9/07/2009

வாய்ப்பந்தல்!

வலைப்பூவுக்கு இடுகை எழுதி, அதைச் செம்மைப்படுத்திச் சீர் செய்து இட்டு, இட்ட பின் திரட்டிகளின் இற்றைப் படுத்துதலுக்கு ஆட்படுத்தி ஆயிற்று. பின்னர் அதையே ஒற்றி எடுத்து, மின்னஞ்சல்க் குழுக்களிலும் பலர் படிக்கப் பணித்தானவுடன், இட்ட இடுகைக்கு மறுமொழிகள் ஒன்றன் பின் ஒன்றாய் வரலாயிற்று.

என்றாலும் இவன் மனக் கட்டுப்பாடுடன், தான் வாசிக்கும் அனுமன் - வார்ப்பும் வனப்பும் எனும் நூலோடு ஒன்றிப் போய்விட்டான். நினைத்திருந்தை விடவும் நிறையவே வாசித்து முடிந்திருக்கையில் மணி இரவு 11.00.

அடுத்த நாள் labour day holiday என்பதை நினைவு கொண்டவனாய், கணினியை முடுக்கிவிட்டு மின்னஞ்சல்களை வாசிக்க யத்தனித்து, தானிட்ட இடுகைகளின் மறுமொழிகளுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தான். அந்தச் செய்கையானது மடலாடல்(email exchange)களாய் மாறிப் போகவே, கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் அதற்கு இரையானது.

மடலாடல்கள் ஓய்வு நிலையை எட்டிய உணர்வுக்கு ஆட்பட்டவனாய் உணரத் துவங்கியதுதான் தாமதம், மின்னா(chat)டலில் ஒருவர் ஏதோ கேட்க, இவன் ஏதோ சொல்ல அடுத்த ஒரு மணி நேரமும் காற்றில் விடப்பட்ட கற்பூரமாய்க் கரைந்தது. மின்னாடலில் வந்தவன், மின்னாடலோடு விட்டானா? சிட்டாடலில்(twitter) சிரிப்பாய்ச் சிருங்காரம் பரிமாறப்பட்டுக் கொண்டு இருக்கிறது, அதை நீ வந்து பாரென்றான்.

பார்த்த இவன் வாளாதிருந்தானா? தன் பங்குக்கும் சிருங்காரமாய்ச் சிலாகிக்கத் துணை போனான். சிட்டுகளைச் சிட்டியதில் முந்திய நாள் மரித்துப் போய், புதிய நாளொன்று பிறந்து, அன்றைய நாளின் ஆயுளில் மூன்று மணி நேரம் முடிந்து போயிருந்தது. அதிகாலை மணி மூன்று.

குளிரூட்டுப் பெட்டியில் இருந்த நான்கு வீட்டுச் சோறையும் பிரித்துப் பார்த்தவன், அதிலிருந்த காய்கறிச் சோறை மட்டும் வெளியிலெடுத்து, நுண்ணலை (microwave) அடுப்பில் இட்டு வெப்பமூட்டி, அந்தக் காய்கறிச் சோறை ரசித்து, ருசித்துப் புசித்தான்.

உண்டதும் நித்திரைக்குச் சென்றால், மத்தியில் புடைத்திடுமே என அஞ்சியவன் சிறிது நேரம் காலத்தைக் கழிப்போம் என எண்ணி, மீண்டும் கணினிக்குள் விழுந்து வலைப் பூக்களை நுகர விழைந்தான். ஏ அப்பா, எப்படி எல்லாம் எழுதுகிறார்கள், எண்ணி வியந்தான், வாசித்தான், வாசித்தான், வாசித்துக் கொண்டே இருந்தான். வெடுக்கென வலது ஓர மூலையைப் பார்த்தவன் கண்களில்பட்டது மணி 4.45 AM.

துயில் கொள்ளச் சென்றான். சென்று விழுந்த வேகத்திலேயே நித்திரையின் ஆழத்துக்குச் சென்று விட்டான். எங்கோ ஊரின் ஒரு கோடியில் இருக்கும் மாதா கோவிலில் இசைப்பது போன்ற ஒரு நினைவு. அந்த நினைவானது கூடிக் கூடி கடைசியாக மூளையில் ஒரு விளக்கை எரியவிட்டுச் சொன்னது, அது உன் அலைபேசி என. அரைகுறை மனதோடு அதை எடுத்து விரித்துப் பேசலானான்.

“அகோ!”

“டேய் மாப்புளை, காலையிலயே வாறன்னு சொன்னியேடா, மணி பதினொன்னு ஆகுது. எத்தினிதடவை கூப்புடுறது? போனும் எடுக்க மாட்டேங்குற?”

நினைவுகளை மீட்டெடுத்தவனாய்ச் சுதாரித்துக் கொண்டு, “ஓ அதுவா?”

“என்ன ஓ அதுவா? Blogல எழுதறம் பேர்வழின்னு கண்ட கண்டதையும் எழுதிட்டு, நேரத்தை வீணாக்குறது. உந்தங்கச்சி நீ சாப்புட வருவேன்னு அங்க காத்திட்டு இருக்காடா!”

“இல்ல மாப்புளை, உந்தங்கச்சி ஊர்ல இருந்து புள்ளைகளோட vaccination(தடுப்பூசி) records எல்லாம் டாக்டர் ஆபிசுல இருந்து வாங்கி அனுப்பச் சொல்லுச்சு அல்ல; அதான் டாக்டர் ஆபிசுக்கு வந்தேன்!”

“இந்த எழுத்தாளருகதான் பெரிய டுபாக்கூர்னு பார்த்தா, நீங்க ஏன்டா இந்த frauduத்தனம் பண்ணுறீங்க?”

“இதா ஒடனே டாக்டர் ஆபிசுல இருந்து நேரா அங்கதான் வந்துட்டு இருக்கேன்!”

“போதும்டா உன்னோட வாய்ப்பந்தல்! Why don't you stop wasting your energy? கதைவத் தெற, வெளிலதான் நான் நிக்கிறேன்!”

23 comments:

vasu balaji said...

:)).அண்டப் புளுகு ஆகாசப் புளுக்கும் மிஞ்சின புளுக்குப் பேரு வாய்ப்பந்தலா. என்னா அக்குரும்பு!

பழமைபேசி said...

@@வானம்பாடிகள் said...

:)).அண்டப் புளுகு ஆகாசப் புளுக்கும் மிஞ்சின புளுக்குப் பேரு வாய்ப்பந்தலா. என்னா அக்குரும்பு!//

எல்லாம் அரசியல்ல சகஜமுங்க பாலாண்ணே! எஃகெஃகே!!

அது சரி(18185106603874041862) said...

//
குளிரூட்டுப் பெட்டியில் இருந்த நான்கு வீட்டுச் சோறையும் பிரித்துப் பார்த்தவன், அதிலிருந்த காய்கறிச் சோறை மட்டும் வெளியிலெடுத்து, நுண்ணலை (microwave) அடுப்பில் இட்டு வெப்பமூட்டி, அந்தக் காய்கறிச் சோறை ரசித்து, ருசித்துப் புசித்தான்.
//

அது என்ன நாலு வீடு??? கவுண்டமணி கதை மாதிரி இருக்கே :)))

அது சரி(18185106603874041862) said...

//
“இந்த எழுத்தாளருகதான் பெரிய டுபாக்கூர்னு பார்த்தா, நீங்க ஏன்டா இந்த frauduத்தனம் பண்ணுறீங்க?”
//

வளரும் எழுத்தாளர் ஹி...ஹி....

அது சரி(18185106603874041862) said...

//
“போதும்டா உன்னோட வாய்ப்பந்தல்! Why don't you stop wasting your energy? கதைவத் தெற, வெளிலதான் நான் நிக்கிறேன்!”
//

மாப்பு....வச்சிட்டாருங்க ஆப்பு.....:0)))

(ஆஹா...சந்தோஷமா இருக்கு....)

அது சரி(18185106603874041862) said...

இன்பத்தில் இன்பம் அடுத்தவருக்காப்பு
அவ்வின்பம் இன்பத்தில் எல்லாம் தலை!

:)))

பழமைபேசி said...

// அது சரி said...

அது என்ன நாலு வீடு??? கவுண்டமணி கதை மாதிரி இருக்கே :)))
//

வாரக் கடைசியானா, நாலு வீட்டு இரப்பான் எடுத்துத் திங்கிறதை எல்லாம் ஒடச்சி சொல்ல முடியுமா? இஃகிஃகி!

அப்பாவி முரு said...

//அடுத்த நாள் labour day holiday //

என்னண்ணே மூணு மாசம் பின்னாடி போயிட்டீங்க....

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
//அடுத்த நாள் labour day holiday //

என்னண்ணே மூணு மாசம் பின்னாடி போயிட்டீங்க....
//

இது அமெரிக்கா தம்பீ, அமெரிக்கா! இங்க இன்னைக்குதான்!!

ஈரோடு கதிர் said...

//labour day holiday//

ஓ அதுதான் அமெரிக்க பங்குச் சந்தைக்கு வெட்டாப்பு விட்டுட்டாங்களா?

//நான்கு வீட்டுச் சோறை//

அதுதான் நேத்து எல்லார் வீட்லேயும் வந்து 'லொல்'ஓ 'லொல்' ஆ

இஃகிஃகி

//கதைவத் தெற, வெளிலதான் நான் நிக்கிறேன்!”//

அய்..அய்..அய்

ஆப்புங்கோ...ஆப்பு மேல ஆப்புங்கோ...

ஆ.ஞானசேகரன் said...

//“போதும்டா உன்னோட வாய்ப்பந்தல்! Why don't you stop wasting your energy? கதைவத் தெற, வெளிலதான் நான் நிக்கிறேன்!” //

நல்லாயிருக்கு... நிறைய தமிழ் சொல் இருக்கு பாராட்டுகள்

குடந்தை அன்புமணி said...

ஆங்கில வார்த்தைகளுக்கு நிறைய தமிழ் வார்த்தைகள் கொடுத்திருக்கிறீர்கள். அதோடு சந்தடி சாக்கில் வலைப்பதிவர்களின் நாட்குறிப்புகளையும் போட்டுத் தாக்கிவிட்டீர்கள்! நடக்கட்டும்...

ஆரூரன் விசுவநாதன் said...

பழமை பேசியின் புதுமைபேசும் இந்த நடை அற்புதம். எல்லா தளங்களிலிருந்தும் எழுதுகிறீர்கள்.


"மடலாடல்கள் ஓய்வு நிலையை எட்டிய உணர்வுக்கு ஆட்பட்டவனாய் உணரத் துவங்கியதுதான் தாமதம், மின்னா(chat)டலில் ஒருவர் ஏதோ கேட்க, இவன் ஏதோ சொல்ல அடுத்த ஒரு மணி நேரமும் காற்றில் விடப்பட்ட கற்பூரமாய்க் கரைந்தது. மின்னாடலில் வந்தவன், மின்னாடலோடு விட்டானா? சிட்டாடலில்(twitter) சிரிப்பாய்ச் சிருங்காரம் பரிமாறப்பட்டுக் கொண்டு இருக்கிறது, அதை நீ வந்து பாரென்றான்".

மீண்டும் ஒருமுறை வலைப்பூவின் முகவரியை பார்த்துக்கொள்கிறேன்...உங்களுடையாதுதானா? என்று.....

கலக்கறீங்க.......

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

//“என்ன ஓ அதுவா? Blogல எழுதறம் பேர்வழின்னு கண்ட கண்டதையும் எழுதிட்டு, நேரத்தை வீணாக்குறது.//

ஹி...ஹி....இப்டி உண்மைய பூராவுமா சொல்றது...

ஓ...வாய்ப்பந்தல் என்பது இதுதானோ?....

இராகவன் நைஜிரியா said...

அப்போ ஐயாவை மின்னாடலில் தொந்திரவு செய்யக்கூடாதுங்களா? உங்களை மின்னாடலில் பார்ப்பதே அபூர்வமாச்சுங்களே...

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
//கதைவத் தெற, வெளிலதான் நான் நிக்கிறேன்!”//

அய்..அய்..அய்

ஆப்புங்கோ...ஆப்பு மேல ஆப்புங்கோ...
//

என்னாவொரு சந்தோசம்?

//ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு... நிறைய தமிழ் சொல் இருக்கு பாராட்டுகள்
//

அறிவியல் ஞானியாருக்கு மிக்க நன்றி!

//குடந்தை அன்புமணி said...
அதோடு சந்தடி சாக்கில் வலைப்பதிவர்களின் நாட்குறிப்புகளையும் போட்டுத் தாக்கிவிட்டீர்கள்! நடக்கட்டும்...
//

அய்யோ, அது நான் சொல்லலை... மாஞ்சி மாஞ்சி படிச்சவன் நான்... சகபதிவர்களை நான் அப்படிச் சொல்வேனா?
அவ்வ்வ்வ்....


//ஆரூரன் விசுவநாதன் said...
பழமை பேசியின் புதுமைபேசும் இந்த நடை அற்புதம். எல்லா தளங்களிலிருந்தும் எழுதுகிறீர்கள்.
//

நன்றிங்க, நன்றிங்க....

//க.பாலாஜி said...

ஹி...ஹி....இப்டி உண்மைய பூராவுமா சொல்றது...

ஓ...வாய்ப்பந்தல் என்பது இதுதானோ?....
//

ஃகெஃகே... ஃகெஃகே...

//இராகவன் நைஜிரியா said...
அப்போ ஐயாவை மின்னாடலில் தொந்திரவு செய்யக்கூடாதுங்களா? உங்களை மின்னாடலில் பார்ப்பதே அபூர்வமாச்சுங்களே...
//

ஐயா, நீங்களே இப்படிக் கேட்கலாமா? அவ்வ்வ்.... நான் அழுதுருவேன்!

Rekha raghavan said...

இதையே வேறு களத்தில் எழுதி அருமையான சிறுகதை ஆக்கி இருக்கலாம்.

ரேகா ராகவன்.

பழமைபேசி said...

//REKHA RAGHAVAN said...
இதையே வேறு களத்தில் எழுதி அருமையான சிறுகதை ஆக்கி இருக்கலாம்.

ரேகா ராகவன்.
//

நன்றிங்க ஐயா! தங்களைத்தான் நினைத்துக் கொண்டேன் இதை எழுதும் போது!!

ப்ரியமுடன் வசந்த் said...

//சிட்டாடலில்//

டிவிட்டருக்கான தமிழ் விளக்கம் இப்போதான் சார் தெரிஞ்சுக்கிட்டேன்....

பழமைபேசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
//சிட்டாடலில்//

டிவிட்டருக்கான தமிழ் விளக்கம் இப்போதான் சார் தெரிஞ்சுக்கிட்டேன்....
//

நன்றிங்க!

Naanjil Peter said...

தம்பி நல்ல புதிய தமிழ்ச்சொற்களுக்கான
நன்றி.
அருமையிலும் அருமை.
நுண்ணலை, மடலாடல், மின்னாடல்,
சிட்டாடல்,குளிரூட்டுப் பெட்டி (?)

தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள்.
அண்ணன்
நாஞ்சில் பீற்றர்

வல்லிசிம்ஹன் said...

ஐயா பேரோ பழமை பேசி.

சொல்வழக்கோ பந்தல் போடுவதே.

வார்த்தைப் பந்தலைப் படிக்க நாங்களும் இருக்கிறோம்:)

பழமைபேசி said...

@@naanjil

நன்றிங்க அண்ணா!

@@வல்லிசிம்ஹன்

நன்றிங்க அம்மா!!