6/28/2015

வயாகராப் பொரியல்









எடுத்துக் கொண்ட நேரம்: 25 மணித் துளிகள்

செயல்முறை:

தர்பூசணி வெளியோட்டினைத் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.

குடமிளகாய் ஒன்று நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். நான் பல்லாரி வெங்காயம் நறுக்கினேன். நான் ஒரு சோம்பேறி. சோம்பேறி என்பதை விட எங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லையென்பதே உண்மை.

பூண்டு, இஞ்சி நறுக்கி வைத்துக் கொள்ளவும். எல்லாமே தேவையான அளவுதான். ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

சீசு என்ப்படுகிற சுண்டக்காச்சி வடித்தெடுத்த கொழுப்பு கொஞ்சம். தயிர் ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளிச்சீவல், ஒரு பழம் நான் எடுத்துக் கொண்டது.

கொள்கலனை அடுப்பில் வைத்துச் சூடேற்றுக. பின்னர் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் போட்டு எண்ணெய் காய்ந்து விட்டதென உறுதிப்படுத்திக் கொள்க. சடச்சடவென்றால் காய்ந்து விட்டதெனப் பொருள். என்னைப் போன்ற மங்குனிப்பாண்டியர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியும்.

பிற்பாடு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், தக்காளி, தர்பூசணியோட்டுச் சீவல் ஆகியவற்றை வரிசையாகச் சற்று இடைவெளி விட்டு, கொள்கலனில் இட்டு, இட்டு, வதக்கவும்.

தற்போது சீசு/கொழுப்புச் சீவல் அல்லது முட்டையை உடைத்து இடவும். பின்னர் அந்த கிண்ணத்திலிருக்கும் தயிர் ஊற்றிக் கிண்டுக.

கிண்டியபின், கடையில் வாங்கின தூள் எல்லாம் தூ எனத் தூக்கி வீசிவிடவும். வீட்டில் செய்தது என்றால் மட்டும் பாவிக்கலாம். தேவையான அளவு மிளகாய்த்தூள் இடவும். மிளகாய்த் தூள் இல்லாவிடில் குறுமிளகுத்தூளாவது சிறிது இடுக. பின்னர், கொஞ்சமே கொஞ்சம் உப்பு இட்டு மிக மிதமான சூட்டில் ஐந்து மணித்துளிகள் மூடப்பட்ட கொள்கலனில் வேகவிடவும்.

தற்போது தர்பூசணிப் பொரியல் தயார். இது ஆண்மைப் பொரியல் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம், libido boost, இன்பயியல்பூக்கி எனப்படுகிற கனிமங்கள் பூசணியோட்டில் மிகுந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். Prostate, முன்னிற்சுரப்பி செய்ற்படுவதற்கான கனிமங்கள் மிகுந்திருப்பதாகவும், வைட்டமின் ஏ, சி என்பன இருப்பதாலும், கூடச் சேர்த்திருக்கிற இதர உள்ளீடான வெங்காயம், பூண்டு, மிளகாய் போன்றனவற்றிலும் இவை கணிசமான அளவு இருப்பதாலும் இப்பொரியலானது ஆண்மைப் பொரியலென மேற்குலகில் வர்ணிக்கப்படுகிறது.

http://www.healthline.com/health/food-nutrition/watermelon-rind-benefits

(ங்கொய்யால, சமைக்க ஆன நேரத்தை விட, இதை எழுதிப் பதிவற்கான நேரம் அதிகமாட்ட இருக்கூ?!)

No comments: