8/12/2025

குரங்குமத்தேவைகள்

 


ஏன் வகுப்புத் தோழர்களின் தொடர்பும் நட்பும் இன்றியமையாதது?

சமகால நண்பர்கள்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இளையோர், மூத்தோரும் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அனுபவமும் புதியனவும் நமக்குக் கிடைக்கும். ஆனாலும், சமகால வகுப்புத் தோழர்களின் நட்பும் தொடர்பும் முதன்மையானதும் அத்தியாவசியமானதுமாகும். ஏன்?

சமகால நண்பர்கள், சமகால வாழ்க்கைப் பயணித்தில் உடன் பயணிக்கும் பயணிகள். ஒரே காலகட்டத்தில் மேடு பள்ளங்கள், புறவுலக மாற்றங்கள், அனுபவங்கள், நிகழ்ச்சிகளைக் கண்டவர்களாக இருப்பர். பள்ளி முதல், வேலை, உறவுகள், விழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், பரிணாமங்கள் முதலானவற்றை எதிர்கொண்டிருப்பதால், எளிதில் புரிந்து கொள்ளவும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆளுக்காள் தேற்றுதல்களைப் பகிர்ந்து கொள்ளவும் எளிதாகவும் இயல்பாகவும் இருக்கும்.

உடல்நலம், மனநலம் ஆகியவற்றிலும் ஒத்த வயதுடன், ஒரே போன்ற சூழலைக் கொண்டிருப்பதால், அளவளாவலில் ஈடுபட உதவியாக இருக்கும். தத்தம் நிலைப்பாடுகள், அதற்கான தீர்வுகள், ஆதரவு முதலானவற்றை ஈந்து, மனவூக்கம் பெறுவது இயல்பாகவே நடக்கும். 

இறந்தகாலத்தைப் பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. உடன்பயணித்தவர்களென்பதால், அவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். சமூகத்தில் நாமும் ஒரு ஆள், நாமும் பங்கு வகிக்கின்றோம், தொடர்வதிலும் நல்லதொரு வாய்ப்பு அமையவிருக்கின்றது போன்ற உளநல மேம்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே இருக்கும்.

வயது கூடக் கூட, வயதில் மூத்தோர் மறைந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நமக்கு யாருமே இல்லாதது போலத் தோன்றும். வயதில் குறைந்தோர் அந்நியமாகத் தோற்றமளிப்பர். அத்தகு நிலையில், சமகால நண்பர்கள் நிறையப் பேர் நம்முடன் இருப்பது அத்தகு வெறுமையை அப்புறப்படுத்தவல்லது.

நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பார்கள் சமகாலத்தவர்கள். நம் அடையாளத்தின் சாட்சிகளாக விளங்குவார்கள். மரணித்துக் காடேகும் வரையிலும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய, பகடி செய்ய என எதற்குமானவர்களாக இருக்க ஒரு வாய்ப்புத்துணையாக இருப்பர்.

Not just classmates, but partners in crime through every chapter of life. Jumunakhan is pacca four twenty, beware of him, stay away!

-பழமைபேசி.

8/10/2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை - 38ஆவது ஆண்டுவிழா

அமெரிக்கத் தமிழ்த்திருவிழா 2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டுவிழா, தவத்திரு குன்றக்குடி அடிகளார், தோழர் இரா. நல்லகண்ணு ஆகியோரது நூற்றாண்டு விழாவாக, வட கேரொலைனா மாகாணத்தில் உள்ள இராலே நகரின் மாநாட்டுக் கூடத்தில், 2025 ஜூலை 3, 4, 5, 6 ஆகிய நாள்களில் கோலாகலமாகவும் சீரும் சிறப்புமாகவும் வாழ்வியல்த் திருவிழாவாகவும் இடம் பெற்றது.

ஜூலை மூன்றாம் நாள் காலை 8 மணி துவக்கம், பன்னாட்டுத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு இடம் பெற்றது. மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், தொழில் முனைவர் வீரப்பன் சுப்பிரமணியன், செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஷ்வநாதன்,  தொழில்தலைவர் வேலுச்சாமி சங்கரலிங்கம், ஆதித்யா ராம், நெப்போலியன் துரைசாமி, நக்கீரன் கோபால் ஆகியோருடன் ஏராளமான தொழிலறிஞர்களும் தொழில்முனைவோரும் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டிருந்தனர். மாலை 6 மணி வரையிலும் பல்வேறு அமர்வுகளும், சிறப்புரைகளும் இடம் பெற்றன.  பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி பாண்டி, மாநாட்டின் துணைத்தலைவர்கள் பி.டி,சதீஷ்குமார், மகேந்திரன் சுந்தர்ராஜ், கோபி ராமசாமி ஆகியோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முதலாவது, பன்னாட்டுத் திரைப்பட விழாவும் மாநாட்டு வளாகத்தில், ஜூலை 3ஆம் நாள் மாலையில் இடம் பெற்றது. மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஸ்வர்ணவேல் ஈஷ்வரன் தலைமையிலான நடுவர்குழாம், சிறந்த படத் தயாரிப்பாளராக வாழை படத்தயாரிப்பாளர் மாரி செல்வராஜ், சிறந்த இயக்குநராக அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,  சிறந்த தொழில்நுட்பத்துக்காக பொன்னியின் செல்வன் படத்துக்கான ரவி வர்மன், சிறந்த அமெரிக்க தமிழ்ப்படத்துக்காக ஊழியின் காயத்ரி ரஞ்சித், சிறந்த குறும்படத்துக்காக ஓடம் படத்துக்கான விவேக் இளங்கோவன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. விழாவில், இயக்குநர்கள் லிங்குசாமி, சீனு ராமசாமி, ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், நடிப்புக்கலைஞர் நெப்போலியன், நக்கீரன் கோபால், இசையமைப்பாளர் டி இமான், பேராசிரியர்கள் ஸ்வர்ணவேல் ஈஷ்வரன்,  ராம் மகாலிங்கம், தயாரிப்பாளர் ஆதித்யாராம், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திரைப்பட விழாவினை அடுத்து, பேரவையின் புரவலர்கள், கொடையாளர்களுக்கான நட்சத்திர மாலை நேர நிகழ்வு இடம் பெற்றது. நிகழ்வில் நகைச்சுவைத் தொடர்களைப் படைத்துவரும் “பரிதாபங்கள் புகழ்” கோபி, சுதாகர், சின்னதிரைக் கலைஞர்கள் செளந்தர்யா, ஃபரினா, விஜய் விஷ்ணு, பேச்சுக்கலைஞர் முத்துக்குமரன், மாயக்கலை வித்தகர் எஸ்ஏசி வசந்த் முதலானோர் சிறப்புத் தோற்றம் அளித்தனர்.

ஜூலை 4ஆம் நாள் காலையில், 8 மணிக்கு மங்கல இசையுடன் அமெரிக்கத் தமிழ்த்திருவிழாவின் கலை, இலக்கிய, வாழ்வியல்த்திருவிழா, இராலே மாநாட்டுக்கூடத்தில் எழுச்சியுடன் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், கேரொலைனா தமிழ்ச்சங்கத் தலைவர் பாரதி பாண்டி, விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி முருகேசன், மீனா இளஞ்செயன் ஆகியோர் மாநாட்டினைத் துவக்கி வைத்தும் வரவேற்றும் பேசினர். தொடர்ந்து, பல்வேறு தமிழ்ச்சங்கத்தினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவற்றுக்கிடையே தமிழிசை அறிஞர்கள் வி.குமார், அரிமளம் பத்மநாபன், ஆ.ஷைலா ஹெலின் ஆகியோரது தமிழிசை நிகழ்ச்சி, கவிஞர் சினேகன் அவர்களது தலைமையில் ”யாதுமாகி நின்றய் தமிழே” எனும் தலைப்பில் கவியரங்கம், மரபுக்கலைகள் குழுவின் சார்பில் மாபெரும் தமிழ்க்கலைகள் நிகழ்ச்சி, நூற்றாண்டு விழா நாயகர்களும் தமிழும் எனும் தலைப்பிலான புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களது சிறப்புரை, மதுரை ஆர் முரளிதரன் குழுவினரின் “மருதிருவர்” நாட்டிய நாடக நிகழ்ச்சி முதலானவை இடம் பெற்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்  விஷ்வநாதன், சூழலியல் செயற்பாட்டாளர் முனைவர் செளமியா அன்புமணி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், எழுத்தாளர் மன்னர் மன்னன் உட்படப் பலரின் உரைகளும் இடம் பெற்றன.

மின்னசோட்டா தமிழ்ச்சங்கம் வழங்கிய, “பழந்தமிழ்க்கலைகளும் செவ்வியலே” எனும் நாடகம், பொருள் பொதிந்திருந்ததாகவும் தமிழ்க்கலைகளின் ஒவ்வோர் அடிப்படைக் கூறுகளையும் விவரிக்கும்படியாகவும் அமைந்திருந்தது. இலக்கிய வினாடி வினாவின் நடுவர்களாக இருந்த எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், ஸ்டாலின் ராஜாங்கம், பழமைபேசி ஆகியோர், இலக்கிய வினாடி வினா குறித்தும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் நாடகம் குறித்தும் பாராட்டிப் பேசினர்.

ஜூலை 4ஆம் நாள், விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன. போட்டிகளை, முன்னாள் அமைச்சர் நெப்போலியன் அவர்கள் துவக்கி வைத்திட, விளையாட்டுத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் அன்பு மதன்குமார் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். போட்டிகளில் வென்றவர்களுக்குப் போட்டிகளின் முடிவில் பரிசளிக்கப்பட்டன.

ஜூலை 3, 4 ஆகிய நாள்களில், மாணவர்கள், இளையோருக்கான நாடளாவிய கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள், வட அமெரிக்க வாகை சூடி எனும் பெயரில் மாபெரும் அளவில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில், அறிவியல்தேனீ, குறள்தேனீ, தமிழ்த்தேனீ, கலைத்தேனீ, படைப்புத்தேனீ என ஐந்து பிரிவுகளில், இயல், இசை, நாடகம், நாட்டியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து நூற்றுக்கும் கூடுதலான போட்டிகள் இடம் பெற்றன. 1500 பேருக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்றவர்களுக்குக் கோப்பைகளும், இறுதிப்போட்டிகளில் கலந்து கொண்டோருக்குப் பதக்கங்களும், பங்கேற்றோர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

ஜூலை 5ஆம் நாள், காலை 8 மணிக்கு பேரவைப் பொதுக்குழுக் கூட்டமும், காலை 9 மணிக்கு கலை, இலக்கிய நிகழ்ச்சிகளும் துவங்கின. முதன்மை அரங்கில் வைத்து, வட அமெரிக்க வாகை சூடி போட்டியாளர்கள் அனைவரும் பதக்கம் அணிவிக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். அமெரிக்கத் தமிழ் முன்னோடிகள் விருதளித்தல், ஊடகவியலாளர் நிர்மலா பெரியசாமி அவர்களின் தலைமையில் விவாதமேடை, நாஞ்சில் பீற்றர் அவர்கள் வழங்கிய இலக்கிய வினாடி வினா, உலகத்தமிழர் நேரம், தமிழ்ச்சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் சங்கங்களின் சங்கமம் நிகழ்ச்சி முதலானவற்றோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

ஜூலை 4, 5 ஆகிய நாள்களில், இணையமர்வுகளாக, 45இக்கும் கூடுதலான நிகழ்ச்சிகள், கலை, இலக்கியம், மருத்துவம், சட்டம், வாழ்வியல் தொடர்புடையதாக அமைந்திருந்தன. பேரவையின் இலக்கியக்குழுக் கூட்டங்களில், எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், சு.வேணுகோபால், புலவர் செந்தலை கவுதமன், இயக்குநர்கள் லிங்குசாமி, சீனு ராமசாமி, ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ் முதலானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின், அயலகத் தமிழர்நல வாரியத்தின் கூட்டம் அதன் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தலைமையில் இடம் பெற்றது. பேரவையின் TamilER குழுவின் கூட்டம், அன்புடை நெஞ்சம் குழுவின் மணமாலை நிகழ்ச்சி, சட்டம் குடிவரவுக் குழுவின் சட்ட அறிஞர்கள் கூட்டம் முதலானவற்றோடு, பல்வேறு அமைப்பினர் நடத்திய கூட்டங்கள், முன்னாள் மாணவர் கூடல் முதலானவையும் இடம் பெற்றன.

