தலைமுறை இடைவெளிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியும் கூடிய இன்றைய இளைஞர்கள் சமூக மாற்றத்திற்காக முன்னெடுக்கும் முன்னெடுப்புகள், பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கி, பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிகின்றனயென்பதை உலகெங்கும் பார்த்து வருகின்றோம்.
முந்தைய கால போராட்டங்களில் ஒரு வலுவான கட்டமைப்புடன் இடம் பெறும். ஆனால், Gen-Z இயக்கங்கள் பெரும்பாலும் முறைசார் இயக்கமும் முறையான தலைமையும் அற்ற முறையில் நடக்கின்றன, அல்லது ஒரு தனிமனிதரின் பிம்பத்தின்மீது இடம் பெறுகின்றன. இது துவக்கத்தில் ஜனநாயகமாகத் தெரிந்தாலும், நீண்ட கால திட்டங்களை வகுக்கவும் தொலைநோக்குக் கொள்கைகள் இல்லாமல் போகும்போதும், திசைமாறிச் சிதறிவிடுகிறது. 2020இல் அமெரிக்காவில் நடந்த 'Black Lives Matter' முன்னெடுப்புகள் உலகையே உலுக்கின. ஆனால், தெளிவான தலைமை இல்லாததால், நிதி கையாளுதல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, அதன் தாக்கம் குறைந்தது.
இன்றைய புரட்சிகள் பெரும்பாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் தொடங்குகின்றன. இணையத்தில் ஒரு பதிவினைப் பகிரும்போது கிடைக்கும் ஒருவித "போலி மனநிறைவு", களத்தில் இறங்கி உழைக்கும் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. சமூக ஊடகங்கள் ஒரு முன்னெடுப்பினை விரைவாகப் பிரபலப்படுத்தினாலும், அதே வேகத்தில் மக்கள் அடுத்த ட்ரெண்டிற்கு மாறிவிடுகிறார்கள். இதனால் இயக்கத்தின் ஆழம் நீர்த்துப்போகிறது.
டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்த தலைமுறை என்பதால், எல்லாவற்றிலும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்கும் போக்கு காணப்படுகிறது. ஒரு புரட்சி என்பது பல ஆண்டுகள் நீடிக்க வேண்டிய ஒரு நீண்ட பயணம். ஆனால், சில வாரங்களிலேயே மாற்றம் நிகழவில்லை என்றால், இளைஞர்கள் சோர்வடைந்து பின்வாங்குகின்றனர். இந்த பொறுமையின்மையை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கையின் 'Aragalaya' போராட்டம். அதிபரை விரட்டியடித்த வேகத்தில் இளைஞர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முறையான அரசியல் மாற்றுத் திட்டம் இல்லாததால், மீண்டும் பழைய அரசியல் சக்திகளிடமே அதிகாரம் சென்றடைந்தது.
பல Gen-Z இயக்கங்கள் "எதை எதிர்க்கிறோம்" என்பதில் தெளிவாக இருக்கின்றன, ஆனால் "எதை உருவாக்கப் போகிறோம்" என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றன. வெறும் எதிர்ப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஒரு நிலையான ஆட்சியை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சமீபத்திய வங்கதேச மாணவர்கள் போராட்டம். ஷேக் ஹசீனாவை பதவியிறக்கம் செய்வதில் வெற்றி கண்டாலும், அதற்குப் பின் வந்த வன்முறைகள் மற்றும் மதவாத ஊடுருவல்கள் அந்தப் புரட்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கின.
இளைஞர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடினாலும், பிலிப்பைன்ஸ் அரசியல் இன்றும் 'ஆளுமை வழிபாடு' என்பதிலேயே சுழல்கிறது. ஜனநாயக விழுமியங்களை விட, "ஆராதிக்கும் இவரால்தான் நாடு முன்னேறும்" என்ற பழைய காலத்து எண்ணம் இளைஞர்களிட, ஆழமாக இருப்பதால் அவர்களது முன்னெடுப்புகள் தேக்கநிலையையே கண்டன.
Gen-Z இயக்கங்கள் தோல்வியடையக் காரணம் அவர்களின் நோக்கத்தில் இருக்கும் பிழையல்ல, மாறாக அந்த நோக்கத்தைச் செயல்படுத்தத் தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு இல்லாததே ஆகும். உணர்ச்சிகரமான போராட்டங்களுடன், அறிவுப்பூர்வமான அரசியல் திட்டமிடலும் இணையும்போது மட்டுமே எதிர்காலப் புரட்சிகள் வெற்றியைத் தழுவும்.
தமிழ்நாட்டின் அடுத்தடுத்த காட்சிகள், இன்றைய இளையோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா அல்லது உலகின் ஏனைய நிகழ்வுகளைப் போலவே அமையுமா? முடிவு, காலத்தின் கைகளில்!
-பழமைபேசி.
No comments:
Post a Comment