10/13/2011

வாடா மலர்

தளையத் தளைய பட்டுப்புடவையில் பெண்டிர். தமிழ்நாட்டில் கூட இல்லாத இளம்பச்சைத் தாவணிகளும், இளஞ்சிவப்புத் தாவணிகளும். அவற்றிற்கேற்றாற் போல தங்கக்கம்பி நிற இழைகள் தரித்த ஓரப்பட்டைகள் கூடிய மஞ்சள் மற்றும் கத்தரிப்பூ நிற பாவாடைகளும்! மங்களகரமாய்க் காட்சியளித்தது கூடம்!!

பல்கலைக் கழக வளாகம் என்பதால், இளமீசைகளுடன் கூடிய பதின்ம வயது கடந்த இளங்காளைகளும் உலாப் போய்க் கொண்டிருந்தன.

“வாவ்... வாட் எ ப்யூட்டி மேன் அவர் லேடீசு ஆர்?”, மனம் பொங்கிக் குதூகலித்தது அவ்விளங் காளைகளில் ஒன்று.

குடும்ப சகிதம் சென்று கொண்டிருந்தவனுக்குச் சிறிதான சலனம். அம்முகம் போலத்தான் தெரிகிறது. ஆனாலும் அது அல்ல! அதுவே ஆனாலும் எப்படிப் பார்க்க முடியும்? மறுபடியும் பார்க்கலாம் என முளைத்த எண்ணம் முளையிலேயே கருகிப் போனது.

பார்வையை வேறு கோணத்தில் செலுத்திப் பிள்ளைகளுடன் விழா அரங்கம் நோக்கி முன்னேறினான்.

“ப்பா, என்கு அந்தப் பட்ப் பாவாடை வாணும்.. ப்பா... என்கு...”, குழந்தையின் சில்லுக் குழைவினூடாகவும், புறச்சூழலின் இதத்தினூடாகவும் ’அகக்கிள்ளு’தனை மறந்து இன்புறலானான்.

நுழைவுக் கிரியைகளை முடித்து, பணம் இருபது வெள்ளிகளைக் கொடையாகக் கொடுத்து நிமிர்ந்தான். அதே முகம். கண்களும் கண்களும் பார்த்துக் கொண்டன. அறியாத கண்கள் போலக் கண்டு கொள்ளாது தலை திருப்பிக் கூடத்திற்குள் சென்று மறைந்து கொண்டான்.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் அவன். ஊரின் பிரதான வீதியான, வெண்ணைக்காரர் வீதியில்தான் இவனது வீடு. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், திருடன் போலீசு விளையாட்டோ அல்லது மாகாளியம்ம்ன் கோவில் திடலில் மொசப்பந்தடித்து ஆடும் விளையாட்டோ விளையாடுவது வழக்கம். இன்றைக்கும் அப்படித்தான், பள்ளியில் இருந்து வந்ததும் சீருடையைக் களைந்து மடித்து வைத்து விட்டு, மாற்றுடுப்பு அணிந்து கொண்டான். அம்மா கொடுத்த பொரி, கடலை, காபியைக் குடித்து விட்டு மாகாளியம்மன் கோவில் திடலுக்குச் செல்ல வெளியில் வந்தான்.

“எங்கடா போற? அம்மா, வடை சுடலாம்னு இருக்கேன். போடா, பர்வதக்கா ஊட்ல போயி, அம்மா கறுகாப்பெலை ரெண்டு இணுக்கு வாங்கியாறச் சொன்னாங்கன்னு சொல்லி வாங்கியா போ”, என்றாள்.

“ஏம்மா, அது நீ போயி வாங்கிக்க மாட்டியாக்கூ?? நான் வெளையாடப் போகோணும்!”.

“அதாண்டா... மூணும் தறுதலையாப் பெத்துப் போட்ட்டு நான் படாதபாடு படுறேன். இதே, பொட்டைப் புள்ளை ஒன்னப் பெத்திருந்தா, எனக்கு இந்த செரமம் இருக்குமா? என்ற தும்பம் சாகுற வரைக்கும் தீராது. ஆனமலை மாசாணியாத்தா, என்க்கு இப்படி ஒரு கொறையக் குடுத்து வாதிக்கிறயே? நான் ஆருகிட்டச் சொல்லு அழுவேன்? ஆருகிட்டச் சொல்லி அழுவேன்??”.

“செரீம்மா... நானே போறேன். கத்தி ஊரைக் கூட்டாத!”

பர்வதக்காவும் அம்மாவும் நண்பர்கள். வேலூர் சந்தைக்குச் செல்வதானாலும், நெகமத்திற்குச் சேலை வாங்கச் செல்வதானாலும், உடல்நலமின்றி உடுமலைப் பேட்டை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கும் உள்ளூர்க்காரரைக் காணச் செல்வதானாலும் ஒரு சேரத்தான் போவார்கள், வருவார்கள்.

அடிக்கடி சர்க்கரை குறியாப்பு வாங்குவது, எண்ணெய் குறியாப்பு வாங்குவது என இரு வீட்டாரும் புழங்கிக் கொள்வார்கள். வேறு வேறு சாதியினர் என்றாலும், அவர்களுக்குள் அது ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை.

பர்வதக்கா வீடு, மொக்கு வீட்டுக்கும் ரொட்டிக்கடை மருதாசலண்ணன் வீட்டிற்கும் இடைப்பட்டு இருக்கிறது. தெருமுனைக்குச் சென்று, வலதுபுறம் செல்லும் ஊர்க்கிணற்றுத் தெருவில் இருக்கும் முதல்வீடுதான் மொக்கு வீடு. மொக்கு வீட்டுத் திண்ணைக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது.

ஊர்த் தலைவாசலில் இருந்து வருவோர் போவோர் எல்லோரையும் மொக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டால் அவதானிக்கலாம். திண்ணையின் ஒரு முனையில் வயதில் மூத்தவர்கள் அமர்ந்து ஊர்நாயம் பேசிக் கொண்டு இருப்பார்கள். மறுமுனையில், விடலைகள் அமர்ந்து நாளிதழ் வாசிப்பது போன்ற தோரணையில் பட்சி பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

அப்படியான மொக்கூட்டுத் திண்ணையைக் கடந்துதான் சென்று கொண்டிருந்தான் இவன்.

“என்றா சுந்தரு? எங்க்டா போற??”, அவன் எங்கு போகப் போகிறான் என்பதைத் தெரிந்து கொண்டே வம்புக்கிழுத்தார் கதிர்வேலண்ணன்.

“எங்கம்மா கறுகாப்பெலை பொறிச்சாரச் சொல்லுச்சுங். அதான் பர்வதக்கா ஊட்டுக்குப் போய்ட்டிருக்கணுங்”.

“இம்ம்...ம்ம்ம்... கொடுத்து வெச்சவன்”

கதிர்வேலண்ணன் சொல்வதைக் காதில் வாங்காது சென்று கொண்டிருந்தான். கதிர்வேலண்ணன் அப்படிப் பொருமுவதற்கும் ஒரு காரணமிருந்தது.

பர்வதக்காவிற்கு ஒரு மகனும், ஒரு மகளும். மகன் விஜயகுமார், கொங்குரார் காகித ஆலையில் மேற்பார்வையாளர் வேலை. மகள் உமாதேவி, உடுமலைப் பேட்டை விசாலாட்சி மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு. பள்ளி விடுதியில் தங்கி இருந்து படிக்கிறாள். நல்ல கோதுமை நிறமும், முகப்பொலிவும் கொண்டவள். ஒரு சில நாட்களில், வீட்டில் இருந்து கொண்டே நான்காம் இலக்கப் பேருந்தில் உடுமலையில் இருக்கும் பள்ளிக்குச் சென்று வருவாள்.

“அக்கா, பர்வதக்கா... எங்கம்மா கறுகாப்பெலை கொஞ்சம் பொறிச்சிட்டு வரச் சொல்லுச்சுங்க்கா. அக்கா, அக்கா!”, அழைத்துப் பார்த்தான். கதவைத் தட்டியும் பார்த்தான். யாரும் பதில் அளிக்கவில்லை. வீட்டில் எவரும் இல்லையென நினைத்தவன், புறக்கொல்லையை நோக்கிச் சென்றான்.

வீட்டின் பின்புறம் மூன்று தென்னை மரங்கள். தென்னை மரங்களுக்கு இடையில் கனகாம்பரச் செடிகள் வளர்ந்து இருந்தன. ஒரு மூலையில் புதராய் மல்லிகைச்செடிகள் மண்டி இருந்த இடத்தில் இருந்து மல்லிகைப்பூ நறுமணம். அந்த மூலையில் இருக்கும் தகரக் கதவு இட்ட அறையைக் கடந்து சென்றால், அதை ஒட்டிய மறுபக்கத்தில் இருக்கும் கறிவேப்பிலைச் செடிகள்.

அறையைக் கடக்க முற்படவும், அறைக்கதவு திறக்கப்படவும் நேரம் பொருந்தி இருந்தது. திடுக்கிட்டவன், செய்வதறியாது நின்றான். தலை, ஈரிழைத் துண்டினால் சுற்றப்பட்டு இருந்தது. மேனி தாவணியால் சூழப்பட்டு இருந்தது. வினாடி நேரம் கூட ஆகியிருக்காது.

“அடச் சீ! நீயுமா? எங்கிட்ட அப்படி என்னதாண்டா இருக்கு??”

அவனுக்கு அழுகை, அழுகையா வந்தது. அச்சமும், ஏமாற்றமும் கலந்து, குற்றமிழைத்து விட்டேனோ எனும் பாங்கில் கதி கலங்கிப் போனான். அப்படியே திரும்பி வேக வேகமாக நடந்து வீட்டினை அடைந்தான்.

“அம்மா, அங்க ஆருமில்லை’, என்று சொன்னவன் எந்த மறுமொழியையும் கேட்க மனமில்லாது வீட்டிற்குள் சென்று, வெற்றுத்தரையில் படுத்துக் கொண்டான்.

இறைவனை இறைஞ்சத் துவங்கினான். “மாசாணியாத்தா, என்னைக் காப்பாத்து! நான் ஒனக்கு அடுத்த அமாவாசை அன்னைக்கு ஒன்னேகால் ருபாய் காணிக்கை செலுத்துறேன். என்னைக் காப்பாத்து!”

திரும்பிப் படுத்தான். ”நான் ஒன்னுமே செய்யிலியே. அந்தக்கா எங்க, அம்மாகிட்டச் சொல்லிறுவாளோ? ச்சே, பின்னாடி போனதும் ஒருக்கா கூப்புட்டுத் தொலைச்சிருக்கலாம். கூப்புடாமப் போனதுதான் தப்பாப் போச்சு. வெளில தெரிஞ்சா, அவ்வளவுதான்!”, குலை நடுக்கம் கண்டது.

“ஆத்தா, மாகாளியாத்தா, அடுத்த வாரச் சந்தையன்னிக்கு அம்மா குடுக்குற காசுல கண்ணடக்கம் வாங்கிச் சாத்துறேன். நீதாங் காப்பாத்தோணும்”, கண்ணீர் மல்க முணுமுணுத்தான்.

உறங்கிப் போனான். அம்மா வந்து எழுப்பினாள், “என்றா இங்க வந்து படுத்துக் கெடக்குறே. ஒரு வேலை ஒழுக்கமாச் செய்யத் துப்பில்லை. செரி வந்து, வடை ரெண்டு தின்னு பாரு வா!”, மறுபிறவி எடுத்தது போல உணர்ந்தான்.

“அம்மா எதும் சொல்லுலை. அப்பிடின்னா, அந்தக்கா என்னைக் காமிச்சிக் குடுக்கலையாட்ட இருக்குது!”, சிறிதாக ஆசுவாசமடைந்தாலும் அடுத்தடுத்த இரு நாட்களும் பதற்றம் கொண்டவனாகவே இருந்தான்.

முழு ஆண்டுத் தேர்வு, அதற்குப் பிறகான விடுப்பில் அமுச்சி ஊருக்குச் செல்லுதல், விடுமுறைக்குப் பின் அவனும் விடுதிக்குச் சென்று பள்ளிப் படிப்பைத் தொடர்தல் என ஆண்டுகள் கழிந்தன.

அண்டி இருக்கும் சூழல் ஓரிருமுறை வாய்த்திருந்தும், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தனர். காலங்கள் கழிந்தன. ஆண்டுகள் பல உருண்டோடி, பருவங்கள் பல கண்டு, கண்டங்கள் கடந்து வந்திருக்கின்றனர்.

