7/31/2009

FeTNA: தமிழ்த் திருவிழா படங்கள்!







மக்களே, FeTNA, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்விழா-2009 தொடர்பான நிழல்படங்கள் பேரவையின் வலையகத்தில், கிட்டத்தட்ட 1500 படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அங்கு சென்று கண்டு களித்திடுவீர்!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)


7/30/2009

மோர்க்காரியின் முதுகு!

Virginia Beach Marriott


சிவப்பு வண்ண விளக்குகள்
பறை சாற்றியது இது
Marriott என!
உயரே நின்று பார்க்கின்
கண்ணுக்கெட்டிய தொலைவு
வரை கடலின் நீலவெளி!
கீழே நின்று பார்க்கின்
இருமருங்கிலும் பச்சைப்பட்டு
படர்ந்த புல்வெளி!
உள்ளே நின்று பார்த்துவிட்டு
அலறினான் இருந்த
பெரிய அறை கண்டு,
முந்தானையில் சும்மாடு
கட்டிய மோர்க்காரியின்
திறந்த வெளி முதுகைப்
போல் இருக்கிறதென!

-பழமைபேசி

மாலைப் பொழுது அந்தி சாயும் நேரம். இவன் மூன்று கல் தொலைவில் இருக்கும் கோயிலடிக்குச் செல்லலாம் என வீதியில் இறங்கிச் செல்ல முற்படுகையில் ஆடவர் கூட்டம் சென்று கொண்டிருக்கிறது.

அவர்களுடன் இணைந்த இவன், ‘என்ன விசயம்?’ என்பது போல குறிப்பு மொழியால் (body language) வினவுகிறான். அதற்கு அவர் சைகையாலேயே பதில் சொல்கிறார், எனக்குத் தெரியவில்லை, எல்லோரும் போகிறார்கள் நானும் அவர்களோடு சேர்ந்து போய்க் கொண்டிருக்கிறேன் எனும் பொருளில்.

இப்படியே இவன் ஒருவர் மாறி ஒருவராகக் கேட்க, அத்துனை பேரும் முன்னே இருக்கும் ஆட்களைக் கை காண்பிக்க, கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் தாண்டித் தாண்டி இறுதியில் முன் வரிசையில் இருக்கும் அந்த ஒற்றை ஆடவனை நெருங்கி விடுகிறான் இவன்.

அவனிடமும் என்ன விசயம் என வினவ, அவன் சொன்னான் முன்னே செனறு கொண்டிருக்கும் பெண்ணின் இரவிக்கையில், முதுகுப் புறத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சிறு சாளரம்(ஜன்னல்) போன்ற வடிவினைப் பார்த்துக் கொண்டே செல்கிறேன் என்றான்.

அதாவது, எதுவும் இருக்க வேண்டிய அளவாக, கிடைப்பதற்கரியனவாக இருந்தால்தான் அதில் குதூகலம் பிறக்கும். ’ஜன்னல் வெச்ச ஜாக்கெட்’ எனும் வடிவமைப்பு பிறந்ததும் அதனடிப்படையில்தான். தலையில் தனது கொங்குத் தலைப்பால் கட்டிய சும்மாட்டின் மீது பானையை வைத்துச் செல்லும் போர்க்காரியின் முதுகு திறந்த வெளியாகப் பரந்திருக்கும். அதைப் பார்ப்பதில் எந்த குதூகலமும் இல்லை என்பதுதான் நுண்ணுணர்வு!

மாதத்திற்கு ஒரு முறை, இரண்டாவது சனிக்கிழமை மாலையில், மாதமெல்லாம் காத்திருந்து கோவை இராம்நகர் Udhayam Restaurent மொட்டை மாடியில் அடித்த கல்யாணியில் இருந்த மப்பு, இன்று எளிதாக அளவுக்கதிகமாகவே கிடைக்கும் பன்னாட்டு மதுவில் கூடக் கிடைப்பதில்லை என்பதும் அதுவே!

7/28/2009

அந்தக் காலமும் இந்தக் காலமும்!!

கல்லிருக்க குழவியாடினது
அது அந்தக் காலம்!
குழவியிருக்கக் கல்லாடுறது
இந்தக் காலம்!!

கால் கடுகடுக்கப் படியேறினது
அது அந்தக் காலம்!
நிலையில் நாம நிக்க, படி ஏறுறது
இந்தக் காலம்!!

அவசரத்துக்கு வெளிய
ஓடினது
அது அந்தக் காலம்!
அவசரம்ன்ன உடனே
உள்ள ஓடியாறது
இந்தக் காலம்!!

சுட்டுப் பிடிச்சது
அது அந்தக் காலம்!
பிடிச்சதை சுடுறது
இந்தக் காலம்!!

கிடைச்சதை ஒப்படைக்க
வெள்ளிடை மன்றம்,
அது அந்தக் காலம்!
தொலைஞ்சதைக் கண்டுபிடிக்க
காவல் நிலையம்,
இந்தக் காலம்!!

பாட்டுக்கு தாளம்
அது அந்தக் காலம்!
தாளத்துக்கு பாட்டு
இந்தக் காலம்!!

அலம்பிட்டு உள்ள போனது
அது அந்தக் காலம்!
உள்ள போயிட்டு அலம்புறது
இந்தக் காலம்!!

மொடாவுல காசு
அது அந்தக் காலம்!
காசுக்கு மொடாத்தண்ணி
இந்தக் காலம்!!

மானம் போனா தொங்கறது
அது அந்தக் காலம்!
தொங்கறதுக்கு மானம் போறது
இந்தக் காலம்!!

அடி வாங்கினவன் கத்தறது
அது அந்தக் காலம்.
அடி கொடுக்கறவன் (கராத்தேயில்) கத்தறது
இந்தக் காலம்.

யானைப் படை இருந்தது
அது அந்தக் காலம்
பூனைப் படை இருப்பது
இந்தக் காலம்

கந்தல் அணிந்தால் ஏழை என்பது
அது அந்தக் காலம்
அதையே அணிந்து மினிக்கிட்டு
ஃபேஷன் என்பது இந்தக் காலம்.

ஏழ்மையினால் கூழ் அருந்தியது
அது அந்தக் காலம்
நோயினால் கூழ் குடிப்பது
இந்தக் காலம்.

வீட்டை வெச்சிக் கடன்
அது அந்தக் காலம்!
கடன் வாங்கி வீடு
இந்தக் காலம்!!


--பழமைபேசி

7/27/2009

என்னோட நேரம்?!

மாலை ஏழு மணி
சார்லத் விமான நிலையம்
போக வேண்டிய இடம்
குடாப் பிரதேசமான
Norfolk, Virginia!

மணித்துளிக்கு ஒன்றாய்
அசைந்து ஆடி ஆடி,
ஊர்ந்து, பின் வேகமெடுத்து
சீரானதொரு இடைவெளியில்
சிட்டாய்ப் பறந்து சென்றன!!

அடேயப்பா கொள்ளையழகு,
ஒன்றன் பின் ஒன்றாய்
நேர்த்தியாய் துல்லியமாய்
மிகச்சரியாய் உச்சிநோக்கிப்
போய்க் கொண்டே இருந்தன
சமிக்கைக்கான காத்திருப்பில்
நின்று கொண்டு இருக்கும்
இவ்விமானம் தவிர்த்து
மற்றன யாவும்!

FeTNA .. தமிழ்த் திருவிழாச் சிதறல்கள் - 6





ஏய் செங்கல்லே
மனிதன் மரித்ததும்
சுடப்படுகிறான்!
ஆனால் நீயோ
சுடப்பட்டதும்
உயிர்த்தெழுகிறாயே?!

--சிலம்பொலியார்

-------------------------

காற்றுப்பை (balloon)
விற்பவனுக்கும்
காற்றுப்பை (balloon)
வாங்குகிற
வயதுதான்!

-----------------

அய்யா
திருக்குவளையாய்
இருந்தென்ன?
இரு குவளைகளாய்
இருக்கிறதே??

--கவிஞர் செயபாசுகரன் பகிர்ந்தது


தீதும் நன்றும் பிறர்தர வாரா!
(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

7/26/2009

மயிலே மயிலே, நீ எந்த மயிராண்டிக்கும் இறகு போடாதே!

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

என்ன கொடுமை இது?

கறக்கிறதென்னவோ நாழிப்பால்;
உதைக்கிறது பல்லுப் போக!!

பார்த்தீங்கன்னா உருப்படியா பேசுறது நாலே நாலு பழமயாத்தான் இருக்கும். ஆனா நம்ம பேச்சாளருங்க செய்யுற அலட்டல் என்ன? உருட்டல் என்ன? உணர்ச்சிப் பிரவாகங்கள் என்ன? ச்சும்மா ஆய் ஊய்ன்னு கத்தி ஊரைக் கூட்டுவாங்க... உடனே பேச்சாளர் பேச்சுல மடங்கின நம்மாள், அடுத்தாள் கிட்டக் கேப்பான், ‘என்ன கொடுமை இது?’. அடுத்தாள் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம அசடு வழியுவான்....

மேல சொன்னா மாதர நீங்களும் என்ன கொடுமை சரவணன் இது?ன்னு கேட்டும் இருப்பீங்க. அதே போலத்தான் நம்ம நண்பர் ஒருத்தர் என்னையுங் கேட்டாரு. நான் விடுவேனா, நீ இருக்குற கொடுமைகளோட பேரெல்லாஞ் சொல்லு, நான் அதுல எதுன்னு பாத்துச் சொல்லுறேன்னேன். ஆளுக்கு மூஞ்சியில ஈ ஆடலை! இஃகிஃகி!!

ஆமா, இந்த மூஞ்சியில ஈ ஆடக் காணோம், அப்படீன்னு சொல்றாங்களே? உங்களுக்கு அதுக்குண்டான விளக்கம் தெரியுமா? அஃகஃகா! இதென்னடா தலைவலி போயித் திருகுவலி வந்திடுச்சேன்னு யோசிக்கிறீங்களா? கொடுமைகளோட பேரே தெரியாது, இதுல நான் முகத்துல ஈ ஆடுறதுக்குண்டான விளக்கத்துக்கு எங்க போவேன்னு நீங்க மண்டையப் போட்டு நெம்ப படுத்தாதீங்க.... நாம இப்ப கொடுமைகளைப் பார்க்கலாம் வாங்க!

இட்டேற்றிக் கொடுமை: ஒருத்தர் மேல இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி கெட்ட பெயர் வாங்கித் தந்து கொடுமைப் படுத்துறது.

உக்கிரக் கொடுமை: உக்கிரம்ன்ன உடனே, பாடாப் போட்டு அடிச்சுக் கொடுமைப் படுத்துறதுன்னு நினைக்காதீங்க. இது அப்படியல்ல... அளவுகடந்த பாசத்தைப் பொழியுறது. எங்க கோயமுத்தூர்ப் பக்கம் அடிக்கடி இது நடக்கும். வட்டல் நெறைய சோத்தைப் போட்டு, முருங்கக்கா சாம்பாரையும் ஊத்தி, தின்னூ, தின்னூனுவாங்க.... அவ்வ்வ்....

உறைப்புக் கொடுமை: ஒன்னு ரெண்டு வார்த்தை பேசுனாலும், அதுல சுருக்குன்னு மனசைத் தெக்கிறமாதிரி உறைப்பைக் காட்டிக் கொடுமைப் படுத்துறது.

கடூரக்(வன்) கொடுமை: கடுமையான துயரத்துல கெடந்து தவிக்கிறதுதான் கடூரக் கொடுமை.

கிறாளிக் கொடுமை: சுத்தி விடறதுன்னு ஈழத் தமிழர்கள் சொல்வாங்க. அதாவது உங்களுக்கு ஒரு வேலையக் கொடுத்து, அதைச் செய்ய முடியாதபடிக்கு தவறான தகவல்களைக் கொடுத்து குழப்பி விட்டுட்டு, இன்னும் வேலை முடியுலான்னு கேட்டுக் கேட்டே கொடுமைப் படுத்துறது.

குரூரக் கொடுமை: விகாரமா, பயங்கரமான துன்பங்களைக் காமிச்சோ, கொடுத்தோ கொடுமைப் படுத்துறது.

குழைவுக் கொடுமை: இது குரூரக் கொடுமைக்கு நேர் எதிரானது. ஒருத்தர்கிட்ட அடுத்தவர் குழைஞ்சி, குழைஞ்சி(நாய் வாலை ஆட்டி ஆட்டி வர்ற மாதிரி) வர்றது. அந்தக் குழைவுல தான் அகப்பட்டு ஏமாந்து போற கொடுமைதான் குழைவுக் கொடுமை.

குள்ளக் கொடுமை: தந்திரத்தால கொடுமைப் படுத்துறது.

கூரக் கொடுமை: கூரமின்னா பொறாமை. பொறாமையால மனசை நோகடிச்சு, துயரங்களைக் கொடுத்து மறைமுகமாச் சித்திரவதை செய்யுறது.

கோரக் கொடுமை: பயமுறுத்துச் சித்திரவதை செய்யுறது. கிலி பிடிச்சு அலறி, பயந்து அதுனால துன்பத்தை அனுபவிக்கிற கொடுமைதான் இது.

விகாரக் கொடுமை: குரூரக் கொடுமையும் இதுவும் ஒன்னு போலவே இருக்கும். ஆனா, குரூரம்ங்றதுல ஆழம் அதிகம்.

சடக் கொடுமை: சோம்பேறித்தனத்தால வர்ற இடைஞ்சல்களை சடக் கொடுமைன்னு சொல்றது.

சண்டக் கொடுமை: சண்டம்... வலிமைய எதிர்கொள்ள முடியாம அந்த வலிமைக்கு ஆட்பட்டு துயரங்களை அனுபவிக்கிற கொடுமை.

பிணிக் கொடுமை: நோய் நொடியால வர்ற கொடுமை.

தீனக் கொடுமை: வறுமையால வர்ற துயரங்கள் தீனக் கொடுமை.

நேரக் கொடுமை: எல்லாம் சரியா இருக்கும். ஆனாலும் நினைச்சது நடக்காம, எதிர்பாராம வர்ற இடைஞ்சல்கள் நேரக் கொடுமையால வர்றது.

தெரியாக் கொடுமை: தனக்கு சரிவரத் தெரியாததால நேருகிற இடைஞ்சல்கள், துன்பங்கள் தெரியாக் கொடுமை.

இல்லாக் கொடுமை: வறுமையில இருந்து கொஞ்சம் மாறுபட்டது இது. அந்த கணத்துல அது தன்னிடம் இல்லாமத் தவிக்கிற கொடுமை இது.

நீசக் கொடுமை: அசுத்தம் காரணமாவும், ஒவ்வாச் சூழ்நிலை காரணமாவும் நேருகிற கொடுமைகள் இது.

பசலிக் கொடுமை: காதலன் - காதலி, தலைவன் - தலைவி, இப்படி மற்றவர்களுடனான பிரிவால் வரும் கொடுமை.

முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் முரண் கொடுமை.

வக்கிரக் கொடுமை: வக்கிர எண்ணங்களால் நேருகிற கொடுமை.

வஞ்சகக் கொடுமை: ஏமாத்திச் சித்திரவதை செய்யுற கொடுமைதான் இது.

புரியுது... இதையெல்லாம் படிக்கணும்ன்னு என் தலைவிதி இன்னைக்குன்னு நீங்க புலம்புறதும் புரியுது இராசா... அதான் நேரக் கொடுமைங்கறது.... இஃகிஃகி!!


இந்த இடுகை அன்புத் தம்பி அப்பாவி முரு அவர்களுக்காக.....