித்துளி அறிமுகவுரைக்குப் பின், கருத்தாடற்குழுவினர் அரங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்டனர். முதல் ஒருமணி நேரம், கல்லூரிப் படிப்புக்கான ஆயத்தப்பணிகள், விண்ணப்பம், கல்லூரியில் இடம் பெறும் கூறுகள், பாடத்திட்டம், தெரிவு செய்வது போன்றவை குறித்து வரிசையாக எடுத்தியம்பினர். குழுவில் இருந்த மாணவர்களின் ஊக்கம், எளிமை, அணுக்கம் முதலானவை வந்திருந்தோரிடம் நெருக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தது இளைய சமுதாயத்தின் மனப்பாங்கினையும் ஆற்றலையும் அமெரிக்கப் பண்பினையும் வெளிப்படுத்தியது. குழுவில் இடம் பெற்றிருந்தவர்களுள் ஒருவர், ஒழுக்கமின்மை நடவடிக்கைக்காகப் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர். மற்றொருவர், honor code violation, முறைகேட்டுப் புள்ளி நடவடிக்கைக்கு ஆளானவர். இத்தகைய நடவடிக்கைகள், அந்தந்த மாணவர்களின் சான்றிதழில் குறிப்பிடுவது அமெரிக்க முறைமையாகும். அப்படியான குறிப்பீடுகள் இருப்பது கல்லூரிச் சேர்க்கையின் போது கவனத்தில் கொள்ளப்படும். அப்படியானவர்கள் கட்டணமில்லாப் படிப்புக்கு தெரிவாகிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். அது எப்படி என்பதை, ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாக விளக்கியது மனிதமாண்புக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. காய்ச்சலும் தலைவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும். கோடைவிடுமுறையில் வீட்டுப்பாடம் கொடுப்பது வழமை. அப்படித்தான், ஏதோவொரு வீட்டுப்பாடம். பாடத்துக்குரிய சூத்திரமொன்று புத்தகத்தில் சரியாக இருந்திருக்கின்றது. ஆனால், விடுமுறைக்காலம் என்பதால் இணையத்தில் தேடி எடுத்து அதைப் பாவித்து வீட்டுப்பாடம் செய்து கையளித்து விட்டாள் மகள். கிட்டத்தட்ட ஒன்னரை மாதம் கழித்து வீட்டுக்குத் தொலைபேசி அழைப்பு. முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லி அறிவுறுத்தல். பதற்றம். அழுகை. மன அழுத்தம். சொல்லி மாளாது. அடுத்த நான்கு நாட்கள் கழித்து நள்ளிரவில் மின்னஞ்சல். தங்கள் பிள்ளையின் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதென. அந்த இரவிலும், உறங்கிக் கொண்டிருந்த அனைவரையும் எழுப்பி மகிழ்ந்தோம். வகுப்பில் ஏராளமானோர் அதேபோலச் செய்திருக்க, அத்தனை பேருக்கும் ஆசிரியர் முறைகேட்டுப் புள்ளி வழங்க, கடைசியில் ஆசிரியரே அறிவுறுத்தலுக்கு ஆட்பட்டுப் போனது பெருஞ்சோகம். முறைகேட்டில் ஈடுபடக் கூடாது; அறியாமையால் ஏதாகிலும் நேர்ந்து விட்டால், அதை எதிர்கொள்வதெப்படி என்பதை மாணக்கர்குழு விளக்கிய விதம் மிகவும் நன்று. வணிகம், பொருளாதாரம், மருத்துவம், பொறியியல் போன்ற பிரிவுகளில் எத்தகைய பிரிவினைத் தெரிவு செய்வது?, கல்வி உதவி பெற என்ன செய்ய வேண்டும்? கல்விக்கடன் போன்றவை குறித்தும் பேசினர். வீட்டுப்பிள்ளைகள், அவர்களின் ஒழுக்கம், படிப்பு, எதிர்காலம் முதலானவற்றின் நிமித்தம் நம்மவர்களுக்கு மிகுந்த கவலையும் பதற்றமும் இயல்பிலேயே ஏற்பட்டு விடுவது உண்டு. அவற்றையெல்லாம் தணிப்பதாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் பேசிவிட முடியாது. நாளெல்லாம் பல கட்டங்களாகப் பேசித் தெரிய வேண்டிய பொருள் இது. எனினும் அவர்கள் கொடுத்த தகவலும், அவர்களின் நடத்தையும் வந்திருந்த ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் ஒரு தெளிவையும் அளித்ததென்றே சொல்லலாம்.பிறிதொரு நிகழ்ச்சிக்காக, குறித்த நேரத்தில் அரங்கை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் அனைவரும் அரங்கை விட்டு வெளியே வந்தும், திடலின் ஒருபக்கத்தில் நின்றபடி, வந்திருந்த பெற்றோர் வினவிய வினாக்களுக்கு அந்த மாணவர்கள் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், உளமகிழ்ச்சியோடு பதிலளித்தும், தத்தம் அனுபவங்களை இயல்பாகச் சொல்லியும் அன்பாக அனுப்பி வைத்துக் கொண்டிருந்ததை எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆமாம். பிள்ளைகளிடம் கற்றுக் கொள்வோம்.கூட்டத்தில் வந்திருந்தோருக்கு சிறுதீனும் கொடுத்தீங்க பாருங்க. மிடீலடா பசங்களா. -பழமைபேசி.

1 comment:

Admin said...

Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in