4/13/2023

வெயில்


 ஒருநாள் அந்தவழியாக நடந்து கொண்டிருந்தேன். சரசரவெனும் ஓசை. திரும்பிப் பார்த்தேன். அல்லையில் இருக்கும் காட்டில் முளைத்திருக்கும் சோளப்பயிர்களின் தோகைகள் எல்லாம் வளைந்து நெளிந்து இளம்பச்சையில் அலையலையாய் அலையடித்துக் கொண்டிருக்க அந்த பசுங்கடலின்மீதாகப் பொழிந்தபடிக்கு மழை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நான் ஓடிச்செல்ல முற்பட்டேன். எதிர்த்திசையின் ஓரத்தில் கொங்காடையுடன் முத்துலட்சுமி தன்னுடைய ஆடுகளின் மீதான பார்வையைத் தொலைத்து விட்டு என்னைப் பார்த்தாள். என்னைப் பார்த்ததும் எனக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வரும் மழையையும் பார்த்திருக்க வேண்டும். ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ என்றபடிக்குப் பாட்டுப் பாடலானாள். சங்கிப் போயிருந்த நான் அந்தப் பாட்டில் திடுக்கிட்டு நின்றுவிட்டேன். ஆமாம். கிழக்கில் இருந்து வந்த மழை என்னை நனைத்து விட்டிருந்தது. அதே சக வேளையில் மேற்கில் இருந்து வரும் வெயில் என்னை உலர்த்திக் கொண்டிருந்தது. சிறுகுருவிகள் அங்கும் இங்குமாகப் பறந்து நுரைநாட்டியம் ஆடின. 

முத்துலட்சுமி மீண்டும் பாடினாள், ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ அன்றைக்குப் பிறகு நிறைய முறை பலரும் இந்தமாரியான காட்சியில் இந்தப் பாட்டைப் பாடக் கேட்டிருக்கின்றேன். நானும் பாடியிருக்கின்றேன். நரிக்கும் கழுதைக்கும் கல்யாணம் நடந்ததா? அவர்களுக்கு குழந்தைகள் ஏதேனும் பிறந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு எனக்குத் தெரிந்து, பலருக்குக் கல்யாணம் ஆகி, அதாவது குரங்குகளோடு கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்து, பெயரன் பெயர்த்திகளைக் கூட கண்டிருக்கின்றனர். இப்படித்தான் எனக்கும் வெயிலுக்குமான அறிமுகம் உண்டாகிற்று.

வாகைத்தொழுவு வேலூரில் வக்கீல்நாயக்கர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். காலையில் எழுந்ததும் அம்மாவென அடுக்களைக்குச் செல்வது வழக்கம். ஓட்டுக்கூரையில் இருந்து சிறுகீற்றுப் பிறந்து கண்ணாடிக்குழல்கள் போல ஆங்காங்கே வெயில்க்குழாய்கள் ஊடுருவித் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நீள்வட்டங்களாக. அம்மாவை மறந்து அந்த வெயில்க்குழாய்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அந்தக் குழாய்களின் நடுவே துகள்கள், கோடானுகோடித் துகள் அங்கும் இங்குமாகப் பறந்து பறந்து ஆகாசவித்தைகள் காண்பித்துக் கொண்டிருக்கும். கொஞ்சநேரத்தில் அந்தத் துகள்கள் எல்லாம் காணாமற்போய் வெறும் வெயில்க்குழாய்கள் மட்டும் தன்நீட்டத்தைக் குறைத்து விட்டிருக்கும். பள்ளிக்கூடம் புறப்படும் போது வந்து பார்த்தால் அவை காணாமற்போயிருக்கும். இதன் அந்தரங்கம் பிடிபடுவதற்குப் பலகாலம் ஆகிற்று.

பத்தாம்வகுப்புத் தேர்வு எழுதி விடுமுறையில் இருக்கும் போது பள்ளியில் இருந்து ஓர் அழைப்பு. பள்ளியின் அறங்காவலர் எல்.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியார், ஜிடி நாயுடுவின் மகளார் சரோஜினி அம்மாள் அவர்கள் அளித்த கொடையின் பேரில் ஒவ்வோர் வகுப்பிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு 12 நாட்கள் கல்விச்சுற்றுலா, நீயும் தெரிவாகி இருக்கின்றாயென்றார்கள். டி.கல்லுப்பட்டி எனும் ஊரில் இருக்கும் காந்திநிகேதன் ஆசிரமத்தில்  தங்கிக் கொண்டு, அவ்வளாகத்தில் இருக்கும் எல்லா கைவினை ஆலைகள், அருகில் இருக்கும் சில பல இடங்களெனப் போய்வருவதாக ஏற்பாடுகள். விடுதியில் ஒருநாள் மாலையில் ஏதோ பொருள்வாங்கி வரச் சொல்லி, “வெயிலூட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கடையில வாங்கிக்க” என்றார் உள்ளூர் ஆசிரியர்.

வா.வேலூரில் எங்கள் பக்கத்து வீட்டின் பெயர் கரியூடு. வீட்டுச் சுவர் முழுதும் சுண்ணாம்புக்கு மாற்றாய் கரிபூசப்பட்டு இருந்திருக்க வேண்டும். கரியூட்டு வேணுநாயக்கர் என்றார்கள். அப்படியானால் வேறென்ன வேணுநாயக்கர்கள் இருக்கின்றனர் என எதிர்க்கேள்வி கேட்டேன். சிந்தாமணி வேணுநாயக்கர், கொட்டாரத்துவீட்டு வேணுநாயக்கர் என்று அடுக்கினார்கள். நான் திகைத்துப் போனேன். சில ஆண்டுகளில் பக்கத்து ஊரான சலவநாயக்கன்பட்டிப் புதூருக்குக் குடிமாறிச் சென்றோம். அங்கே சென்றால் மச்சுவீட்டுக் கிருஷ்ணசாமி என்றார்கள். அப்படியென்றால் வேறென்ன கிருஷ்ணசாமி இருக்கின்றனர் எனக் கேட்டேன். பெரியவீட்டுக் கிருஷ்ணசாமி, செந்தோட்டத்துக் கிருஷ்ணசாமி என்று அடுக்கினர். இந்தப் பின்புலத்தில், கரியூடு, மச்சுவீடு, பெரியவீடு பார்த்துவிட்டோம். இதென்னடா வெயிலூடு என்ற வினா என் மண்டையைக் குடைந்தது. 

‘சார், நானும் கூடப் போய்ட்டு வர்றன்’ என்றேன். ‘நீ எங்கடா போற? பேசாம உக்கார்றா’ என்றார் இராமசாமி வாத்தி. உள்ளூர் ஆசிரியர் குறுக்கிட்டு, ‘வுடுங்க சார். பய்யன் ஆசப்படுதான்’. நெல்லை மொழியில்  நம் மனத்தில் பாலைவார்த்தார். இராமசாமி வாத்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும். உடன்போய், சக்கரை, பொட்டுக்கடலை எல்லாம் வாங்கி ஆகிற்று. ‘அண்ணா, கடை இங்க இருக்கு. அந்த வெயிலூடு எங்கங்ணா?’ என்று நான் என் கடையை விரித்தேன். ‘அங்கனா பார்றா. அதுதானாக்கும் வெயிலூடு’ என்று நாஞ்சில் மொழியில் ஓர் இழுவையைப் போட்டார் அந்த சமையற்கார அண்ணன். இஃகிஃகி. கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஓடுகளும் வெள்ளை வெளேரென இருந்தன. இளமஞ்சள் மின்னொளியில் அந்த வீடு தகத்தகவென பாலொளியில் பப்பரப்பேவேன இருந்தது. ஓ, இதுதான் அந்த வெயிலு? வெயிலூடாவென வந்து சேர்ந்தேன்.

காலைவெயில் கழுதைக்கு நல்லது. மாலைவெயில் மனிதனுக்கு நல்லது. இப்படியாக எவரோ என்றோ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. பிற்பகலுக்கும் மாலைப்பொழுதுக்கும் இடையிலான நான்குமணி. சரியெனச் சொல்லி வீட்டின் முன்பாகப் போய் வெயிலில் உட்கார்ந்து கொண்டென். சுகமாக இருந்தது. நினைவுகள் பெருக்கெடுத்து ஓடின.

வெயிலில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் நம் உடற்தோலில் பட்டு ஊடுருவும் போது, தோலில் இருக்கும் கொழுப்புப்பசையை வைட்டமின்-டி ஆக மாற்றுகின்றது. அந்த வைட்டமின் டி, உடற்கொழுப்பில் சேமிப்புக்கிடமாகி எத்தனை காலத்துக்கும் நம்முள் இருந்து, தேவைக்கேற்ப பயன்பாட்டுக்குள்ளாகும். பற்றாக்குறை ஏற்படும் போது, நாம் உண்ணும் உணவில் கிடைக்கப்பெறும் உயிர்ச்சத்து-டி பயன்படுத்தப்படும். ஆனால் இத்தகைய கொள்மானம் மிகக்குறைவுதான். எனவேதான், வெயிற்புசிப்பு இல்லாத இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருக்க நேரிடுகின்றது. அதற்காக வைட்டமின் டி சத்துமாத்திரைகள் உட்கொண்டால், அவற்றின் பக்கவிளைவுகள் தோன்றலாம். ஆனால் வெயிலால் கிடைக்கப் பெறும் உயிர்ச்சத்துக்குப் பக்க விளைவுகள் இல்லையாம். ஆகவே வெயில் தரிசனம் நன்று. வெயிலில் குளித்த இவனுக்கு, மழையில் குளித்த வெயிலின் நினைவுகள்!



No comments: