7/07/2013

மையல்

கதிரவன் மேல்வாக்கில் கீழே விழுந்து போய்க் கொண்டிருந்தான். போனவன் சும்மா போகவில்லை. தலையைப் பின்பக்கமாய்த் திருப்பி வெளியில் வியாபித்திருந்த வெளிச்சத்தைத் தன் வாயால் உறிஞ்சிக் குடித்தபடியே போய்க் கொண்டிருந்தான். வெளிச்சத்தின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போன வேளையது. எனக்கு மிகவும் பிடித்த பொழுதும் அதுதான். அந்த வேளையில்தான் அது தனித்து இருக்கும். லெளகீகம் சொல்லிக் கொடுக்க பிரயாசைப்பட்டுக் கிடக்கும் அது. நான் போனதும் என் கண்களுக்கு மட்டுமே தெரிகிறாற் போல நாணிச் சிரிக்கும். நீளாக் கைகளை விட்டு என்னைத் துழாவும். நான் மருங்கில் ஓடி கடுக்கா கொடுக்கும் போது பொய்யாய்ச் சினந்து விடுவித்துக் கொள்ளும். எங்களுக்கிடையே எவ்விதமான குழூஉக்குறிகளும் இடம் பெற்றிருக்கவில்லை. 

எங்களுக்கே எங்களுக்கான பரிபாடங்கள், எங்களுக்கு மட்டுமே உரித்தானது. அதை நாங்கள் மட்டுமே அறிவோம். இதைக் கண்டு கடந்து போகிற முகில்களுக்கு ஏனிந்தப் பொறாமை எங்கள் மீது?? புதர் வந்தடையும் டிப்பர்களும் கார்டினல்களும் ஒளிந்திருந்து பார்த்திருக்கும். சிக்காடீக்கள் மட்டும் எமைக் கிட்டடியில் வந்து பார்த்து விட்டுப் போகும். இந்த அன்பூடு பொழுதில்தான் முயல் தன் குட்டிகளை வெளியே அனுப்புகிறது. பிறந்த குட்டிகளுக்கு என்ன தெரியும்? எங்களுக்குள்ளான அந்த முயக்கம் அதுகளுக்கு ஒரு வேடிக்கை. இந்நேரம் முக்கிலி போட்டு நீச்சலடித்துக் கொண்டிருந்த கூழைக்கடாக்கள் கரைக்கு வந்து தன் மண்டையை உடலுக்குள் குத்திக் கொண்டன. நேரம் பார்த்துத் தன் நிர்வாணத்தைக் காண்பிக்கத் துவங்கியது அது. பார்க்கப் பார்க்க கொள்ளையழகு. இன்னமும் இங்கேயிருந்தால் என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடும். திரும்பிக்கூடப் பார்க்காமல் வந்து விட்டேன். 

எங்கே போய்விடப் போகிறது? அது அங்குதான் இருக்கும் என்மீதான பாயத்துடன் இன்னும் கொஞ்சம் அழகு பெருக்கி அது அங்குதான் இருக்கும். தாவளம் வந்து சேர்ந்துவிட்டதாலேயே தடாகக் காதல் பொல்லுக்காதல் ஆகிவிடுமா என்ன?? அந்த மாரீசனே வந்தாலும் மடையனாக்கி விட்டு எமக்காய் அங்கேதான் என்மீதான மையலுடன் மையங் கொண்டிருக்குமந்தத் தடாகம்!!

1 comment:

நிலாமகள் said...

வியாபித்திருந்த வெளிச்சத்தைத் தன் வாயால் உறிஞ்சிக் குடித்தபடியே //

அழகாய் பயணிக்கிறது கவிதை... அந்திமாலை போலவே.