5/22/2022

அமெரிக்காவில் தமிழர் தேர்தல்

வணிகமும் அறமும் சமூகத்தின் இரு கண்கள். வணிகம் இல்லாவிடில் பொருளாதாரமும் பொருள் விநியோகமும் இல்லை. அறம் இல்லாவிடில் மனிதப்பண்பாடு இல்லை. ஆகவே இவையிரண்டும் இன்றியமையாதவை.

அமெரிக்காவில் தமிழரின் அடையாளமாக இருப்பது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை. விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, அதுதான் உண்மை. 35 ஆண்டுகளாக இயங்கி வரும் அந்த அமைப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் இதுவரையிலும், எவ்விதத் தொய்வுமற்று இடம் பெற்று வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நான் தொடர்ந்து, பேரவையின் நிர்வாகத்துக்கு எதிராக, நலம்விரும்பியாக, விமர்சகனாகக் குரல் கொடுத்து வருகின்றேன். தலையாய காரணம், அறப்பணிகளோடு வணிகத்தையும் கலக்கி விட்டிருப்பதுதான்.

சமூகப்பணிகளுக்கான கொடையாளராக வணிகர்கள் இருக்கலாம். தவறில்லை. ஆனால், நிர்வாகிகளாக வணிகர்கள் இருக்கும் போது, அவர்கள் மிகக்கவனமாகத் தன் சொந்த வணிக விருப்பு வெறுப்புகளைத் தன்பால் கொண்டிருக்கக் கூடாது. அல்லாவிடில், அறமுரண்(conflict of interest) இடம் பெற்றே தீரும். Murphy law states, "Anything that can go wrong will go wrong." ஆகவே, நான், எதிர்வரும் தேர்தலில், “பேரவை காப்போம்” அணிக்கு என் மானசீகமான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்; நேரடியாக ஓட்டளிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கூட.  இதர காரணங்கள் கீழ்வருமாறு:

1. சேலை விற்பனை, புத்தகங்கள் விற்பனை  போன்ற செயற்பாடுகள்(வணிகக் குறுக்கீடுகள்) பேரவை நலனுக்கு ஒவ்வாதது. பேரவை என்பது, இலாபநோக்கற்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு. வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமைகள் உண்டு.

2. 30 ஆண்டுகளாகப் பேரவை விழாக்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்ததன் விளைவு, நெறிகள் படிப்படியாக மேம்பட்டு வந்திருக்கின்றன. அமைப்புக்குத் தொடர்பே இல்லாதவர்கள் நேரடியாகப் பொறுப்புகளுக்கு வந்ததன் பொருட்டு, அவையாவும் புறந்தள்ளப்பட்டு விட்டன. ஆகவே அவற்றை மீளக்கட்டமைக்கும் கடமை, “பேரவை காப்போம்” அணிக்கு உண்டு.

3. கடந்த சில ஆண்டுகளாக அரங்குகளில் விழாக்கள் இடம் பெறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் அப்படிப்பட்ட விழாக்களை நடத்திய பேரவை ஆர்வலர்கள் மட்டுமே பொறுப்புக்கு வந்தாக வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

4. நெப்போட்டிசம், nepotism: the practice among those with power or influence of favoring relatives or friends, especially by giving them jobs. விழாக்களுக்கு ஏற்கனவே வந்திருந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதைக் கவனிக்க முடிகின்றது. அப்படியான செயல்கள் பேரவை நலனுக்கு ஒவ்வாதவை.

5. பொறுப்புகளில் இருப்பவர்களின் தனிமனிதச் செயற்பாடுகளுக்கும் பேரவையின் மாண்புக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தனிமனித வாழ்க்கை எனச் சொல்லிவிட முடியாது. அப்படியான பார்வையில், பேரவையின் நிர்வாகிகள் நல்ல தமிழார்ந்த தன்னலமற்ற தொண்டர்களாக இருக்கும்படித் தெரிவு செய்வது அவசியம்.

இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை வாசிக்கும் நீங்கள் யாவரும், ஒவ்வொரு வேட்பாளரின் தகுதி, தற்குறிப்புகள், இணையதளம் போன்றவற்றைப் பார்த்து விட்டு, பேரவையின் கடந்த ஐந்து ஆண்டுகாலச் செயற்பாடுகளையும் கற்றறிந்து விட்டு, வாக்களித்துத் தங்கள் கடமையைச் செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன். நாம் அமெரிக்காவில் இருக்கின்றோம். தன்னாட்சியுடன் செயற்பட்டு, நம் அடுத்த தலைமுறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டாக வேண்டும். எனவே, ’இவர் சொன்னார், அவர் சொன்னார்’ என்பதையெல்லாம் விடுத்து, பாரபட்சமின்றிச் செயற்பட்டு பேரவை நலனுக்குப் பெருமை சேர்த்து உங்கள் கடமையை ஆற்றுங்கள். நன்றி.

பழமைபேசி, 
பேரவை முன்னாள் செயலாளர், pazamaipesi@gmail.com

No comments: