12/15/2018

அப்பா

அப்பா

வீட்டுப் போர்டிகோவில்
அத்துமீறி நீட்டிக்கொண்டிருக்கும்
மாமரத்துக் கிளையிலிருந்து
இலையொன்று உதிர்ந்தால்கூட
தரைசேரோசை காதில் விழும் அமைதி!

கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் இருந்தால்
திறந்த கதவை மூடிவிட்டு வருபவர்
மூத்தமகனாய்த்தான் இருக்கும்!

கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் மெலிதார இருந்து
திறந்த கதவும் மூடப்பட்டு
சலசல தண்ணீர் அலம்பும் சத்தமா?
கால் கழுவி நுழைபவர் மனையாள்தான்!

கிறீச் சத்தத்தோடு
மறு’கிறீச்’ சத்தமெதுவுமின்றி
நிலமதிர டக்டக் ஓசையா?
வருவது  பேரப்பயல்தான்!

முன்கதவடியிலிருந்து கொண்டே
டாமி குரைக்கிறானா?
தெருவுக்குப் பரிச்சயமில்லாத ஆளொன்று
தடத்தில் ஊசாட்டம்!

முன்கதவடியிலிருந்து ஓடிப்போய்
கிறீச் கதவின் மேலேறியபடி
குரைக்கிறானா டாமி?
ஒறம்பரை எவரோ நடமாட்டம்!

வீட்டின் உள்ளோங்கிய அறைமூலையில்
படுத்த படுக்கையாய்ப் படுத்திருக்கும்
அவரின் ஊரளக்கும்கண்கள் காதுகளில்!
திடுமெனப் பேசுகிறார்,
போய்ப்பாரு அதென்னன்னு!!
ஐந்துவீடு கடந்து ஆறாவது வீட்டுமுகப்பில்
தண்ணீர்க்குடத்தோடு வீழ்ந்து கிடக்கிறார்
கல்தடுக்கிச் சாய்ந்த பேங்க்கார அம்மா!!

-பழமைபேசி.

1 comment:

ந.குணபாலன் said...

ஒரு நாப்பது, நாப்பத்தொரு வரியத்துக்கு முந்தின ஒரு நடப்பை,
என்ரை தகப்பனாரின்ரை அந்திம காலத்தை எக்கணம் ஒருக்கால்
என்ரை மனக்கண்ணிலை வரவைச்சிட்டீங்கள்.
கட்புலன் குறைஞ்சாலும் செவிப்புலன் முழிச்சுக் கொண்டு நல்ல வலுவாக இருந்தது.
நன்றி தம்பி!
ந.குணபாலன்