வெண்சாம்பல் நிறத்தில் இருப்பவள். வாழ்க்கைப்பட்டவள் சின்னியம் பாளையத்து விபத்தில் சிக்குண்டு மாண்டு போன இந்த ஆறு ஆண்டுகளாக, மனைவியின் வெற்றிடத்தை நிரப்பி வருபவளும் இவளே. பெயர் பொன்னி. கட்டிலுக்கு இடப்புறமாகத் தரையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாளவள். துப்பவிருந்த கொட்டையை துப்பாமற்க் கையில் வைத்துக் கொண்டு, பொன்னி தூங்கும் அழகை இரசிக்கத் துவங்கினார் அங்கண கவுண்டர்.
அங்கண கவுண்டருக்கு இன்றைக்கெலாம் ஒரு அறுபது வயதிருக்கலாம். தான் நட்டு, வளர்ந்து, இன்று தனக்கே நிழல் கொடுத்துத் தன்னுள் ஒருவனாக இந்த வேம்பு மரம் ஆகிப் போனது பற்றி உற்றார் உறவினரிடம் உவகையுடன் சொல்லி இன்புறுவார் கவுண்டர். தன்னருகே படுத்துறங்கும் பொன்னியின் அழகில் சொக்குண்டு போனவர், அதிலிருந்து விடுபட்டுப் பேசலானார்.
“சின்னம்மணீ... இந்தா, இந்த பொட்டைப் பொன்னிக்குச் சித்த எதனாப் போடு பாக்குலாம். செனையா இருக்குற நாய்க்குச் சோறு போடாத பொல்லாப்பு நமக்கெதுக்கு?”
“இதென்னங்ப்பா... இதாப் போடுறனுங்.....”, தேன்குழைத்த தேனமுதாய்ப் பதிலளித்தாள் அவள். சின்னம்மணி என அக்கம்பக்கம், உற்றார், உறவினர் என எல்லோராலும் அழைக்கப்படும் பரிமளம்.
பரிமளம், இருபத்து நான்கு வயதாகிறது. அம்மா போன பிறகு, அப்பாவைத் தானே கவனித்துக் கொள்கிறாள். அப்பாவையும் கவனித்துக் கொண்டு, பீளமேட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் முதுகலைப் பட்டம் படித்து முடிக்கப் போகிறாள்.
அங்கண கவுண்டருக்கு ஒரே ஒரு கவலைதான். நல்ல இடமாகப் பார்த்து, சின்னம்மணிக்கும் வருகிற வைகாசியில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கிறதுதான். மூத்தவள் சகுந்தலா, சர்க்கார் சாமக்குளத்திற்கு கட்டிக் கொடுத்து, இப்போது சிங்கப்பூரில் மாப்பிள்ளையுடன் வசித்து வருகிறாள். அவளிடமும், நல்ல மாப்பிள்ளை இருந்தால் சொல்லச் சொல்லி இருக்கிறார் அங்கண கவுண்டர்.
காலையில் செய்து, அவர்களிருவரும் உண்டது போக மிஞ்சிப்போன இரவைக் கிளறலைத் தட்டில் போட்டுக் கூவினாள், “ஏ பொன்னீ... வந்து, இந்த இரவையத் தின்னு போட்டுப் போய்ப் படு, வா”
“என்னம்மணீ... நல்லா, சோத்தை அந்த மோர்ல கரைச்சி ஊத்து அம்மணீ”, அங்கண கவுணடர் இரங்கிச் சொன்னார்.
“ஊத்துறனுங்ப்பா...”, சொல்லி முடிக்கவும் மதிர்ச்சுவர் தாண்டி குப்பைகள் விழவும் சரியாக இருந்தது. படுத்துக் கொண்டிருந்த அங்கண கவுண்டரும் அதை ஏறெடுத்துப் பார்க்கலானார்.
“ஏனுங்ப்பா... இவுனுக அலும்பு நாளுக்கு நாள் எச்சாப் போய்ட்டு இருக்குதுங்ப்பா.. நீலம்பூர் மாமங்கிட்டயாவது சொல்லிக் கேக்கச் சொல்லுங்ப்பா”
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் ஊரில் நிலபுலன்களை வாங்குவாரே கிடையாது. இன்றைக்கோ நிலைமை தலைகீழ். ஒரு அடி நிலம் உபரியாகக் கிடந்தாலும் கூட, அதன் மேல் ஆயிரமாயிரம் கண்கள். கோயமுத்தூர் ஏரோப்ளேன் காட்டுக்குக் கிழபுறம் எல்லாமே வானம் பார்த்த பூமி. நிலங்களுக்கு அவ்வளவாக விலை இராது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் சின்னச்சின்னதாக விசைத்தறிகள் ஊருக்குள் வந்தன. பிறகு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் இலட்சுமி மில்க்காரர்களின் தொழிற்சாலைகள் அரசூருக்கும் கணியூருக்கும் வரலாயின.
அன்றிலிருந்து துவங்கிய நிலங்களின் விலையேற்றம், என்றுமில்லாதபடிக்கு விண்ணை முட்டிக் கொண்டு இருக்கிறது இன்று. விற்பனைக்கான நிலங்களோ அல்லது வீட்டு மனைகளோ சந்தையில் இல்லவே இல்லை எனும் நிலைதான் எங்கும்.
அருகம்பாளையத்துத் தலைவாசலில் முப்பது சென்ட்டு நிலத்துடன் கூடிய பதினாறு அங்கணத்து வீடு, அங்கண கவுண்டருடையது. கிழக்குப்பார்த்த வீடு. ஓட்டு வீடென்றாலும் பார்ப்பதற்கு மிக வடிவாய் அமையப் பெற்றிருக்கும். முப்பது சென்ட் நிலப்பரப்பில், இடது புறமாக வீடு. வீட்டைச் சுற்றியும் ஐந்தரை அடி உயர மதில்ச்சுவர். பின்புறம் மதில்ச்சுவருக்கும் வீட்டிற்கும் இடையே பிறவடையும் உண்டு. முன்புறம் விசாலமான இடத்தில் வேம்பு மரம், பந்தலில் அவரைக் கொடி, முன்புற வாயிலை ஒட்டியே அத்திக்கடவுக் குடிநீர்த் திட்டக் குழாய். அங்கண கவுண்டரின் பராமரிப்பில் அம்சமாய்க் காட்சியளிக்கும் வீடு அது.
வீட்டிற்கு வலதுபுறத்து வீடு, அங்கண கவுண்டரின் கூட்டமான காடன் கூட்டத்தைச் சார்ந்தவ்ரும், ஒன்றுவிட்ட பங்காளியுமான சண்முகவேலுவின் வீடு. அங்கண கவுண்டரும், சண்முகவேல்க் கவுண்டரும் இராணிலட்சுமி நூற்பாலையில்தான் ஒன்றாக வேலை பார்த்து வந்தார்கள். தங்களுக்கான வேலை இல்லை என்றான பிறகு, அங்கண கவுண்டர் விசைத்தறி வேலை பார்த்து வந்தார். சண்முகவேலு சுகவாசியாக இருக்கத் துவங்கினார். விளைவு, தன் மூதாதையர் விட்டுச் சென்ற வீட்டை விற்கத் துணிந்தார்.
அருகம்பாளையத்தில் காகிதப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையைத் துவங்கிய சுந்தரப்பாண்டியனுக்கு அவ்வீடு விற்கப்பட்டது. அவ்வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார் சண்முகவேலு என ஊரே பேசியது. என்றாலும் அங்கண கவுணடர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சண்முகவேலு, வீட்டை விற்றுவிட்டு கருமத்தம்பட்டியில் வாழ்ந்து வருகிறார். நாளடைவில் ஊரும் அவரை மறந்து விட்டது.
“யாரது? முருகேசனா??”, கதவைத் திறந்து உள்ளே வரும் உள்ளூர்ப் பிரமுகர் முருகேசனைப் பார்த்து வரவேற்றார் அங்கண கவுண்டர்.
“ஆமாங் மாமா. ஊட்ல நீங்க மட்டுந்தானா?? சின்னம்மணி மேக்க போயிட்டுதுங்ளாக்கூ?”
“ஆமா, முருகேசா. அஞ்சு மணித் தங்கத்துக்கு வந்துருவா.”
”இவன் எதற்கு சின்னம்மணியைக் கேட்கிறான். திருமணத்திற்கேற்ற இடம் ஏதாவது கொண்டு வந்திருப்பானோ?”, யோசனையில் ஆழ்ந்தார் அங்கணக் கவுண்டர்.
“இல்லீங்க மாமா. பக்கத்துல பேப்பர்க் கம்பெனி சுந்தரப்பாண்டி அண்ணன் வந்திருந்திச்சி. நீங்களும் சின்னம்மணி கண்ணாலத்துக்கோசரம் ஊடுகீடு வித்துக் காசு தேத்துவீங்களோன்னு கேட்ட்டு வரச்சொல்லுச்சு. அதான் வந்தேன். சொல்லுங்க, நல்ல வெலையாப் பார்த்து முடிச்சிறலாம்”.
முருகேசன் சொல்லியது கேட்டுச் சிறிது அதிர்ந்தாலும், சமாளித்துக் கொண்டார் அங்கண கவுண்டர்.
“அப்படி எல்லாம் ஒரு நெனப்பும் இல்ல முருகேசா. அப்படியே கொஞ்சநஞ்சம் பத்துலைன்னாலும், பெரியம்மணியுமு மருமகப் பிள்ளையுமு சிங்கப்பூருல இருக்குறது சகாயமாப் போச்சு பாரு”
“செரீங் மாமா. நீங்க சொல்றதுமு வாசுதவந்தானுங். இருந்தாலும் பக்கத்து ஊட்டுக்காரன் எசைஞ்சி வரும் போது வெலை பண்றது சுலுவு பாருங்”, முருகேசன் இலாகவமாகக் கொக்கியைப் போட்டான்.
“செரிதான் முருகேசா. அப்படி எதனா இருந்தா, தேவைப்பட்டாச் சொல்லி அனுப்புறன் முருகேசா!”, இயல்பாகவே பேசி வழியனுப்பி வைத்தார் அங்கண கவுண்டர்.
முருகேசன் வந்து சென்ற இரு வாரங்களுக்குப் பின் துவங்கியது கொசுக்கடி. பக்கத்துப் பிறவடையில் இருக்கும் சுந்தரப்பாண்டியனின் காகிதக்கிடங்கில் வேலை செய்யும் ஆட்கள், கிடங்குக் கழிவுகளை அங்கண கவுணடரின் இடத்தில் அவ்வப்போது கொட்டத் துவங்கினார்கள். அங்கணக் கவுணடரும் நேரில் சென்று அவருடைய இடத்தில் போட வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். முருகேசனிடமும் சொல்லிப் பார்த்தார். அத்துமீறல் இன்னும் நின்றபாடில்லை. கிட்டத்தட்ட இப்படியாகவே ஆறு மாதங்கள் கழிந்தன.
திடீரென ஒரு நாள், பொறுமை இழந்தவராய், ”செரிம்மா, நான் நீலம்பூர் மாமங்கிட்டவே சொல்லிப் பார்க்குறேன்”.
“ஆமாங்பா. மாமன் வந்து ஒருக்கா இவிங்களுக்கு வேட்டு வெச்சாத்தான் செரி வரும்!”.
தன் மனைவி இறந்து போனாலுங்கூட, தன் மைத்துனன் இராசகோபாலுடன் நல்ல நட்புப் பேணி வருபவர் அங்கண கவுண்டர். இராசகோபால் சிறிது முன்கோபி. எதற்கும், “அடிடா, புடிடா, வெட்டுடா” எனக் குதியாட்டம் போடுபவர். அவனிடம் சொல்லி, வம்பை விதைக்க வேண்டாமே எனக் காத்திருந்தவர்தாம் அங்கண கவுண்டர்.
“சின்னம்மணீ... அந்த போனைக் கொண்டாம்மா தங்கம்!”
“இந்தாங்பா!”
அலைபேசியை முடுக்கலானார் அங்கணக் கவுண்டர்.
“ஆரூ, இராசா?”
“மச்சே சொல்லுங் மச்சே!”
“தென்றா. இந்த பக்கத்து ஊட்டுக்காரங்கோட ஒரே ஓரியாட்டமா இருக்கு. செத்தைகளை நம்மூட்டுப் பக்கமாவே போட்டுக் கொடைச்சல் தாறாங்க இராசு!”
“கேள்விப்பட்டுனுங் மச்சே. நேத்து சின்னம்மணி சொன்னதா அவளோட அத்தை சொன்னா. நானுமு வெசாரிச்சுப் பார்த்தனுங். அவன், இந்த மந்திரி திங்களூர் திருமலைசாமிக்கு வேண்டியவனுங்ளாமுங் மச்சே!”
“ஓகோ. என்னதாஞ் செய்யுறது இதுக்கு? சூலூர்ப் போலிசுடேசன்ல பிராது கீதூ?”
“அப்பிடிக்கிப்பிடி செஞ்சு போடாதீங்? நம்முளே, நம்முளுக்கு செய்வெனை செஞ்ச மாதர ஆயிரும். கொஞ்ச நாளைக்கு பொறுத்திருங் மச்சே!”
நாட்களும் கடந்தது. எதற்கும் விபரத்தைச் சம்மந்தி வீட்டாரிடம் சொல்லி வைப்போம் என்று சர்க்கார் சாமக்குளம் சென்றார் அங்கண கவுண்டர். ”விபரத்தைச் சொல்லியது போலவும் ஆகும், சின்னம்மணிக்கு ஏற்ற வரன் இருந்தால் தேடிப்பார்க்கச் சொல்லவும் ஒரு வாய்ப்பாக அமையும்” என்ற எண்ணத்தில் சென்றார் அங்கண கவுண்டர்.
“வாங் சம்மந்தி வாங்”
“வாறனுங். சிங்கப்பூர்ல இருக்குற பேரங்கூட தின்மொருவாட்டிப் பேசாட்டி எனக்குத் தூக்கமே வராதுங்”
“இங்கியுமு அப்படித்தானுங்”
“சின்னம்மணி படிப்பு முடிஞ்சிதீமு, கண்ணாலத்தை இந்த வைகாசிலயே செய்யுலாமுன்னு பார்த்தனுங். ஒன்னும் தோதா எசைஞ்சி வர்லீங். இந்தப்பக்கம் எதனா இருந்தாப் பார்த்துச் சொன்னீங்கன்னா....”
“அதுக்கென்னங்... நேத்துகூட அன்னூர்ல நம்ம பங்காளிகிட்டச் சொல்லிப் போட்டுத்தான் வந்தமுங்”
“அப்பொறம் உன்னொரு தாக்கலுங்... பக்கத்து ஊட்டுக்காரன் கொடைச்சல் குடுத்துட்டே இருக்குறானுங்..:
“ஆமாங்... சின்னம்மணி சொல்லுச்சுன்னு எங்கூட்டு மருமக சொன்னா. நானுமு யோசனை செஞ்சி பார்த்தனுங்க. உங்களுக்கு அமைஞ்சதோ ரெண்டு பொட்டைப் புள்ளைக. பேசாம வெலைபேசிக் காசைப் பாத்து, அதை ஆளுக்குப் பாதின்னு குடுத்துட்டு சிவனேன்னு குக்கீட்டுச் சோறு உங்லாம் பாருங்”
அங்கண கவுண்டருக்கு குலை நடுங்கிக் கண்கள் சொருகியது போல இருந்தது. “அண்ணா, அவரு சொல்றாருன்னு நீங்க ரோசனை பண்ணாதீங்”, சொம்புத் தண்ணியுடன் கைநீட்டினார் சம்பந்தியம்மா தெய்வாத்தாள்.
மிகுந்த கவலை கொண்டார் அங்கணக் கவுண்டர். காலை பதினொரு மணிக்குச் சென்றவர், மதிய உணவெதுவும் சம்பந்தி வீட்டில் உண்ணாமலேயே கிளம்பினார். எங்கும் செல்லப் பிடிக்கவில்லை அவருக்கு.
காந்திபுரம் வந்தவர், வீட்டில் சின்னம்மணி என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என் எண்ணியவர், அலைபேசியில் அழைத்தார்.
“அப்பா, அவிங்க ஊட்டுக்கு வந்த லாரி நம்ம மதில்ச்சுவத்தைப் பூரா இடிச்சித் தள்ளீர்ச்சுப்பா!”, கேவிக் கேவி அழுதாள் சின்னம்மணி.
“அழாதம்மணி. இதா நான் இப்ப காந்தீவரத்துல்தான் இருக்கேன். நேரா ஊட்டுக்குதான் வாறேன்”
மூதாதையர் வாழ்ந்த வீடு. இரு பெண்களையும் நல்லபடியாகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, அம்மண்ணிலேயே வாழ்ந்து சாக வேண்டும் என நினைப்பது என் தவறா? அங்கண கவுண்டரின் மனத்தைச் செல்லரித்துக் கொண்டிருந்தது.
ஆட்சிதான் மாறி விட்டதே. இம்முறை மைத்துனன் இராசுவை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்தை நாடிச் சென்று முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்தவர், பாதியிலேயே சூலூரில் இறங்கி விட்டார்.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த மைத்துனன் இராசுவுடன் நேராக ஆளுங்கட்சித் தலைவர் வீராசாமி அலுவலகத்திற்குச் சென்றார் அங்கணன்.
“இராசு, நீங்க சொல்றது நல்லாப் புரியுது. அவிங்க வேணுமின்னே இடிச்சித் தள்ளி இருப்பாங்கன்னு நாங்க நினைக்கல. அப்படியே இருந்தாலும், அந்த டைவரைப் புடிச்சி உள்ள வெச்சிதுல உங்க பிரச்சினை தீந்திருமா??”
“அண்ணே, அப்ப நீங்களே ஒரு வழி சொல்லுங்க இதுக்கு?!”
“நான் நம்ம ஆட்கள்ல யாராவது ஒருத்தரை அனுப்பி வைக்குறேன். நல்ல வெலையா நம்ம ஆளுககிட்டத் தள்ளி உட்றுங்க. அவனை நாங்க பாத்துகுறோம்!”
இது கேட்ட மைத்துனன் இராசுவுக்கு மகிழ்ச்சி. அங்கண கவுண்டருக்கு, இருளோ என்று கண் கலங்கிச் சித்தமும் கலங்கியது.
“வண்டிய ஊருக்கே உடுறா!”, மைத்துனன் இராசுவும், மாமா அங்கண கவுண்டரும் அருகம் பாளையத்துக்கு நேராக வந்தனர்.
வாசலில் வந்திறங்கிய மாமாவைப் பார்த்ததும், சின்னம்மணி ’ஓ’வென்று ஓலமிட்டாள்.
”மாமா, எங்கம்மா என்னைய எப்பிடியெல்லாம் வெச்சி சீராட்டித் தாலாட்டி அழகு பார்த்தா? எங்கம்மா இருந்திருந்தா இந்த நெலமை எனக்கு வந்திருக்குமா?” தலையில் அடித்துக் கொண்டு அலறினாள்.
“அழாதறா செல்லம். மாமன் வந்துட்டன் அல்ல? உனியெல்லாம் நாம் பாத்துகுறேன். அழுகாதறா!”
“எங்கப்பன், டீக் கடைக்காரம்பொண்டாட்டி கூட சாகுவாசமுங்றாங் மாமா. செவுத்த இடிச்சிவங்ககோட நாயம் பேசுனப்ப முருகேசண்ணன் சொல்லித் திட்டுனாருங் மாமா. நேத்து கூட, அவ கூட இவரு இருந்தாருமுங்...”
இராசுவுக்குச் சுர்ரென்று சினம் தலைக்கேறிக் கொலை வெறியோடு மாமனைப் பார்த்தார். “யோவ், சின்னம்மணி சொல்றது உம்மையா? நேத்து அவளோட இருந்தியா?”, சொற்கள் தடித்தன.
நெஞ்சு கலங்கிய கவுண்டர், “டே இராசூ... நான் தெனமும் அவ கடைக்குப் பேப்பர்....”
“நிறுத்துயா... பேப்பர் படிக்கப் போனா பேப்பர் மட்டும் பட்ச்சிட்டு வர வேண்டியதுதான? மணிக்கணக்கா அவகூட என்னய்யா பேச்சு ஒனக்கு?”
அவசர கதியில் கிளம்ப்பிப் போனார் அங்கண கவுண்டர். இங்கே வாசலில் பெருங்கூட்டம் கூடி இருந்தது. வீட்டிற்குள் சின்னம்மணியைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் உறவினர்கள். இராசுவோ, டீக்கடையைச் சூறையாடுவதற்கு தன் படை பலத்தைக் கூட்டுவதில் முனைப்பாய் இருந்தான். சுந்தரப் பாண்டியனின் காகிதக் கிடங்கில் பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன.
திடீரென ஒரு கும்பல் வீட்டை நோக்கி முன்னேறி வந்தது.
”ஏ, என்னப்பா மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க? இடிசல்ல சிக்கி இருக்குற அந்த நாயைத் தூக்கி தூரத்துல போட்ட்டு வாங்கப்பா!”. விசைத்தறியில் நூலெடுக்கும் சிறுவர்களில் இருவர், செத்துப் போன பொன்னியைத் தூக்கிச் சென்றனர்.
”அடுத்து, அந்த வேப்ப மரத்துக்குக் கீழ இருக்குற கவுத்துக்கட்டல் அப்படியே இருக்கட்டும். அதுலே படுக்க வெச்சி, அப்படியே எடுத்துட்டுப் போய் எரிச்சிறலாம்!”
வீட்டின் முன் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. உரையாடல்கள் காற்றில் கரைந்தன. கரையும் ஒலிகளுள் ஒரு ஒலியானது விகாரமாய் ஒலித்துக் கரைந்தது.
“பேசாம சுந்தரப்பாண்டியனுக்கு வித்திருந்தாக் கூட, நில அபகரிப்புல உள்ள போட்டுக் காசு கொஞ்சம் எச்சா வாங்கி இருக்குலாம். எங்க பெரியப்பன் எதையுஞ் செய்யாம இப்பிடி இரயில்ல உழுந்து வீணாப் போயிருக்க வேண்டாம்! தூத்தேறி!!”
மற்றொரு குரல், “ஏ, பால் ஊத்திப் பதினாறு செய்யுற வரைக்குமு வந்த சனம் இருக்குறதுக்கு எடங்காணாது. அந்த வேப்ப மரத்தை வெட்டிப் போட்டு, பந்தலை ஏகத்துக்கும் போட்டுடோணும்”
பொன்னி எறியப்பட்டு விட்டது. இதோ வேம்பும் சாய்கிறது. மற்றுமொரு ஒரு சிலந்தி வலை எங்கோ ஒரு இடத்தில், வெகு நேர்த்தியாய் பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது!
15 comments:
நல்ல புனைவு நண்பரே... பெரும்பாலான இடங்களில் நடக்கும் கதை..... கோவை மொழியில் பேச்சு கேட்கக் கேட்க ஒரு சுகம்....
மனதைத் தொட்ட கதைப் பகிர்வுக்கு நன்றி.
பழமை! அருமையான வெளிப்பாடு, கிராமத்து உரைநடை, ஒரு உண்மையின் நிதர்சனம். அருமை. கவுண்டர் மனசை அள்ளிக்கினுப் போயிட்டார்.
அண்ணா, அப்படியே நம்மூரு போயி வந்தமாதிரி இருந்ச்சுசுங்... என்னமோ மனசு ஒருகெடைலே இல்லிங், இதே படிச்சுபோட்டு..
பழமை அடுத்தவன் சொத்தை அதிகாரம் இருக்கு என்பதற்காக அடி மாட்டு விலைக்கு மிரட்டி வாங்கறத நினைச்சா..... இது தொடர்பா ஒரு கதை எழுதலாமுன்னு இருந்தேன், இஃகி் எப்பன்னு சொல்ல மாட்டேன்
அன்பின் பழமை பேசி - மனம் வலிக்கிறது - இன்றைய நாட்டின் நிலைமை எண்ணிப் பார்க்கவே இயலவில்லை. அடுத்தவன் நிலத்தினை சாம தான பேத தண்டத்தினைப் பயன்படுத்தி - அடி மாட்டு விலைக்கு வாங்கி - கொள்ளை லாபம் அடிக்கும் கூட்டத்தினை என்ன செய்வது .... அரசும் காவல் துறையும் இதனைத் தடுக்க ஒன்றும் செய்வதில்லை. நாடு எங்கே போகிறதென்றே தெரியவில்லை. ம்ம்ம்ம்ம் - கதை அருமை - வட்டார வழக்கைல் எழுதப்பட்ட கதை. நல்வாழ்த்துகள் பழமை பேசி - நட்புடன் சீனா
சிலந்தி வலை
அருமையாக இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் நில அபகரிப்பு அடாவடிதனங்களை உள்ளடக்கி எழுதிய புனைவு. கொங்கு மண்டல வட்டார மரபுத்தமிழ் சிறப்பு தவழ்ந்து ஓடுகின்றது. நாம் வளர்க்கும் நாய், மரங்கள் நமது குடும்பத்தில் ஒன்றாகி விடுங்கின்ற எதார்த்தம் இந்தக் கதையில் உள்ளது.
மண்வாசனை நம்மை மயக்க வைக்கிறது. நமது பண்பாடுகளின் மிஞ்சியுள்ள எச்சம்தான் கதையில் கரு.
//“ஆமாங்... சின்னம்மணி சொல்லுச்சுன்னு எங்கூட்டு மருமக சொன்னா. நானுமு யோசனை செஞ்சி பார்த்தனுங்க. உங்களுக்கு அமைஞ்சதோ ரெண்டு பொட்டைப் புள்ளைக. பேசாம வெலைபேசிக் காசைப் பாத்து, அதை ஆளுக்குப் பாதின்னு குடுத்துட்டு சிவனேன்னு குக்கீட்டுச் சோறு உங்லாம் பாருங்”//
இன்றைய சூழ்நிலையில் நீதி தேடிப்போனால் நடப்பது இதுதான். உலகம் போகும் போக்கில் தனிமனிதன் தன்னம்பிக்கையை இழந்து ஒன்றில் அடிமையாக வாழ வேண்டும் அல்லது .........
மனதை அதிகம் பாதிக்க ஒரு கதை. இன்று நடைமுறையில் பலர் இதே போல நடைபிணமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லதொரு சமூக கருத்துக் கொண்ட எழுத்தைக் பகிர்ந்தமைக்கு தம்பி பழமை பேசிக்கு நன்றி.
அன்புடன்
நாஞ்சில் இ.பீற்றர்
அருமைங்க!!!
நாட்டு நடப்பை கொங்கு மொழியில் அருமையாக எழுதியுள்ளீர்கள். மனதை பிசைந்த புனைவு.
அருமை பழமை பேசி. சொந்த மச்சானும் பங்காளியுமே இப்படியென்றால் மற்றவர்களை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது? மனது வலிக்கிறது.
realestate,windmill land,factory
enru, kongu seemai vellanthi manitharkal palar,adimattuvelaikku
poomiyai koduththuvittu.makan,makal
akka,thankai endru panaththai pangu
pottu koduththu vittu.kadaiciyil
night watch man velaikku pokum
avalam thodarkirathu.mannai virka uravukal seyyum suulchi...pauriyaatha manitharkalai
ninaiththaal..kanneer varukirathu.
சீமை முழுக்க சிலந்தி வலைதான் :(
ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... நிதர்சனம்.. ஒத்தாசைக்கு வேண்டிய உறவுகள்கூட குழிபறிப்பது வேதனை...
வாசலில் வந்திறங்கிய மாமாவைப் பார்த்ததும், சின்னம்மணி ’ஓ’வென்று ஓலமிட்டாள். //
சிலந்தியின் வலை பிஞ்சு போற இடம் இங்கதான்....
அழகா எழுதி இருக்கீங்கண்ணா... நம்ம தமிழ படிக்க படிக்க மனசு குளுந்திருச்சுங்க.. இன்னும் நெறைய எழுதுங்க..
பழமை,
நல்ல வட்டார வழக்குல கதை நல்லா சொல்லி இருக்கிங்க, (நான் இதை எழுதினிங்கனு சொல்லமாட்டேன்,
கதை சொல்லினு தான் கி.ராஜநாயணன் சொல்வார்)
அப்புறம் வில்லனும் காடைக்கூட்டம்னு குறிப்பிட காரணம் இருக்கா, இனத்தானே இனத்தானை அழிப்பான்னு சொல்லவா?
எவ்வளவு பெரிய வனத்தில போய் மேஞ்சாலும் கடைசில இனத்துல தான் போய் சேரணும் :-))
Post a Comment