வணிக வளாகத்தில் நிறைய வருவோர் போவோர். அதில் நானுமொரு வருவோர் போவோர். எனக்கே கூட, அவர்களெல்லாரும் அவரவர் திசைகளிலிருந்து ஒருங்கே என்னைத் திரும்பிப் பார்த்தபோதுதான் தெரிய வந்தது நான் இருமியிருக்கிறேனென்று. இருமுவது குற்றமா? இயல்பாகத் தன்னையும் மீறி மெய் இயங்குகிறது. அதற்கு ஏன் இவர்கள் இப்படிப் பார்க்க வேண்டும். ஒருவிநாடியைச் சுக்குநூறாக்கினதில் கிடைக்கும் ஒரு தூள் அளவுகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவொரு அனிச்சையாய்ப் பார்த்து விட்டு நான் யாரோ, நீ யாரோவென மீண்டும் வருவோர் போவோர் ஆகிவிட்டிருந்தனர். அப்படித் திரும்பிப் பார்த்தது அவர்களுக்கு நினைவிலிருக்குமா என்பதும் தெரியவில்லை. இயல்பாய் எழுந்த ஒரு இருமல். அந்த இருமலைச் சுற்றிலும் இப்படியானதொரு கூட்டுச்செயல். எதற்காக இது நிகழ்கிறது? இருமியவன் நிலை குலைந்திருந்தால் எதோவொரு மானுடமாவது அதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் என்பது திண்ணம். எல்லாரையும் நம்பக்கம் பார்க்கும்படி வைத்துவிட்டேனே என்பதற்காக எம்முள்ளிருந்த ஏதெவொன்று ‘சாரி’ எனச் சொல்லிக் கொள்கிறது என் அனுமதியோ ஒப்புதலோ ஏதுமற்று. இப்படியான சூழலை ஆக்கிவைத்திருப்பவர் யார்? அரசியல்வாதியா? கல்வியாளனா?? ஆன்மீகவாதியா?? இதே நான், நான் உயிர்த்த மண்ணிலிருந்தாலும் இதே சூழலை எதிர்கொண்டிருப்பேனா?? இன்னொரு இருமல், இன்னொரு பொழுது, இன்னொரு இடம், கவனிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் இருமுமவனாக, இருமலைப் பார்க்கக் கூடியவனாக!!
12/15/2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment