3/03/2013

நிறைகுடம்


செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.

ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.

முன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்!” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.

வளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.

முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.

ஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

ஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம்? நானே எடுத்துக்குவனே??”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்?!

குடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.

தமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று,  அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா? “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

பணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும்? தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா? அதுவும் அமெரிக்க விசா?! வாய்ப்பே இல்லை!!” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

ஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.

தமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன? போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்!” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.

முழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே?”, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.

நண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.

சாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.

மாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

ஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போராடி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.

மாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.

தமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.

நான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா? வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா?? சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.

இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது.  மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.

மக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும்? ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல்? எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு??”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.

“பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு!!”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.

3 comments:

a said...

தாங்கள் கொடுத்து வைத்தவர்....

"தளும்பாத நிறைகுடம்". எழுதப்பட்டவரும்,எழுதியவரும்(எனக்கு தெரிந்த வரையில்...)

யசோதா.பத்மநாதன் said...

அருமை! அருமை!!

மணி, ஒன்று சொன்னால் கோவித்துக் கொள்ள மாட்டீர்களே?பொதுவாக ஒரு விடயம் எனக்கு புரிவதே இல்லை.

இந்திய மக்கள் ஏன் இத்தனை தூரம் தம்மை ஒடுக்கி பணிந்து பணிந்து போகிறார்கள்? பொதுவாக எனக்கு இந்த விடயம் மட்டும் ஏன் என்று புரிவதே இல்லை.

ஒருவருக்குஅவருக்கான மரியாதையைக் காட்ட வேண்டும் என்றால் தன் மதிப்பை இழந்து தான் அதைக் காட்ட வேண்டுமா?

ஒருவர் பிரபலமாகி விட்டால் அவர் பாந்தா காட்டிக் கொண்டு போவதும் அவருக்கு முன்னும் பின்னும் சக மகிதர்கள் நெருக்கி அடித்துக் கொண்டு போவதும் காலடியில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதும் ஏனென்று எனக்கு புரிவதே இல்லை.

ஒரு great human being தன் மதிப்பை இழக்கக் கூடாது. இழக்க வைக்கும் வகையில் மற்றவர் நடந்து கொள்ளவும் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மனிதரைப் பற்றி நான் சொல்லவில்லை.அவர் எளிமையான மனிதராகவே இருக்கிறார்.

பொதுவாக இந்தக் கேள்வி என் மனதில் எப்போதும் எழுவதுண்டு. உங்களால் பொருத்தமான பதிலைத் தரமுடியும் என்பதும் என் நம்பிக்கை.

மிக முக்கியமாக நீங்கள் எழுதிய புத்தகம் எனக்கு அவசியம் தேவை. எவ்வாறு அதனைப் பெற்றுக் கொள்ளலாம்?

பழமைபேசி said...

வணக்கம். தாங்கள் கேட்டிருப்பது நியாயமான கேள்வி. அமெரிக்காவில் வாழும் நம் குழந்தைகளுக்கு அத்தகைய மனோபாவம் இல்லை. இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடு. அதற்கு முன்னரும் பல மன்னர்கள். இப்படி அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி இருந்த கலாசாரத்தின் நீட்சியென்றே நான் கருதுகிறேன்.

மேலும், “ஊர்ப்பழமை” நூலை இணையத்திலேயே இங்கு வாங்கலாம். http://www.udumalai.com/?prd=&page=products&id=7838

அன்புடன்,
பழமைபேசி.