9/01/2009

எழவு என்னடா உங்கோட ஒரே அக்கப்போரா இருக்கு?

பார்த்தீங்கன்னா, கோயமுத்தூர்ல இருந்து அவினாசி சாலையில போகும் போது நீலம்பூர், முதலிபாளையம் பிரிவு, சூலூர்ப் பிரிவு, இராணிலட்சுமி மில்லு, அடுத்து அரசூர்ப் பிரிவு வரும். இந்த அரசூர்ப் பிரிவுக்கும் இராணிலட்சுமி மில்லுக்கு நடுப்புல தெக்கமின்னா ஒரு இட்டேரி போகும், அது செங்கோட கவுண்டன் புதூர் போயி அப்பறம் முத்துக்கவுண்டன் புதூருக்கு போகும்.

போற வழியில, வட்டப்பாறை வட்டப்பாறைனு இரு எடம் வரும். அங்க நிலத்துல இருந்து வட்டமா ஒரு பாறை மேல்த்தட்டி இருக்கும். அங்கதான் நாங்க, வழுக்குவாலுக எல்லாம் ஒக்காந்து பழமை பேசிட்டு இருப்போம். பின்னாடி, வேலி மறைவுல போயி வெண்குழல் வேந்தருக வெண்குழல் பிடிச்சிட்டும் வருவாங்க, போவாங்க.

அப்படித்தாங்க நான் வெய்யத் தாழ பசங்க அங்க இருப்பாங்களேன்ட்டுப் போனன். அவனுக அங்க, கொறக் காட்டுக்குள்ள இருந்தாங்க, வேற என்ன? துடுப்பாட்டம் வெளையாடிட்டு இருந்தாங்க; அதாங்க அந்த கிரிக்கெட்டு! கிரிக்கெட்டு!!

இராசமாணிக்கந்தான் மொதல்ல பேச்சுக் குடுத்தான். அவன் சோக்கா துடுப்புமு, தலையில தொப்பியுமா நின்னுட்டு இருந்தான். நாங்கேட்டேன், துடுப்பு ஏதுறான்னேன். அவஞ்சொன்னான், இதா நிக்கிறாம்பாரு அவனோடதுன்னு தூரத்துல நிக்கிற தங்கராசைப் பாத்துச் சொன்னான்.

அப்ப பந்தும் அவுனுதாடான்னேன். அதுக்கு சொன்னான், இல்லை, பந்து இவனுதுன்னு சொல்லி, கிட்டத்தால நிக்கிற தங்கவேலனைக் காமிச்சான். அப்ப இந்த தொப்பி உன்றதாடான்னேன். அதுக்கு நடுப்புல நின்ன பாலவிநாயகனைக் காமிச்சி இது இவனோடதுன்னான்.

எனக்கு வந்தது பாருங்க கோவம். என்றா இது, எதுமே உன்றது இல்லியா? போச்சாது போ, ஆனா எட்டத்துல நிக்கிறவனைக் காமிச்சி அவன்னு சொன்னே. கிட்டத்துல நிக்கிறவனைக் காமிச்சி, இவன்னு சொல்லிச் சொன்னே. நடுப்புல நிக்கிறவனையுங் காமிச்சி இவன்னே சொல்லுறியே, இது எந்தூர் ஞாயம்டா? அதெப்பிடி அவனுக்கும் இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் இவனே ஆவான்? பிடி பிடிச்சிட்டேன்.....

இராசன் பாத்தான், சுத்தீலும் நிக்கிறவங்க யாருனா தொணைக்கி வருவாங்களான்னு. யாரும் ஒன்னும் பேசாம நிக்கவுமு, இவனுக்கு வந்தது பாருங்க கோவம், டேய் மயிராண்டி, இதைக் கேக்கத்தான் நீ இப்ப வந்தியாக்கூ? பரதேசி, பரதேசி, எழவு உங்கோட என்னடா எனக்கு எப்பவுமே ஒரே அக்கப்போரா இருக்குன்னு துடுப்பாலயே அடிக்க வந்தானுங்கன்னே!

இப்ப நீங்க சொல்லுங், நாங்கேட்டதுல எதுனா தப்பு இருக்குதுங்களா? நானுமு, நெறைய பேர்த்துகிட்டக் கேட்டுப் பாத்தனுங்... ஆனாக் கடைசில, எங்க அய்யன் அதுக்கு விடை சொன்னாருங்களே!

