8/04/2012

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா

கிட்டத்தட்ட நாற்பது தமிழ்ச்சங்கங்களை உள்ளடக்கி, அதன் ஒன்றியமாகக் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்(FeTNA) பேரவையாகும். ஜூலை நான்காம் நாளில் இடம் பெறும் விடுதலை நாள் விழா விடுமுறையை ஒட்டிய நாட்களில், பேரவையானது தொடர்ந்து அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தன் இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவினை பேரவை வெள்ளி விழாவாகவும், முனைவர் மு.வரதராசனார் ஆண்டு விழாவாகவும் பால்டிமோர் நகரில் உள்ள மேயர்யாஃப் சிம்பொனி இசையரங்கத்தில் ஜூலை ஐந்தாம் நாள் மாலை துவக்கம், ஜூலை ஒன்பதாம் நாள் வரை கொண்டாடியது பேரவை.

அமெரிக்கத் தமிழ்த் திருவிழா-2012இன் இயன்மொழியாக, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் வாசகம் இடம் பெற்றிருந்தது. அவ்வாசகத்தின் தலைப்பில் சொற்பொழிவு, தமிழ் மாணாக்கருக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, விழா மலருக்கான கட்டுரைகள் போன்றவை இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விழாவினை, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையுடன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தியது.

ஜூலை ஐந்தாம் நாள், வியாழக்கிழமை மாலை விழாவின் ஓர் அங்கமாகத் தமிழிசை விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில், அடிப்படைப்பாடல், தமிழ்ப்பாடல், சேர்ந்திசைப்பாடல் என மூன்று பிரிவுகளில் பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன. தமிழறிஞர்களும் இசை விரும்புநர்களும் வீற்றிருக்க அரங்கு நிரம்பிய விழாவாக அமைந்த இந்நிகழ்ச்சியைத் திருமதி. தேவகி செல்வன், திரு.மலர்செல்வன், திரு.பொற்செழியன் முதலானோர் ஒருங்கிணைத்திருந்தனர்

தமிழிசை விழாவினைத் தொடர்ந்து இடம் பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியான ‘விருந்தினர் மாலை’ நிகழ்ச்சியில் கொடையாளர்களும், விருந்தினர்களான தோழர் நல்லகண்ணு, மலேசிய மாகாணங்களுள் ஒன்றான பினாங்கு மாகாண துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன், வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடக இயக்குநர் ஸ்ரீராம் சர்மா, வேலுநாச்சியார் மணிமேகலை, சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி, திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலா பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஜூலை ஆறாம் நாள், வெள்ளிக் கிழமை காலையில் மங்கள இசை, நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, குத்து விளக்கேற்றுதல் ஆகிய முறைமைகளுடன் பேரவையின் வெள்ளி விழா செவ்வனே துவங்கியது. பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் முறையே தலைமையுரையையும் வரவேற்புரையையும் ஆற்றி வந்திருந்தோரைச் சிறப்பாக வரவேற்றனர்.

துவக்க நிகழ்ச்சியாக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் நாட்டிய நிகழ்ச்சி இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து, நூற்றாண்டு விழா நாயகர் முனைவர் மு.வரதராசனார் அவர்களைப் பற்றி, காணக்கிடைக்காத அவர்தம் அரிய நிழல்படங்களோடு விரித்துரைத்தார் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள். அடுத்து இடம் பெற்ற பனைநிலத் தமிழ்ச்சங்கத்தினரின் நகைச்சுவை நாடகம் பார்வையாளரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலும் “இதயங்கள் இயங்கட்டும்” எனும் தலைப்பிலும் இடம் பெற்ற கவியரங்கத்தில், உள்ளூர்க் கவிஞர்கள் புகாரி, சிகாகோ பாசுகரன், புவனா நந்தகுமார், இளமுருகன், சுந்தரமூர்த்தி, கரு.மாணிக்கவாசகம் ஆகியோர் பங்களித்தனர். திரு. கார்த்திகேயன் தெய்வீகராசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்ச்சி தோழர் நல்லகண்ணு அவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக் அவர்களின் அனுபவவுரை, அரசி நகரத் தமிழ்ச்சங்கத்தின் சிலம்பாட்ட நிகழ்ச்சி, அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் வீணையிசை ஆகியவை இடம் பெற்றன. எழுபது கவனகர் முனைவர் கலை.செழியனும், அவர்தம் தந்தையார் திரு.கலைச் செல்வமும் இணைந்து நடத்திய கவனகக்கலை நிகழ்ச்சி பெருத்த வரவேற்பையும் பாராட்டுதலையும் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. நினைவாற்றலுடன் கூடிய திறனாற்றலை வெளிப்படுத்துவதை இயல்பாக வெளிப்படுத்தி வியப்பில் ஆழ்த்தினார்.

நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார நாட்டியம், தமிழகத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் குறித்த உரை, வாழ்த்துரையாகக் கல்வியாளர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் உரை, அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தினைப் பற்றிய உரை ஆகியவற்றைத் தொடர்ந்து இசை வெள்ளத்தில் ஆழ்த்தினார் தமிழிசைக் கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்கள்.
வெள்ளி விழாவுக்குப் பேரவையைக் கொணர்ந்த பேரவையின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர். தமிழ் தொழில் முனைவோருக்கும் சிறப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, பெரும் கரவொலிக்கிடையே “தமிழரின் மனித உரிமைகள் பேணல்” எனும் தலைப்பில் பேசினார் பினாங்கு துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி. அவரது உரையைத் தொடர்ந்து இடம் பெற்றது கனடிய தமிழர் பேரவையின் உணர்வுப்பூர்வமான நாட்டிய நிகழ்ச்சியொன்று.

வெள்ளி விழா மலர் வெளியீட்டினை மலராசிரியரும் பதிவருமான பழமைபேசி தொகுத்தளிக்க, பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் கலை.செழியன் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அரங்கம் நிரம்பிப் பெருத்த ஆரவாரத்துக்கிடையே மேடையில் தோன்றினார் வாழும் கலைப்பயிற்சி நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்கள். அவரது சிறப்புரை பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து சேலம் நியூசு இதழியலாளர் டிம் கிங், போனி கிங் முதலானோர் உரையாற்றினர். பெரும் கரவொலிக்கிடையே தோன்றி சிரிப்பலைகளைத் தோற்றுவித்தார் பகடிக்கலைஞர் மதுரைமுத்து.

விழாவின் முதல்நாளை நிறைவு செய்ய இடம் பெற்ற சிறப்பு நிகழ்ச்சி, “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகமாகும். 2400 பேர் அமரக்கூடிய அரங்கம் நிரம்பி வழிந்தது. தன்விருப்பத் தொண்டர்களை விடுத்து, ஏனையோர் அமர்ந்திருக்க தமிழரின் வீரத்தின் விளைநிலமாம் சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த வீரத்தாய் கூரிய வாளொடு வேலுநாச்சியார் தோன்றினார். தயாரிப்பாளர் வைகோ அவர்களின் வாழ்த்துரையோடு துவங்கிய நாட்டிய நாடகம், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பைக் கூட்டியது. வேலுநாச்சியாராகத் தோன்றிய மணிமேகலை சர்மா, குயிலாகத் தோன்றிய சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி, பெரியமருது பாண்டியர் ஓஏகே தேவர், சின்னமருது யுவராஜ், அய்தரலி மயிலாடுதுறை சிவா ஆகியோரது நடிப்பாற்றல் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

குறித்த நேரத்தில் வழக்கமான முறைமைகளுடன் துவங்கின இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள். கவிஞர் இலந்தை இராமசாமி அவர்களின் கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டுக் கவிதை, முனைவர் சவரிமுத்து அவர்களின் தனிநாயகம் அடிகளார் குறித்த சொல்வீச்சு, போசுடன் தமிழ்ச்சங்கத்தின் குறுங்கதைகள், நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் ‘வீரம்’ நாட்டியம். கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் பட்டிமன்றம் ஆகியன வெகுசிறப்பாக இடம் பெற்றன.

தமிழ் மாணவர்களுக்கான தமிழ்ப் பன்முகத்திறன்(jeopardy) போட்டி ஒரு பல்லூடக நிகழ்ச்சியாக இடம் பெற்றது. பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த இந்நிகழ்ச்சியினை கவனகர் முனைவர் கலை.செழியன் திறம்பட நடத்தினார். வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் தமிழிசைப் பாடலுக்கான நாட்டியத்தைத் தொடர்ந்து தமிழ்த்தேனீப் போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, பன்முகத்திறன் போட்டி முதலானவை இடம் பெற்றிருந்தன. போட்டிகளை இராமசாமி சோமசுந்தரம், பொற்செழியன் இராமசாமி, இளங்கோ சின்னசாமி, பூங்கோதை ஆகியோர் செய்திருந்தனர். முதலாம் நிலைப் பிரிவில் இடம் பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தென் மத்திய தமிழ்ச்சங்க மாணவி ஸ்ரீநிதி மணிவாசகம் முதல் பரிசினைப் பெற்றார்.

நாஞ்சில் பீற்றர் அவர்களது நெறியாள்கையின் கீழ் இடம் பெற்ற இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இலக்கியச்சுவை ததும்பிய இந்நிகழ்ச்சியைக் கண்ட விருந்தினர் வெகுவாக வரவேற்றுச் சிலாகித்தனர். திரு.கொழந்தைவேல் இந்நிகழ்ச்சிக்கு இராமசாமி பயிற்சியாளராகப் பணியாற்ற, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், கவனகர் முனைவர் கலை.செழியன் நடுவராகப் பணியாற்றிச் சிறப்புச் சேர்த்தனர்.

வட கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் நாட்டார் நடனம் பண்டைய தமிழ்ப் பண்பாட்டினைப் பறைசாட்டுவதாக அமைந்திருந்தது. நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இசை நாட்டியம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் காவியத் தலைவிகள் நாட்டியம், அமெரிக்கத் தமிழ் இளையோர் அமைப்பின் களி நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து இடம் பெற்றது மாபெரும் ஆர்ப்பரிப்பை உண்டாக்கிய கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயனின் “நேற்று இன்று நாளை” எனும் தலைப்பிலான விவாத மேடை. சிவகார்த்திகேயனின் பலகுரல் பேச்சினைக் கண்ட பார்வையாளர்கள் கூக்குரலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டெலவேர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் காட்டுத்திருவிழா நடனம், வித்யா வந்தனா சகோதரிகள் பாடல் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், வட அமெரிக்கத் தமிழ் இளையோருக்கான “தமிழன் – தமிழச்சி” போட்டிகள் இடம் பெற்றன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகளை நன்கு வெளிப்படுத்தி வந்திருந்தோரை எழுச்சி கொள்ள வைத்தனர். முடிவில், யாழினி பொற்செழியன், வசந்த் குப்புசாமி ஆகியோர் முறையே 2012ஆம் ஆண்டுக்கான தமிழச்சியாகவும் தமிழனாகவும் வாகை சூடினர்.

கதைகளின் மூலம் எப்படியெல்லாம் புரிதலைக் கொண்டு வரலாமென்பதை வெகு யதார்த்தமாகப் பேசி வந்திருந்தோரை எல்லாம் தனதாக்கிக் கொண்டார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அடுத்ததாகத் திரைப்படக் கலைஞர்கள் அமலா பால், பரத், சிவகார்த்திகேயன் அவர்களுடனான கலந்துரையாடலைத் தொகுத்தளித்தார் தொகுப்பாளரும் பன்முகத்திறமும் கொண்ட கலைஞர் பிரியதர்ஷினி.