இந்தியத் தூதரகத்தின் சார்பாக, விசா, கடவுச்சீட்டு, குடிபுகல், குடிவரவு தொடர்புடைய பணிமுகாமும் மாநாட்டுக்கூட வளாகத்தில் இடம் பெற்றமை பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. இந்திய ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு ஜக் மோகன் வாழ்த்துரை வழங்கி இருந்தார். இந்தியத் தூதுவர் மேன்மைமிகு வினய் குவெத்ரா அவர்கள், பேரவையின் சிறப்பு குறித்துப் பேச, அவருக்கும் சிறப்பளிக்கப்பட்டது.

விழாவுக்குச் சிறப்பு விருந்திநராக வருகை புரிந்திருந்த மலேசிய நாட்டின் முன்னாள் துணைப்பிரதமர் மாண்புமிகு சரவணன் முருகன், மாண்புமிகு சசிகாந்த் செந்தில், அமெரிக்கத் தமிழ் ஆளுமை முனைவர் வீரப்பன் சுப்பிரமணியன், மேயர் பேட்ரிக் பிரவுன், காங்கிரசுமேன் டெப்ரா ராஸ், வணக்கத்துக்குரிய வைலி நிக்கல், மாண்புமிகு ஜேனட் கோவெல், ஆளுமைகள் கஜன், ஸ்ரீநேசன், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலரும் உரையாற்றி வாழ்த்துரைக்க, அவர்களுக்குத் திருவிழாக்குழுவினர் சிறப்புச் செய்தனர். திருவிழா நிமித்தம் வட கேரொலைனா ஆளுநர் ஜோஷ் ஸ்டெயின் அவர்களின் தமிழ்மரபுத்திங்கள் சாற்றாணை வெளியிடப்பட்டு, அவர் வழங்கி வாழ்த்துரைக் காணொலியும் விழா அரங்கில் காண்பிக்கப்பட்டது. நூற்றாண்டு விழா நாயகர்கள் குன்றக்குடி அடிகளார், இரா. நல்லகண்ணு ஆகியோரது ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டு, விழா மலரினை அதன் ஆசிரியர் தேவகி செல்வன் அவர்கள் வெளியிட்டுப் பேசினார். 

ஜூலை 5ஆம் நாள் இரவு, இசையமைப்பாளர் டி இமான் அவர்களின், ‘கச்சேரி ஆரம்பம்’ மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி அரங்கேறியது. அரங்கம் நிரம்பிய மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டாடியது. 

ஜூலை 6ஆம் நாள் காலையில் இடம் பெற்ற, இலக்கியக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய விருந்திநர்கள் எல்லாருமே, இடம் பெற்ற திருவிழாவினைப் பெருமைபட பாராட்டியப் பேசியதோடு, பல்லுயிர் ஓம்புதல் என்பதற்கொப்ப பன்மைத்துவம் போற்றுவதற்கான மாபெரும் விழாவாக இருந்ததெனவும், தமிழ்க்கலைகளான மரபு நாடகம், காவடியாட்டம், சிலம்பாட்டம், களரி, பறை, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், கும்மி, ஒயில் என யாவும் இடம் பெற்ற தமிழ்விழா, தீரத்தீர சுவையான உணவு வழங்கி விருந்தோம்பலைச் சிறப்பாக்கிக் காட்டிய விழாயெனவும் பாராட்டினர். விழாவுக்காக உழைத்தவர்களுக்கும் புரவலர்களுக்கும் கொடையாளர்களுக்கும் விழாக்குழுவினர் நன்றி நவின்றனர்.

FeTNA Raleigh Convention Photos

July 3rd - https://photos.app.goo.gl/EJec624JyuYdXH6f7
July 4th - https://photos.app.goo.gl/V1JSAQ3UWu8XA96p9
July 5th - https://photos.app.goo.gl/w6y5ABTVizxEVrUJA
International Film Festival - https://photos.app.goo.gl/dqfh9f2RPcFi2ZJY6


8/03/2025

கலைப்பார்வை

 


கலைப்பார்வை

கலை, இலக்கியம் தழுவிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையோ அல்லது நிலைப்பாட்டையோ வெளிப்படுத்துவது. கற்பனைத்திறனின் வெளிப்பாடு, பல்வேறு விழுமியங்களைத் தொடர்புபடுத்தி ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு அல்லது நிலைப்பாட்டுக்கு வரும் ஆற்றலெனவும் கொள்ளலாம்.

அண்மையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. தூரிகைக்கலைஞர் டிராஸ்ட்கி மருது , உளவியல்ப் பேராசிரியர் இராம் மகாலிங்கம் அவர்களுடனான உரையாடல்; ஓதுவது ஒழியேல் எனும் குழுமத்தில் இடம் பெற்ற நற்றிணைப் பாடலும் அதன் உரையும்; தமிழ்விழாவில் இடம் பெற்ற முரண்பாடு. இத்தனையிலும் முன்வைக்கப்பட்ட பொதுவான பற்றியம்தான், கலைப்பார்வை குறித்த கருத்து.

