9/15/2010

அர்ப்பணிப்பு

பணம்... பணம்... பணம்... நகரமெங்கும் இதே சிந்தனைதான். வேலை கொடுப்பபவனிடத்தில் ஏனிந்த நிலை என வினவிய மாத்திரத்தில் வந்து விழுகிறது உடனடியாய், காசு போட்டுக் காசு எடுக்கிற இடம்டா இது என.

வேலை செய்யும் தொழிலாளி மட்டும் சளைத்தவனா, என்ன? கையில காசு, வாயில தோசை... அசந்தா, மண்ணே கூடப் போடுவம்யா... ஏன்னா, அது என் திறமை எனக் கொக்கரிக்கும் காட்சிகள் நகரமெங்கும்.

முன்பணமாக ஐம்பதினாயிரம் ரூபாயை அழுதும், வராத வேலைக்காரனால் பாதியில் நிற்கும் வீட்டு வேலையை நினைத்துப் புலம்பும் நடுத்தர வர்க்கத்து அப்பாக்கள். திடீரெனச் சொல்லாமற் கொள்ளாமற் காணாமற்போன வாகன ஓட்டிகள். தலையில் பாதி சிரைத்தும் சிரைப்படாத திருப்பதி பக்தனைப் போலத் தவிக்கும் வீடுகள். அப்பப்பா, நகரத்தின் அலங்கோலங்கள்தான் எத்துனை, எத்துனை?? நேர்மை ஒழிந்து, மனிதம் அற்றுப் போய்த் திரியும் பணப் பேய்கள் நகரெங்கும்.

இச்சூழலில்தான் எம் கிராமத்தை நோக்கிப் பயணித்தோம் நாம். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தாய் மண்ணைக் காணும் பொருட்டுப் பேராவலுடன் சென்றோம் நாம். நமக்கு முன்னதாகவே, அப்பகுதியைச் சார்ந்த மரம் ஏறும் தொழிலாளர்களான மணி அண்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் வந்திருந்தனர். பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே முகங்கள். அவர்களைப் பார்த்ததும் எமக்குள் பழைய நினைவுகள் அலையாய்த் திரண்டன.


லெட்சுமாபுரம், குண்டலப்பட்டித் தோப்புகளில் ஓடியாடித் திரிந்ததும், நாமும் தென்னை மரங்கள் ஏறி இறங்கியதுமான காட்சிகள் வந்து போயின. ஆசைக்கு, நாமும் மரம் ஏறுவோம் எனப் பிடிவாதமாகச் சொல்லி ஏற முற்பட்டதும், பதைபதைத்துப் போயினர் அருகிலிருந்தவர்கள். இருந்தாலும், நான்கைந்து மரங்களை ஏறி நமது திறமையைக் காண்பித்து விட்டுத்தான் ஓய்ந்தோம் நாம்.


ஆனாலும் அவர்களுடைய மரம் ஏறும் ஆற்றல், திறம் மற்றும் அனுபவத்திற்கு முன் நாம் தூசியன்றோ? மணியண்ணன் அவர்கள் லாவகமாய் ஏறிக் கிளைக்குக் கிளை தாவுவதும், ஒரு கையில் மட்டையைப் பிடித்துக் கொண்டு மறு கையில் லாவகமாய் வினையாற்றும் பாங்கே பாங்குதான். கவனம் சிறிது சிதைந்தாலும் அன்றைக்குச் சங்குதான். ஒவ்வொரு மணித்துளியும் முழுக் கவனத்துடன் காரியமாற்றக் கூடிய தொழில் இது.

அடிக்கும் ஆடிக் காற்றில் இங்குமங்குமாய் அல்லாடும் 120 அடி மரங்களில்கூட எவ்விதத் தயக்கமுமின்றி ஏறுகிறார் இவர். உச்சியில் இருக்கும் இவரது தன்னம்பிக்கையில் சிறு ஓட்டை விழுந்தாலும், மரணத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத்தான் ஆக வேண்டும். அத்தகைய மரத்தில், இருக்கும் ஒரு சில காய்களுக்காகவும் சளைக்காது ஏறுகிறார் இவர்.

“அண்ணா, அந்த ஒன்னு ரெண்டு காயுக்கும் இந்த மரங்களை ஏறித்தான் ஆகணுமா?” என வினவியதும், “தொழில்னு வந்தா ஏறித்தான் ஆகோணும்... உட்டுப் போட்டு போறதுல ஞாயம் இல்ல பாருங்க”, என வெள்ளந்தியாகச் சொல்கிறார் இவர். நகரங்களுக்கும் கிராமத்துக்கும்தான் எவ்வளவு இடைவெளி?

இப்படியாக, மணி அண்ணன் மற்றும் குழுமத்தினருமாகச் சேர்ந்து, கிட்டத்தட்ட நானூறு மரங்களிலும் ஏறிக் காய் பறித்து, சிரை எடுத்து, குருத்தில் மருந்து வைத்துக் கீழிறங்குகிறார்கள். காலை மணி பத்து ஆகிவிட்டிருந்தது.


ஆங்காங்கே இருக்கும் தேங்காய்களைக் கூடையில் வைத்து, தோப்பின் ஓரத்தில் இருக்கும் களத்திற்குக் கடத்திக் கொண்டிருந்தனர் பெண்கள் அணியினர்.
சிறுஇடைவெளிக்குப் பின்னர், சண்முகம் அண்ணன் காய்களை எண்ணத் துவங்கினார். எண்ணும் போது, ஒவ்வொரு இருநூறு காய்களுக்கும் தென்னை ஓலை ஒன்றில் ஒரு முடி போடப்பட்டது. ஐந்து முடி காய்கள், அதாவது ஆயிரம் காய்கள், ஒரு வண்டிக் காய் என்பது தேங்காய் வியாபாரத்தில் ஒரு கணக்கு.


நவீன யுக்திகளும், மரம் ஏறும் பொறிகளும் சந்தைக்கு வந்திருந்தாலும், மரத்தின் உச்சியில் செய்யக் கூடிய வேலைகளைச் சூட்சுமத்துடன் செய்வதற்கு இவர்களைத் தவிர வேரறிவார்? இவர்களது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் சமுதாயம் தரும் விலை என்ன?? கேட்டறிந்தாம் நாம்.


பெரும் முதலீடு செய்து, ஓடியாடிப் பராமரிப்புச் செய்யும் உழவனுக்குக் கிடைக்கும் விலை காய் ஒன்றிற்கு இரண்டு ரூபாய். தோட்டத்தை விட்டுக் கிளம்பும் உரித்த தேங்காயின் விலை மூன்று உரூபாய் நாற்பது காசுகள். சந்தையிலோ காயின் விலை எட்டிலிருந்து பத்து உரூபாய். உரித்தல் அற்ற இளநீரின் விலையோ உரூபாய் பதினைந்து.

ஆக, இடையில் ஈட்டப்படுவது நான்கு உரூபாய். உயிரைப் பணயம் வைத்து, நூறு அடி, நூற்றம்பது அடி என ஏறிக் காய் பறிக்கும் தொழிலாளிக்குக் கிடைப்பது, காய் ஒன்றுக்கு அறுபது காசுகள் மட்டுமே. மனம் நொந்து போனோம் நாம்!

அத்தகைய சூழலிலும், செய்யும் தொழிலின் மீது கண்ணியத்தோடு சிரத்தை காண்பிக்கும் இம்மகாத்மாக்கள் செய்யும் தியாகம் எவரையும் எட்டாமற்ப் போவது மாபெரும் சோகம். இவர்களுக்குக் காப்பீடு உண்டா? கீழே விழுந்து, ஆகாதது ஆகிவிட்டால் புனர்வாழ்வு உண்டா?? தேங்காய் ஒன்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அர்ப்பணிப்பும் உழைப்பும் இருட்டுக்குள் உறைந்து போவது வரலாற்றுப் பிழைதானே??


15 comments:

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்...

V.N.Thangamani said...

உண்மைதான் இதை மாற்ற என்ன வழி ....
வரும் தலை முறையினர் இந்த கஷ்டமான தொழிலை விட்டு
வெளியே வந்து ...
தேங்காய் 100 ரூபாயிக்கும்
இளநி 150 ரூபாயிக்கும் விற்றால்
இவர்களைப் பற்றி யோசிப்பார்களோ.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நியாயமான கேள்விகள்..

நம் சமூகத்தில் பதில் தான் இல்லை.

எல்லாவற்றையும் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நாம்.. செய்யும் தொழிலிற்கேற்ற காசை மட்டும் இந்திய மனப்பான்மையோடு தான் செய்கிறோம்.

மாதேவி said...

மிகவும் கஷ்டமானதுதான்.

ஈரோடு கதிர் said...

எதார்த்தமான செவ்வி!

மிக்க நன்றி

(மரம் ஏறினபிறகு என்ன பண்ணுவீங்க... மரம் ஏறின பிறகு இறங்குவோம்ங்க...) இது டாப்பு

vasu balaji said...

ஈரோட்டு மாப்பு ராக்ஸ்:))

Unknown said...

Kathir's answer is super.

இந்த மாதிரி இறக்கிய தேங்காய என் சைக்கிள் பின்னாடி வைச்சு ஓட்டிய நாட்கள் நினைவுக்கு வருதுங்க. நன்றி.

Unknown said...

