5/10/2026

அன்னையர் நாள்

அன்னையர் நாளைக் கொண்டாடுவது அல்லது அன்னையரைப் போற்றுவது என்பது வெறும் ஒரு நாள் சடங்கு மட்டுமன்று; அது நம் வாழ்வின் வேரான அன்பிற்கும் ஈகத்திற்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடன்.  கருவிலே உருவானது முதல், அதை வளர்த்து ஆளாக்கி, தான் உள்ளவரையிலும் அன்னை செய்யும் உழைப்புடன் கூடிய உணர்வுப்புல ஈகங்கள் ஈடு இணையற்றவை. தன் நலனை விடக் குழந்தையின் நலனே பெரிதென வாழும் அந்தப் பேரன்பிற்கு நன்றி செலுத்தி, அவர்களின் இருப்பை உளப்பூர்வமாக உணர்ந்து செப்பனிட்டுக் கொள்ள வேண்டிய நாள், அன்னையர் நாள்!

குடும்பம் என்னும் அமைப்பை வலுவாக வைத்திருப்பதில் தாயின் பங்கு மிக முக்கியமானது. ஒரு வளமான சமுதாயம் உருவாக அடித்தளமாக இருக்கும் அன்னையர்களின் உழைப்பையும், சமூகப் பங்களிப்பையும் உணர்ந்து சிறப்பிக்க வேண்டியது கட்டாயம்.

இன்றைய வேகமான இயந்திர விரைவு உலகில், நாம் பல நேரங்களில் நெருக்கமான உறவுகளுக்கு நேரம் ஒதுக்கத் தவறிவிடுகிறோம். இது போன்ற ஒரு குறிப்பிட்ட நாள், நம் தாயுடன் நேரத்தைச் செலவிட, நம் அன்பை வெளிப்படுத்த, அவர்களின் உளநலம், உடல்நலம் பேணயென பல்வேறு விழுமியங்களுக்கான விழிப்புணர்வுத் தூண்டுதலாக அமைகிறது அன்னையார் நாள்.

நம் தமிழ்மரபில் அன்னைக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" என்ற வள்ளுவரின் வாக்கு, ஒரு தாய் தன் பிள்ளையின் வளர்ச்சியில் அடையும் மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பண்டைய சங்க இலக்கியங்கள் துவக்கம், பாரதியாரின் கவிதைகள் வரை, தாயைப் போற்றுதலென்பது அறமாகவும் பண்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

உலக அளவில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னா ஜார்விஸ் என்பவரால் தன் தாயின் நினைவாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. நாம் செய்ய வேண்டியது என்ன? விலையுயர்ந்த பரிசுகளை விட, அவர்களுடன் செலவிடும் நேரம், அவர்கள் மீது காட்டும் பரிவும் கவனமும், அவர்களின் உழைப்பைப் பாராட்டிச் சொல்லும் சில அன்பான வார்த்தைகள், அவர்களின் வாழ்வியலை ஆய்வு செய்து கொள்வது, நாட்டம் கொண்டு எதிர்வரும் காலத்தினைத் திட்டமிடுவது போன்றவை பயனளிக்கக் கூடியவை.

அன்னையரைப் போற்றுவது என்பது ஒரு நாளைக்குரியது மட்டுமன்று, அது வாழ்நாள் முழுவதும் நம் செயல்களில் வெளிப்பட வேண்டியவொன்று. அன்னையென்பவள், குழந்தைப் பேறு முதல் எதிர்கொள்ளும் உடல்ரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டவள். அதே கூறுகள், அத்தை, சின்னம்மா, பெரியம்மா, மனைவி, உடன்பிறந்தாள், தோழியென அனைத்து மகளிருக்கும் பொருந்தும்.

அண்மைக்காலமாக, எனக்கு அடிக்கடி மனத்துள் தோன்றுவதெல்லாம் இதுதான். அம்மா இருக்கின்றார். அம்மாவுடன் பிறந்தவர்கள் அம்மாவையும் சேர்த்து எட்டுப் பேர். அம்மாவின் தந்தையார், தாயாருடன் பிறந்தவர்களுக்குப் பிறந்த், அம்மாவின் இரண்டாம் நிலைச் சகோதரங்கள் 22 பேர், ஆக 30 பேரின் குழந்தைகள், எம் தலைமுறையினர் 71 பேர். இந்த 71 பேருக்குமான பிணைப்பை இன்றளவும் தன்னகத்தே கொண்டிருப்பவர் அம்மா. பேராலமரமாக மனக்கண்களில் உருக்கொள்கின்றார்.

அன்றாடமும் அழைத்துப் பேசுவது வாடிக்கை. சற்றுமுன்பும் அழைத்திருந்தேன். காளியம்மன் கோவில் முன்பு கும்மியாட்டம், நான் அங்கிருக்கின்றேனெனச் சொல்லிச் சற்றுப் பேசினார். அவர் கேட்ட முதல் கேள்வி, சாப்பிட்டாயா? “சாப்பிட்டாயா?”, அந்த ஒற்றைவினாவில் அடங்கி இருக்கின்றது எல்லாமும். இதற்கு மேல், அன்னையர் நாளில், அன்னையர் குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை.

𝐋𝐢𝐟𝐞 𝐝𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐜𝐨𝐦𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐚𝐧𝐮𝐚𝐥; 𝐢𝐭 𝐜𝐨𝐦𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫.


No comments: