5/22/2010

நான் கண்ட, தமிழ் கூறும் நல்லுலகின் எழுச்சிமிகு விழா!நீரின்றி அமையாது உலகு; மொழியின்றி நில்லாது இனம்; எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று முழங்கினான் பாவேந்தர் பாரதிதாசன். அதற்கொப்ப, புலம் பெயர்ந்து வந்த போதிலும் மொழியில்லையேல் இனமில்லை; இனமில்லையேல் நாமில்லை எனும் உண்மையை நல்லுணர்ந்த தமிழர்கள், பாரெங்கும் பரவி விரவி இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

இதனூடாக, எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும் என்பதனை நெஞ்சில்தாங்கும் இவனுக்குக் கிடைத்தது பெரும் பேறு; ஆம், கெரி(Cary, NC) நகரில் இருக்கும் வடகரோலைனாத் தமிழ்ச் சங்கப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கான அழைப்புத்தான் அது.

அந்நகரில் வாழும் தமிழுறவுகளின் அழைப்பினைக் கடந்த முறை ஏற்க முடியாமற் போனதால், இம்முறை எப்படியேனும் சென்றே தீர வேண்டும் என்கிற வேட்கையில், கடும் மழையையும் பொருட்படுத்தாது அதனூடாக முன்னிரவே நகரைச் சென்றடைந்தேன்.

நல்லதொரு விருந்தோம்பலுடன் இரவைக் கழித்துவிட்டு, காலை ஒன்பது மணிக்கெல்லாம் விழா அரங்கினை அடைந்தேன். வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட்கொண்டது.

தமிழ் கற்கும் மாணவர்கள், தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கும் புளகாங்கிதத்துடன் அரங்கத்தில் குழும, அரங்கமே நிரம்பியது. அரங்கம் நிரம்பியதும், பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் இரவி சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்ததாகத் தலைமையுரை ஆற்றிய தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி கூறியதோடு, வரும் ஆண்டிலும் அது தொடர வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர். வாசு இரங்கநாதன் அவர்கள் வருகை அளித்திருந்தார். அவரை திரு. செல்வன் பச்சைமுத்து அவர்கள் அறிமுகப்படுத்திப் பேசிமுடித்ததும், சிறப்புரை ஆற்றிப் பேசிய முனைவர் அவர்கள் செறிவான பல தகவல்களை அடுக்கினார். முதலாவதாக, அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் ப்யிலும் மாணவர்களுக்காக, ஒருமுகமான பாடத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டியதன் தேவையை குறிப்பிட்டுப் பேசினார்.

”அமெரிக்கத் தமிழாசிரியர்கள், தமது மாணவர்களுக்கு தமிழ் இரண்டாம் மொழி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எதையும் ஆங்கிலத்தில் சிந்திக்கும் மாணவர்களுக்கு ஏற்றபடியாகப் பாடத்திட்டங்களை வகுத்து, அதனூடாகப் படிப்படியாக மொழியறிவை ஊட்டவேண்டும். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழில் வாசிப்பதும், மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதும் செய்லபாட்டில்(active knowledge) இருக்கிறது. எனினும், எழுதுவது மற்றும் பேசுவதில் அவர்களுக்கு உள்ள திறன் மறைந்தே(passive) காணப்படுகிறது” என அவர் தொடர்ந்து கூறிய பல கருத்துகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சிந்தனையை வெகுவாகக் கிளர்ந்தது.

மனித குலத்தில் யாரும் பன்மொழியராக( bilingual) இருக்கவே முடியாது. ஒருவனது ஆழ்மனதில் ஓடும் சிந்தனையானது எந்த மொழியினூடாகப் பாய்கிறதோ, அம்மொழியே அவனது பிரதான மொழி. அவனுக்குத் தெரிந்த இன்னபிற மொழிகள் எல்லாம் இரண்டாம் மொழிகளே! அவ்வகையில், அமெரிக்கத் தமிழ் மாணவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கும் போது, அது குறித்த ஆட்படுத்து(immersion)தலுக்கான செய்ல்பாடுகளைப் புகுத்துவது அவசியமானது. தமிழ்ச் சூழலில் விடுவது, தமிழ் நாடகங்கள் காண வைப்பது, தாயகத்தில் விடுமுறையைக் கழிப்பது போன்ற செய்ல்கள், மேன்மையக் கூட்ட வல்லவை என்றும் அழகாக எடுத்துரைத்தார்.

பெரும்பாலான பெற்றோர்கள், தம் குழந்தைகள் எடுத்த எடுப்பிலேயே இலக்கியம் கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வது, மாணவர்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும். மாறாக, வாசிப்புப் பயிற்சி மற்றும் தமிழில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போன்றவற்றை ஊக்குவிக்கலாம் எனப் பல உதாரணங்களுடன் அவர் எடுத்துரைக்க, அரங்கத்தினர் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்.

வட கரோலைனாத் தமிழ்ப் பள்ளியில், தமிழ் கற்ற மாணவி ஒருவர் தனது பல்கலைக் கழகப் படிப்பின் போது எவ்வாறு பலனடைந்தார் என்பதை மிக விரிவாகப் பேசினார். பல்கலைக் கழகங்களில் இருக்கும் இரண்டாம் மொழிக்கான பாடத்திற்குத் தேவைப்படும் மதிப்பீடு(credit)களை, இத்தகைய பள்ளிகளில் பயிலும் தமிழ் மொழிப் பயிற்சியைக் காண்பித்து ஈடுகட்ட முடியும் என்றும், அவ்வாறு செய்ததால் மூவாயிரம் டாலர் பொருட்செலவையும், கால விரயத்தையும் அவரால் தவிர்க்க முடிந்ததும் என்றும் விளக்கிச் சொன்னார்.

பல்கலைக் கழகங்களில், இரண்டாவது மொழிப் பாடத்துக்கான தேவையை இவரது(பலகலைக் கழகம்) மூலமாகத் தேர்வு எழுதுவதன் வழியாக ஈடு கட்ட முடியும் என்பதைத் தமிழர்கள் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை தமிழ்ச் சங்கங்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டார் சிறப்பு விருந்தினரான பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு இரங்கநாதன் அவர்கள்.

அடுத்த படியாக, ஆண்டு முழுவதும் வகுப்புத் தவறாமல் வருகை புரிந்த மாணவர்கள் சூர்யா சண்முகம் மற்றும் சிந்து சண்முகம் ஆகியோருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. அவ்விரு மாணவர்களைத் தொடர்ந்து, எல்லாத் தேர்விலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜோடேனிகா இனிகோவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விழா மலரைத் தொகுத்து வழங்கிய எழில்வேந்தன் தருமராசன் அவர்கள் செந்தமிழில் வெகு அழகாகப் பேசி மலரை வெளியிட, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் அவர்கள் முதல் மலரை சிறப்பு விருந்தினருக்கு அளித்தார். இறுதியாக திரு. வேதையன் அவர்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவில்ந்தார்.

இதையெல்லாம் கண்டு களித்த நான், சார்லட் நகரில் துவங்க இருக்கும் தமிழ்ப்பள்ளிக்கு இந்நிகழ்ச்சியானது பெருமளவில் உதவிகரமாய் இருக்குமென எனது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

மேலும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழா குறித்த அறிவிப்பை வெளியிடலாமே என உரிமையுடன் நான் வினவ, கெழுமை கொண்ட நண்பர் எழில்வேந்தன் தனது வழமையான கணீர்க் குரலில் அறிவிப்பை வெளியிட்டார்; நெஞ்சம் நிறைந்தது. மேலும் சிலர் விழாவிற்கு வருவதாக இசைந்தமை மகிழ்வை ஊட்டியது.

சிறப்பு விருந்தினருடனான அளவளாவலுடன், தமிழ்ப் பள்ளி வழங்கிய நண்பகல் விருந்தைப் பசியாறப் புசித்துவிட்டு, அரங்கிலிருந்து சக தமிழன்பர்களோடு தமிழார்வலர் கார்த்திகேயன் அவர்களது இல்லம் புகுந்தோம் ஒரு சிறு குழுவாக. மனம் விட்டுக் கதைத்து, நகைத்து, இன்புற்ற பொழுதெந்தன் வாழ்வில் குதூகலமான இன்னாள்! எழில்வேந்தனோடும், அன்பு பொழில் தமிழரோடும் எழிலாய்ப் பழமை பேசிய பொன்னாள்!!

வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

---பழமைபேசி.

12 comments:

Mahi_Granny said...

தமிழுக்கும் தகவலுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் . வாழ்த்துக்கள்

naanjil said...

"வட கரோலைனாத் தமிழ்ப் பள்ளியில், தமிழ் கற்ற மாணவி ஒருவர் தனது பல்கலைக் கழகப் படிப்பின் போது எவ்வாறு பலனடைந்தார் என்பதை மிக விரிவாகப் பேசினார். பல்கலைக் கழகங்களில் இருக்கும் இரண்டாம் மொழிக்கான பாடத்திற்குத் தேவைப்படும் மதிப்பீடு(credit)களை, இத்தகைய பள்ளிகளில் பயிலும் தமிழ் மொழிப் பயிற்சியைக் காண்பித்து ஈடுகட்ட முடியும் என்றும், அவ்வாறு செய்ததால் மூவாயிரம் டாலர் பொருட்செலவையும், கால விரயத்தையும் அவரால் தவிர்க்க முடிந்ததும் என்றும் விளக்கிச் சொன்னார்.

பல்கலைக் கழகங்களில், இரண்டாவது மொழிப் பாடத்துக்கான தேவையை இவரது பல்கலைக் கழகத்தினூடாகத் தேர்வு எழுதுவதன் வழியாக ஈடு கட்ட முடியும் என்பதைத் தமிழர்கள் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை தமிழ்ச் சங்கங்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டார் சிறப்பு விருந்தினரான பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு இரங்கநாதன் அவர்கள்."

This information must reach all Tamil Sangams in USA and its Tamil Schools.
Nanri thampi pazhmai

naanjil peter

தாராபுரத்தான் said...

உங்கள் பதிவை படிக்கும் போதே வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட் கொள்கிறதுங்க.

Arasu said...

அன்பு பழைமைபேசி:
நீங்கள் அளித்திருக்கும் விரிவான பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள். கேரி விழாவில் நான் கலந்து கொண்ட உணர்வை இப்பதிவைப் படித்ததும் பெற்றேன்.

தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. அமெரிக்கத் தமிழ்க் கல்வியகம் (American Tamil Academy)துவக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அன்பர்களுடன் உஙகள் பதிவைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இம்முயற்சியில் பேராசிரியர் வாசு மற்றும் திரு. செல்வன் பச்சமுத்து முன்னணியில் இருக்கிறார்கள் என்பதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

முகிலன் said...

அண்ணே சார்லெட்ல தமிழ் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறீங்களா?

நான் கூட இங்க கொஞ்ச நாள் தமிழ் சொல்லிக்குடுத்தேன்.

அண்ணே நல்ல பாடத்திட்டம் (ஆரம்ப நிலைல இருந்து) இருந்தா பகிர்ந்துக்குங்கண்ணே...

ச.செந்தில்வேலன் said...

அயல்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழைத் தம் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணமே போற்றுதலுக்குரியது. அதையே செயலிலும் காண்பிப்பது மேலும் பாராட்டுதலுக்குரியது.

வாழ்த்துகள்.

வானம்பாடிகள் said...

இப்படி அருமையாப் பண்ணுங்க. நம்மாட்களுக்கு வெளிநாட்டு மோகம் வந்தாவது இங்கேயும் கொண்டு வரட்டும். ரொம்ப நாளைக்கப்புறம் பழைய பழமை:). பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

ஈரோடு கதிர் said...

//வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட்கொண்டது.//

குதூகலிக்கிறது மனம்

Mahesh said...

//வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!//

அதில் நானுமொரு விழுது என்பதில் பெருமை !!!!

ஜோதிஜி said...

உங்கள் பதிவை படிக்கும் போதே வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட் கொள்கிறதுங்க.

சரியான வார்த்தைகள் சரியான நபருக்கு.

ராஜ நடராஜன் said...

வந்தோம்!கண்டோம்!மகிழ்ந்தோம்!

க.பாலாசி said...

//வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட்கொண்டது.//

அதுவேதான்...எனக்கும்.......