5/25/2010

புணரின் புணருமாம் இன்பம்!

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்!
-நாலடியார்

மரண தண்டனை; வாழ்வதற்காகவே உயிர்த்த உயிரை வலுக்கட்டாயமாக மாய்த்தல்! ஆறறிவு உள்ள மனிதன், மற்றொரு ஆறறிவு உள்ள மனிதத்தைக் மரித்துப் போகச் செய்கிறான்.

விளை நிலத்தில் ஊடுருவிய களையை அகற்றுதல் போன்றது என்றும் வாதிடுவான் மனிதன். மனிதனை மனிதனே மனிதனாக்கவியலாது தோற்றுப் போய், மனிதம் அற்ற செயலைச் செய்யும் காரியமே அதுவென வாதிடுபவனும் மனிதனே! இவ்விரு வாதங்களையும் இடத்திற்கேற்ற வியந்தோதலுடன் இன்னொரு மனிதன்!!

இன்றைய நாளில், இகம் போற்றவல்ல இந்த அவனியில் மரணதண்டனையை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் ஐம்பத்தெட்டு; அது மனிதமற்ற செயலென ஒதுக்கி வைக்கும் நாடுகள் தொன்னூற்று ஐந்து; இதுவும் அதுவுமாய் இருப்பவை எஞ்சிய நாடுகள்!!

இங்கேதான் நாம் ஒன்றைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். யாரும், யாரையும் தூற்றிக் கொண்டிருக்கவில்லை. அவரவர் அவரவர் வாதங்களில், எண்ணங்களில் ஊன்றி நிற்கின்றனரே அல்லாது, காழ்ப்பும் கடுமையும் குடிபுகுதலுக்கு இடம் கொடாது அன்றைய தினத்தை அருள் நீங்காப் பற்றுதலுடனே கழிக்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க மாகாணங்களில், ஒரு சில மாகாணங்கள் மரண தண்டனை என்பது சட்டத்திற்குப் புறம்பானது எனச் சொல்லுகையில், அண்டைய மாகாணங்களில் அது சட்டத்தின் ஆதரவுடன் நிமிர்ந்து கோலோச்சுகிறது. இரு மாகாண மக்களும் காழ்ப்பை உமிழ்ந்து, அன்பைத் தொலைத்து, மனதை நோகடித்துக் கொண்டா இருக்கிறார்கள்? மாறாக, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இடத்தின் தன்மைக்கொப்ப தம்மையும் ஆட்படுத்திக் கொண்டல்லவா இருக்கின்றனர்??

எந்த மாகாணத்தில் மரண தண்டனையைச் சட்டத்தில் சேர்க்கவில்லையோ, அதே மாகாணத்தில் கருக்கலைப்புக்குச் சட்டத்தில் இடமளித்து இருக்கிறார்கள். அல்லது, அதற்கு ஆதரவாகப் பெருமளவிலான மக்கள் இருக்கிறார்கள் என்பது விந்தையாக இருக்கிறதல்லவா?

எந்த மாகாணத்தில் மரண தண்டனைக்குச் சட்டத்தில் இடமிருக்கிறதோ, அங்கே கருக்கலைப்புக்கு இடமில்லை. இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. எனினும், பெரும்பாலான மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, அதற்கு ஒத்துழைப்பும் செய்கின்றார் பெருமக்கள்.

ஆயினும், அவரவர் எண்ணங்களையும் வாதங்களையும் அவர்கள் கைவிட்டு விடவில்லை. வாய்ப்பு அமைகிற போதெல்லாம் துணிச்சலாக, தத்தம் கருத்துகளை உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணர உணரும் உணர்வுடையாரை நாடிச் செலல் தவறல்லவே?!

நடப்புக் காலகட்டமென்பது தமிழினத்திற்கு மட்டும் அல்ல; ஏனைய பல்வேறு தேசிய இனங்களுக்குமான நெருக்கடி மிகுந்த காலம். மாற்றங்கள் பெருவேகம் எடுத்துச் சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று, அண்டபேரண்டத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன! அதன் வேகத்தில் மனிதங்கள் மரித்துப் போகின்றன!!

நம்மில் எத்துனை எத்துனை முரண்பாடுகள்? இறப்புகளை மறப்புகளாக்க ஒரு கூட்டம். மறப்புகளை இருப்புகளாக்க ஒரு கூட்டம். மனிதம் மறந்தவரென ஒரு கூட்டம். செம்மொழி மாநாடு என ஒரு கூட்டம். அதாகாவென ஒரு கூட்டம். ஊழலே திறமென ஒரு கூட்டம். ஊழலுக்கு எதிர்ப்பு என ஒரு கூட்டம். எதிர்த்தே ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். எதிர்ப்பவனை எதிர்ப்பவர் எவரும் துரோகியரென ஒரு கூட்டம். எதிர்ப்பவர் எவரும் பிழைக்கத்தெரியா மடையரென ஒரு கூட்டம்.

கொள்கைப் பற்றுடன் ஒரு கூட்டம்; பற்றிருந்தும் ஒழுகாரென ஒரு கூட்டம்; கொள்கை எதுவுமற்று ஏமாறுபவர் ஒரு கூட்டம்; ஏமாறுபவரென நடித்து ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். மொழியென ஒரு கூட்டம். மொழியைக் கேலி செய்து அற்ப மகிழ்வு பெறுபவர் ஒரு கூட்டம். இப்படி, வகை வகையாய் எண்ணிலடங்காக் கூட்டங்கள்!!

இவ்வகையான கூட்டங்களுக்குள், மற்றவர் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது; எண்ணிக்கையில் மிகக் குறைவாய்!!

  • என்மொழியை, எண்ணங்களை ஆராதிக்கிறேன்; ஆராதிக்க மறுப்பவரைக் கடிந்து கொள்ளேன்! ஆராதிக்க முனைபவனை எள்ளி நகையாடுவதை நிராகரிக்கிறேன்!!


  • எந்தவொரு தேசத்தையும் நேசிக்கிறேன். மனிதமே மகத்துவம் என என்றும் போற்றுவேன். மனிதர்கள் அனாதரவுகள் ஆவதைக் கண்டு மனம் நோகிறேன்!!


  • அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களை மதிக்கிறேன். மாண்பு போற்றுவேன். மாற்றங்கள் கண்டு ஒரு போதும் அஞ்சேன்!!


  • எண்ணுவது இழுக்கன்று; தோற்பது இழிவுமன்று; மற்றவர் உணர்வுகள் மதிக்கப்படுவது ஈனமுமன்று!!
--பழமைபேசி.


9 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடைசி நான்கு பத்திகளும் உங்களது எண்ணங்களை முயற்சிகளை எடுத்துரைக்கின்றன.. தொடருங்கள்.. அடுத்தவரது சிறு சொற்கள் உங்களது நல்ல நோக்கங்களை சேதப்படுத்த விடக் கூடாது..

நிகழ்காலத்தில்... said...

//எண்ணிக்கையில் மிகக் குறைவாய்!!//

ஆனால் ஒவ்வொருவரும் பலருக்குச் சமமாய் ஆற்றலுடன் இருக்கிறோம்.
இது போதுமே பங்காளி :))

ஹுஸைனம்மா said...

நல்ல எண்ணங்கள் மட்டுமே மலரட்டும் நம் எல்லோருக்கும்!!

பழமைபேசி said...

@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

நன்றிங்க சகோதரி!

@@நிகழ்காலத்தில்...

பங்காளியின் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி!!

//ஹுஸைனம்மா said...
நல்ல எண்ணங்கள் மட்டுமே மலரட்டும் நம் எல்லோருக்கும்!!
//

வாங்க, வணக்கம்; அதேதானுங்க!!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

என்னைக்கேட்டால்
மரணம்தண்டனை என்பது ஒரு தண்டனையே அல்ல .மரணதண்டனை என்ற பதத்தையே சட்டநூற்களினின்று எடுத்துவிடவேண்டும். அது தான் சரி .

Mahesh said...

கருத்துக்கள், எதிர்க்கருத்துக்கள், முரண்கள், விமர்சனங்கள் எல்லாமே தேவைதான் ; ஆரோக்கியம்தான். திணிப்பு என்பது இல்லாத வரை.

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி

எண்ணங்கள் நன்று - சிந்திக்கும் திசை நன்று - மரண தண்டனை நம் நாட்டில் குறைவுதான் - வழங்கப் பட்டாலும் நிறைவேற்றுவதற்குள் ஆயிரம் தடைகள்.

இறுதியில் உள்ள உறுதி மொழிகள் பாராட்டுக்குரியவை. நன்று.

நல்வாழ்த்துகள் பழமை பேசி
நட்புடன் சீனா

தாராபுரத்தான் said...

கொங்குத் தமிலும் தெரியும், கோர்வைத் தமிலும் தெரியும்,அன்புத் தமிலும் அறிவோம். அப்படித்தானுங்..

உண்மைத்தமிழன் said...

குட் போஸ்ட்டுங்கண்ணா..!