ஓவியம், கலை, இசை, கதை, கவிதை முதலான எல்லாவற்றிலும் தேவையானது ஊன்றி உணரும் ஆழமான உணர்வு. நுண்ணியது அறிதல். அதற்கு அவசியமானது, துறைசார் விருப்பமுள்ள நேயர்களுக்கிடையிலான கலந்துரையாடல். ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வதற்கான வடிகால்.

நற்றிணை: 106- நெய்தல்

அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே

[தலைவன் தன் தேர்ப்பாகனிடம் தன் காதலி செய்ததைச் சொல்கிறான். பாக! உனக்குத் தெரியுமா? கடலலை மணலில் ஏறித் திரும்புகிறது. அந்தப் பகுதி மணக்கும்படி நண்டு வரிக்கோடு போட்டுக்கொண்டு ஓடி விளையாடிவிட்டு வளையில் நுழைந்துகொள்கிறது. இதனை பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் என் ஆசை நோயை வெளிப்படுத்தினேன். அவள் மறுமொழி எதுவும் சொல்லாமல் தன் கையில் மணந்துகொண்டிருந்த ஞாழல் மலரைத் தடவி கையால் உதிர்த்துக்கொண்டிருந்தாள். அந்த மடப்பெண் அறிவு மயங்கி நின்றாள். (இதன் பொருள் என்னவாக இருக்கும்?)]

பாடலையும் அதற்கான உரையையும் படித்துக் கடப்பதென்பது, கலைப்பார்வையற்ற செயலாகத்தான் கருதப்பட வேண்டும். ஏனென்றால், கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்கள், செயற்பாடுகள், அது தொடர்பான விழுமியங்கள், குறியீடுகள், படிமங்கள், இவற்றுள் எதையுமே தொடாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கடப்பதென்பது கலைப்பார்வையற்ற செயலே.

”ஒரு அலைக்கும் மறு அலைக்கும் இடையிலான காலத்தில், நண்டு வரைந்து கொள்ளும் சித்திரம் போலே, தம் ஆசைகளும் குற்றாயுள் கொண்டனவோ எனும் நினைப்பில் இருக்கும் அவளிடம் இவன் தன் காதலைத் தெரிவிக்கின்றான். அது கேட்ட அவள், சொக்குண்டு போய் மதிமயங்கிய நிலைக்குள் ஆட்பட்டுவிடுகின்றாள்”.

இப்படியான புரிதலுக்கு நம்மால் எப்படி வர முடிகின்றது? செய்யுள், ஓவியம், கதை/படைப்பில் இருக்கும் பொருட்கள்/குறியீடுகள், ஏற்றிச் சொலல்/படிமம் முதலானவற்றைக் கொண்டு நாம் தகவலை ஒரூங்கிணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி?

மணல் மேட்டுக்கு வந்து செல்லும் அலை - குறுகிய காலத்தைக் குறிக்கின்றது.
நண்டின் சித்திரம். ஆசையை உணர்த்தும் படிமம்
மலரின் இதழ்களைப் பிய்த்தெடுப்பது - காதற்காமவுணர்வின் நிமித்தம் சொக்குண்டு போதலுக்கான படிமம்

கலைப்பார்வையை வளர்த்துக் கொள்ள, தொடர்ந்து வாசித்தறிதல் வேண்டும். தேடலும் நாடலும் இருக்க வேண்டும். நுண்ணறிபுலம் கொள்ள வேண்டும். சிறு வயதிலிருந்தேவும் கலைப்படைப்புகளை நுகரப் பயில்தல் வேண்டும்; கதை, கவிதை, ஓவியம், இசை, மீன்பிடிப்பு இப்படியான செயற்பாடுகள் வாயிலாக. இவைதாம் ஒருவருக்குள் பரிவு, ஆய்ந்துணர்தல், துய்த்துணர்தல் முதலானவற்றைக் கட்டமைக்கும். உருவகம், படிமம், குறியீடுகளை நாம் எங்கும் காணலாம். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

  • கதிரவன் /சூரியன்: ஆண்மை, வாழ்க்கை, அறிவு, காலம்
  • நிலவு : பெண்மை, மாற்றம், புதிர்
  • கடல் : கொந்தளிப்பு, குழப்பம், பயணம்
  • பாம்பு /அரவம்: வஞ்சகம், தீயசக்தி
  • நெருப்பு : புத்தாக்கம், அழிவு
  • மலர் : காதல், அழகு, தொன்மை
  • ஆயுதம் : அதிகாரம், ஆணவம், மேட்டிமை
  • மணிகாட்டி : விதி, ஆயுள், மரணம்
  • கழுகு : தன்னாட்சி, ஆளுமை
  • புறா : அமைதி, ஆன்மா, விடுதலை
  • மலை - காதல்மேடை, சல்லாபம்
  • வண்ணத்துப்பூச்சி - சுழற்சி, விதைப்பு
  • மயில் - அழகு, செழிப்பு
  • கனி /பழம் - பயிர்ப்பு, இனப்பெருக்கம், பரம்பரை
  • கண் - உண்மை, பார்வை
  • ஆந்தை - நாசம், வழிப்பறி
  • யானை - வலு, பலம், படை
  • குதிரை - ஆர்ப்பரிப்பு, கொண்டாட்டம், போர்

இப்படியான குறியீடுகள் தொன்றுதொட்டு உலகின் பல்வேறு பண்பாடு, இலக்கியங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சூழலுக்கொப்ப, இன்னபிறவற்றின் இடம் பொருளுக்கொப்ப, வெவ்வேறு பொருளை உணர்த்த வல்லதாக அவையிருக்கும். இவற்றையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி, ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வதுதான் கலைப்பார்வை. நுகர்வுக்களத்தில் இன்னபிற நேயர்களுடன் இயைந்து படைப்புகளை நுகர்வதன் வாயிலாகவும், கலைஞர்களிடம் இருந்து பயில்வதன் வாயிலாகவும் அகவுணர்வுக்கான திறப்புகள் வாய்க்கப்பெறும்.

கலைநோக்கில் குறியீடுகள் : படத்தில் இருக்கும் மெழுகுவர்த்திச்சுடர் என்பது இறைத்தன்மையையும் வளமானதொரு நேரத்தையும் குறிப்பதாக அமைந்திருக்கின்றது. மெழுகுவர்த்தித் தண்டு என்பது புதுவாழ்வு, துவக்கத்தைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இதுவே பாதி அளவுக்கு இருந்திருந்தால், புரிதல் மாறுபாடும். ஆயுளில் பாதி கடந்து போய் விட்டிருக்கின்றது, நடுத்தரமான காலகட்டம் என்பதாகிவிடும். அணைந்திருந்தால், காலாவதி ஆனது, மரணித்த காலமென்றும் கருதலாம்.

-பழமைபேசி.

8/02/2025

பச்சக்கிளி

 

பச்சக்கிளி 🦜🦜🦜

முத்து, ஒரு நாள் சூலூர் சந்தைக்குப் போயிருந்தாரு. சந்தையில, மிலிட்டிரிக்கார லேடியப் ப்பார்த்துகினு ஒரே ஜொல்லு. இருந்த காசுல ஒரு எட்டணாவுக்கு, ஒரு வடையும் டீயும் ஏற்கனவே குடிச்சாச்சி. மிச்சம் இருக்குறது ஒன்னார் ருவாதான்.

பட்சிகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன முத்துவுக்கு திடீல்னு அங்க போகணும்னு ஆசை. அங்க ஒரே கூட்டம். என்னானு பார்த்தா, அங்கொருத்தன் பச்சக்கிளி வித்துட்டு இருந்தான். இந்தக் கிளி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, இந்த அஞ்சு மொழிகள்லயும் பேசும். வீடே கலகலப்பாயிடும். கிளியப் பார்க்கப் பேசன்னு, பொண்ணுக கூட்டம் கூட்டமா வருவாங்க போவாங்கன்னெல்லாம் கிளி ஏவாரி கொளுத்திப் போட்டுகினு இருந்தான். முத்துக்குச் சபலம் பத்திகிச்சி

கிளி எத்தன ருவாங்ணானு முத்து கேட்க, அவன் திருப்பிக் கேட்டான், “தம்பி, நீ எவ்ளோ வெச்சிருக்கே?”னு. இந்த லூசுமுத்து, உள்ளதச் சொல்ல, அப்ப அந்த ஒன்னார் ருவாயும் குடு, கிளி ஒனக்குத்தான்னு சொல்ல, கிளி முத்து கைவசம் வந்திரிச்சு.

ஒரே குதூகலம். வீட்டுக்கு வந்தா, வீட்டுத் திண்ணையில பாசக்கார நண்பன். இதா பாரு, நான் கிளி வாங்கியாந்துருக்கன். உனுக்குத் தெரிஞ்ச எந்த பாசையிலும் பேசு, அதுவும் பேசும்னு முத்து சொல்ல, அந்த நண்பனும் தெலுகு, மலையாளம், இந்தினு, தனக்குத் தெரிஞ்சமாட்டுக்குப் பேசு பேசுனு பேசறாரு. கிளி ஒன்னுமே பேச மாட்டீங்குது. முத்துவுக்கு ஒரே சங்கட்டமாப் போச்சுது. சந்தை முடியுறதுக்குள்ளார போயிக் குடுத்துப் போட்டு காச வாங்கியாறனும்னு, ஆராகொளத்துக்கும் சூலூருக்குமா ஒரே ஓட்டம் கிளியத் தூக்கிகிட்டு.

கடைக்குப் போய், குய்யோ முய்யோனு குமுறல். கடைக்காரன் கேட்டான், ஏன், என்ன பிரச்சினை? ”யோவ், கிளி எதுவுமே பேச மாட்டீங்குது, நீ ஏமாத்திட்டய்யா மயிரு!!”

கிளிக்குக் கோவம் வந்து போட்டுது, 🦜 “நீ மூடு. உன்ற சேர்க்க சரியில்ல. வந்திருந்த உன் நண்பன் ஒரே டுபாக்கூரு. துக்ளக்கப் படிச்சிப் போட்டு கண்டதையும் உளறுவாரு. கூடா கூடாப் பேசி, மொக்க வாங்குறதுக்கு நான் என்ன உன்னமாரி லூசா?, போடா போக்கத்தவனே!” முத்துக்கு மொகத்துல ஈ ஆடலை. நெம்பவும் அவமானமாப் போயிட்டுது. கடைக்காரன், வித்தது வித்ததுதான்னு சொல்லி, கிளியத் திரும்பவும் வாங்க மாட்டேனுட்டான். ஊட்டுக்குத் திரும்பி வர்ற வழியெல்லாம் ஒரே ஏச்சும் பேச்சும் ஏகத்துக்கும். வந்திருந்த அந்த டுபாக்கூர் நண்பன் யார்? உங்க முடிவுக்கே விடப்படுகின்றது.

𝐆𝐨𝐨𝐝 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐝𝐨𝐧’𝐭 𝐥𝐞𝐭 𝐲𝐨𝐮 𝐝𝐨 𝐬𝐭𝐮𝐩𝐢𝐝 𝐭𝐡𝐢𝐧𝐠𝐬… 𝐚𝐥𝐨𝐧𝐞! ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬𝐡𝐢𝐩 𝐝𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓!!

[வகுப்பு நண்பர்களுக்கான வாட்சாப் குழுமத்தில் பகிர்ந்தது; 08/03/2025]

-பழமைபேசி.

7/31/2025

உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥)

 


உளமார்ந்திருத்தல் (𝐛𝐞𝐢𝐧𝐠 𝐦𝐢𝐧𝐝𝐟𝐮𝐥)

நீராருங்கடலுடுத்த, அன்பார்ந்த, மனமார்ந்த முதலான சொற்களை அன்றாடம் பயன்படுத்துகின்றோம். இவற்றுள் இருக்கும் ’ஆர்ந்த’ எனும் சொல்? நிறைந்த, நிரம்பிய, பரவிய முதலானவற்றின் பொருள் கொள்கின்றோம். ஆனால் இதன் பொருள் அதற்கும் மேலானது. நீரால் ஆனது கடல், அன்பாகவே ஆகிப்போன நண்பன், இப்படியாக, அதுவாகவே ஆகிப் போவதுதான் ‘ஆர்தல்’ என்பதாகும். வாழ்த்துதலாகவே, வாழ்த்துதல் மட்டுமாகவே ஆகிப் போவதுதான் மனமார்ந்த வாழ்த்து.

உளப்பூர்வமாய், உளப்பூர்வமாக மட்டுமே ஒன்றிக் கிடத்தல் உளமார்ந்திருத்தல். பயிற்சியினூடாக வாடிக்கையாக்கிக் கொளல் உளமார்ந்திருத்தல்.

நம்மில் பெரும்பாலானோர் பொட்டிதட்டிகள்(software programmers), மென்பொருள்ச் சாலைக்கூலிகள். நிரல் எழுதுகின்றோம். மண்டையை உடைத்துக் கொள்கின்றோம். பிழைகளும் வழுக்களுமாக, சென்று சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேரமுடியவில்லை. காரணம், எண்ணங்கள் பல வாக்கில். எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் கூடச் செலவு செய்திருப்போம். வேலைக்காகவில்லை. எழுந்து காலார ஒரு நடை போய்விட்டு வந்தானதும், பிழை தென்படுகின்றது. ஐந்து மணித்துளிகளில், வேலை முடிவுக்கு வருகின்றது. என்ன காரணம்?

தனிமையில் நடந்து செல்லும் போது, நடப்புக்கு வருகின்றோம். எல்லாத் தளைகளிலும் இருந்து விடுபட்டு, மனம் ஒருமுகம் கொள்கின்றது. தெளிவு பிறக்கின்றது. மனமார்கின்றோம். பிழை எளிதில் தென்படுகின்றது. சரி செய்கின்றோம். நிரலோட்டம் வெற்றி அடைகின்றது. இதுதான் உளமார்ந்திருத்தல்.

  • தற்காலத்தில் மனம்கொள்தல்
  • முன்முடிவுகளின்றி இருத்தல்
  • சலனமற்றுத் தெளிந்திருத்தல்
  • பரிவுடன் இருத்தல்
  • உணர்ந்திருத்தல்
இவையாவும் மனமேயாக இருப்பதுதான் உளமார்ந்திருத்தல். இதனால், மனநலமும் மெய்நலமும் சமூகநலமும் மேம்பட்டே தீருமென்பதுதான் அறிவியலாய்வுகளின் அடிப்படை.

இத்தகு துறையில், பேராசிரியராக, ஆய்வறிஞராக, நம்மவர் ஒருவர் இருக்கின்றாரென்பது நமக்கெல்லாம் பெரிய பெருமை. நிமிர்வு கொள்ள வேண்டும்.

டாக்டர் ராமசாமி (ராம்) மகாலிங்கம் அவர்கள், புகழ்பெற்ற கலாச்சார உளவியலாளர், விருது பெற்ற ஆராய்ச்சியாளர், பேராசிரியர், வழிகாட்டி, கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர். சாதி, பாலினம், இனம், பாலியல், சமூக வர்க்கம் ஆகியவற்றை, விமர்சனக் கலாச்சார உளவியல் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றார் (www.mindfuldignity.com). அமெரிக்க உளவியல் சங்கத்தின் உறுப்பினரான டாக்டர். மகாலிங்கம் அவர்கள், தனது கற்பித்தல், ஆராய்ச்சி, வழிகாட்டுதலுக்காக பல விருதுகளைப் பெற்றதோடு, “தமிழ் அமெரிக்கன் முன்னோடி (𝑻𝒂𝒎𝒊𝒍 𝑨𝒎𝒆𝒓𝒊𝒄𝒂𝒏 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓 𝑨𝒘𝒂𝒓𝒅)” விருதையும் பெற்றவர். https://youtu.be/rSJ6Rb3VYW4

அன்றாடம் கவிதை, கதை, ஏன் டைரியில் ஒரு பக்கம் எழுதுவது கூட, நம்மை மனமார்தலுக்கு இட்டுச் செல்லும். இது போன்ற நுண்ணிய தகவல்களையும் பயிற்சிகளையும் நமக்குத் தருகின்றார் பேராசியர் அவர்கள். மாணவர்கள், இளையோர், அலுவலர்கள், ஏன் நாம் எல்லாருமே நுகர்ந்து பயன்பெற வேண்டிய தருணம். மிச்சிகன் பல்கலைக்கழகச் சான்றிதழுடன் கூடிய 10 மணி நேர வகுப்பு: https://www.coursera.org/learn/mindfulness-dignity-and-the-art-of-human-connection நாளொரு மணி நேரமாகக் கூட பயின்று பயன் கொள்ளலாம்!

"𝗕𝗲 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘆𝗼𝘂𝗿 𝗳𝗲𝗲𝘁 𝗮𝗿𝗲, 𝘁𝗵𝗮𝘁'𝘀 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗼𝗳 𝗺𝗶𝗻𝗱𝗳𝘂𝗹𝗻𝗲𝘀𝘀." 🧘‍♂️✨

-பழமைபேசி.

7/28/2025

குள்ளாம்பூச்சி

 



குள்ளாம்பூச்சி


தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு, இரண்டே இரண்டு கலைவிருந்திநர்கள்தாம் வந்திருக்கின்றனர். முதலாமவர் எழுத்தாளர் பெருமாள் முருகன், அடுத்தவர் தூரிகைக் கலைஞர் டிராட்ஸ்கி மருது. வீட்டுக்குழந்தைகள், அக்கம்பக்கத்துப் பெண்களுக்கு, எங்கள் எல்லாருக்கும் விருப்பமானவர்களாக, நுட்ப உணர்வினை ஊட்டுபவர்களாக இருந்தனர்.

அண்ணன் மருது அவர்களின் ”கோடுகளும் வார்த்தைகளும்” நூலிலிருந்து, “தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக்கலை வரலாறு உண்டு. ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியல்க்கலைகளைக் கண்டுணரவும் பாரவைப்படிப்பினைப் பெறவும் கலைமனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்”.

எட்டு கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன் என்பதைக் காட்டிலும், அதனுள் மூழ்கிப் போய் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேனென்றுதான் சொல்ல வேண்டும். நூலெங்கும் ஓவியங்கள், ஓவியங்கள் சார்ந்த கட்டுரைகள், அடுக்கடுக்கான தகவல்கள். நானாக, வலிய வலிய நூலை எட்ட வைத்திருக்கின்றேன், தற்போதைக்கு!

கண்டறிதல் என்பது ஒரு வேள்வியைப் போன்றது. ஒரு படத்தைப் பார்த்த மட்டிலும், காட்சி, அது இருக்கின்றது, இது இருக்கின்றதெனும் தட்டையான பார்வையிலும் சென்று விட முடியும்; அதன் ஆழத்தின் ஆழத்துக்கேவும் ஒருவரால் தம்மை அதில் மூழ்கடித்துக் கொள்ள முடியும். அது அவரவர் நுண்ணறிபுலத்தைப் பொறுத்தது.

சில நாள்களுக்கு முன்புதான் நான் நண்பர்களிடம் குள்ளாம்பூச்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். முதன்முதலில் நான் காடேகியது, என் அம்மாவழிப் பாட்டனாரின் ஊரில்தான். காலையில் நாய்க்கு சாமைக்கூழ் தூக்குப் போசியில் கொண்டு போக வேண்டும். போய்ச் சேர்ந்ததும் மாடு மேய்க்க வேண்டும். மாடு மேய்க்கையில், எஞ்சோட்டுப் பையன்களுக்கெல்லாம் ஏதோவொரு துணுக்குறு செயற்பாடுகள் கிடைத்துவிடும். கிடக்கும் கற்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் போடுவது. அப்படிப் புரட்டுகையில், கல்லுக்குக்கீழே தேள், பாம்பு, அரணை, தேரை என ஏதாகிலும் இருக்கும். அவற்றைக் கொல்வது ஒரு விளையாட்டு. அதன் நீட்சியாக இடம் பெற்றதுதான் இதுவும். குறங்காட்டுப்(தரிசு நிலம்) புழுதியில் ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக மரணக்கிணறுகள் இருக்கும். புழுதிக்காட்டுக்குள், தோய்ந்த மெலிதான மணற்பரப்புடன் கூடிய சிறு சிறு குழிகள். அதனுள் எறும்பு போன்றவை விழுந்து விட்டால் மீள முடியாது. மீள்வதற்குள்ளாகவே, குழிக்குள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி அவற்றைப் பிடித்துத் தின்று விடும். வில்லத்தனமான, விளையாட்டுத்தனமான மனம். ஓடியோடித் தேடிப் போய், அவ்வாறான மரணக்குழிகளைக் காலால் எத்திவிடுவது. குழி குலைந்து, அதனுள் பதுங்கி இருக்கும் குள்ளாம்பூச்சி ஓட்டமெடுக்கத் துவங்கும். அந்தக் காட்சியைக் காண்பதில் ஒரு சிரிப்பு. இலயிப்பு.

ஒரு கட்டத்தில் ஆழ்மனம் தலையெடுக்கின்றது. குழியின் அமைப்பைக் கண்டு வியப்புக் கொள்கின்றது மனம். அந்த சிறுபூச்சி எப்படி இப்படியான மரணக்கிணற்றைத் தோண்டி இருக்க முடியுமென வியப்பு மேலிடுகின்றது. தோண்டுகின்ற காட்சியைக் காண வேண்டுமென ஆவல் கொள்கின்றோம். மனிதநடமாட்டம், தப்படி அதிர்வைக் கண்ட பூச்சிகள் மண்ணுக்குள் பதுங்கி விடும்தானே? ஏதேவொரு நாள் எவனுக்கோ அக்காட்சி பிடிபடுகின்றது. அழைத்துப் போகின்றான். சலனமின்றி வரச் சொல்கின்றான். பூச்சிக்கு உணர்வுப்புலம் மட்டுப்பட்டிருக்கக் கூடும். தோண்டிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, ஓயாத நடையில், நடையாய் நடந்து கொண்டிருக்கின்றது. தன் சிறுகால்களால் நடந்து நடந்தேவும் சாய்குழியை உண்டாக்கிக் கொள்கின்றது அப்பூச்சி. பட்டதும் வழுக்கி விழுவதற்கான மேற்பரப்பை நுணுக்கரிய நுண்துகள் மண்ணால் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. எஞ்சோட்டுப் பையன்கள், திண்ணைகளில் படுத்துக் கொண்டு விடிய விடிய கருத்துப் போர் கொள்கின்றோம். மீண்டும் காடேகுதல். அலைகின்றோம் குழிகளைக் கண்டறிய.

மனம் அடுத்த கட்டத்திற்குப் பாய்கின்றது. மெய்யியல் தொடர்பான வாதவிவாதம். இப்படியான சொற்களெல்லாம் இப்போது பயன்படுத்துகின்றோம். அப்போதெல்லாம் அவை குறித்த எந்த பிரஞ்ஞையும் இருந்திருக்காதுதானே? இந்த இடத்தில் மரணக்கிணறு உண்டாக்கிக் கொண்டால், தமக்கு இரை கிடைக்குமென்பது அந்தக் குள்ளாம் பூச்சிக்கு எப்படித் தெரியும்? சூட்சுமம். காத்திருக்கும். வரும் வரையிலும் காத்திருக்கும். தன் இடத்துக்கே வந்து இரையாகும் நுட்பம் அதற்கு வாய்த்திருக்கின்றது. மாடு மேய்க்கும் இந்தப் பையன்கள் கொள்ளும் உணர்வுதானே கலையுணர்வு? பேரூர் கோவிலுக்குச் செல்வோம். கோயிலின் நாற்புறங்களிலும் ஓவியங்கள், சிற்பங்கள் உண்டு. இருந்து, பார்த்து, காண்பதைப் பற்றிய தம் நினைப்புகளைச் சொல்ல, மற்றவரும் தம் எதிர்கருத்தைச் சொல்லும் காலமொன்று இருந்ததுதானே?

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே! (சிவபுராணம் 76 - 79)

நோக்குகளில் அரிய நோக்கே, நுணுக்கங்களில் அரிய நுணுக்கத்தின் நுண்ணுணர்வேயென்றெல்லாம் மணிவாசகப் பெருமான் பாடிச் சென்றிருப்பதுதானே? Mass Media & Communication, பெருந்தொகை ஊடகங்களால் தனிமனிதச் செயற்பாடுகள் அருகிப் போய்விட்டன. ஒன்று கிடைக்கும் போது, மற்றொன்று கைவிடப்படுகின்றது. வாசிப்பு மட்டுப்படுகின்றது. ஊடகக்கட்டமைப்புகள், தனிமனித வெளிச்சம் பாய்ச்சிப் பாய்ச்சியே, வெளிச்சம் நோக்கிய விட்டில்பூச்சிகளை அறுவடை செய்து கொள்கின்றன. சொல்வதை அப்படியப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு தவிர்க்கவே இயலாதவொன்றாக ஆகிவிட்டது. எனவேதான் பேச்சாளர்களுக்கு இருக்கும் தேவை, மதிப்பு, கலைஞர்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டிருக்கின்றது! நுண்ணுணர்வு கொண்டிருப்பவர்கள், எளிதில் பொதுப்போக்கின்பால் கிளர்ச்சியுறுபவர்களாக இருந்து பொருளியல் வாழ்வில் தோற்றும் போய்விடுகின்றனர் அல்லது தமக்குத்தானே தளையும் இட்டுக் கொள்கின்றனர்.

𝑻𝒉𝒆 𝒆𝒚𝒆 𝒔𝒆𝒆𝒔 𝒐𝒏𝒍𝒚 𝒘𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝒎𝒊𝒏𝒅 𝒊𝒔 𝒑𝒓𝒆𝒑𝒂𝒓𝒆𝒅 𝒕𝒐 𝒄𝒐𝒎𝒑𝒓𝒆𝒉𝒆𝒏𝒅! -Robertson Davies

-பழமைபேசி.

7/26/2025

அன்பே தருக

அன்பே தருக

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, மிகவும் விரும்பிப் போற்றப்படுகின்ற நூல். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, முப்பத்தி ஐந்து வெள்ளிகள் கொடுத்து வாங்கி அவ்வப்போது வாசித்துப் பயனடைந்து வருகின்றேன். சிறப்பு யாதெனில், ஏதோவொரு பக்கத்தினைத் திறந்து அங்கிருந்தேவும் வாசிக்கலாம். வரிசைத் தொடரின்றி, தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதில் ஓர் இன்பம். இஃகிஃகி.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பேவும் சுட்டியிருக்கின்றேன். ”தமிழ்மறை” என்பது ஒரு சொல். பிரித்து எழுதத்தலைப்படும் போது, பொருட்சிதைவுக்கும் மரபுச்சிதைவுக்கும் வழி வகுக்கின்றது. எடுத்துக்காட்டாக, தமிழ் மறையக் கூடிய எனும் பொருளில் ஒருவர் பொருள் கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவுப் புலங்களெல்லாம் தானியக்கத்திற்குப் பயன்படுத்தும் காலம் வந்தாகிவிட்டது. அவற்றுக்கெல்லாம் நாம் கொண்டு கூட்டி விளக்கமளித்துக் கொண்டிருக்க முடியாது.

”தமிழின எதிர்கால வழிகாட்டி”, தமிழினத்தின் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் கொடுக்கும் எதிர்காலத்துக்கான வழிகாட்டி, தமிழினம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டி எனப் பலவாக்கில் பொருட்சிதைவுக்கு இட்டுச் செல்கின்றது. மாறாக, “தமிழினத் தொலைநோக்கு வழிகாட்டி” எனும் போது பொருட்சிதைவு மட்டுப்படுகின்றது.

ஆயிரத்து எழுநூற்று முப்பத்தி மூன்றாம் பக்கத்தில், “தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு” எனும் தலைப்பில், அவசியமானதொரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்ப்புலமைக்கும், புத்தாக்கப் படைப்புகளுக்குமான அக்கப்போர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்ற இவ்வேளையிலே, அதற்கானதொரு மருந்தாக இடம் பெற்றிருக்கின்ற படைப்பாகத்தான் நான் இதைப் பார்க்கின்றேன். ’தமிழ்க்காவலர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் ’புதுமைப் புரட்சியாளர்கள்’ எனும் தோற்றப்பாடுக்கும் இடையில்தான் மேன்மை என்பதன் அவசியத்தை விளக்குகின்ற படைப்பு. அருமை. ’மொழியின் வளத்தைக் காக்கும் பொறுப்பு நமக்குளது’ என வலியுறுத்தும் படைப்பிலேயே சிதைவுகளும் பிழைகளும் இருக்கக் கூடாதன்றோ?!

அன்புடன் பொறுத்தருள்க. மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதாலேயே, “துரோகி, முதுகில் குத்துபவன்” போன்ற சொற்களைப் பயன்படுத்தும் அவலம் நமக்குள் நீங்க வேண்டும். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது!

(அண்மையில், நடப்புப் பதிப்பினை அன்பளிப்பாகக் கொடுத்த இளவலுக்கு நன்றி)

-பழமைபேசி.