2012-2014ஆம் ஆண்டுக்கான பேரவையின் செயற்குழுவைத் தேர்தல் அலுவலர் மா.சிவானந்தம் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தொடர்ந்து பேச வந்தார், அனைவரும் எதிர்பார்ர்பில் காத்துக் கொண்டிருந்த வாழும் வரலாறு, தோழர் நல்லகண்ணு அவர்கள். இந்திய விடுதலைப் போராட்ட அனுபவங்கள் முதலான பலவற்றைக் குறிப்பிட்டுப் பேசி வெள்ளி விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தார். தொடர்ந்து மெல்லிசை இடம் பெறும் என்றிருந்த வேளையில், கடைசித் தருவாயில் விமான நிலையத்தில் இருந்து நேரிடையாக மேடைக்கு வந்து பெருத்த ஆரவாரத்தை ஏற்படுத்தினார் இந்திய ஆட்சிப் பணியாளர் திரு.சகாயம். தெளிதமிழில் தூயமையான வாழ்வு குறித்த பல குறிப்புகளைக் குறிப்பிட்டுப் பேசி வந்திருந்தோர் மனத்தைக் கொள்ளை கொண்டார்.

ஐங்கரன் மெல்லிசை குழுவினர் நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியில், ‘சின்ன குயில்’ சித்ரா அழகாகப் பாடினார். அவரோடு உள்ளூர் இசைக்கலைஞர் அனிதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாடினர். மெல்லிசை நிகழ்ச்சியின் இடையே மதுரை முத்துவும் தோன்றிப் பேசினார். விழாவுக்குப் பணியாற்றிய தன்விருப்பத் தொண்டர்கள் அனைவருக்கும் சிறப்பளிக்கப்பட்டது.

வெள்ளி விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது அட்சயா அறக்கட்டளை திரு.கிருஷ்ணன் அவர்களுக்குத் தோழர் நல்லகண்ணு வழங்கினார். செனட்டர், ஆளுநர் அலுவலகத்தைச் சார்ந்தவர்கள், மாநகராட்சித் தலைவர், மாகாண ஆட்சித் துணைச் செயலர் எனப் பலரும் விழாவுக்கு வந்திருந்து வாழ்த்துரையாற்றினர். 
வெள்ளி விழாவின் இணையரங்குகளில், தொடர் மருத்துவக் கல்வி முகாம்கள், முன்னாள் பல்கலைக்கழக மாணவர் சந்திப்பு, நாட்டாரியல் கருத்தரங்கம், தொழில் முனைவோர் சந்திப்பு, இளையோர் சந்திப்பு, திருமணத் தகவல் தொடர்பு சந்திப்பு எனப் பலவும் இடம் பெற்றிருந்தன. என்றுமில்லாதபடிக்கு, வெள்ளி விழாச் சந்தையில் பூக்கடை, நகைக்கடை, துணிக்கடை, ஆபரணக்கடை என அறுபதுக்கும் மேற்பட்ட கடைகள் இடம் பெற்றிருந்தன.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுக்கு மறுநாள், வாசிங்டன் வட்டார இலக்கிய ஆய்வுக்கூட்டத்தின் சிறப்பு இலக்கியக் கூட்டமும் நடைபெறுவது வழக்கம். அதற்கொப்ப இவ்வாண்டும் இலக்கியக் கூட்டம் திரு.மலர்செல்வன் அவர்களது ஒருங்கிணைப்பில் நடந்தேறியது. அக்கூட்டத்தில். சொல்லின் செல்வி உமையாள் முத்து, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், இ.ஆ.ப சகாயம், அரிமா மார்ட்டின், கவனகர் கலை.செழியன், கலைமாமணி டிகேஎஸ் கலைவாணன் உள்ளிட்ட பலர் இலக்கியவுரையாற்றினர். அடுத்த ஆண்டுக்கான பேரவையின் ஆண்டு விழா கனடாவில் உள்ள டொரண்டோவில் நடக்க இருப்பதை எதிர்பார்த்து இல்லம் திரும்பினர் தமிழர் கூட்டம்.

நன்றி: தென்றல்

--பதிவர் பழமைபேசி.


1 comment:

unknown said...

வணக்கம்
உண்மையை சொல்லிவிட்டீர்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....