கடைசி 3 பத்தியில நீங்க சொன்னவற்றை பல தடவ நேர்ல பார்த்திருக்கேன். கூட நிறைய தக்காளி எடுத்து வந்து விக்க முடியாம கடைசியில் கிலோ 1 அல்லது 2 ரூபாய்க்கு வித்துட்டுப் போவாங்க. சில சமயம் நாட்டுத் தக்காளி கூடையையே 5 ரூபாய்க்குள் வித்துட்டு போரவங்களப் பார்த்திருக்கேன். பாவம் அவங்க கையிலே என்ன மிஞ்சும்.

தெய்வசுகந்தி said...

கடைசில உழுதவனுக்கு எதுவும் மிஞ்சாதுங்க, கடனத்தவிர!!
// சில சமயம் நாட்டுத் தக்காளி கூடையையே 5 ரூபாய்க்குள் வித்துட்டு போரவங்களப் பார்த்திருக்கேன். //

சும்மா தூக்கி குப்பையில கூட போட்டுட்டு வருவாங்க . இப்ப எப்படின்னு தெரியல!

அரசூரான் said...

சுறை, பிறை எல்லாம் இப்போ மலையேறி அவர் அவர் உறை-க்கும் மூட்டை-க்கும் மாறிவிட்டனர். தெளிவை எங்கள் பகுதியில் பதனீர் என்று சொல்லுவோம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருந்தது.. வார்த்தைக்கு வார்த்த ங்க போட்டு பேசறாரு அவரு..

ரெண்டாவது காணொளி மெஷின் நல்லாயிருக்கு இப்படி பாத்ததில்ல..

Vijay said...

நல்லதோர் பதிவும் அரிய காணொலிகளும் (வீடியோ). இப்பொழுதெல்லாம் கள்ளங்கபடமற்ற உள்ளங்களை குழந்தைகளிடமும் கிராமத்தவர்களிடமும் மட்டுமே காண முடிகின்றது.

IMHO:
காணொலிகளை எடுக்கும் போது "போர்ட்ரைட்" புகைப்படம் போன்று எடுத்தால் பார்ப்பவர்களுக்கு சிரமமாக இருக்கும். காணொலிகளை எப்பொழுதும் கிடையாக எடுப்பதே நன்று.

ராஜ நடராஜன் said...

கடைக்கு வருவதில்லைன்னு அடுத்தவங்ககிட்ட பொரணி பேசக்கூடாது:)கண்ணுல பட்டா பழம பேசாமலா போவோம்!

எத்தனையோ சொல்லிப் பார்த்தாச்சு.காற்று பணம் என்ற பொருளாதாரத்தின் மீதே வீசுகிறது.மாற்றங்களில் வழமையானவைகள் தொலைந்து போகின்றன.

விவசாயத்தில் உள்ள பெரிய குறை என்னவென்றால் It is a perishable commodity.பதப்படுத்தி பத்திரப் படுத்தவோ,சொல்லும் விலைக்கே விற்பதற்கான உள்கட்டமைப்புக்கள் மிகவும் குறைவு.

இங்கே மீன் மார்க்கெட்டில் போனால் சுமார் 100 கடையில் நீங்கள் எந்தக்கடைக்குப் போனாலும் ஒரே விலைதான்.விற்பனைக்கு பந்தி பரத்துவதற்கு முன்பே மீனவர் சங்கம் விலையை நிர்ணயித்து விடும்.ஒரே நாளில் விற்காமல் போனாலும் குளிர் பதன அறை,பனிக்கட்டின்னு வச்சு முதலுக்கு பங்கமில்லாத நிலை.

தேங்காய் ஏற்றுமதியில் நுகர்வோருக்கான விலை ரூ50-60 வரையில் வளைகுடாவில்.இதில் பாதி விலையென்றாலும் கூட விவசாயி நேரடியாக உள்நாடு,வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் உள்கட்டமைப்புக்கள் இருக்கிறதா நம்மிடம்?பொள்ளாச்சி,காங்கேயம் சந்தைக்குள்ளேயே ஓடிப்போகும் வாழ்க்கை.

வடுவூர் குமார் said...

தென்னை மரமேறி இயந்திரம் எளிமையாக இருக்கு.முதன் முறையாக பார்க்கிறேன்.

ஜோதிஜி said...

பாமரன் பக்கத்தில் விட்ட கோரிக்கை இங்கே வந்து ராஜ நடராஜன் பொங்கிட்டாரு போல. அதென்ன ஆச்சரியமா இத்தனை பெரிதா? ஆனால் ரொம்ப தெளிவாயிருக்கு.


விவசாயத்தில் உள்ள பெரிய குறை என்னவென்றால் It is a perishable commodity.பதப்படுத்தி பத்திரப் படுத்தவோ,சொல்லும் விலைக்கே விற்பதற்கான உள்கட்டமைப்புக்கள் மிகவும் குறைவு.

வேறு என்ன வேண்டும்?