12/03/2022

பிரியாணி

”ஐசுகிரீம்கோன் கொறஞ்சது எட்டாவது இருக்கணும், போயி வாங்கிட்டு வாங்க! அருணா ஆண்ட்டி சிக்கன்பிரியாணி கொண்டுட்டே வந்தாச்சு. நீங்க என்னப்பா பித்துப் பிடிச்சமாரி உக்காந்துட்டு இருக்கீங்க? அகோ, அப்பா! ”

நான் இன்னமும்கூட 2001ஆம் ஆண்டிலேயே நிலை கொண்டிருந்தேன். கல்யாணமாகிப் பதினான்காவது நாள். சாயங்காலம் கிளம்பிப் போக வேண்டும். ”மாப்ள மட்டும்தான் அமெரிக்கா கிளம்பிப் போறாறாம். பொண்ணுக்கு எப்ப விசா வரும்னு தெரியாதாம்!”, அங்கிருந்த மரங்களுக்குக் கூட பற்றியம் தெரிந்திருக்க வீடு புழுங்கிக் கொண்டிருந்தது. அப்பா மட்டும் தயங்கித் தயங்கிக் கேட்டார், “மூணு மாசத்துக்குள்ள கூப்பிட்டுக்குவதானே?”. எனக்கு மனமெல்லாம் விஜயாபதிப்பகத்தின் மீதுதான் இருந்தது. ஈரோட்டிலிருந்து எப்படியும் மாலைக்குள் புத்தகம் வந்துவிடுமெனச் சொல்லி இருக்கின்றார்கள்.

அப்படியென்ன அப்பாடக்கர் புத்தகம்? கொங்குச் சிறுகதைகள், யாரோ பெருமாள்முருகனாம், அவர் தொகுக்க காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றதாம். மொகானூர் விஷ்வான், மேட்டுக்கடைப் பழநிச்சாமி, ரெண்டு பேருமே சொல்லி இருக்கின்றனர். அவன்களே வாங்கிக் கொடுத்திருக்கலாம். எப்படியெல்லாம் அலைய விட்டான்கள்?

கடைக்குப் போகும் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதே நான்தான் என்பதை அறிந்து கொள்ளும் தன்நிலைக்கு வந்தேன்.

ஐசுகிரீம் பெட்டிகளை எடுத்து அட்டையைத் தேய்த்த நினைப்பு இருக்கின்றது. அதற்குப் பிறகு மீண்டும் பித்துலோகத்துக்குள் நுழைந்து விட்டிருந்தேன்.

காலம், நினைத்துச் சிரித்துக் கொண்டேன். கொங்குச் சிறுகதைகளில் இருந்த, இந்திரா என்பவர் ஜோதிமணியாகி இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். திலகவதி பெரும் பொறுப்பும் செல்வமும் கையாளப் பெற்று ஓய்வுகூடப் பெற்று விட்டார். கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் விடுதலை அடைந்து விட்டார். வீட்டுக்கே வந்திருந்து தங்கிய பெருமாள் முருகன். அந்தப் புத்தகம் இன்னமும் நம்மோடுதான் இருக்கின்றதா? தொகுப்பாசிரியர் பெருமாள் முருகனிடம் காண்பித்து, அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பதிப்பிலேயே இல்லாத இந்தப் பழைய நூலைக் கண்டதில், அதுவும் அமெரிக்காவில் கண்டதில் அவருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

திலீப்குமார் புத்தகக்கடை வைத்திருந்தார். வியாபாரம் பண்ணிக் காசு பார்க்கக் கடை நடத்துகின்றனர் இன்று. அன்றெல்லாம் அப்படி இல்லை. கொங்குச் சிறுகதைகள் தேடி அலைந்த இந்தக் கிராமத்தானைப் போல யாராவது தேடி வந்தால், அவர்கள் கேட்பதைக் கொடுப்பதற்கென்றே வீம்புக்காக கடை நடத்திய மனுசன். இவரது மூங்கில் குருத்துக் கதையும் கொங்குச் சிறுகதைகளில் ஒன்று.

”ஏங்க, இதுக்குத்தான் சொன்னது? நேத்தே வாங்கிட்டு வரச்சொல்லி. கொண்டாங்க இங்க. கொழந்தைங்கெல்லாம் காத்திருக்காங்க”, பையைப் பிடுங்கிக் கொண்டு போனார் மெய்யாளுநர். புற உடலை மட்டும்தானே அவரால் ஆள முடியும்?

பயிற்சிப் பட்டறையெனும் சொல்லாடலுக்கே அது நேர் எதிரானது. எப்படி? தொழிற்கூடம் என்பதற்கான பிறமொழிச் சொல், பட்டறை என்பது. அதாவது பலரும் ஈடுபட்டுப் படைத்தல் தொழில்புரியும் கூடம். பயிலுநராக ஈடுபட்டுப் படைத்தற்தொழில் புரியும் இடமாகும் போது, அது பயிற்சிப் பட்டறை ஆகிவிடுகின்றது. ஆனால் அறிவிக்கப்பட்டு இடம் பெற்றிருந்த நிகழ்வோ அறிவரங்கம் போல இருந்தது. அதாவது துறைசார்ந்த ஒருவர் தமது கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மற்றவர் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். மற்றைய எவரும் அந்த வேளையில் படைத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

”அப்பா, நீங்க சாப்டலையா? பிரியாணி சூப்பர்”

“நான் ஒரு புத்தகம் தேடிகிட்டு இருக்கன். அப்றம் சாப்ட்டுக்கிறன்”

பயிற்சிப் பட்டறையென்றால் பாடத்திட்டம் இருக்க வேண்டும். சிறுகதைக்கான பாடத்திட்டமென்று ஒன்று உள்ளதா? அமெரிக்காவில் இருக்கும் எந்த நூலகம், துவக்கப்பள்ளியில் கேட்டாலும் கொடுப்பார்கள். இடத்துக்கிடம் சற்று வேறுபடலாம். கதைமாந்தர், கதைநோக்கு, கதையிடம், கதைக்கரு, கதைப்போக்கு என்பவை இன்றியமையாத திட்டக்கூறுகளாக இருந்தே தீரும். இவற்றைப் பற்றியெல்லாம் விரித்துக் கூறி, எடுத்துக்காட்டுகளைச் சுட்டி, மொத்த அணியும் அவரவர் அறிதலுக்கொப்ப உடன்சேர்ந்து கட்டிக் கொண்டே வந்து, பயிற்சியின் நிறைவில் ஆளுக்கொரு கதையை அடுத்தவர் பார்வைக்கு வைத்து கற்றுக் கொள்வது பயிற்சிப் பட்டறையாக, பட்டறிவாக அமையும்.

தேடிய கொங்குக் கதைகள் நூல் கிடைத்து விட்டது. ஆஸ்டின் நகரில் திலீப்குமாருடன் மூங்கில் குருத்துக் கதையில் வரும் கோயமுத்தூர்க் காட்சிகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“ஏங்க, சாப்டுங்க. மிச்சம் இருக்கிற பிரியாணிய அருணா திரும்பக் கொண்டுட்டுப் போனாலும் போவாங்களாயிருக்கும்”

“மூங்கில் குருத்துகளை வீசியெறிஞ்ச அந்த அம்மாவோட கோபம் நியாயமானதுதானே?”

“உங்களுக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு. அருணாவோட சிக்கன் பிரியாணிக்கும் உங்க உளறலுக்கும் எதனா சம்மந்தம் இருக்கா?”

“ஓ, சாரி, சாரி. இது வேற. நீ எனக்குக் கொஞ்சம் எடுத்து வெச்சிரு. நான் அப்றம் சாப்ட்டுக்கிறன்”

“என்னமோ மூங்கில் குருத்துன்னீங்ளே?”

“இலக்கியக் கூட்டத்துல கேட்ட கேள்வி அது”

“நீங்க இன்னும் திருந்தவே இல்லியா? இன்னுமா அதைக்கட்டிகிட்டு அழ்றீங்க?”

“இல்ல, நீ போ, நான் வர்றன்”

தேடப்பட்ட, திலீப்குமாரோடு எடுத்துக் கொண்ட படங்களும் கிடைத்தன.

அப்படி என்ன கேள்வி கேட்டாங்க?

“தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய் ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.

வெயில் அறைந்து தாக்கியது.”

இந்த வரிகள் கடைசியாக இடம் பெற்றிருக்கு. ஏன்?

முந்தைய பத்தியில் கதைசொலன் அம்மாவின் மீது சினம் கொள்கின்றான். “’நீயே போய்ப் போட்டுக் கொள்’ என்று கூறிவிட்டு நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது” என்று சொல்கின்றான். அதற்கு விடை சொல்லும் முகமாகத்தான் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கு முத்தாய்ப்பாக. எப்படி? எதிர்வீட்டுப் பையன் வீட்டிலிருந்து விரைவாக அம்மணமாக ஓடி வந்து அமர்கின்றான். வெயில் அறைகின்றது. அதாவது, அம்மா, குடும்பம் என்பதெல்லாம் ஒருவரின் காத்திரமான உடுப்புகள். உதறித்தள்ளி, உடுப்புகள் இல்லாதவிடத்தே வெயில் அறைய உடம்பு சுடுபட்டுக் கொள்ளத்தான் செய்யும்.

”பாப்புமா, நேரத்துக்கு சாப்டாட்டி வாயில புண் வந்திரும்னு உனுக்குத் தெரியும்தானே? கொஞ்சம் போட்டுட்டு வந்து குடுத்திருக்கக் கூடாதா? செமப்பசி!”

“பேசாதீங்க, மூங்கில் குருத்து, அது இதுன்னு பினாத்திகிட்டு இருந்தது நீங்க. பிளேட்ல போட்டு மூடி வெச்சிருக்கு, போய்ச்சாப்டுங்க போங்க!”

கிட்ட இருப்பது, பிரியாணியாகவே இருந்தாலும் கண்களுக்குத் தெரிவதில்லை!

No comments: