2/02/2019

தாவரங்களுண்டு வாழ்தலினிது

எல்லா உயிரினங்களிலும் தனிச்சிறப்பாக இப்புவியில் அமைந்திருப்பவை தாவரங்களேயாகும். அவற்றுக்குத்தான் கதிரவனின் ஒளிச்சக்தியை உள்வாங்கி, வேதிச்சத்தாக மாற்றுகின்ற ஆற்றல் உண்டு. மாந்தயினம், விலங்கினமென ஏனைய இனங்களெல்லாம் இத்தகு வேதிச்சத்திற்காக நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்தேயிருக்கின்றன. இத்தகு தாவரங்களைப் பலவாறாகவும் பரவலாகவும் உண்டு வாழ்தலென்பது, மாந்தனின் மெய்நலத்தையும் மனநலத்தையும் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

வேதிச்சத்தைக் கட்டமைக்கும் தாவரங்களுக்கும், தாவரம் சார்ந்து இயங்குகின்ற பிறயினங்களுக்கும் அடிப்படையாக இருந்து செயலாற்றுபவை, இப்புவியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணுயிரிகளேயாகும்.

மனிதனின் உடலெங்கும் நுண்ணுயிரிகள் இருந்தாலும், வயிற்றிலும் நம் குடல்மண்டலத்திலும்தான் பெருவாரியாக இடம் பெற்றிருக்கின்றன அவை. தோராயமாக ஒன்றுக்கு மூன்று என்கின்ற விகிதாச்சார அடிப்படையில், 37 டிரில்லியன் உயிரணுக்களோடு 100 டிரில்லியன் நுண்ணுயிரிகளும் நம் உடலில் இடம் பெற்றிருக்கலாமென்பது அண்மைய ஆய்வறிக்கையின் கணிப்பாக இருக்கின்றது. இவற்றின் கொள்ளளவு ஒன்றரை லிட்டராகவும், எடையளவு இரண்டு கிலோகிராம்கள் வரையிலும் இருக்கக் கூடும்.

உடலினுள் அமையப் பெற்றிருக்கின்ற நுண்ணுயிரிகளே நம்மைக் கட்டமைக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, நமக்கான உணவுப் பழக்கத்தைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமென்கின்றார் பேராசிரியர் சிமோன் கார்டிங். வயிற்றின் கீழ்ப் பாகத்திலும் குடல்மண்டலத்திலுமாக இருக்கின்ற இந்த இரண்டு கிலோகிரோம் வரையிலான நுண்ணுயிர்த் தொகுதியை மாந்தனின் இரண்டாவது மூளையென வர்ணிக்கின்றார் மருத்துவப் பேராசிரியர் சிமோன் கார்டிங்.

ஒவ்வொருவருக்குள்ளும் குறைந்தது முந்நூறிலிருந்து ஆயிரம் வரையிலான நுண்ணுயிர்க் குடும்பங்கள் வசிக்கின்றன. பெருவாரியாகப் பார்க்கின் அவற்றை எட்டிலிருந்து பத்து விதமான பெருங்குடும்பங்களாக வகைப்படுத்தலாம். இவை ஏன் மனிதனின் ’இரண்டாவது மூளை’ என வர்ணிக்கப்படுகின்றது? மனிதனின் மகிழ்ச்சி, வருத்தம், சினம் போன்ற உணர்வுகளைக் கட்டமைப்பதிலும், எப்போது என்ன உண்ண வேண்டும், தின்ன வேண்டுமென்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குடலுக்குள் வாழும் இவை, இரத்தத்திலிருக்கும் நியூட்ரான்கள் வாயிலாக மூளைக்குச் சமிக்கை அனுப்புகின்றன. அதற்கேற்றாற்போல மூளையானது செயற்படுகின்றது, ஆகையினால்தான் இவை இரண்டாவது மூளை எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மாவுச்சத்து உண்டு வாழும் நுண்ணுயிரிகள் நமக்குள் வெகுவாக இருந்து, அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு நேரும் போது அவை மீண்டும் மீண்டும் மாவுப்பொருட்களையே உண்ணச் சமிக்கைகளை அனுப்பும்; மூளையும் திரும்பத் திரும்ப மாவுச்சத்துப் பொருட்கள் உண்ணுவதையே தூண்டிக் கொண்டிருக்கும்.

மனிதனின் செயலாக்கத்துக்கும் உடற்கட்டமைப்புக்கும் தேவையான எல்லாச் சத்துகளையும், அதனதன் தேவைக்கொப்ப உட்கொண்டு வாழ்தலென்பது சமச்சீர்த் தன்மையை(balance) நிலைநிறுத்தும். அப்படியான சமச்சீர்த் தன்மைக்கும் உடலில் குடிகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நாம் குறிப்பிட்ட உணவுகளையே மீண்டும் மீண்டும் உண்ணத் தலைப்படும் போது, மற்ற சத்துகளைச் சார்ந்து வாழும் நுண்ணுயிர்க் குடும்பங்கள் அருகிப் போய், எஞ்சியிருக்கும் நுண்ணுயிர்க் குடும்பங்களின் ஆதிக்கம் மேலோங்க, அவற்றுக்குப் பணிந்து அவற்றுக்கு ஏதுவான உணவுகளை உண்ணவே மூளை தூண்டும். இப்படித்தான், மனிதனுக்கு உணவின்பாற்பட்டு விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டு, சமச்சீரின்மையை உண்டாக்கி, நோய்க்கூறுகளாகவும் குறைபாடுகளாகவும் வடிவெடுக்கச் செய்கின்றது நம் உடலின் நுண்ணுயிர்க்குடும்ப அமைப்பு.

பலதரப்பட்ட நுண்ணுயிர்க் குடும்பங்களின் பரவலாக்கமும் நம்முள் குடிகொள்ள, நாம் என்ன செய்யலாம்? இலை, தழை, பூ, காய்கனிகள், விதைகள், கொட்டைகள், தண்டுகள் முதலான தாவரத்தின் நேரடி உள்ளீட்டினை யாதொரு வேதிவினைக்கும் ஆட்படா நிலையில்(unprocessed) வாங்கி, தழைதாம்பு(salad), பொரியல், அவியல் என அதன் சத்தினைச் சிதைக்காத வண்ணம் வெகுவாகச் சமைத்துத் தின்னலாம். அப்படி உட்கொள்ளும் போது, இல்லாத நுண்ணுயிர்க் குடும்பங்களும் நம்முள் குடிகொள்ள ஏதுவாகும். நம் மனத்திண்மையும் செயலாற்று திறனும் வலுப்படும். சத்தின்மை காரணமாக ஏற்பட்டிருக்கின்ற நோய்க்கூறுகளும் குறைபாட்டுக்கூறுகளும் படிப்படியாக இல்லாது போகும். ஒரேவிதமான காய்கனிகள் உட்கொள்ளப்படுவதும் தவிர்த்தல் நன்று. தாவரப் பொருட்களேயானாலும், அவற்றை மாற்றி மாற்றியும், பருவகாலக் காய்கனிகளாகவும், உள்ளூரில் விளைந்தவற்றுக்கு முதலிடமாகவும் அமைத்துக் கொள்தல் மேம்பட்ட பயனைக் கொடுக்கும்.

மாந்தனின் இரண்டாவது மூளையான நுண்ணுயிர்க் கட்டமைப்பு(human microbiota)க்கு ஏதுவாக, தாவரப்பொருட்களைக் கொண்டு விதவிதமாகச் செய்து தின்ன நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை. ஒருவருக்கு நுண்ணுயிரிகளின் அவசியமும் சமையற்கலை நாட்டமும் இருந்தாலே போதும், படைப்பூக்கம் தானாய் வந்து சேர்ந்து விடும். எடுத்துக்காட்டுக்கு, சோம்புச் செடி, கிளைக்கோசு குழம்பின் செய்முறையானது இங்கே இடம் பிடிக்கின்றது.

ஒரு தூர் சோம்பு (fennel plant), ஆறு அல்லது பத்து வரையிலான கிளைக்கோசு(brussels sprouts) எடுத்துக் கொண்டு, சோம்புத் தூரினை சிறுகச்சிறுகவும், கிளைக்கோசினை குறுக்கு வெட்டாக இரண்டாகவும் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியைச் சூடாக்கி, தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், தேவையான அளவு வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை முதலானவற்றை இட்டு வதக்கிக் கொள்க. பின்னர் நறுக்கி வைத்திருந்த தக்காளியையும், சோம்புத் தூர் நறுக்குகளையும் இட்டு, பச்சை மணத்தை நாசியார்ந்து முகர்ந்து கொண்டே, பச்சைமணம் நீங்கும் வரையிலும் வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு நீர் ஊற்றிக் கொதி வந்தவுடன், மஞ்சத்தூள், கொத்துமல்லித் தூள், மசாலாத் தூள், கடலுப்பு ஆகியவற்றைத் தேவையான அளவு கலந்து கொதி விட வேண்டும். நீர் சற்றுக் கெட்டிப்படுவதற்காக, கொஞ்சம் வறுத்தகடலையை அரைத்து உலர்மாவாக்கிக் கலந்து கொள்ள வேண்டும். கடைசியாக குறுக்கு வெட்டில் வகிர்ந்து வைத்திருக்கும் கிளைக்கோசினையும் போட்டு அவை அரைவேக்காடு மட்டுமே காணுமளவுக்கு வைத்திருந்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். கொத்துமல்லித் தழைகளை மேலாக இட்டுச் சற்று மூடி வைத்திருக்க, சோம்பு கிளைக்கோசு குழம்பு புசிக்க நமக்கும் நேரம் வந்திருக்கும்.

நன்றி: தென்றல்முல்லை

No comments: