5/17/2020

சிறகசைவு



1972 ஆம் ஆண்டு, அமெரிக்க உயராய்வு அறிவியல் கழகத்தின் 139ஆவது கூட்டத்தின் போது அறிவியலறிஞர் எட்வர்டு லோரன்சு என்பார் அவையோரிடையே ஒரு வினாவினை எழுப்பினார். ”தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலின் ஏதோவொரு காட்டில், ஏதோவொரு செடியினுடைய மலரொன்றில் அமர்ந்திருக்கும் அந்த சிறு வண்ணத்துப்பூச்சியின் அந்த ஒற்றைச் சிறகசைப்பு அமெரிக்காவில் பெரும்புயல் ஒன்றை உருவாக்கும் வல்லமை கொண்டதா?” என்பதுதான் அவரின் வினா. ‘பட்டர்ஃபிளை எபெக்ட்’ எனும் பெயரில், இந்த கருத்தாக்கமானது அறிவியலுலகில் இன்றுவரையிலும் பெரும் விவாதங்களை விதைத்துச் சென்றிருக்கின்றது.

பதினெட்டு வயதுடைய எட்வினா எனும் மாணவி வீட்டின் முன்னறையில் அமர்ந்து நூல் ஏதோவொன்றை வாசித்துக் கொண்டிருக்கின்றாள். அவளுடைய தாய் உள்ளே நுழைகிறார். உள்ளே வந்ததும், பரபரப்போடும் ஆவலோடும் அந்தக் காலணிகளைப் பிரித்தெடுத்து அணிந்து நடந்து பார்க்கின்றார். எட்வினாவுக்கு மனம் ஒப்பவில்லை. ‘அம்மா, இந்த வயதில் இது உனக்குத் தேவையற்றது. இந்த உயரமான குதிகள்(high heels) செருப்பு உனக்கு வேண்டாமம்மா’ எனச் சொல்லி அகங்கலாய்த்துக் கொள்கின்றாள். அம்மாவின் வேட்கை அம்மாவுக்கு.

மறுநாள், அந்த உயர்குதிச் செருப்புகளை அணிந்து கொண்டு சென்ற எட்வினாவின் தாயார் அவர்தம் கால் இடறிக் கீழே விழுந்ததில் காற்பாத எலும்பு பிசகிவிடுகின்றது. அதன்நிமித்தம் கால்கட்டு போடப்பட்டு ஒருமாத கால ஓய்வில் இருக்கப் பணிக்கப்படுகின்றார். கூரையானது மரத்துண்டுகளினால் வேயப்பட்ட வீட்டில், வெளியே எங்கும் செல்லாமல் தொடர்ந்து ஒருமாதகாலம் தங்கியிருந்ததில், மரத்தில் இருந்து வெளிப்பட்ட பூஞ்சைக்காற்றினால் எட்வினா அம்மாவுக்கு சுவாச அழற்சி ஏற்படுகின்றது. அந்த அழற்சிக்கு பென்சிலின் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றார். அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதில், அவர் உட்கொண்டு வந்த கருத்தடை மாத்திரைகள் பயனற்றுப் போயின. விளைவு, எட்வினாவுக்கு 19 வயதுகள் குறைந்த தம்பி பிறக்கின்றான். ஒரு குதிகாற்செருப்பு வாங்கிய அந்த ஒற்றை முடிவுக்குப் பயனாக எட்வினா அம்மாவுக்கு மகன் பிறக்கின்றான்.

ராபர்ட் வேலையில்லாத இளைஞன். அமெரிக்கத் தந்தைக்கும் பிலிப்பைன்சு தாய்க்கும் பிறந்து, அமெரிக்காவில் பள்ளிப்பருவத்தை முடித்து, தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட பிணக்கின்பாற்பட்டு தாயோடு பிலிப்பைன்சு நாட்டுக்கு வந்து, வந்த இடத்தில் வேலை எதுவுமின்றி அல்லாடிக் கொண்டிருப்பவன். பிற்பகல் நேரம். கடுமையான பசி.  வீட்டுக்குச் செல்வதா, உணவகம் செல்வதாயென மனம் தள்ளாடுகின்றது. ஒருவழியாக ஒரு முடிவினை மேற்கொண்டு, இருக்கின்ற காசை வைத்துக் கொண்டு, அந்த சீன உணவகத்துக்குச் சென்று பசியாறுகின்றான். எல்லாம் ஆன பிறகு, பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டுடன் ஃபார்ச்சூன்குக்கீ எனப்படுகின்ற அந்த இனிப்புப் பண்டமும் வைக்கப்படுகின்றது. பிரித்துப் பார்க்கின்றான். அந்தப் பண்டத்தினுள்ளே இருக்கின்ற துண்டுச்சீட்டில், “பிறருக்குக் கற்பிக்க வேண்டுமாயின், நாம் அதனை ஒருமுறைக்கு இருமுறை தீரக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று இருக்கின்றது. அது அவனது சிந்தையைக் கிளறி விடுகின்றது.  உணவகத்தில் இருந்து நேரே அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்று, தாம் பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லையென்றாலும், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவன்; அமெரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்தவன் என்கின்ற அடிப்படையில் ஆங்கிலப் பயிற்றுநர் வேலைக்கு விண்ணப்பித்தான். விண்ணப்பித்திருந்ததை மறந்தும் விட்டிருந்தான் ராபர்ட்.

தைவான் நாட்டில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினை முன்னிட்டு, தைவான் நாட்டு ஆசிரியர்கள் பலரும் பிலிப்பைன்சிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். அதன்காரணம், ஆங்கிலப் பயிற்றுநர்களுக்கான தேவை ஏற்பட, எங்கோ இருந்த ஒரு விண்ணப்பத்தின் பொருட்டு ராபர்ட்டுக்கு அழைப்பு வந்து, ஆங்கில வகுப்பு பகுதிநேர ஆசிரியர் வேலை கொடுக்கப்பட்டது. படிப்படியாக, முழுநேர வேலை, வீடு, திருமணம் என வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொண்டான் இராபர்ட். சீன உணவகத்தின் அந்த ஒரு துருப்புச்சீட்டு, அவனைப் பெரும் கல்வியாளனாகக் கட்டமைத்து பெரும் பாடசாலைக்கு உரிமையாளனாகவும் இட்டுச் சென்றது.

புறநகர்ப்பகுதி ஒன்றில் சேவையைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அந்த ஒருவர் மட்டும், வரிசை ஒழுங்கினைப் பின்பற்றாமல் ஓரிருவருக்கு முன்பாகப் போய் நின்றார். அதனை அங்கிருந்த காவலர் ஒருவர் தட்டிக் கேட்டார். வாக்குவாதம் நீண்டது. அந்த நபரைக் கைது செய்தது போலீசு. போலீசுக் கட்டுப்பாட்டில் இருந்த அவர் கடும் சொற்களைப் பாவித்தார்.  அடிகள் வாங்கினார். எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலின் படத்தை சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. நாடெங்கும் மக்கள் மனம் வருந்தினர். நாட்டின் அதிபருக்கு எதிராக அதனைத் திருப்பிவிட்டனர் சிலர். மக்கள் வீதிக்கு வந்தனர். ஒரே வாரத்தில் அரசு கவிழ்ந்தது. அதனைக் கண்ட அண்டை நாட்டவரைச் சார்ந்தவர்களும் அவரவர் அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களின் வாயிலாகக் கொந்தளித்து வீதியில் இறங்கினர். அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன இன்னபிறசக்திகள் பலவும். அந்த ஒற்றை இளைஞர் வரிசையில் முந்திச் சென்றதன் விளைவு, பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து நாடுகள் துண்டாகின. வாழ்வு பாழானது. பின்னர் அதற்கு ‘அராபிய வசந்தம்’ எனப் பெயரும் சூட்டப்பட்டது.

கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள், அமைப்புகள், முறைமைகள், நெறிகள் முதலான எதுவுமற்று, ஏதோவொரு சிறு சிறகசைப்பின்பாற்பட்டும், வெறுப்புணர்வின்பாற்பட்டும் முடிவுகளை மேற்கொள்ளும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றது. சாதி, சமய, இன உணர்வுகளைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தித் துருவப்படுத்தும் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் உலகெங்கும் மேலோங்கி வருகின்றன. எந்தவொரு சிற்சிறு சிறகசைப்பையும் தமதாக்கிக் கொள்ள எல்லாச் சக்திகளும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன. எந்தவொரு சிறகசைப்பும் நல்லதொரு விளைவையும் உண்டு செய்யலாம். நேர்மாறாகப் பாரிய பின்னடைவையும் உண்டு செய்யலாம். பெரும்பாலும் பின்னடைவுகளையே இந்த சிறகசைப்புத் தாக்கங்கள் உண்டு செய்து வந்திருக்கின்றன. அவற்றினின்று விடுபட்டுக் கொள்ளவும், அவற்றை மேன்மைக்குரியதாக உட்படுத்திக் கொள்ளவும் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு, முறைசார் அரசியலையும் தன்னார்வப் பணிகளையும் மேற்கொள்வது மட்டுமே.

-பழமைபேசி.


4/18/2020

உருகுவேக்காரனின் உருக்கம்



அன்புள்ள அத்தைக்கு,  புயோனா தியாசு. அம்மா சொன்னாள்.  ‘நாங்கள் எல்லாம் அங்கேயே இருந்திருக்கலாம். வரலாற்றுப் பிழை செய்து விட்டோம்’ என்று நீங்கள் சொல்லியதாய்ச் சொல்லி வருத்தம் கொண்டிருக்கிறாள்.

அத்தை, அந்த மாலைப் பொழுது நினைவிருக்கின்றதா? நான் அந்த உருளைக்கிழங்கு ஒன்றைத் தின்று கொண்டிருக்கின்றேன். அம்மா எதோ நறுவிசு செய்து கொண்டிருக்கின்றாள். நீயும் பாட்டியும் அம்மாவிடம் எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். எங்கிருந்தோ என் அப்பா, உங்கள் அண்ணன் வருகின்றார். பணம் கேட்கின்றார். நீங்கள் இருவரும் இல்லையெனக் கைவிரிக்கின்றீர்கள். அம்மாவை நையப் புடைக்கின்றார்.

என்னைக் காவி எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று அடைக்கலம் கேட்கின்றார். எல்லாரும் ஒதுங்கி ஓடுகின்றனர். நடந்தே வந்தோம் பாட்டியிடம். டாக்குரெம்போவில் இருக்கும் மாமனுக்குத் தகவல் போகின்றது. உயிரைப் பணயம் வைத்து மெக்சிக்கோ அனுப்பி விடுகின்றார். அங்கிருந்து ஊர் ஊராய்த் திரிந்து உயிரைக் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து சேர்ந்தோம். கால்களில் குத்திய முட்களின் எண்ணிக்கை தெரியாது. உடம்பில் கடித்த பூச்சிகளின் எண்ணிக்கை தெரியாது. ஆனால் அம்மாவிற்கு விழுந்த அடிகள் அத்தனையையும் நான் அறிவேன் அத்தை. மொத்த நாடும் எங்களை ஒதுக்கித் தள்ளியதுதானே?

வகுப்பில் விட்டார்கள். வயதைக் கருத்திற்கொண்டு மூன்றாம் வகுப்பில் விடப்பட்டேன். அடுத்த குழந்தையிடம் பேச முடியவில்லை. மொழி தெரியாது. டீச்சர் பட்லர் பியர்சு எனக்கு இன்னுமொரு அம்மாவாகிப் போனாள். படங்களைப் பார்த்துப் படிக்கச் சொன்னாள். எனக்கு மட்டும் டிவியில் ரைம்சு போட்டுக் காண்பித்தாள். ஒவ்வொரு சக மாணவரிடமும் பேசி, ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை எழுதித் தரச் சொன்னாள். அதுவும் பள்ளிக்கூட நேரத்திற்குப் பிறகுதான் பேசிக் கட்டுரை எழுத வேண்டும். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஏன் அத்தனையும் பையன்களிடம் பேசியதாய் இருக்கின்றது? பையன், பொண்ணு என மாற்றி மாற்றி இருக்க வேண்டுமெனக் கடிந்து கொண்டாள். தயங்கித் தயங்கி பெண் பிள்ளைகளிடம் பேசினேன். அதற்குப் பிறகுதான் தெரிந்தது பெண்பிள்ளைகளிடம் கட்டுரை எழுதுவதுதான் மிகவும் எளிதென்று. அப்படியாக ஒவ்வொரு வாரமும் எனக்கு புதிது புதிதாக ஒரு நண்பர் என பல நண்பர்கள் கிடைக்கப் பெற்றேன். அத்தை, நினைவிருக்கின்றதா? என்னைச் சக உறவுக்காரப் பிள்ளைகள் கல்லால் அடித்து விரட்டியதும், அதை நீங்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, என் அம்மா அக்கற்களைத் தம்மீது வாங்கிக் கொண்டதும்??

நான் இப்போது ஏழாவது வகுப்பு படிக்கின்றேன் அத்தை. அன்றாடம், நாங்கள் எல்லாரும் சூம் வீடியோகாலில் பேசிப் பழகி, பாடங்கள் படித்துக் கொண்டிருக்கின்றேன். அம்மா, ஒரு மூத்தோர் இல்லத்தில் துப்புரவு வேலை பார்க்கின்றாள். மரங்கள் சூழ இருக்கும் ஒரு வீட்டில் குடியிருக்கின்றோம். அம்மாவுக்கு கூடுதல் நேர வேலை. அந்த இல்லத்தில் இருக்கும் 175 மூத்தோருக்கும் அம்மாதான் செல்லப்பிள்ளையாம். கொரொனா வைரசு எங்களையோ, இந்த அமெரிக்காவையோ ஒன்றும் செய்துவிடாது அத்தை. மீண்டுவிடுவோம். சூழ்நிலையை மாற்ற முடியாவிட்டால், சூழலுக்கேற்றபடி எங்களை நாங்கள் மாற்றிக் கொள்வோம். இங்குள்ள மனிதர்கள் எல்லாரும் மண்ணின் பிள்ளைகள். மண்ணின் துகள்கள் சில மண்ணுக்குள்ளே போகலாம்தான். ஆனால் அதே மண்ணிலிருந்து அதே மண்ணின் பிள்ளைகளாய்  மனிதத்தோடு நெடுமரமென முளைத்துக் கொண்டே இருப்போம் அத்தை. எங்கள் இருப்பில் நாங்கள் மகிழ்ந்திருக்கின்றோம். அடியோசு!!     அன்புடன், பெண்ட்டில் பெண்ட்டோசு.

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

3/29/2020

உயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி


வணக்கம். During this tough pandemic period,  Why I choose to be positive? வைரசுகள் பலவிதம். அதில் இதுவொரு விதம். இதன் சுவடு, கண் மூக்கு வாய் வழியாக மூச்சுக்குழாய்க்குள் சென்றால், பல்கிப்பெருகி உடல்நலத்துக்குத் தீங்காகும். நம்மிலிருந்து பலருக்கும் அது பரவ வழிவகுக்கும். தற்காத்துக் கொள்ளவும் பொதுநலத்துக்கு வழிவகுக்கவும் ஒத்துழைப்பது நம் கடமை. ஆகவே, I choose to be positive.

மனநிலை என்பது நாம் உள்வாங்கும் பல செய்திகள், தகவல்கள், காட்சிகள், உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டது. அறிவுறுத்தலுக்கும் அச்சுறுத்தலுக்கும் மயிரிழையளவுதான் வித்தியாசம். அந்த வித்தியாசத்தைக் கடைபிடிக்க சமநிலை தரித்தல் அவசியம். ஆகவே, I choose to be positive.

24 மணிநேரமும் வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இணையத்தில் தொலைக்கலாம். இதிலிருந்தெல்லாம் விடுபட்டு, அதிகாரப்பூர்வ அரசுப்பூர்வ தகவலை நுகர்ந்து பெருமளவு நேரத்தை என் சிந்தைக்குள்ளாகவே வைத்திருக்க வேண்டுமேயானால் சுயகட்டுப்பாடு அவசியம். ஆகவே, I choose to be positive.

நானும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, பிறந்த நொடியிலிருந்து இந்தநொடி வரைக்குமான பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றேன். அதில் எத்தனை எத்தனையோ அனுபவங்களைப் பெற்றே வந்திருக்கின்றேன். திரும்பிப் பார்த்து, அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சவாலான நேரத்தைக் கடக்க முயலவேண்டுமேயானால், முதலில் நான் என் வசப்பட வேண்டும். ஆகவே, I choose to be positive.

மானுடத்தின் மகோன்னதம் அறிவியல். அறிவியலில் பல கூறுகள், பல பிரிவுகள். கற்பதற்கு கிடைக்கின்றன ஏராளம், ஏராளம். நாம்தான் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டும்.  அதற்குத் தேவை நாட்டம். அப்படியான நாட்டத்துக்கு விழைதல் அவசியம். ஆகவே, I choose to be positive.

பேரிடர் காலத்தில் துயருக்கு நெருக்கமானவர்கள் வயதில் மூத்தோர், உடல்நிலையில் பின்தங்கியோர், சிந்தைவலு குன்றியோர். அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டுமேயாயின், நமக்குள் ஊக்கம் வாய்த்திருத்தல் அவசியம். அன்றாடம் சில பலருடன் பேசியும் வருகின்றேன். அப்படியான ஊக்கத்திற்காக,  I choose to be positive.

அடிப்படையில், மக்களுடன் உரையாடும், கலந்திருக்கும், ஊடுபாயும் தன்மை கொண்டவனுக்கு, அப்படியானதன் தேவை அதிகரித்திருக்கின்றது. தேவையை ஈடுகட்டும் பொருட்டு, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

வீட்டில் மருத்துவத்துறை சார்ந்தவர் இருக்கின்றார். ஊக்கமளித்துத் தோளோடு தோள் கொடுத்து நிற்றலும் அவசியம். மருத்துவத்துறை சார்ந்தவர் என்பதாலேயே அறிவுறுத்தலெனும் பெயரால் அச்சுறுத்தல்களும் வந்து சேர்கின்றன. அவற்றை முறியடித்து விழுமியம் பேண வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

வாழ்க்கையைக் காலத்தின் அளவு முடிவு செய்வதில்லை. துவக்கத்திலிருந்து முடிவு வரையிலான பயணத்தில் வாழ்வுக்குடம் நிறைகுடமாக வந்து சேர்ந்ததா என்பதுதான் பொருட்டு. இயன்றவரையிலும் நிறைவானதாய் இருக்க முயல்கின்றோம். அத்தகு முயற்சிக்கு வித்து, துணிபு. ஆகவே, I choose to be positive.

நேற்றைய நாளைச் செப்பனிட முடியாது. ஆனால் நாளைய நாளைக் கட்டமைக்க முடியும். கட்டமைக்க உறுதியும் உள்ளமும் தேவையாய் இருக்கின்றது. ஆகவே, I choose to be positive.

சிங்கம் பிடரியைச் சிலிப்பி எழுவது போல,  நாய் தன் பின்னங்கால்களை ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி நிலத்தைக் கீறி, பாய்ந்தோடத் தன்னை முடுக்கி முனைந்து கொள்வதைப் போல, அடுத்தவரையும் தட்டித் திடமாக்கி ஊக்கம் கொள்ளச் செய்திட நமக்குள் வேட்கை இருந்திடல் வேண்டும். ஆகவே, I choose to be positive.

சோம்பலாக இருக்கின்றதா? மங்கலாக இருக்கின்றதா?? சோகமாய் இருக்கின்றதா? சோகையாய் இருக்கின்றதா?? விரியக் கண்களைத் திறந்து பாருங்கள். வாய்விட்டு, அஃகஃகா பெருத்துச் சிரியுங்கள். உங்களுக்குள் ஆழம் பிறக்கும். அவை அனைத்தும் அதற்குள் புதையுண்டு போகும். நீங்கள் மிளிர்ந்து இருப்பீர்கள். அதற்குத் தேவை ஓர் ஆறுதல், ஒரு துணை, ஒரு சொல். ஆகவே, I choose to be positive.

வெயிலில் நனைந்தேன். வானத்தைப் பார்த்தேன். தெருச்செடி கொடிகளைப் பார்த்தேன். வழிந்தோடும் சிற்றோடையைப் பார்த்தேன். எல்லாமும் அதனதன் கதியில் இன்புற்றுக் கிடக்கின்றன. அதற்கான இடர்களையும் தாண்டித்தான். நானும் தாண்டியாக வேண்டும். ஆகவே, I choose to be positive.

வெயிலில் நனைந்தேன். வானத்தைப் பார்த்தேன். தெருச்செடி கொடிகளைப் பார்த்தேன். வழிந்தோடும் சிற்றோடையைப் பார்த்தேன். எல்லாமும் அதனதன் கதியில் இன்புற்றுக் கிடக்கின்றன. அதற்கான இடர்களையும் தாண்டித்தான். நானும் தாண்டியாக வேண்டும். ஆகவே, I choose to be positive.

நம்விரல்களில் நச்சின் சுவடு படிந்து விட்டது. கண்களைக் கசக்கும் போது, மூக்கினைத் தொடும்போது, ஏதாகிலும் தின்னும் போது, காயம் புண்களினூடாகயெனப் பலவாறாக எப்படியோ அது நம்முடலுக்குள் புகுந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்? உடம்பில் இருக்கும் அணுக்களில் புகுந்து தன்வசப்படுத்தி தன் உருவைப் பெருக்கிப் பெருக்கி உடலைத் தின்ன, சிதைக்கத் துவங்கும். உடலெங்கும் இருக்கும் அணுக்கள் வெளியாள் உட்புகுந்து விட்டதைக் குறிக்க புரதச்சுவட்டினை வெளிப்படுத்தும். அப்படியான புரதச்சுவடுகளைப் படித்துத் தெரிந்து கொண்ட உடல், அவற்றை அழித்தொழிக்கும் பொருட்டு நம் எலும்பு மச்சையிலிருந்து இலட்சோப இலட்சம் வீரர்களை இரத்தத்தின் வெள்ளையணுக்கள் வாயிலாக அனுப்பும். வெளியேற்றும்பொருட்டு, தும்மல் இருமல் ஏற்படும்; வெப்பத்தை உயர்த்தி அவற்றை அழிக்கும் பொருட்டு காய்ச்சல் ஏற்படும். புரதத்தைக் கொண்டு தடுப்புக் காவலர்களை அனுப்பும் பொருட்டு புரதச்சத்தினை செலவிடுவதால், தசைநார்கள் வலிக்கும். முதன்முறையாக ஒரு நச்சு உட்புகும்போது, அழித்தொழிப்பு வேலை கடுமையாக இருக்கும். ஒருமுறை அழித்தொழிப்பில் வெற்றி பெற்று விட்டால், உடற்சக்தியானது அதன் வகை, தன்மை முதலானவற்றை நினைவில் வைத்திருக்கும். மறுமுறை எதிர்ப்படும் போது எளிதில் வென்றெடுக்கும். இப்படியான நச்சு எதிர்ப்பு அணுக்களுக்கும் சிந்தையின் எண்ணங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு. https://www.sciencedaily.com/releases/2010/03/100323121757.htm சிந்தை மேலான எண்ணத்தோடும் ஊக்கத்தோடும் இருக்கும் நிலையில், உடலின் கோடானுகோடி அணுக்களும் அவ்வண்ணமே இருக்கின்றன. அவை அப்படி இருக்கும் போது, அவற்றின் பிரதிகளும் ஊக்கம் பெற்று அழித்தொழிப்பில் வெற்றி பெறுகின்றன. ஆகவே, I choose to be positive; We must remain positive. உயிரின் உந்துசக்தி அது ஊக்கசக்தி, Let's be positive! Wish you all the best!!

Signing Off,
பழமைபேசி,
Pazamaipesi@gmail.com.

3/13/2020

சமையலோடு உறவாடு



வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, ஒருவர் தம்மைச் சமையலில் ஈடுபடுத்திக் கொள்வது வாழ்வையே முழுமையாக்கும். எப்படி?

சமைப்பதென்பது நம் மனநலத்தை மேம்படுத்தும். ஏனென்றால், அது பொறுமையைச் சிறுக சிறுக நம்முள்ளே உட்புகுத்தி தேவையற்ற கொந்தளிப்புகளையும் உணர்வுப் பிழம்புகளுக்கான அத்தனை காரணிகளையும் மட்டுப்படுத்தி விடும். மனநிறைவை ஈட்டித்தரும். புத்தாக்கத்துக்கான அத்தனை கதவுளும் திறக்கப்பட்டு எல்லையற்ற தன்னாட்சியை அது நமக்குக் கொடுக்கும். வகை வகையாய், விதவிதமாய் புதுப்புது வழிகளில் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம். தாவரங்களோடும், இதர பண்டங்களோடும் உரையாடலை மேற்கொள்ளும் மனம். ஒவ்வொரு மணம், சுவை, ஓசை, வண்ணம் எனப் பல பரிமானங்களில் அவற்றை மனம் அணுகத் துவங்கும். இதன் வாயிலாக, மனம் விசாலமடைந்து சிந்தை பலவாறாக விரிவடைய தொடங்கும்.  ஒன்றைச் செய்து வடிவாக வரும் பொருட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மனம் தன்னம்பிக்கையில் ஆழ்ந்து புரளும். குடும்பநலமும் குதூகலிக்கத் துவங்கும். பாராட்டுகளும் கொடையுள்ளமும் படிப்படியாக பரவசத்தைக் கொணரும்.

செய்மன உணர்வு

தமக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கென சமைக்கத் துணிந்து, மனத்தின் அத்தனை பார்வையும் நன்றாகச் செய்து அசத்த வேண்டுமென்கின்ற வேட்கையின் பொருட்டு ஒருமுகமாக அந்த இலக்கில் குவியும் மனம். மனம் ஒருமுகப்பட வேண்டுமெனத் தனித்தனிப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தேவையில்லை. சமைத்தாலே போதும். அத்தனை கவலைகளும், மனச்சிதற்ல்களும் ஒழிந்து போகும், பேரின்பத்தில் ஆழ்ந்து போகும் மனம். நாட்பட நாட்பட உள்ளுணர்வு மேம்பட்டு, அளவீடுகளெதுவுமின்றி நிதானத்திலேயே ஒன்றைப் படைக்க முற்படுவீர்கள். அதுதான் கைவாக்கு என்பது. அப்படியான கைவாக்கு மேம்படும்போது மனம் பண்பட்டே போகும்.

புத்தாக்க உணர்வு

பல்வேறு காய்கறிகள், தனிப்பொருட்கள்,  வறுப்பது, தாளிப்பது, சுடுவது, அவிப்பது, கருக்குவது எனப் பல்வேறு சமைக்கும் முறைமைகளென பலதரப்பட்டவோடு பின்னிப்பிணைந்து புதிது புதிதாகச் செய்து பார்க்கத் தூண்டும் மனம். தேடலை விதைக்கும். நாடலை விதைக்கும்.  மற்றவர் அறிந்திராத ஒன்றைப் படைக்க விழையும் மனம். அந்த இடத்தில்தாம் ஒருவரின் மனத்தடைகள் எல்லாம் சுக்கு நூறாக உடையத் துவங்கும். அது அவரவரின் தொழில், வாழ்க்கையிலும் துலங்கத் துவங்கும். மனத்தடை அகன்றால், out of box thinking எனப்படுகின்ற மனவிரிவு நேர்ந்தே தீரும்.

பொறுமை

சமைக்க சமைக்க உள்ளுணர்வு வலுப்படும். Blending இரண்டறக் கலந்து நயம் வெளிப்படுகின்ற தருணத்துக்காக மனம் ஏங்கும். அந்தத் தருணத்தை மட்டுமே இலக்காகக் கொள்ள மனம் விழைகின்ற போது, பொறுமை என்பது தானாக வந்து விடும் ஒருவருக்கு.

மனமறிதல்

பாராட்டும் போது மனம் இலயித்துப் போகும். நாட்பட நாட்பட அடுத்தவரின் நாடிபிடிக்கப் பழகிப் போகும் மனம். சுவையில், காட்சியில் மேம்பாடு காணத் துடிக்கும். அடுத்தவரின் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவல் கொள்ளும். இத்தகைய பண்பு என்பது சந்தைப்படுத்தலுக்கான ஆதார வேர். அத்தகைய பண்பு சமையலின் வாயிலாகவும் நமக்கு நேரிடும்.

நெகிழ்மனங்கொள்தல்

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தன்மை உண்டு. அந்தப் பொருளும் அதனதன் இடம், வகையைப் பொறுத்து அதன் தன்மையைக் கொண்டிருக்கும். அப்படியான நிலையில் நினைத்தபடி வாய்க்கப் பெறாவிட்டால் உடனே அதனை ஈடுகட்டும் பொருட்டு வேறெவோன்றைச் செய்து சரிக்கட்டப் பழகும் மனம். உப்புக் கூடிவிட்டால், ஒரு உருளைக்கிழங்கினைத் துண்டுகளாக்கிப் போட்டு விடுவதைப் போல. எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிவதைக் காட்டிலும், மனம் நெகிழ்ந்து சரிக்கட்டிக் கொள்ளப் பார்க்கும்.

முறைமைகொள்தல்

சமையலில் ஈடுபடுத்திக் கொள்ளும் போது, ஒழுக்கம், பேணல் என்பதும் தானாகவே அமைந்து விடுகின்றது. கிடங்கில் என்னென்ன பொருட்கள் எல்லாம் இருக்கின்றது? என்னவெல்லாம் வாங்கி வர வேண்டும்? எப்படியெல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்? கெடுதல், வீணாதல், பேணுதல், வாங்கி வருதல் எனப் பலவாறாக மனம் பண்பட்டுப் போய் விடும்.

மெய்நலம்பேணல்

சமைத்தலில் ஈடுபடும் போது, நாடலும் தேடலும் விழைவும் நேர்ந்து விடுகின்றனயென்பதைப் பார்த்தோம். அவற்றின் பொருட்டு, தரம், நயம், நலம் என்பதும் தானாகவே அமைந்து வந்து சேர்ந்து கொள்கின்றது.  தாவரங்களின் இன்றியமை்யாமை, சத்துகளின் வகை, இன்ன நிலைக்கு இன்ன உணவு என்பதெல்லாமும் வாய்க்கப் பெற்று விடுகின்றது. அதன்நிமித்தம் மெய்நலமும் மேம்படுகின்றது.

சமைப்பதென்பது மனிதனை முழுமைப்படுத்தியே தீரும். சமத்துவமும் நிறைகொளலும் நேர்ந்தே தீரும். சமைக்கத் தெரியாதவன் அரை மனிதன்.  மெய்நலமும் மனநலமும் மேம்பட சமையலைப் பழகு.  Cooking is one of the mozt zen things; you have to be there!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

1/13/2020

பொங்குக பொக்கம்


வதக்கு வதங்கு, அமுக்கு அமுங்கு, ஒழுக்கு ஒழுங்கு, நீக்கு நீங்கு, இறக்கு இறங்கு, தூக்கு தூங்கு, சுருக்கு சுருங்கு, ஒதுக்கு ஒதுங்கு, இந்த வரிசையில் பொக்கு பொங்கு!!

பொக்கம் pokkam , n. < பொங்கு-. 1. Abundance; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 2. Eminence, height; உயரம். Loc. 3. Bloom, splendour; பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திரு வுலா.).

பொலிவையும் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் குறியீடாக, பொங்கல். வாழ்வில், வேளாண்மையில், தொழிலில் பொங்கிவர வாழ்த்தி, விழுமுதலைக் கொண்டு ஆடுதல், பொங்கல் விழாக் கொண்டாட்டம்.

வேளாண்மை, தொழில், வாழ்வு யாவற்றுக்குமான‌ இயற்கையின் சிறப்பாகக் கதிரவன். கதிரவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்வு. வழக்காறாக, மனிதன் மரத்தை வணங்கினான். ஆற்றை வணங்கினான். மலையை வணங்கினான். கடலை வணங்கினான். கதிரவனையும் வணங்குகின்றான். பொங்கும் கதிரோன் நாள்!!

கூட்டமாக வாழத்தலைப்பட்டவன். மனம் தனிமையையும் நாடும். அதேபோல இன்னபிறரின் அணுக்கத்தையும் நாடும். கூட்டுக்களிப்பும் உண்டாட்டும் எந்த உயிரினத்துக்கும் உரித்தானது. அதன்நிமித்தம் பொங்கல் விழாக் கொண்டாட்டத்திலும் கலை இசை பங்கு கொள்கின்றது. நட்புபாராட்டிக் கெழுமை கொள்கின்றான் மனிதன்.

உறைவிடத்தைத் தூய்மைப்படுத்துகிறான். தொழுவம் பேணுகின்றான்.அழகூட்டுகிறான். உடனுறை விலங்குகளைச் சிறப்பிக்கிறான். புதுவிளைச்சலை வரவேற்க, 'புதுயீட்டுப் பொங்கல்' வைக்கிறான். உடன்படு உயிரினங்களுக்கும் படைக்கிறான். சமயமில்லை. பேதமில்லை. பொங்கலோ பொங்கலெனக் கூவிக் குதூகலம் கொள்கின்றான்.

பின்னாளில் தனித்துவம் கொள்ள விழைந்தான். அரசியல் பழகினான். செப்புமொழி முன்வைத்து நடைபோட்டான். வள்ளுவரை முன்னிறுத்தினான். திருவள்ளுவரை முன்னிறுத்தினான். தற்காப்புக்கலை பழக்குவித்தான். இணக்கம் முகிழ பாரிவேட்டை நடத்தினான். உளம் மகிழ கரிநாளில் கள்ளு உண்டாட்டு சேவற்கோச்சை!!

கூட்டுக்களி(இசை, நடனம், ஆடல், பாடல், கதை, கலை, விளையாட்டு), உண்டாட்டு, இதனூடாக அரவணைப்பு. உறுதிகொள்ள ஊக்கம்கொள்ள மேம்பட இவைதாம் அடிப்படை. நிறுவனம் செய்து கொடுத்தால் உழைப்புக்கு ஊட்டம். சாமியார் செய்து கொடுத்தால் பணத்துக்கு ஊட்டம். மனிதனுக்கு மனிதனே செய்து கொண்டால் அது பொங்கல்.

உவகை ஈகை நாடல் பேணல் பொங்க நண்பர்களைச் சந்திக்கலாம்,மூத்தோரைச் சந்திக்கலாம்;ஏக்கம் தாக்கம் அளவளாவிக் கொள்ளலாம்.பிணக்குகள் தீரும்.பகைமை ஒழியும். ஒழிக்க உறுதியும் இறுகும். மொத்தத்தில் தைப்பொங்கல் நம்மனத்துக்கும் புதுயீடுதான். பொங்கல்நல்வாழ்த்தும் வணக்கமும்! Cheers!!

பழமைபேசி.

1/07/2020

போராட்டம் வெட்டிவேலை சார்! அப்படியா?!

There may be times when we are powerless to prevent injustice, but there must never be a time when we fail to protest 
- Elie Wiesel.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே பேச்சுரிமையும் அதன்வழி மேற்கொள்ளப்படும் போராட்டவுரிமையும்தான். எங்கெல்லாம் போராட்டம் மறுக்கப்படுகின்றதோ, கீழ்மைப்படுத்தப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்களாட்சிக் கோட்பாடு தோற்றுக் கொண்டிருக்கின்றதென்றே பொருள். அப்படியானால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து குறைகூறவே கூடாதா? கூறக்கூடாதுதான். ஏனென்றால், ஒருவனுக்கு எது குறித்தும் போராடுவதற்கு முழு உரிமையுண்டு என்பதுதான் அரசியல் சாசனம். 1966 பன்னாட்டுக் குடிமை, அரசியலுரிமைக் கோட்பாட்டு(ICCPR) உடன்படிக்கையில் ஏராளமான நாடுகள் பங்கு கொண்டுள்ளன. தத்தம் நாட்டு அரசியல் சாசனத்திலும் இதற்கான உரிமைகளைக் கொடுத்தேயிருக்கின்றன. வேண்டுமானால், போராட்டத்துக்கான காரணத்தை கேள்விக்குள்ளாக்கலாம். அது எதிர்த்தரப்பின் உரிமையாகக் கருதப்பட வேண்டும். இருந்தும், சில போராட்டங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதும் உண்டு. எனவே, அதற்கான உளவியற் பின்னணி குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

அடையாளப்போலிகள்: உரிய கொள்கை, கோட்பாடு, அவற்றின்பாலான பற்றுதல் இருப்பவர்கள் அதனதன் இயக்கங்களில், அமைப்புகளில், கட்சிகளில் பங்கேற்று தொடர்ந்த பங்களிப்பினைத் தத்தம் அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் கொடுத்து வருவர். அப்படியல்லாதோருக்கு, அவ்வப்போது தம்மீதான மதிப்பீட்டின் மீது ஐயமேற்படும். தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும், தம் இருப்பினை வெளிக்காட்டிக் கொள்ளவும் ஏதொவொன்று தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் போராட்டம் ஒரு கருவியாக எடுத்தாளப்படுகின்றது. நாட்டைக் காக்கின்றேன், மொழியைக் காக்கின்றேன், பண்பாட்டைக் காக்கின்றேனெனப் போராட்டங்கள் நடத்துவதும் பணம் திரட்டுவதுமெனக் கிளம்பிவிடுவர். போராட்டம் எனும் கூற்றினைச் சிதைக்க வேண்டுமென்பதற்காயும் செயற்படுவோர் உண்டு.

பிறநலம்நாடிப்போலிகள்: எந்தவொரு விழிப்புணர்வுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாமல் ஆட்டுமந்தையினுள் மற்றுமொரு ஆடெனச் சாமான்யனினும் பிறிதாய் இருந்து கொண்டிருப்போருக்குத் தம்மீதான நம்பிக்கைகூட இருந்திராது. ’அவர் சொல்கின்றார், செய்யாவிடில் அவரது நட்புப் பறிபோகும்; அறிவார்ந்த அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்; இதைச் செய்தால் அது கிடைக்கும்’ போன்ற காரணங்களுக்காகப் போராட்டத்தின் காரணத்தினையே அறியாமற் செயற்படுவது.

ஒட்டுண்ணிப்போலிகள்: தத்தம் வலுவைக் காண்பிக்கவும் தலைவராக உருவெடுக்கவும் நிலைநாட்டிக் கொள்ளவும் வேண்டும். அதிகாரசக்திக்கும் வணிகசக்திக்கும் ஊன்றாய் இருந்திடல் வேண்டும். மடைமாற்றுப் போராட்டங்களின் வழி, ஒரே கல்லில் இரு கனிகள் கிடைக்குமுகமாய்ப் போராட்டங்கள் வழியாகத் தன் படைகளைக் கொள்தல்.

போக்கிடப்போலிகள்: வெறுமையாய் உணரும் போது ஏதோவொடு கொழுகொம்பு தேவையாய் இருக்கின்றது. கூட்டமாக வாழ இயைந்தவன் மாந்தன். அந்நிலையில், களிப்புக்காகவேணும் பங்கு கொள்வது. எதிர்விளைவுகளென ஏதேனும் தென்பட்டால் மட்டுப்படுத்திக் கொள்வது அல்லது பின்வாங்கி விடுவது.

ஏதுபெறுப்போலிகள்: வெற்றியெனும் தருவாயில் தம்மையும் இணைத்துக் கொள்வது. அல்லது, வெற்றியெனும் பிம்பத்திற்காகவே அதிகாரமயத்தோடு இணைந்து நடத்தப்படும் போராட்டங்களில் பங்கு பெறுவது. சட்டத்தை திரும்பப் பெறச் செய்யும் போராட்டத்தில், சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமாயென விவாதிக்க அதிகாரமயம் கூடுகின்றதென்பதைத் தெரிந்து கொண்டு வெகு ஆர்ப்பாட்டத்துடன் களமிறங்கிச் செயற்படுவது.

இப்படியான உளவியலோடு போராட்டத்தைக் கையிலெடுப்பவர்கள்தாம் போராட்டவுரிமைக்கே வேட்டு வைப்பவர்கள். இந்த எதிர்த்தரப்பினர், இத்தகைய உளவியலோடுதாம் அவர்கள் செயற்படுகின்றனரெனும் விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; ஏனென்றால் அவர்களின் ஆழ்மனத்தில் என்னமாதிரியான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை அறியாததாக இருப்பர். அல்லது, திட்டமிட்டே உள்நோக்கத்தோடு செயற்படுத்தும் கூர்நோக்கர்களாய் இருப்பர்.

சமுதாய, குடிமைநலம் போற்றிடப் போராடும் முதற்தரப்பினர், இவர்களை எதிர்த்தும் போராட வேண்டிய நிலைக்கு ஆட்பட்டிருக்கின்றனர். ஏனென்றால், கொள்கைவழிப் போராட்டங்கள் இத்தகு போலிப்போராட்டங்களால் நீர்த்துப் போகவும், சிதைந்து போகவும், கண்டனத்துக்காட்படவும் நேரிடுகின்றது. ஆகவே, போலிகளைச் சுட்டுவது காலத்தின் கட்டாயம்.

போலித்தனத்தின் கருவறுப்புக்கிடையே தத்தம் கொள்கைவழிப் போராட்டங்களையும் முனைப்போடு ஒரு மாந்தன் ஏன் முன்னெடுக்க வேண்டும்? அதன் தேவை என்ன??

விழிப்புணர்வு: எல்லாக் குடிமக்களுக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்கின்ற அவசியமில்லை. அத்தகு சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வுக்காகவேணும், கவன ஈர்ப்புக்காகவேணும் போராட்டங்களை, இயக்கங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

மக்கள்சக்தி: ஒவ்வாத சட்டங்களோ, பழக்கவழக்கங்களோ தலையெடுக்கும் போது, அதற்கான எதிர்வினையென்ன என்பதை ஒருமுகப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை எந்தவொரு சமூக ஆர்வலனுக்கும் உண்டு. அதற்காகவேணும், ஓர் ஊர்வலத்தையோ, கூட்டத்தையோ, ஆர்ப்பாட்டத்தையோ நடத்திக் காட்டியாக வேண்டியுள்ளது.

ஒற்றுமைப்படுத்தல்: மாந்தனையப் பெருவெள்ளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பண்புநலம், கூறுகள், விருப்பு வெறுப்புகள், கலைநயம் போன்றவை இருக்கும். எடுத்துக்காட்டாக, மூன்றாம் பாலினம் என வைத்துக் கொள்வோம். பெருவெளியில் எங்கெங்கோ ஒருவர் இருக்கக் கூடும். அப்படியான ஒருமித்தவரின் ஒற்றுமைக்குப் போராட்டங்கள், இயக்கங்கள் தேவையாக அமைகின்றன.

ஒருங்கிணைவு: செயலூக்கம் பெறவும், மேன்மை கருத்திச் செயற்படவும் ஆங்காங்கே இருப்போர் ஓரிடத்தில் சங்கமித்து கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளப் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

தீர்வுபெறல்: எல்லாப் போராட்டங்களும் எல்லாக் காலங்களிலும் வெற்றியை ஈட்டிக் கொடுக்குமெனச் சொல்ல முடியாது. ஆகவே, மாற்றுத்தீர்வு குறித்து ஆயவும் அதற்கான படிப்பினையைப் பெறவும் போராட்டங்கள் வழிவகுக்கின்றன.

இத்தகு தேவைகளுக்கும் அப்பாற்பட்டு, ஒருவர் ஏன் போராட்டவுரிமையை வலியுறுத்தியும், போராட்டவுரிமைக் கொச்சைப்படுத்துதலை எதிர்த்தும் செயற்பட வேண்டும்??

போராட்டவுரிமை என்பது ஒவ்வொரு மாந்தனின் அடிப்படை அரசியலுரிமை, குடியுரிமையாகும். மக்களாட்சித் தத்துவம் தழைத்தோங்க எதிர்க்குரலும் எதிர்வினையும் இருந்தேயாகவேண்டும். மனிதனுக்குத் தன் ஆற்றாமையை இறக்கி வைக்க ஏதோவொரு வடிவில் ஓர் இடம் இருந்தே தீர வேண்டும்; அல்லாவிடில் அடிமைத்தனத்துக்கே அது வழிவகுக்கும். சமூகத்தில் வெகுவாகத் தெரிந்திராத சில பல பிரச்சினைகளை வெளிப்படுத்த போராட்டங்கள் ஏதுவாகும். எந்தவொரு மேன்மையும் மாற்றத்தினைக் கொண்டே இடம் பெறுகின்றது. அத்தகைய மாற்றங்களுக்குப் போராட்டங்கள் வித்திடுகின்றன. எதிர்மறையான மாற்றங்களை மட்டுப்படுத்துகின்றன. பாரதூர விளைவுகளைச் சார்ந்தோர், பாதிக்கப்பட்டோருக்கு இடையேயான ஒற்றுமைக்கு வித்திடுகின்றது போராட்டம். அதிகாரவரம்புமீறல், கொடுங்கோன்மை, முறைகேடு போன்றவற்றை அம்பலப்படுத்துகின்றன போராட்டங்கள். அரசு, அமைப்பு, நிறுவனங்கள் போன்ற குடிமை மையங்களுக்கிடையேயான சீரின்மையைக் களைந்து நல்வழிக்கு வித்திடுகின்றன போராட்டங்கள். எதிர்முகாம், மாற்றுமுகாம், பிறர்மனது என மற்ற சமூகச் சிந்தனைகளையும் இணக்கத்தையும் இனம் காணச் செய்கின்றன போராட்டங்கள். எதையுமே செய்யாமல் குறைசொல்லிக் கொண்டிருப்பதற்கு மாற்றாக, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இட்டுச் செல்கின்றது போராட்டவடிவம்.

உலகின் எந்தநாட்டு மூலையிலிருந்தாலும், அவரவருக்கான சவால்களும் பிரச்சினைகளும் அல்லல்களும் இருந்தேதானிருக்கும். சோர்ந்திருந்து, குறைசொல்லிப் புலம்புவதாலும் நம்பிக்கையிழந்து போய் இருப்பதாலும் மேன்மை கிட்டிவிடாது. தரக்குறைவான அரசியல், முறைகேடு, ஊழல், தடித்தனம், காமுகத்தனம், வெறுப்பியக்கம், பிரித்தாளும் போக்குயென எல்லாமும் இருக்கும்தான். இவையெல்லாம் இயல்பானதே. எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்; ஒவ்வொரு குடிமகனும் இவற்றை இனம் கண்டு தத்தம் கடமையைச் செய்ய முற்படும்போது. தீர்வு கிட்டியே தீரும். தலைவர்கள், கொள்கை கோட்பாடு கருதிச் சித்தாந்தங்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றனர். அவற்றின்வழிப் பயணிக்க முற்படும் தருவாயில் நமக்கான தீர்வு அமைந்தே தீரும். உணர்வுகளுக்கு முந்தையதாக சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடல் வேண்டும்.

ஒரு மனிதனின் மதிப்பீடு, அளவீடு என்பது அவன் வசதியாகவும் இன்பத்தோடும் இருக்கும் போது பெற்றிருப்பது அல்ல. மாறாக, சவால்களை எதிர்கொள்ளும் போதும் போராட்டங்களுக்கு ஆட்படும் போது எத்தகையவனாய் இருந்தான் என்பதேயாகும். குரல்கொடுக்க வேண்டிய இடத்துக் குரல் கொடுத்தானா? செயலாற்ற வேண்டிய இடத்தில் செயலாற்றினானா?? சீராகப் பணி செய்கின்றானா?? இவைதாம் மனிதனின் மாண்புகள்.

போராடுவதென்பது நம் கலாச்சாரம் பண்பாடு இனத்தின் கூறா, அல்லவாயென்பதல்ல; மாறாக, போராடுவதென்பது எந்தவொரு உயிருக்குமானதான அடிப்படைத் தேவை. அதற்கு செவிமடுப்பதும் மதிப்பளிப்பதும் நல்லதொரு மனிதனுக்கு அழகு. குரல் கேட்கப்பட வேண்டும்! கொள்கை தரிப்போம்! உரிமை கொள்வோம்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.

காடடையும் படைக்குருவிகள்

தென்னிந்தியாவின் மான்செச்டர் என அழைக்கப்பட்டது கோயமுத்தூர் மாநகரம். ஒன்றிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில்தாம் ஏராளமான நூற்பாலைகள் இருந்தன. அந்த நூற்பாலைகளின் உற்பத்தியின் தேவைக்கேற்ற பருத்தி சாகுபடியும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் இடம்பெற்று வந்தது. இந்த சூழ்நிலையில்தாம் 1980ஆம் ஆண்டு வாக்கில் என்றுமில்லாதபடிக்கு பருத்தியின் பூக்களும் காய்களும் புதுவிதமான புழுக்களால் சூறையாடப்பட்டன. மாலையில் பருத்திக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மகிழ்ச்சியோடு திரும்பிய விவசாயி, காலையில் காடெங்கும் உதிர்ந்தும் சிதைந்துப் போனதைக் கண்டு மனம் வெதும்பினான். இரவோடு இரவாக ஒரு பூ, காயைக்கூட விடாமல் தின்றுவிட்டுக் கொழுத்துக் கிடந்தன ‘புரோட்டினியா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் புழுக்கள். கடன் வாங்கிப் பயிரிட்டு, பேணிவளர்த்து, அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் பல தூக்கிட்டுக் கொண்டனர்.

பறக்கும் பூச்சிகளில் இருந்துதாம் புழுக்கள் உருவாகின்றனயென்பதைக் கண்டு கொண்ட வேளாண் அறிஞர்கள் இனக்கவர்ச்சிப் பொறியைக் கண்டுபிடித்து ஏக்கருக்கு இத்தனை பொறிகள் என அமைத்தனர். இரவு நேரத்தில் பொறியில் எரியும் விளக்கின் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்பட்டு அதிலிருக்கும் புனலில் வீழ்ந்து மடிந்தன அத்தகைய பூச்சிகள். இருந்தாலும் நிலைமை கட்டுக்கடுங்கவில்லை. பருத்திக் காடுகள் சுடுகாடுகள் ஆகிக் கொண்டிருந்தன. விபரமறிந்த விவசாயிகள் பருத்திக் காடுகளுக்குள் ஆழமாக வாய்க்கால்கள் வெட்டினர். புழுக்கள் அத்தகைய வாய்க்கால்களுக்குள் விழுந்து மறுபக்கம் செல்ல ஊர்ந்து போகத்தலைப்படுகையில் செறிவாக குழிகளுக்குள் காணப்பட்டன. அவற்றையெல்லாம் சாக்குப்பைகளில் சேகரம் செய்து காட்டுக்கு வெளியே கொண்டு போய்க் கொட்டித் தீவைத்துக் கொழுத்தினர். என்றாலும் அவற்றின் சூறையாடல் நின்றபாடில்லை. அந்த நேரத்தில்தாம் எங்கிருந்தோ வந்தன படைக்குருவிகள். கண்ணிமைக்கும் நேரத்தில் காடெங்குமிருந்த புழுக்களை கொத்திக் கொண்டு போயின அவை. விவசாயி பெருமூச்சு விட்டான். பின்னாளில், இத்தகைய காய்ப்புழுக்களை அழித்தொழிப்பதற்கென்றே சிறப்புக் கொல்லிமருந்துகள் சந்தைக்கு வந்து சேர்ந்தன. எனினும், இன்றும் இந்த படைக்குருவிகளின் பங்கு தனியொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

புளோரிடா மாகாணத்தில் ஓர்லேண்டோ நகரில் பணியும் சிண்டி எனும் பெண்மணிக்குக் கடந்த இருநாட்களாக இதே சிந்தனை அவ்வப்போது வந்து போகின்றது. ”தன் வீட்டுக்கு அருகேயிருக்கும் பிறிதொரு வீட்டில் இருக்கும் அந்தக் குழந்தையைக் கடைசியாக நான் எப்போது பார்த்தேன்? அவள் ஏன் முன்னைப் போல வெளியே விளையாடவே வருவதில்லை??’, இப்படியான வினாக்கள் வந்து போய்க்கொண்டே இருந்தன. வீட்டில் தனியாக வசிக்கும் சிண்டி, அவ்வப்போது வீட்டு முன்றலில் இருக்கையைப் போட்டமர்ந்து அண்டை வீட்டுச் சின்னன்களின் விளையாட்டுகளைப் பார்த்து இன்புறுவது வாடிக்கை. அதன்நிமித்தம்தான் இந்தச் சிக்கல். ஒருகட்டத்தில், தயக்கத்தையும் தம் மனத்தடையையும் விட்டொழித்து ஊக்கத்துடன் சென்று அந்த வீட்டிலிருப்பவர்களிடம், அந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்கின்றார் சிண்டி. கிடைத்த மறுமொழிகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. ஐயமுற்றவர், அவர்களுடைய கார்களையும் வீட்டையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். காரில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக உணர்ந்தார். உடனே, 9-1-1, அவசர அழைப்பு எண்ணுக்கு அழைத்து, கடந்த ஒரு மாதமாகவே அக்குழந்தையைத் தாம் கண்ணுறவில்லையென்றும், வீட்டாரைக் கேட்டால் மழுப்புகின்றார்களென்றும் கூறி அழுதார். குழந்தையின் அழகையும் அறிவையும் தாம் மிகமிக மதித்துப் பார்த்துக் கொண்டிருந்த நாட்களைச் சொல்லிப் புலம்பினார் சிண்டி.

சட்டம் ஒழுங்கு அலுவலர்களும், துப்பறியும் அலுவலர்களும் தத்தம் விசாரணையை மேற்கொண்டனர். அவர்களுக்குக் கிடைத்த பதில்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. 2008ஆம் ஆண்டு ஜூலை பதினைந்தாம் நாள் பதியப்பட்ட முறையீட்டின் நிமித்தம், 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தச் சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணைகளும், நீதிமன்ற நடவடிக்கைகளும் இடம் பெற்று வந்தன. 2008ஆம் ஆண்டு ஜூன்மாத வாக்கில் குழந்தையை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டனர் என்பதாக முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக, நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாக மூழ்கி இறந்து போனதாகவும், அதன்பின்னர் குடும்பத்தினர் அவர்களின் வீட்டுப் பிறவடையில் வைத்துத் தகனம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இரு மாதங்களுக்குப் பின்னர், குழந்தையின் தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2011ஆம் ஆண்டு வரையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளும் விசாரணைகளும் இடம் பெற்றன. விசாரணை அலுவலர்கள், உரிய சான்றுகளைக் கட்டமைப்பதில் வெகுவாகத் திணறினர். கடைசியாக, 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஆங்காங்கே இருந்து கொண்டிருக்கின்ற படைக்குருவிகள் கொந்தளித்துப் போயின. இந்த படைக்குருவிகள், மனிதகுலத்துக்கு இன்னல் நேரும் போதெல்லாம் குரல் கொடுப்பர். அவர்கள் இந்த ஊரில், இந்த மாநிலத்தில், பொதுவாக ஒரு இயக்கத்தின்பாற்பட்டோ, கட்சியின்பாற்பட்டோ, அமைப்பின்பாற்பட்டோ இயங்குபவர்கள் அல்லர். அவர்கள் எல்லாருமே சாமான்யத் தனிமனிதர்கள், எளியனும் எளியர்கள். தன் பசியாற்ற, தன் குடும்பத்தின் பசியாற்ற, ஐந்துக்கும் பத்துக்குமாக உழைக்கும் பொதுமனிதர்கள்தாம் அவர்கள்.

குழந்தையின் சாவுக்கு இவர்கள்தாம் காரணமென அலுவலர் தரப்பினால் நிறுவமுடியவில்லை. விசாரணையின் போது, முன்னுக்குப்பின் முரணாகப் பொய் சொன்னது மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. அதன்நிமித்தம், கொலைக் குற்றச்சாட்டிலிருந்து முற்றுமுழுதுமாக விடுதலை செய்யப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டவர். படைக்குருவிகளால் தாங்கமுடியவில்லை. ஒரு குழந்தை யாதொரு காரணமுமின்றி நம்மிலிருந்து விடுபட்டுப் போயிருக்கின்றார். இன்னொரு குழந்தை இதுபோன்ற நிலைக்கு ஆட்படாமலிருக்கச் செய்வது நம் வேலையென வெகுண்டெழுந்தனர்.

தனிமனிதர்கள்தாம். ஒத்த மனநிலை கொண்டோரிடம் செய்தியைப் பரிமாற்றம் செய்து கொண்டனர். தத்தம் மனக்கொந்தளிப்பினை வெளிப்படுத்தினர். ஒன்றுகூடி குரலை வெளிப்படுத்தினர். ஆக்ககரமான உரையாடலை மேற்கொண்டனர். உரிய சட்டங்கள் வரவேண்டுமென ஆர்ப்பரித்தனர். விளைவு, கேய்லிச்சட்டம் (caylee's law) அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தை இறந்து போனால், ஒருமணி நேரத்துக்குள்ளாக உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், குழந்தையின் பெற்றோர், வளர்ப்புப் பொறுப்பாளர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆவர். குழந்தை காணாமற்போனால், 24 மணி நேரத்துக்குள் உரிய அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அல்லாவிடில், பெற்றோர்/பொறுப்பாளர் தண்டனைக்குரியவர் ஆவார்.

அமெரிக்காவில் எத்தனையோ சட்டங்கள், பாதிக்கப்பட்டவரின் பெயராலேயே இடம் பெற்று வருகின்றன. அல்லாவிடில், படைக்குருவிகள் சும்மாயிருப்பதில்லை. அதுதான் அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.

படைக்குருவியில் ஒரு குருவியாக இருக்க நமக்குத் தடையாக இருப்பதுதான் என்னவோ?!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com.