விழா நிறைவெய்தி, உண்டிக்கான வேளையது. குடும்பம் குடும்பமாய் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

“ஏனுங் நீங் உடலப்பேட்டைங்ளா?”

அகம் கலக்கம் கொண்டது. மனைவி, குழந்தைகள் எல்லாம் வேறு சூழ இருக்கிறார்கள். இறுக்கம் மனதைக் கப்பியது. இல்லை எனப் பொய் சொன்னாலும், மீண்டும் தவறுக்கு அச்சாரம் இடுவது போலவே ஆகும்.

மெய்யுரைப்பதா, பொய்யுரைப்பதா?? கடைசல்க் கயிற்றில் சிக்கிய மத்துப் போல மனம் கிடந்து அல்லாடியது.

“ஏனுங்... உங்களைத்தானுங்?!”

மீண்டும் வினவியதில், அவனையும் மீறி உண்மை பிரசவித்தது.

“ஆமாங்”

“எம்பேரு விசுவநாதனுங்க. பல்லடமுங்க நானு”

அறிமுகப்படலம் நடந்தேறுவதைக் கண்டு அவனது மனையாள் அவர்களை நெருங்கினாள். பல்லடத்தார் மனையாளும் நெருங்கி வருவது கண்டு குலை நடுக்கம் கண்டது அவனுக்கு. அதே முகம். விடாது கறுப்பு போல இருக்கே என அஞ்சி, கூடத்தில் தொலைந்து போன மூஞ்சூரு போலத் தவித்தது அவனது மனம்.

“உமா, ஐ திங்க்... நீ நெனச்சது சரிதான் போலிருக்கு!”, மனையாளிடம் சொல்லிக் கொண்டே அவனது மனையாளுக்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டார் பல்லடத்தார்.

இரு குடும்பத்துக் குழந்தைகளும் கூடி விளையாடினர். பல்லடத்தாரின் மூத்த மகள் அவனது குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தாள். பெண்கள் இருவரும் வாய் நிறையப் பேசிக் கொண்டனர். பல்லடத்தார் அவனிடம் பழமைகள் பல பேசினார். அங்கிருந்த பரப்புக்காலியில் ஒரு குழுவாய் அமர்ந்து உண்டி புசித்தனர். வெகு நேரம் அளவளாவினர்.

சிறிது சிறிதாக அவனுள் இருந்த இறுக்கம் தளர்ந்து கொண்டிருந்தது. முழுதும் தளர்ந்து அகலும் முன்னமே, விடை பெறும் தருணம் வந்து நின்றது. அவனுக்கு ’அப்பாட’ என்றிருந்தது.

அவனது குழந்தையை அவனிடமே திரும்ப ஒப்படைக்கும் பாங்கில், குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுக் கொண்டபடியே த்ன் தோளால் அவனது தோளை இடித்துச் சொன்னது குரல், “சாரிடா சுந்தர். It's been ages due, I apologize...". கண்கள் சிமிட்டிச் சென்றன.

உமையாள் குரல் மட்டுமன்று, வையகத்து இளவேனிற் காற்றும் அவனைத் தழுவிச் சென்றது. “விடுதலை, விடுதலை”, மனம் ஆனந்தப் பள்ளு பாடியது!

7 comments:

vasu balaji said...

அருமையா வந்திருக்கு:)

ஈரோடு கதிர் said...

விடுதலை :)

கொங்கு நாடோடி said...

அண்ணா, கலக்கிட்டிங்க போங்க... உலகம் சிறியதுதான் .

ஓலை said...

Nice.

Mahi_Granny said...

அருமையான புனைவு.

jalli said...

nalla pathivu.. thodarnthu ithupola
oorpura anupavankalai eluthunga?

veethampatti,vealur,kosavampalayam.
vagaithozhvu,sankamanikkenpalayam,
virugalpatti.moonkilthozhuvu.
koodavey thaimaasam poopongalukku
malai koil pona anupavaththaiyum
ezhuthunga mani.

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

நண்பா சிறுகதை நுட்பம் உங்களுக்கு கை கூடி வருகிறது. நல்ல வாசிப்பு இருந்தால் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக பிரகாசிக்க முடியும். எழுதுவதை தொடருங்கள். வாழ்த்துக்கள்.