ஆமாங்க, நம்ம தமிழ்ல எதையும் குழப்பம் இல்லாம, without ambiguity எதையுஞ் சொல்ற மாதர சொல்லி வெச்சி இருக்காங்களே? இஃகிஃகி! ஆமாங்க, அவனுக்கும் இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் உவன். அதே மாதர, அவள், இவள், உவள்; அங்கனம், இங்கனம், உங்கனம்; அவர், இவர், உவர்; அது, இது, உது....

அது சரி, அடங்கல்ன்னா தெரியுமா உங்களுக்கு? ஊரு சனம் மழைக்கு, அத்த அவசரத்துக்கு ஒதுங்குற, அடையுற இடந்தான் அடங்கல். பெரிய பெரிய கற்களால கட்டின ஒதுக்குப்புறம். ஆமா, இப்ப அத்த அவசரம்ன்னு சொல்லிச் சொன்னனே? அதுல அவசரம்ன்னா என்னன்னு தெரியும்... அத்தம்ன்னா?

அத்தம்ன்னா கை. ஒருத்தன் நழுவிப் போயிட்டு இருக்குறான். தண்ணியில மூழ்கிகிட்டு இருக்கலாம்; புதைகுழியில புதைஞ்சுட்டு இருக்கலாம்; பொண்டாட்டியானவ தலை மயிரைப் புடிச்சி இழுத்துட்டுங்கூடப் போகலாம். அப்ப என்ன நடக்கும்? ஒரு கை மட்டும் அவசர அவசரமா உதவிய நாடும். அதை உவமைப்படுத்திச் சொல்லுறதுதான் அத்த அவசரம்.


ஆமா, வெட்டிப் பழமை பேசுறதை கேக்குறதுக்குன்னா, வந்திடுவீங்களே? போங்க, போயி வேலை வெட்டியப் பாருங்க போங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பேசுலாம்!

22 comments:

ராசுக்குட்டி said...

//"தெக்கமின்னா" ஒரு இட்டேரி போகும்...//
நாங்க "தெக்கமானா" அப்படின்னு சொல்லுவோம்... எதுங்க சரி. பெரும்பாலும் நீங்க சொன்னது தான் சரியா இருக்கும்... இருந்தாலும் தெரிஞ்சுக்கலாமேன்னு தான்...

உவன், உவள், உவர், உது... இந்த வார்த்தைகளை தெரிந்து கொண்டேன் இப்போ... நன்றிங்க...

பழமைபேசி said...

//ராசுக்குட்டி said...
//"தெக்கமின்னா" ஒரு இட்டேரி போகும்...//
நாங்க "தெக்கமானா" அப்படின்னு சொல்லுவோம்...
//

வாங்க, வாங்க!

கிழக்கமின்னா, மேக்கமின்னா, வடக்கமின்னா, தெக்கமின்னானுதாஞ் சொல்றதுங்....

பெருசு said...

உது!!!!!

பெருசு said...

என்னங் மணீ

நீங் உடுல்ம்பேட்டை நெனச்சேன்.

நீங்க கேள்வி கேக்கறத பாத்தா அக்கப்போர் இல்ல சாமி.,

செரியான ரவுசு பார்ட்டியா இருப்பீங்ளாட்டு.

நேர்லே பாக்கும்போது வெச்சுக்றேன்.

Mahesh said...

அதெல்லாம் சரிதான்.. ஆனா 'உ'னா வழக்கம் பேச்சுல இல்லையே இப்ப?? எப்பிடி வழக்கொழிஞ்சு போச்சு?

அதோட... "உவர்"க்கு வேற அர்த்தமும் இருக்கே... உவர்ப்பு, உவர் மண்... இப்பிடி...

பழமைபேசி said...

//பெருசு said...

செரியான ரவுசு பார்ட்டியா இருப்பீங்ளாட்டு.//

இஃகிஃகி!

//நேர்லே பாக்கும்போது வெச்சுக்றேன்.
//

வாங்க வாங்க

பழமைபேசி said...

//Mahesh said...
அதெல்லாம் சரிதான்.. ஆனா 'உ'னா வழக்கம் பேச்சுல இல்லையே இப்ப?? எப்பிடி வழக்கொழிஞ்சு போச்சு?
//

ஆனாஊனா இவன் பழசு பரட்டைய எழுத ஆரமிச்சிர்றான்... இப்படித்தானுங்? ஆனா, நீங்க சொல்றது நெசந்தானுங்...

//அதோட... "உவர்"க்கு வேற அர்த்தமும் இருக்கே... உவர்ப்பு, உவர் மண்... இப்பிடி...//

ஈறு கெட்டதுண்ணே!

கருமண் = கருமை மண், அதுக்காக கரு என்பது கருமை ஆயிடாது. கரு அப்படின்னா, அது கருதான்...

கூடும் போது பசுமாலை = பச்சை மாலை, அப்படி, உவர்நிலம் = உவர்ப்பு நிலம். உவர் நிலம் அல்ல அது. சந்துடாமச் சொல்லோணும், எழுதோணும்.... இஃகிஃகி!

சின்ன அம்மிணி said...

//அவனுக்கும் இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் உவன். அதே மாதர, அவள், இவள், உவள்; அங்கனம், இங்கனம், உங்கனம்; அவர், இவர், உவர்; அது, இது, உது....//

ஓ அப்படியா!!!

சின்ன அம்மிணி said...

//ஆமா, வெட்டிப் பழமை பேசுறதை கேக்குறதுக்குன்னா, வந்திடுவீங்களே? போங்க, போயி வேலை வெட்டியப் பாருங்க போங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பேசுலாம்! //

இஃகி இஃகி, மத்தவங்க கதைன்னு ஒரு சுவாரசியந்தேன். :)

dondu(#11168674346665545885) said...

உவன் என்பது சொல்லுபவனுக்கு பின்னால் இருப்பவணை குறிக்கும்னு இலங்கைத் தமிழர்கள் கதைத்ததை கேட்டிருக்கனன்.

இவண்,
டோண்டு ராகவன்

வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/ஆமா, வெட்டிப் பழமை பேசுறதை கேக்குறதுக்குன்னா, வந்திடுவீங்களே?/

அதெப்புடிங். ஒருத்தரு சொல்றத முழுசா கேட்டப்புறந்தானுங்களே அது வெட்டியான்னு தெரியும். அதும் உங்க பழமையில ஒரு ஒரு வார்த்தையும் உடாம கேக்கணுமாட்ருக்குது. இதுல எங்கள சொன்னா எப்புடி? அத்த அவசரம்னாலும் கேட்டுதான் போறது. சரிதானுங்களே நாஞ்சொல்றது?

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நீங்க சொல்ற அதே சூலூப்பிரிவுல வந்தா சூலூருக்கு முன்னாடி குளத்தேறி வரும்பாருங்க.. அதுகிட்டத்தாங்க இருக்கு எங்க குலதெய்வ கோயிலு. எங்க பூர்வீட ஊரெல்லாம் சூலூர் தாங்க. நானும் எங்க அத்த பசங்களோட சேந்துக்கிட்டு முத்துக்கவுண்டன்புதூர் எல்லாம் போயி துடுப்பாட்டம் ஆடீருக்கேன்.

நல்லா பழைய ஞாவகத்தக் கிண்டீட்டீங்க.. :))

nanavuhal said...

/இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் உவன். அதே மாதர, அவள், இவள், உவள்; அங்கனம், இங்கனம், உங்கனம்; அவர், இவர், உவர்; அது, இது, உது....//

//உவன் என்பது சொல்லுபவனுக்கு பின்னால் இருப்பவணை குறிக்கும்னு இலங்கைத் தமிழர்கள் கதைத்ததை கேட்டிருக்கனன்.//

`அங்கு' என்பதற்கும் `இங்கு' என்பதற்கும் இடைப்பட்டது `உங்கு' என்னும் சுட்டு; அருகிலும் அல்லாமல் தொலைவிலும் அல்லாமல் இடைப்பட்ட நிலையை இச்சொல் சுட்டிக்காட்டும்.

`திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்.'

திருநாவுக்கரசர் திருப்பாடலின் முதலிரு அடிகள் இவை.

உந்நின்றார் - உ + நின்றார்; உங்கு நின்றார்; உவ்விடத்தே நின்றார்.

`உந்நின்றார்' என்னுஞ் சொல் திருநாவுக்கரசர்தம் திருப்பதிகத்தைச் செவிமடுத்தவண்ணம் உவ்விடத்தே நிற்கும் திருஞானசம்பந்தரைச் சுட்டுகிறது.

- அ. நம்பி

nanavuhal said...

/இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் உவன். அதே மாதர, அவள், இவள், உவள்; அங்கனம், இங்கனம், உங்கனம்; அவர், இவர், உவர்; அது, இது, உது....//

//உவன் என்பது சொல்லுபவனுக்கு பின்னால் இருப்பவணை குறிக்கும்னு இலங்கைத் தமிழர்கள் கதைத்ததை கேட்டிருக்கனன்.//

`அங்கு' என்பதற்கும் `இங்கு' என்பதற்கும் இடைப்பட்டது `உங்கு' என்னும் சுட்டு; அருகிலும் அல்லாமல் தொலைவிலும் அல்லாமல் இடைப்பட்ட நிலையை இச்சொல் சுட்டிக்காட்டும்.

`திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்.'

திருநாவுக்கரசர் திருப்பாடலின் முதலிரு அடிகள் இவை.

உந்நின்றார் - உ + நின்றார்; உங்கு நின்றார்; உவ்விடத்தே நின்றார்.

`உந்நின்றார்' என்னுஞ் சொல் திருநாவுக்கரசர்தம் திருப்பதிகத்தைச் செவிமடுத்தவண்ணம் உவ்விடத்தே நிற்கும் திருஞானசம்பந்தரைச் சுட்டுகிறது.

- அ. நம்பி

க.பாலாஜி said...

//இவனுக்கு வந்தது பாருங்க கோவம், டேய் மயிராண்டி, இதைக் கேக்கத்தான் நீ இப்ப வந்தியாக்கூ? பரதேசி, பரதேசி, எழவு உங்கோட என்னடா எனக்கு எப்பவுமே ஒரே அக்கப்போரா இருக்குன்னு துடுப்பாலயே அடிக்க வந்தானுங்கன்னே!//

அப்ப அடி விழலையா?....

//அவனுக்கும் இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் உவன். அதே மாதர, அவள், இவள், உவள்; அங்கனம், இங்கனம், உங்கனம்; அவர், இவர், உவர்; அது, இது, உது....//

//ஒரு கை மட்டும் அவசர அவசரமா உதவிய நாடும். அதை உவமைப்படுத்திச் சொல்லுறதுதான் அத்த அவசரம். //

மேலே குறிப்பிட்ட விளக்கங்கள் அருமை....தொடருங்கள்..

ஸ்ரீ said...

உவன் என்பது வழக்கில் இல்லாததாக இருக்கிறது.எழுத்தாளர்கள் யாரும் உபயோகிப்பதைப் பார்த்ததில்லை.

கதிர் - ஈரோடு said...

//சுத்தீலும் நிக்கிறவங்க யாருனா தொணைக்கி வருவாங்களான்னு//

யாரு தொணைக்கி... இராசனுக்கா, இல்ல மாப்பு உங்களுக்கா?

ஏன் மாப்பு காலேசுல படிக்கறப்பவே இப்பிடியா... இல்ல இப்பத்தானா?

உதன் தெரிஞ்சுக்கிட்டேன்...

ஒன்னு அவன் அங்கியே நிக்கிறான், இல்ல இவன் இங்கியே நிக்கிறான், ஒருத்த மட்டும் எடையில வரட்டும் உவன்-னு சொல்லிப்போடறேன்.

அத்த அவசரம் அருமை

Joe said...

//
ஆமா, வெட்டிப் பழமை பேசுறதை கேக்குறதுக்குன்னா, வந்திடுவீங்களே? போங்க, போயி வேலை வெட்டியப் பாருங்க போங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பேசுலாம்!
//
;-)

பழமைபேசி said...

அன்பர்களே, வேலைக்கு நேரமாச்சு. பின்னூட்டங்களை இன்னும் கடிக்கக் கூட, ச்சீ படிக்கக் கூட இல்லை; வேலையிடத்துல வலைப்பூக்களுக்குத் தடை; ஆகவே மாலை வந்து உங்களை வந்து சந்திக்கிறேன்.

அனைவருக்கும் மிக்க நன்றி!

ஆரூரன் விசுவநாதன் said...

கொ(ஞ்சு)ங்கு தமிழில் பின்னியெடுக்கிறீர்கள்.

தெனக்கென்னமோ வரமாட்டங்குதுங்கண்ணா.....வுட மாட்டனுங்க ஆனா.....
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

Thekkikattan|தெகா said...

பழம உங்களோட பதிவுகள் ஒரு தவிர்க்க முடியாத விடயமா ஆகிட்டே போகுது... அசத்துறீங்க போங்க :)

அது சரி said...

//
ஆமா, வெட்டிப் பழமை பேசுறதை கேக்குறதுக்குன்னா, வந்திடுவீங்களே? போங்க, போயி வேலை வெட்டியப் பாருங்க போங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பேசுலாம்!
//

என்னா வில்லத்தனம்....இருக்கட்டும் இருக்கட்டும்.... :0))