2/25/2025

சொல்வளமே எழுத்துடைத்து

 

[மின்காந்தள் இதழுக்காக எழுதப்பட்டு வெளியாகிய கட்டுரை]

சொல்வளமே எழுத்துடைத்து

பழமைபேசி 

’வேழமுடைத்து மலைநாடு, மேதக்கசோழவளநாடு சோறுடைத்து, பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து’ என சங்ககாலப் புலவர் ஒளவையாரால் தொண்டைமண்டல சதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. யானைகளைக் கொண்டது மலைநாடாகிய சேரநாடு, சோழநாடு சோறு படைக்கக் கூடிய நெல்வயல்கள் கொண்டது, முத்து எடுக்கக்கூடிய கடல்வளம் கூடியது தென்னாடு. அதைப்போலத்தான், எண்ணங்களை, செய்திகளையெல்லாம், எவ்விதமான சிதைவு, பொருள்மயக்கம் இல்லாமல் அந்தந்த உணர்வுகளை அப்படியப்படியே கொண்டு செல்லக் கூடிய எழுத்தென்பது, உகந்த சொல்வளத்தைக் கொண்டதாகவே இருக்கும்.

’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கின்றார் அய்யன் திருவள்ளுவர். எண்ணமும், எண்ணத்தை வெளிப்படுத்தவல்ல எழுத்துமே நம் இரு கண்களைப் போன்றவை. எண்ணங்கள் நல்ல எழுத்தாக இருந்திட வேண்டுமானால், சொல்வளம் உடைத்தாக வேண்டும்.

சொல்வளம் என்றவுடனே, நிறையச் சொற்களை நாம் அறிந்து வைத்திருப்பதும், எண்ணிக்கையில் மிகுதியாகப் பயன்படுத்துவதுமென்றெல்லாம் நினைத்து விடலாகாது. பொருளுக்கும் நோக்கத்திற்கும் நடைப்பாங்கிற்கும் விழுமியத்தைக் கூட்டுவதான சொற்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அதுதான் சொல்வளம்!

அறிவியல், சட்டம், அறிவிக்கை முதலானவற்றில், நேரிடையான பொருளைச் சட்டென விளங்கும்படியாக (denotative / referential), எளிமையான சொற்களைக் கொண்டு, எவ்வித உணர்வுகளுக்கும் இடங்கொடாமல், ஐயம் திரிபறச் சொல்வது நல்ல எழுத்தின் ஒரு அடையாளமாகும். உணர்வூட்டும்படியாக அழகூட்டியும், கற்பனைவளத்தை விவரிக்கும்படியாகவும், வாழ்வியலின் பல்வேறு கணங்களைப் புரியவைக்கும்படிச் சொல்லும் இலக்கியநடை (Emotive) என்பது நல்ல எழுத்தின் மற்றுமொரு தன்மையாகும். இவ்விரு பண்புகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது சொல்வளம்.

மேற்கூறப்பட்ட இருதன்மைகளுக்குமான இலக்குகள் வேறுவேறாக இருக்கலாம்; அறிவுபுலப்படுதல் (sense), உணர்வுபுலப்படல் (feeling), தொனியின் வாயிலாகக் குறிப்பறிவித்தல் (tone), விருப்பம் அல்லது நோக்கத்தை (intention) நிறைவேற்றுகை என்பனவாக. இலக்கு எதுவாக இருப்பினும், சொற்களையும் அவற்றைக் கையாளும் பாங்குகளையும்(style) சரியாகக் கையாளும் திறனே நல்ல எழுத்து என்றாகின்றது. இதனைத்தான் சொல்வளம், ’சொல்வளமே (நல்ல) எழுத்துடைத்து’ என்கின்றோம்.

சொல்லறிதல் மேம்பட வேண்டுமென்றால் அகராதிகளைப் புரட்டலாம். அகராதிகளைப் புரட்டி அவற்றை நினைவிலேற்றியதும் நல்ல எழுத்தென்பது கைகூடிவிடுமாயென்றால் அதுவும் இல்லை. கையாளும் திறனைக் கற்றாக வேண்டும், மேம்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் நாம் நம் மொழிக்குச் சிறப்புச் சேர்க்க முடியும். எழுத்துத்திறனை வலுப்படுத்திக் கொள்ள முடியும். என்ன செய்யலாம்? நூல்களை வாசித்தாக வேண்டும். அது ஒன்று மட்டுமே எழுத்தை உயிரோடு வைத்திருக்கும். அதிலும், நம் தாய்மொழியாம் தமிழுக்கு சிறப்புத் தனித்தன்மை ஒன்று உண்டு. தமிழின் ஆயுள் அதன் வேர்ச்சொற்களைக் கையாளும் முறை. அஃதாவது, ஒரு வேர்ச்சொல்லைக் கொண்டு ஓராயிரம் சொற்களைக் கூட ஒருவரால் தேவைக்கேற்றபடி வளர்த்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, நீர், நீர்மம், நீருண்டி, நீராரும், நீராவி என்றெல்லாம், நீர் எனும் சொல் தேவைக்கொப்ப நீண்டுகொண்டே போகும்.

திருக்குறள் என்பது குறைவான சொற்களைக் கொண்டு, ஈரடியில், அகண்டு விரிந்ததொரு பொருளை வெளிப்படுத்துமுகமாக, அற்புதமான கலையுணர்வைக் கொண்டு அமைக்கப்பட்ட, தமிழின் தனிப்பெரும் சொத்தென்பது நாமனைவரும் அறிந்தவொன்று. அப்படியாகப்பட்ட திருக்குறளில், பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் வெவ்வேறு தறுவாயில்(context) கையாளப்பட்டுள்ளன. திருவள்ளுவத்தை ஊன்றிப் படித்தோமேயானால் சொல்வளமும் கைகூடிவருமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஏனென்றால், அறிவுபுலப்படுதல் (sense), உணர்வுபுலப்படல் (feeling), தொனியின் வாயிலாகக் குறிப்பறிவித்தல் (tone), விருப்பம் அல்லது நோக்கத்தை (intention) நிறைவேற்றுகை என்பன யாவும் கைக்கொள்ளப்பட்டுத்தான் அமைந்திருக்கின்றது, ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரிக்கப்பட்டிருக்கின்ற திருக்குறள்.

செய்யுளினின்று வெளிவந்து உரைநடையில் கவனம் செலுத்த முற்படுவோமேயானால், எத்தனை எத்தனையோ நாவல்களும், சிறுகதைகளும், புதுக்கவிதைகளுமென நவீன இலக்கியப் படைப்புகள் நமக்கு வாய்த்திருக்கின்றன. ஒவ்வொருவரது அனுபவமும் ஆளுக்காள் மாறுபடும். நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்கெல்லாம் எங்கள் காலத்தில் அமைந்தது மேலாண்மைப் பொன்னுசாமி, கி. ராஜ்நாராயணன், கு. அழகிரிசாமி, நாஞ்சில் நாடன் போன்ற சமகாலத்து இலக்கிய ஆளுமைகள்தாம். அவர்களது படைப்புகளை, துவக்கநிலை வாசகர்களாக வாசிக்கத் துவங்கிய அதே காலத்தில் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்கத் தலைப்பட்ட போது தெரிய வந்தவர்கள், நாகம்மாள் எழுதிய ஆர். சண்முகசுந்தரம், செல்லம்மாள் எழுதிய புதுமைப்பித்தன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்களும், அப்போதுதான் தோன்றிய இந்தியா டுடே தமிழ் பதிப்பின் வாயிலாக அறிய நேரிட்ட க.சீ. சிவகுமார் உள்ளிட்ட புது எழுத்தாளர்களும்.

வாசித்தலென்பது நாடலுக்கும் தேடலுக்கும் வித்திட வேண்டும். விளம்பரங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுவனவற்றை வாங்கிப் படிக்கும் பழக்கமெல்லாம் அண்மைக்காலத்திய போக்கென்றே கருத வேண்டும். இலக்கிய வாசிப்பென்பதே விமர்சனக்கூட்டங்கள் வாயிலாக மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. சில தட்டெச்சுப் பிழைகளுகளுக்காக ஒட்டுமொத்த நூல்களையே கொளுத்திப் போட்டுவிட்டு, மறுபதிப்புக் கண்டு, பொருளியலில் தோற்றோர் பலவுண்டு.  அச்சுப்பிழைகளைப் பார்த்துச் சரிசெய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்த ஒருவர்தாம், நாட்டின் உயரிய விருதுக்குச் சொந்தக்காரராக ஆன வரலாறு நம் வரலாறு. ஆமாம், ஜெயகாந்தன் அவர்கள் ‘ப்ரூஃப்ரீடர்’, உதவி ஆசியர் என இருந்து எழுத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அப்படியெல்லாம் தேடலும் நாடலும் வேட்கையும் இருக்கின்ற நிலையில், எவருக்கும் எழுத்தென்பது வாய்த்தே தீரும். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடைய சிறுகதை, ‘பிழை திருத்துபவரின் மனைவி” என்ற கதை, வாசிக்க வாசிக்க நம் எண்ணங்களை விரித்துக் கொண்டே போகும். அந்த அளவுக்கு, சொற்களின் மீது கடமையுடையவர்களாகவும் நெறிகொண்டவர்களாகவும் இருந்த மரபு நம் தமிழ் மரபு.

எண்ணிப்பாருங்கள். சங்ககாலத்துப் படைப்புகள் நமக்கு உள்ளன. எப்படி நாம் வாய்க்கப் பெற்றோம்? நம் முன்னோர், ஓலைகளிலே, கடும் துன்பங்களுக்கிடையே எழுதி வைக்க, அவற்றைத் தலைமுறை தலைமுறையாகப் பிழையற்றுப் படி எடுத்து வைக்க, அல்லாவிடில் ஓலைகள் நைந்து போய்விடுமல்லவா, அப்படியெல்லாம் எழுதி எழுதித்தான் அவையெல்லாம் நமக்கு வாய்த்திருக்கின்றது. ஆக, வாசித்தலும் எழுதப்பயில்தலுமே கட்டமைக்கும், “சொல்வளமே எழுத்துடைத்து”.

 

No comments: